Dec 31, 2010

நீங்கள் எப்படி?

ஜாதகம், ஜோதிடம் இதில் எல்லாம் ஓரளவு நம்பிக்கை இல்லாமல்தான் இருந்து வந்தேன். சமீபத்தில் கேள்விபட்ட சம்பவங்களால், உண்மைதானோ என எண்ணத்தோன்றுகிறது.

ஏற்கனவே இதைப்பற்றி இங்கே எழுதி இருக்கிறேன்.


இரண்டு நண்பர்கள் அவர்களின் எதிர்காலம் சம்பந்தமாக தெரிந்து கொள்ளவும், அவர்கள் ஆரம்பிக்க போகும் தொழிலைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஜோசியரைப் பார்க்க போனார்கள். ஜாதகத்தை வாங்கி பார்த்த ஜோசியர்,

"உங்கள் இருவரின் ஜாதகப்படி, நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கவே முடியாதே? சொன்னால் கோபித்துக்கொள்ளக் கூடாது. ஏதேனும் உயிர்பலி ஏற்படனுமே?"

இதைக்கேட்ட நண்பனின் அம்மா, உடனே எழுந்து கோபித்துக்கொண்டு வந்து விட்டார்கள்.

இரண்டாவது சம்பவம்:

அதே இரண்டு நண்பர்களும் இந்த மாத ஆரம்பத்தில் அந்த ஜோதிடரிடம் சென்றார்கள். முதல் நண்பர் நல்ல பணக்காரர். அவர் ஒரு வீடு மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருந்தார். அதற்காக அந்த வீட்டின் ராசி பார்ப்பதற்காக அவரிடம் சென்றார்.

மீண்டும் ஜோசியம் பார்த்த அவர்,

"ஏன் இந்த வீட்டை வாங்கினீர்கள்? நிச்சயம் ஒரு உயிர்பலி உங்கள் வீட்டில் நடக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.

நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ? அவர் சொன்னது அப்படியே நடந்துவிட்டது. நண்பரின் மகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இரண்டாம் நண்பர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார்.

இதைப்பற்றி ஏற்கனவே இங்கே எழுதியுள்ளேன் "குடி! குடி!! குடி!!! "


மூன்றாவது சம்பவம்:

என் நண்பர் ஒருவர் கார் ஓட்டிச் செல்லும்போது ஆக்ஸிடண்ட் ஆகி, கால் எலும்பு முறிந்து அவதிப்படுகிறார். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், "எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஜாதகப்படி அவருக்கு இந்த மாதத்தில் கண்டம் இருந்தது"

என்னால் நம்புவதா? வேண்டாமா? எனக்குழப்பமாக உள்ளது. எல்லாமே ஜாதகப்படியும், விதிப்படியும் நடக்கிறது என்றால், கீழே எனக்குத்தோன்றும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

01.இங்கே நன்றாக இருப்பவருடைய ஜாதகம் போல், அதாவது அதே நட்சத்திரம், ராசி, ஜாகப்பலன்களுடன், காஷ்மீரிலோ அல்லது இஸ்ரேலிலோ கூட இருக்கலாம் இல்லையா? இவர் இங்கே நன்றாக இருக்கும் போது அவர்கள் இறந்துபோகிறார்களே எப்படி?

02. டிரெயின் விபத்தோ, அல்லது சுனாமி போன்றோ விபத்துக்களோ நடக்கும்போது ஆயிரக்கணக்கானவர்கள் சாகும்போது, அத்தனை பேருடைய ஜாதகமும் சரியில்லை என எடுத்துக்கொள்ள வேண்டுமா? அது எப்படி ஒரே நாளில் விதி முடிந்த அத்தனை பேரும் ஒரே நாளில் ஒரே இடத்தைல் கூடினார்கள்?

எனக்கு புரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


இன்னும் சில கவிதைகள்!

ஒரே முறைதான் கனவில்

வந்து போனாய் நீ!

