Nov 26, 2010

விவசாயி ஆக ஆசை


எங்கள் கொள்ளு தாத்தா ஒரு நாலு ஏக்கர் நிலம் வைத்திருந்தாராம். அப்பா சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நிலம் என்ன ஆனது? என்று தெரியவில்லை. அது உண்மையான செய்தியா என்றும் சரிவர தெரியவில்லை. அப்பா ரிடையர்மெண்ட் ஆன போது வந்த பணத்தில் குத்தகைக்கு நிலத்தை எடுத்தார். ஆனால், அவர் சாகுபடி பண்ணாமல், ஒரு சொந்தக்காரரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவரோ அப்பாவை நன்றாக ஏமாற்றிவிட்டார். இதையெல்லாம் பார்த்த போது எனக்கும் நிலம் வாங்கி அதில் நெல், கரும்பு, உளுந்து என்று பயிரிடவேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அப்போது படித்துக்கொண்டிருந்தேன். சிங்கிள் டீ வாங்கவே அப்பாவின் தயவை நாடிய காலம் அது.
ஒரு வழியாக நானும் ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினேன். நான் அந்த வயலை பார்க்கும் போது ரெண்டு ஏக்கரில் வாழை இருந்தது. நான் ரெஜிட்ரேஷன் செய்து முடித்ததும் வாழையை முழுவதும் வெட்டிவிட்டு, நிலத்தை உழுது கொடுத்துவிட்டார்கள். நானும் வாழை போட வேண்டும் என்ற ஆசையில் ஏற்கனவே குத்தகை எடுத்து இருந்தவரை அணுகினேன். வருடத்து எவ்வளவு கிடைக்கும்? என்றேன். ஒரு ஏக்கருக்கு 21,000 ரூபாய் கிடைக்கும் என்றார். என் பைனான்ஸ் மூளை நிலத்தை வாங்கிய பணத்துக்கு ஒரு வருடத்து வட்டியை சரி பார்க்க, வருமானம் வட்டியை விட மிகக்குறைவாக இருக்கிறதே என்று நினைத்து, வாழை போடாமல் நிலத்தை அப்படியே விட்டு வைத்துவிட்டு மலேசியா வந்துவிட்டேன். என்னுடைய விவசாயி ஆகும் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

இந்த முறை செல்லும் போது ஏதாவது விவசாயம் செய்யலாம் என்று நினைத்தால் பக்கத்தில் உள்ள 100 ஏக்கரையும் ஒருவர் வாங்கி பிளாட் போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார். என்னுடைய நிலத்தையும் வாங்கி கொள்வதாகவும், நான் வாங்கிய விலையைவிட மூன்று மடங்கு தருவதாகவும் சொன்னார். நான் வேண்டாம் என்று சொல்லி வந்துவிட்டேன். இப்போது அந்த நிலம் யாருக்கும் பயன்படாமல் அப்படியே இருக்கிறது.மலேசியாவில் உள்ள வீட்டில் கார்டன் வைக்க மிகப்பெரிய இடம் வீட்டை சுற்றிலும் இருக்கிறது. எனக்கு நிறைய காய்கறிகள் பயிரிட வெண்டும் என்று நிறைய ஆசை. நானும் என்ன என்னவோ செய்து பார்த்துவிட்டேன், ஒரு செடியும் வர மாட்டேன் என்கிறது. காரணம் வீடு ரோடிலிருந்து மிக உயரம். வீட்டை உயர்த்துவதற்கு நிறைய கல்லும், அரளை கற்களும் போட்டு மேடு ஆக்கி இருக்கிறார்கள். அதனால் என்னால் அதிக ஆழம் வெட்டி பயிரிட முடியவில்லை.


வீட்டில் ஒரு ஐந்து வாழை மரம் உள்ளது. ஒவ்வொரு தாரிலும் சுமார் 135 வாழக்காய்கள் வருகின்றது. அதை சாப்பிடவோ, வாங்கவோ இங்கே ஆள் கிடையாது. வீட்டை சுற்றிலும் பூச்செடிகள் வைத்திருக்கிறேன். இது என்னுடைய விவசாய ஆசையை ஓரளவு பூர்த்தி செய்கிறது.

எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மலாய்க்காரர். அவரை நான் அடிக்கடி கவனிப்பதுண்டு. அதிகம் பேச மாட்டார். இயற்கையை மிகவும் நேசிப்பவர் என்பதை சில நாட்களிலேயே தெரிந்து கொண்டேன். வீட்டின் ஒரு பகுதியில் ஒரு குடில் மாதிரி அமைத்து அதில் ஊஞ்சல் கட்டி வைத்துள்ளார். நான் வீட்டிற்கு சென்றவுடன் கதவை சாத்தினால், காலையில்தான் வெளியில் வருவது வழக்கம். பிறகுதான் அவரை கவனித்தேன். மாலை வேளைகளில் அந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பார். தெருவையும், வானத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பார்.

