Nov 3, 2010

இப்படியும் ஒரு காதல்!

(இது ஒரு உண்மை கதை. இப்படியும் நடக்குமா? என யாரும் என்னை கேட்காதீர்கள். நடந்தது அவ்வளவுதான். முதலில் இதை எழுதலாமா, வேண்டாமா என்று குழம்பினேன். பிறகு ஒரு கதையாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பலாமா? என எண்ணினேன். ஏற்கனவே என்னுடைய ஏகப்பட்ட கதைகள் வாரா வாரம் பத்திரிகைகளில் வந்து கொண்டு இருப்பதால், பத்திரிகைகள் மற்ற எழுத்தாளர்களுக்கும் இடம் ஒதுக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில், கடைசியில் இங்கேயே எழுதலாம் என முடிவு எடுத்து எழுதுகிறேன்)

கோபால் முதலில் என்னிடம் அந்த விசயத்தை பற்றி சொன்னபோது நான் நம்பவில்லை. அதிர்ச்சி மட்டுமே அடைந்தேன். அவன் சொல்லியது போல் நடக்க வாய்ப்பே இல்லை என்றுதான் நினைத்தேன். அவன் என்ன என்னிடம் சொன்னான் என்று பார்ப்பதற்கு முன்னால் அவனைப் பற்றி உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.

கோபாலும் என்னைப்போல ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் தான். அப்பா ஒரு ஆசிரியர். ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. அம்மா ஒரு ஹோம்மேக்கர். அளவான குடும்பம். கோபால் பார்ப்பதற்கு நல்ல உயரமாக ஓரளவு கவர்ச்சியாக இருப்பான். எந்த பென்ணிற்குமே அவனை முதல் பார்வையிலேயே பிடித்துவிடும். என்ன காரணமோ அவனுக்கு படிப்பு அவ்வளவு ஏறவில்லை. எப்படியோ தத்தி தத்தி டிப்ளமோ முடித்தான். எங்கும் சரியாக வேலை கிடைக்காத நிலையில் யார் யாரையோ பிடித்து பணம் கட்டி வெளிநாடு சென்றான். அங்கும் சரியாக வேலை செய்யாமல் இந்தியாவிற்கே திரும்பி வந்தான்.

என்ன காரணம்? பாழாய் போன காதல்தான். கோபால் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தான். அவன் காதலித்த வீட்டில் மொத்தம் நான்கு பெண்கள். ஏற்கனவே அதே வீட்டில் கோபால் காதலிக்கும் பெண்ணின் தங்கை ஒருத்தியை என் நண்பன் ஒருவன் காதலித்து வந்தான். எனக்கு ஒன்றும் அந்த வீட்டின் மேல் அவ்வளவு மரியாதை ஏற்படவில்லை. அவர்கள் வீட்டில் அவ்வளவு சோஷியலாக எல்லோரும் பழகுவார்கள். அந்த ஒரு விசயத்தினாலே அவர்கள் வீட்டிற்கு செல்வதை நான் விரும்புவதில்லை.

அதனால் கோபாலின் காதல் மேல் எனக்கு அப்படி ஒன்றும் மரியாதை வரவில்லை. முதலில் நான் அவர்கள் காதலை நம்பவில்லை. பின் ஒரு நாள் அந்த பெண் எழுதிய லெட்டர்கள், அவளுடன் எடுத்த போட்டோக்கள் எல்லாவற்றையும் காண்பித்த பின்புதான் நானும் நம்ப ஆரம்பித்தேன்.

கோபாலின் காதலி பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பாள். அவள் பெயர் நான்சி என்று வைத்துக்கொள்வோம். பார்ப்பதற்கு நடிகை மாதவி போல் இருப்பாள். நீங்கள் கமலின் 'ராஜபார்வை' படம் பார்த்திருக்கின்றீர்களா? அதில் வரும் மாதவி போலே இருப்பாள். அதனால்தான் பெயரை கூட நான்சி என்றேன். கண்கள் மட்டுமே அப்படி ஒரு அழகு. அவள் ஒரு அழகு சிலை. இதற்குமேல் நண்பனின் காதலியை பற்றி வர்ணிப்பது நல்லதல்ல.

இப்போது விசயத்திற்கு வருகிறேன். கோபாலின் காதல் அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று யாருமே நினைக்கவில்லை. நான்சியோ வேற்று மதத்தை சேர்ந்தவள். இவனோ இந்து. எங்கள் ஊரோ ஒரு கிராமமும் இல்லாத டவுணும் இல்லாத ஒரு ஊர். எப்படி இந்த கல்யாணம் சாத்தியமாகும். ஆனால் இதை எல்லாம் பார்த்து காதல் வருவதில்லையே?

இவர்களின் காதல் இருவர் வீட்டிற்கும் தெரிய ஆரம்பித்தது. பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்தது. இருவர் வீட்டிலும் பிரச்சனைகள் பெரிய அளவில் வெடித்து அடிதடி அளவிற்கு சென்றது. கோபால் அந்த பெண்ணை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த சமயத்தில் அந்த பெண்ணிடமிருந்து கோபாலுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இருந்த விசயத்தை படித்த போதுதான் நான் முதல் பாராவில் சொன்னது போல் அதிர்ச்சி அடைந்து ஏறக்குறைய மயக்கம் அடையும் அளவிற்கு ஆனேன்.

அந்த பெண்ணின் கல்யாணம் நடை பெறுவதற்கு இன்னும் இரண்டு மாதமே இருந்த நிலையில் அப்படி ஒரு கடிதம். அப்படி என்ன அந்த கடிதத்தில் எழுதி இருந்தது?

அது தெரிந்தால் அந்த பெண்ணின் மேல் உங்களுக்கு கோபம் கோபமாக வரும். வெறுப்பு வரும். இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா? எனத்தோன்றும். ஆனால் இருந்தாள், இருக்கிறாள் என்பதுதான் உண்மை.

அவள் மேல் உங்களுக்கு கோபம் வர நாளை வரை காத்திருங்கள்.

- தொடரும்

3 comments:

Vijay Anand said...

//அவள் மேல் உங்களுக்கு கோபம் வர நாளை வரை காத்திருங்கள்.
//
aivvvvvvvvvvvvvvvvvvvvvvvv...........

iniyavan said...

//aivvvvvvvvvvvvvvvvvvvvvvvv.......//

வருகைக்கு நன்றி ஆனந்.

Anonymous said...

Enna sir ippadi thodarum pottutteenga??!!!

-Kannan