பகல் எல்லாம் தூங்கிக்

கொண்டிருக்கிறேன்

நான்

*************************************

அறை முழுக்க உன்

முத்தங்கள்

ஜன்னல்களையும்

கதவுகளையும்

திறப்பதே இல்லை நான்

*************************************

நிச்சயத்திற்கு முதல் நாள்

அவளிடம் கேட்டேன்

சென்னை வர சம்மதமா?

அடுக்குமாடி வீடுதான்

பிடிக்கும்ல?

இந்த கலர் பட்டுப்புடவை

பிடிச்சுருக்கா?

இந்த நகை, அது, இது

என எல்லாவற்றையும் பிடிச்சிருக்கா?

எனக்கேட்ட நான்

கடைசிவரை

என்னை உனக்கு பிடிச்சிருக்கா என

மட்டும் கேட்கவே இல்லை

*************************************

Dec 30, 2010

பயம் (சிறுகதை)

எப்படியாவது அந்த டிரையினை பிடித்துவிட வேண்டும். வேகமாக காரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இதுவரை இவ்வளவு வேகமாக காரை ஓட்டியதே இல்லை. புது கார் வேறு. எல்லாம் என் மகளுக்காக வாங்கியதுதான். அதில்தான் இப்போ நான் போய்க்கொண்டிருக்கிறேன். எப்படியாவது இன்னும் 20 நிமிடத்தில் அங்கே இருக்க வேண்டும். எனக்கு லேசாக ஒருவித பயமும், வெறுப்பும் வந்தது. இந்த நேரம் பார்த்தா இந்த சிக்னல் வரவேண்டும்?

சிக்னலுக்கு நிற்கும் இந்த நேரத்தில் எனைப் பற்றி உங்களுக்கு சொல்லிவிடுகிறேன். என் பெயர் ராஜன். ராஜன் கெமிக்கல்ஸ், ராஜன் பஸ் சர்வீஸ், ராஜன் தியேட்டர்ஸ், ராஜன் ஹாஸ்பிட்டல் எல்லாமே என்னுடையதுதான். கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் முன்னேறியவன் நான். இன்று பல கோடிக்கு அதிபதி. இவ்வளவு சொத்திற்கும் ஒரே வாரிசு, என் மகள் ஸ்வப்னா. அவளை பார்க்கத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.

ஏன்? இருங்கள்! சிக்னல் விழுகிறது, காரை ஓட்டிக்கொண்டே சொல்கிறேன். எப்போதும் போலத்தான் இன்றும் விடிந்தது. நான் அந்த லெட்டரை பார்க்காதவரை எல்லாம் நன்றாகவே இருந்தது. எழுந்து ஜாகிங் போகலாம் என கிளம்பியவன் கண்களில் அந்த லெட்டர் பட்டது. மனைவி கீதாவின் டிரெஸ்ஸிங் டேபிளில் ஒரு கவரின் கீழே சொறுகி இருந்தது. முதலில் அங்கே இருந்து கிளம்ப நினைத்தவன், ஏதோ ஒரு உந்துதலில் அந்த கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

" அன்புள்ள அப்பா,

உங்களிடம் ஏற்கனவே சொல்லாம் என நினைத்திருந்தேன். எனக்கு சொல்ல தைரியம் வரவில்லை. ஏனென்றால் என் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு அப்படிப்பட்டது. ஆனால், அதே சமயத்தில் நான் அவரின் மேல் வைத்திருக்கும் அன்பும் எனக்கு முக்கியமாக படுகிறது. உங்களிடம் சொல்லி 'அவருக்கே என்னை திருமணம் செய்து வையுங்கள்' என்று சொல்லலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அவர் உங்கள் தகுதிக்கு பொருந்தாதவர் என்று சொல்லி விடுவீர்களோ என்று பயமாக உள்ளது. ஆனால், அவர் நல்ல திறமையானவர். நன்றாக படித்து உள்ளார். என்னை வைத்து நன்றாக காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் பண பலமும், ஆட் பலமும் நானும் அறிந்ததுதான். அதனால் நான் உங்களிடம் அவரைப் பற்றி சொன்னால, அவரை ஏதாவது செய்துவிடுவீர்களோ என்று பயமாக உள்ளது. அதனால்தான் அவர் பெயரைக்கூட மறைத்து விட்டேன்.