அவர் ஆடிக்கொண்டிருக்கும் போது ஒருசில குருவி மாதிரி பறவைகள் அங்கே வரும். ஒரு நாள் அந்த குடிலின் மேலே ஒரு நெட் வைத்து கட்டிக்கொண்டிருந்தார். எதற்கு என்று யோசித்தேன், பிறகுதான் தெரிந்தது, அந்த குருவிகள் உட்கார இடம் இல்லாமல் சிரமப்பட்டதால், அந்த வலையை கட்டினார் என்று. அந்த குருவிகளிடம் என்ன பேசுவார் என்று தெரியாது. ஆனால், அவைகளை பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார். இரவு வெளிக்கதவை பூட்ட எந்த நேரத்தில் வந்தாலும் அங்கு இருப்பார். காலையில் வாக்கிங் செல்ல போகும் போதும் ஏதாவது அங்கே வேலை செய்து கொண்டு இருப்பார். எப்போது தூங்குவார் என்று தெரியாது.

பெரிய பெரிய சட்டிகள் வாங்கி நிறைய செடிகள், பூச்செடிகள் பயிருகிறார். வெற்றிலை கொடி கூட வைத்திருக்கிறார். தீவாவளி அன்று கூட வெற்றிலை கிடைக்காமல் அவர் வீட்டில்தான் வாங்கினேன். காலையில் தொழுகை முடிந்து வந்தார் என்றால் ஒரு இரண்டு மணி நேரம் செடிகளை பராமரிப்பார். அடிக்கடி சுத்தம் செய்வார். மாலை வேளைகளிலும் அப்படியே. அவர் மனிதர்களிடம் அதிகம் பேசி பார்த்ததில்லை. இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். அவர் மனைவிடம் கூட அதிகம் பேசி நான் பார்த்ததில்லை.

எப்போதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு, அவைகளை சரி செய்து இருப்பதை பார்த்து, நேற்று அவரிடம் கேட்டேன்,

"சார், எப்போதும் கார்டனில் அதிக நேரம் செலவிடுகின்றீர்களே? எப்போதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டும், அவைகளை பராமரித்துக்கொண்டும் இருக்கின்றீர்களே? ஏன்?"

அதற்கு அவர் சொன்ன பதில்,

"நமக்கு பசிக்குதுன்னா, வாய்விட்டு கேட்கிறோம். நமக்கு உடம்பு சரியில்லனா டாக்டர் கிட்ட போறோம். இதுங்க எல்லாம் என்ன பண்ணும். நாமதான் அவைகளை புரிந்து கொண்டு அவைகளுக்கு வேண்டியவைகளை செய்யணும்"

நல்ல குணம், மனம் படைத்த மனிதர்கள், இயற்கையை நேசிக்கும் மனிதர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதர் என் பக்கத்து வீட்டுக்காரராக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இனி, கிடைக்கும் நேரத்தில் நானும் என் கார்டனில் நேரத்தை செலவழிக்கப் போகிறேன்.
8 comments:

அமுதா கிருஷ்ணா said...

அருமையான மனிதர்..உங்கள் தோட்டமும் செழிக்கட்டும்..

Anu said...

Good Person Sir..

CS. Mohan Kumar said...

Good person & good logic given by him. You can also have some plants in pots.

வார்த்தை said...

இப்படி ஒரு அண்டை வீட்டுகாரர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஊரில் உள்ள நிலத்தில் ஏதாவது வளர்க்க முடியுமா என பாருங்கள். புளிய மரம் போன்ற பராமரிப்பு தேவைப்படாதவை ஏதாவது..?

iniyavan said...

//அருமையான மனிதர்..உங்கள் தோட்டமும் செழிக்கட்டும்..//

வருகைக்கு நன்றி அமுதா மேடம்.

iniyavan said...

//Good Person Sir..//

நன்றி அனு.

iniyavan said...

//Good person & good logic given by him. You can also have some plants in pots//

வருகைக்கு நன்றி மோகன்.

iniyavan said...

//இப்படி ஒரு அண்டை வீட்டுகாரர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//

வருகைக்கு நன்றி நண்பா!

//ஊரில் உள்ள நிலத்தில் ஏதாவது வளர்க்க முடியுமா என பாருங்கள். புளிய மரம் போன்ற பராமரிப்பு தேவைப்படாதவை ஏதாவது..?//

பார்க்கிறேன்.