தயவு செய்து கோபப்படாதீர்கள். நான் இன்று காலை டிரையினில் அவருடன் சென்னை செல்கிறேன். எங்களை வாழவிடுங்கள். எனக்கு உங்கள் சொத்துக்கள் எதுவும் வேண்டாம். அவர் மட்டும்தான் வேண்டும். அம்மாவிடமும் தயவு செய்து சொல்லிவிடுங்கள்.

எங்களை தேட முயற்சி செய்யாதீர்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்"

இப்படி ஒரு கடிதத்தை உங்கள் மகள் உங்களுக்கு எழுதி இருந்தால், உங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லுங்கள். எனக்கு பதட்டத்தில் எதுவுமே ஓடவில்லை. கீதாவை எழுப்பலாம் என்றால், நாங்கள் இருவருமே இரவு நிறைய நேரம் கழித்துதான் தூங்கியது ஞாபகம் வந்தது. அதற்கும் நான் தான் காரணம். அதனால் அவளை எழுப்பி விசயத்தை சொல்லி டைம் வேஸ்ட் செய்ய விரும்பாமல் உடனே காரை எடுத்து கிளம்பிவிட்டேன்.

இதோ ரயில்வே ஸ்டேஷன் வந்துவிட்டது.

சார், கொஞ்சம் வெயிட் பண்ணறீங்களா? உள்ளே போய் பார்த்துட்டு வந்துடறேன்.

"என்னது இது? எங்கேயும் இல்லை. டிரெயின் இங்கேதானே இருக்கு. இன்னும் டிரெயின் கிளம்பக்கூட இல்லையே. ஒரு வேளை பஸ்ஸில் போய் இருப்பாளோ? இல்லையே லெட்டரில் டிரெயின் என்றுதானே உள்ளது? "

என் செல்போன் அடிக்கவே, யார் அது? குழம்பி போய் பார்த்தால், ஸ்வப்னா. பதட்த்ததுடனும், கலங்கிய கண்களுடனும் போனை எடுத்தேன்.

"பாப்பா, என்னடா? இப்படி செஞ்சிட்டே?"

"என்ன டாடி? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் ஒரு மாதிரி பேசறீங்க? நானும் அம்மாவும் டைனிங் டேபிள்ல எவ்வளவு நேரமா காத்திருக்கிறது? எங்க போனீங்க. காரை வேற காணோம்? அம்மா கிட்டையும் ஒண்ணும் சொல்லையாம்?"

"அப்ப நீ ஸ்டேஷனுக்கு.. அந்த லட்டர்?"

"என்ன உளறீங்க டாடி. சீக்கிரம் வாங்க"

சார், என் பொண்ணு சார், என் பாப்பா சார், வீட்ல இருந்து பேசறா?

நான் வீட்டுக்கு பறந்துட்டு இருக்கேன் சார்!

அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டில் நான்.

"என்னங்க ஆச்சு?"

"ஒண்ணும் இல்லை?"

ஸ்வப்னா, வீட்டுல இருக்கா! அப்போ அந்த லெட்டர்???

"டாடி, அம்மா என்னை திட்டிட்டே இருக்கா?"

"ஏம்பா, குழந்தைய திட்டுற?"

"குழந்தையா, அவ என்ன பண்ணா தெரியுமா? நேத்து என்னோட பர்சனல் சூட்கேஸை திறந்து நம்ம லவ் லெட்டர்ஸ், நான் எங்க அப்பாவுக்கு கடைசியா எழுதுன லெட்டரை எல்லாம் எடுத்து படிச்சிருக்கா?"

நான் ஏன் தேம்பி தேம்பி அழுகிறேன் என்று கீதாவும், ஸ்வப்னாவும் அதிர்ச்சியுடன், பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆமாம், ஏன் சார்?


Dec 29, 2010

மிக்ஸர் - 29.12.2010

எங்கள் ஊரில் தமிழ் படங்கள் வருவது மிக குறைவு. ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் படங்கள் நிச்சயம் வரும். இவர்கள் படங்கள் மொத்தமே வருடத்திற்கு நான்கு படங்கள் வந்தால் பெரிய விஷயம். ஏனென்றால் வருடத்திற்கு ஒரு படம்தான் இவர்கள் நடிக்கின்றார்கள். ஒவ்வொரு படமும் முதல் நாளே பார்த்துவிடுவது எனது வழக்கம். அப்படித்தான் 'மன்மதன் அம்பு' படமும் பார்க்க சென்றோம். கமலும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் மிக ஆசையுடனும், ஆர்வத்துடனும் சென்றோம்.

இவ்வளவு போரான, எரிச்சல் தரக்கூடிய ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை. கமலின் நகைச்சுவை படங்கள் எல்லாம் எப்படி இருக்கும்? எப்படி வயிறு குலுங்க சிரித்திரிப்போம்? ஆன்லைனில் டிக்கட் புக் செய்யும் போது, 'படத்தின் பிரிவு' என்ற இடத்தில் காமெடி என்று போட்டிருந்தார்கள். ஒரு இடத்தில் கூட எனக்கு சிரிப்பே வரவில்லை. அழுகைதான் வந்தது. முதல்நாள் இரவுதான் 'பாணா காத்தாடி' படம் பார்த்து இருந்தேன். அதில் கருணாஸின் நகைச்சுவையை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன். அந்த சந்தோசம் இந்த படத்தை பார்த்தவுடன் ஓடி போய்விட்டது. படம் 'A' செண்டர் மக்களுக்காக எடுத்ததாக தெரிகிறது. எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். அதுவும் அந்த புரோடியுசர் தம்பதியினர் பேசும் வசனங்கள் ஒரு எழவும் புரியவில்லை. கிரேஸி மோகன் வசனம் இல்லாமல் கமல் நகைச்சுவை படத்தில் நடித்தால் இப்படித்தான் இருக்கும் போல.

அப்படியானால், படத்தில் பிடித்த விசயமே இல்லையா என்று கேட்டால், இருக்கிறது, என்பேன். என்ன அது?

திரிஷாவின் உடைகள்தான்!

***********************************************

என் அலுவலகத்தில் என் கீழே பணிபுரியும் நண்பர் ஒருவர் கிறிஸ்துமஸுக்கு விடுமுறை கேட்டார். எனக்கு ஒரே ஆச்சர்யம். அவரோ ஒரு இந்து. எதற்காக விடுமுறை கேட்கிறார். விசாரித்தேன். அவர் சொன்ன காரணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னவென்றால், அவர்கள் வீட்டில் எல்லா பண்டிகையுமே கொண்டாடுவார்களாம். ஏன் அப்படி? என்று அவரிடம் கேட்டால்,

"பண்டிகை என்றாலே சந்தோசம் வந்துவிடும். அந்த சந்தோசத்தை பெறுவதற்கு எந்த மத பண்டிகையாய் இருந்தால் என்ன?"

அவர் சொன்னது சரிதான் இல்லை?

இங்கே முஸ்லீம்களும், சீனர்களும், தீபாவளி அன்று இந்தியர்கள் வீட்டுக்கும், முஸ்லீம்களும், இந்தியர்களும் சீன பிறந்தநாள் அன்று சீனர்கள் வீட்டுக்கும், சீனர்களும், இந்தியர்களும் ரம்ஜான் அன்று முஸ்லீம்கள் வீட்டுக்கும் செல்வது வழக்கம்.

***********************************************

சமீபத்தில் திருச்சியிலிருந்து எனக்கு ஒரு SMS வந்தது.

"திருச்சி - திருவரம்பூர் சாலையில் நிறைய காலி மனைகள் இருப்பதாகவும், விலை மிக குறைவு என்றும், 31ம் தேதிக்குள் புக் செய்தால், ஒரு பிளாட்டுக்கு ஒரு பிளாட் இனாமாக கொடுப்பதாகவும்" வந்தது.

இது உண்மையா? என்று அறிந்து கொள்வதற்கு அந்த போன் நம்பருக்கு நான் ஒரு பதில் அனுப்பினேன்.

"Nework is not available" என்று செய்தி வந்தது. அதனால் என்னால் அனுப்ப முடியவில்லை.

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க!

இந்த செய்தியை பார்த்ததும், எனக்கு ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது.

கல்யாணம் பண்ணிவிட்டு ஊரிலிருந்து மனைவியுடனும் ஒரு பென்ணுடனும் பஸ்ஸை விட்டு இறங்கும் ஒருவனை பார்த்து இன்னொருவன் கேட்கிறான்,

"என்ன ராமு, கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? கூட யாரு இன்னொரு பொண்ணு?"

"அது ஒண்ணும் இல்லைண்ணே. அவங்க வீட்டுல நிறைய பொண் பிள்ளைங்க. ஒரு பொண்ணு கட்டுனா ஒண்ணு இலவசம்னாங்க. அதான் கூடவே அவ தங்கச்சியையும் கூட்டிட்டு வந்துட்டேன்".

***********************************************

சமீபகாலமாக 'சிறுகதை' எழுதும் காய்ச்சல் வந்து அலைகிறேன். நிறைய எழுத ஆரம்பித்து உள்ளேன். நிறைய நண்பர்கள் மெயில்கள் மூலமும், சேட் மூலமும், தொலைபேசி மூலமாகவும், நல்லா இருக்கிறது, அதனால் தொடர்ந்து எழுதுங்கள் என்கிறார்கள். அடுத்த வருடத்தில் நிறைய சிறுகதைகளும், ஒரு தொடர்கதையும் எழுத ஆசை.

உங்களின் கருத்தினை அறிய ஆவலாய் உள்ளேன். படிக்கும் நண்பர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

***********************************************

போன வருடம் இதே நாள் மாலையில் நண்பர் மணீஜி ஆபிஸில், நண்பர்கள் மணிஜி, கேபிள் சங்கர், அகநாழிகை பொன் வாசுதேவன், பைத்தியக்காரன், கார்க்கி, பெஸ்கி, சூர்யா கண்ணன், மோகன் குமார் ஆகியோரை சந்தித்தேன்.

அந்த இனிமையான சந்திப்பினை இன்னும் அசைப்போட்டுக் கொண்டிருக்கிறேன். மீண்டும் எப்பொழுது சந்திக்கப்போகிறேன்? எனத்தெரியவில்லை.

***********************************************

ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தாலும், இன்னும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது என்ன? என்பது சரியாக பிடிபடவில்லை.

படிப்பிற்காக கஷ்டப்படுபவர்களுக்கும், நோயால் வாடுபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்ய ஒரு டிரெஸ்ட் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். போன வருமே தோன்றிய எண்ணம் இன்னும் செயல்படாமல் இருக்கிறது.

2011ல் செயல்படுத்த ஆசை. பார்ப்போம்!

***********************************************

Dec 27, 2010

ராஜேஷின்.....? (சிறுகதை)

நான் +1 படிக்கும் போது அறிமுகமானான் ராஜெஷ். பார்க்க நல்ல சிகப்பாக இருப்பான். கண்ணாடி அணிந்திருப்பான். ஓரளவு உயரமாக இருப்பான். வந்த கொஞ்ச நாட்களிலேயே என்னுடன் நெருங்கி பழக ஆரம்பித்தான். சில மாதங்களுக்கு பிறகு அவன் ராஜி என்ற பெண்ணைப் பற்றி என்னிடம் அடிக்கடி பேச ஆரம்பித்தான்.

அப்போது எல்லாம் நான்  "ரவியின் காதல் கதை-2 " குறிப்பிட்டுருந்த சுதாவின் பின்னால் அலைந்து கொண்டிருந்த காலம். அதனால் அவன் சொல்லும் விசயங்களை எல்லாம் தினமும் கதை போல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவன் ராஜியிடம் தினமும் பேசுவதை ஒன்றுவிடாமல் சொல்ல ஆரம்பித்தான். அவைகளை எல்லாம் நான் இந்த கதையில் உங்களிடம் சொல்ல முடியாது. ஏனென்றால் அனைத்தும் கொஞ்சம் "A" ரகம். இருந்தாலும் அந்த வயதிற்கே உள்ள ஒரு உணர்ச்சியில் தினமும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஒரு நாள் ராஜேஷ், "ரவி, உன்னை ராஜி பார்க்கணுங்கறாடா?" என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னை ஏண்டா பார்க்கணுமாம்?"

"இல்லை, தினமும் நாம பேசிக்கறதை எல்லாம் அவகிட்ட சொல்லுவேன். அதனால அது யாருனு பார்க்க ஆசைப்படறா? நானும் இன்னைக்கு மதியம் கூட்டிட்டு வறேனு சொல்லிட்டேன்"

"மதியம் கிளாஸ் இருக்கேடா?"

"இன்னைக்கு ஒரு நாள் கட் அடிச்சுடலாம்டா?"

வேறு வழியில்லாமல் அன்று மதியம் ஸ்கூல் கட் அடிப்பது என்று முடிவெடுத்தேன்.

மதியம் ஐஸ்கிரீம் ஷாப்பில் சந்திப்பதாக ஏற்பாடு. திருச்சி NSB ரோட் போயிருக்கீங்களா? இப்போ எல்லாம் மாறிப்போச்சு. பாதி இடத்தை சாரதாஸ் வாங்கி போட்டாச்சு. முன்னாடி அங்கே ஒரு வஸந்த பவன் இருக்கும். சின்ன கடைதான். சாப்பாடு எல்லாம் அருமையா இருக்கும். சரவணபவன் மாதிரியே வஸந்த பவனிலும் எங்கே சாப்பிட்டாலும் ஒரே சுவையாதான் இருக்கும். இப்போ இன்னொரு வஸந்தபவன் இருக்கு, விஸ்வாஸ் புக் டிப்போ பக்கத்துல. நான் அதை சொல்லலை. இப்போ சாரதாஸ் இருக்கும் இடத்திலேயே ஒரு வஸந்தபவன் இருந்தது. அதன் எதிரில் ஒரு ஐஸ்கிரீம் கடை உண்டு. கல்லூரி பள்ளி மாண மாணவிகள் அதிகம் கூடும் இடம். இப்போது அந்த கடையும் இல்லை.

அந்த ஐஸ்கிரிம் கடையில்தான் நானும் ராஜேஷும் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் மிக அழகான ஒரு பெண் அங்கே வரவே, கடையில் இருந்த அனைவரின் பார்வையும் அவள் மேலே விழுந்தது. ஏனென்றால் அப்படி ஒரு அழகு. பாவாடை தாவணியில் இருந்தாள். திக் ப்ளூ தாவாணி, லைட் ப்ளூ பாவாடை. இரட்டை ஜடை பின்னி ஒரு சடையை முன்னே விட்டிருந்தாள். தலையில் மல்லிகைப்பூவை இரண்டு ஜடைகளுக்கும் இடையில் ஒருவாறு தொங்கவிட்டு கட்டியிருந்தாள். பார்க்க மிக அழகாக இருந்தாள். அவளையே நானும் பார்த்துக்கொண்டிருந்த வேலையில்தான்,

"ஹேய் ராஜி, இங்கே வா" எனக்கூப்பிட்டான் ராஜேஷ். வந்தவள் அவன் பக்கத்தில் அமர்ந்தாள். நான் அவள் எதிரில் அமர்ந்தேன். அறிமுகப்படலத்துக்கு பிறகு என்னுடன் சரளமாக பேச ஆரம்பித்தாள். அப்போது பக்கத்து டேபிளில் ஒருவன் அவன் எதிரே உள்ள பெண்ணின் காலை ஏதோ செய்து கொண்டிருந்தான். அதை ரகசியமாக என்னைகூப்பிட்டு காண்பித்தாள். எனக்கு ஒரே வெட்கமாக போய்விட்டது.

சிறிது நேரத்தில் என் காலிலும் ஏதோ உரசுவதை உணர்ந்த நான், அப்போதுதான் கவனித்தேன் அது ராஜியின் கால் என்று. திடுக்கிட்ட நான் உடனே ஒரு நடுக்கத்துடன் காலை எடுத்துக்கொண்டேன். ராஜியும் ஹோலிகிராஸில் படிக்கிறாள் என தெரிந்து கொண்டேன். அப்போது, ராஜேஷ்,

"ராஜி, தெரியுமா? இவன் ஆளும் உங்க காலேஜில்தான் படிக்கிறா" என்றான். அவள், "யார் அது?" என்று கேட்க, நான் சுதாவின் பெயரை சொன்னேன்.

"ஏதேனும் ஹெல்ப் வேணுமாடா?. நான் அவள்கிட்ட பேசவா?"

"வேண்டவே வேண்டாம்" என் மறுத்துவிட்டேன். இரண்டு மணிநேரம் அங்கே செலவழித்த நாங்கள் பள்ளிவிடும் நேரம் பஸ் ஸ்டாண்ட் சென்றோம். ஏதோ ஒரு காரணத்தினால் அன்று மாலை பஸ் ஸ்ட்ரைக். அவர்கள் வீடு இருந்தது திருவானைக்காவலில்.

ராஜிதான் என்னிடம், "வாடா அப்படியே பேசிட்டே, காவேரி பாலத்துல நடந்துட்டே எங்க வீட்டுக்கு போகலாம். அங்கே இருந்து ராஜேஷ் அவன் வண்டியிலே உங்க வீட்டுக்கு டிராப் பண்ணுவான்" என்றாள்.

நானும் ஜொல் விடுவதற்காக "சரி" என்று ஒப்புக்கொண்டு அவளுடனும், ராஜேஷ் கூடவும் பேசிக்கொண்டே சென்றேன். என்னவெல்லாம் அந்த வயதில் பேசக்கூடாதோ அவ்வளவையும் எங்களுடன் பேசினாள். வெட்கப்பட்டுக்கொண்டே நடந்து போய்க்கொண்டிருந்தோம். ஒரு வழியாக அவள் வீடு வந்தது. அடுத்த வீடுதான் ராஜேஷ் வீடு. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவள் சப்பாத்தி சாப்பிடுமாறு எனக்கு சப்பாத்தியும், குருமாவும் கொடுத்தாள். சாப்பிட்டுவிட்டு அமர்ந்தபோது, அவர்கள் இருவரும் பேசியதை வெட்கத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து கீழே இருந்து ராஜியின் அம்மா, "ராஜி, இன்னும் என்ன பண்ணிட்டுருக்க மாடியில?"

"ராஜேஷோடவும், அவன் பிரண்டு கூடவும் பேசிகிட்டு இருக்கேம்மா?"

"என்னதான் பேசுவீங்களோ, அக்கா தம்பி இருவரும்"

ஷாக்காகி போனேன் நான்.

ராஜி ஒரு விதத்தில் அவனுக்கு அக்கா முறை வேண்டும் என்பதை நான் அறிந்த போது எனக்கு ஏற்பட்ட கோபமும், படிக்கும் உங்களுக்கு அவன் மேலே ஏற்படும் கோபமும் நியாயமானதுதான்.

Dec 24, 2010

குடி! குடி!! குடி!!!

என் நெருங்கிய நண்பன். முப்பது வருட பழக்கம். பார்க்க பொன்னம்பலம் போல் நல்ல உடம்பை கொண்டவன். பழக மென்மையானவன். அனைவருக்கும் உதவும் மனம் கொண்டவன். நல்லவன். குடிக்க தோன்றும் அந்த காலக் கட்டத்தில் அவனும் குடிக்க ஆரம்பித்தான். நான் குடித்து பார்த்துவிட்டு, பிடிக்காமல் உடனே விட்டுவிட்டேன்.

சில நண்பர்கள் தொடர்ந்தார்கள். சிலர் அவ்வப்போது குடிக்க ஆரம்பித்தார்கள். எத்தனை பார்ட்டிகளில் கலந்துகொண்டாலும் ஒரு சொட்டு டிரிங்ஸை கூட நான் குடிக்க நினைத்ததில்லை.

நண்பன் சில காலம் வெளிநாட்டில் வேலை புரிந்தான். திடீரென பிடிக்காமல் இந்தியா வந்தான். என் பழைய கம்பனியில் வேலையில் சேர்த்துவிட்டேன். பிடிக்காமல் வேலையை விட்டான்.

நான் ஓவ்வொரு முறை இந்தியா போகும் போதும் என்னை பூங்கொத்து கொடுத்து ஏர்போர்ட்டில் வரவேற்பான். அந்த அளவிற்கு என்னுடன் நெருக்கமாக இருந்தான்.

என்னை யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது, உடனே அவர்களை அடிக்க போய்விடுவான். அந்த அளவிற்கு என் மேலே பாசமாக இருப்பான். அவனை நான் அடிக்கடி "என் தளபதி" என்பேன். அவன் பழகிய அனைவருடனும் அதே அளவு நெருக்கத்துடன் இருப்பான்.

என் வளர்ச்சியை பார்த்து சந்தோசப்படுபவன். நான் எழுதும் கதைகளுக்கு முதல் வாசகானாய் இருந்தான்.

அரசியலில் சேர்ந்தான். 7 வருடங்களுக்கு முன் கல்யாணம் செய்து கொண்டான். ஒரே வருடத்தில் குழந்தை பெற்றான். அவன் கல்யாணத்தை ஊருக்கே லைவாக ஒளிபரப்பினார்கள். அந்த அளவிற்கு ஊரில் பிரபலமாக இருந்தான். ரொம்ப வேகமாக முன்னேறினான்.

எப்போதுமே ஒருவித பரபரப்புடனும், ஒருவித சுறுசுறுப்புடன் இருப்பான். நான் ஊருக்கு வந்தது தெரிந்தால் உடனே வீட்டுக்கு ஓடி வருவான். அவன் குடும்ப பிரச்சனைகளை கூட என்னிடம் அதிகம் பகிர்ந்து கொள்வான்.

அனைத்துவிதமான நண்பர்கள் இருந்தாலும் என்னிடம் மட்டும் ரொம்ப அதிக உரிமையுடனும் மரியாதையுடன் பழகுவான்.

இவ்வளவு நல்ல பழக்கமும், நல்லவனுமாக இருந்த அவனிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம், குடி. சாதாரணமாக குடிக்க ஆரம்பித்தவன், அதிகமாக குடிக்க ஆரம்பித்தான்.

நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும், அந்த பழக்கத்தை மட்டும் அவனால் விட முடியவில்லை. சில காலம் அவனாக நினைத்து குடிக்காமல் இருப்பான். பிறகு திரும்பவும் ஆரம்பிப்பான்.

நான் எத்தனையோ முறை அவனுக்கு அறிவுரை சொன்னதுண்டு. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் நான் சொன்ன அறிவுரைதான் என்னை போட்டு வாட்டி எடுக்கிறது. மனம் குழம்பி தவிக்கிறது. வேதனையில் மனம் தடுமாறுகிறது.

"டேய், அதிகம் குடிக்காதடா! செத்து கித்து போயிடப்போற"

ஆம். அவன் என்னை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்ற வாரம் இறைவன் திருவடியை அடைந்து விட்டான். அவனுக்கு வயது வெறும் 39 தான்.

சில காலம் குடிப்பதை நிறுத்திவிட்டு நன்றாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவன், இன்னொரு நண்பனின் மகள் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து வருந்தி, எல்லா காரியங்களையும் முன்னின்று நடத்தியவன், அந்த பெண் இறந்த ஐந்தே நாளில் இவனும் இறந்துவிட்டான்.

இரவு நிறைய குடித்துவிட்டு சாப்பிடாமல் படுத்து இருக்கிறான். காலையில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து சென்றவன், இருதயம் வெடித்து அந்த நொடியே இறந்துவிட்டான்.

என் குடும்பத்தில் ஒருவனாக பழகியவனின் மரணம் என்னை வாட்டி எடுக்கிறது. அதுவும் நான் கடைசியில் அவனிடம் பேசியதை நினைத்தால் வேதனையாக உள்ளது.

நானும் அவனுக்கு நிறைய முறை டிரிங்க்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறேன் என நினக்கும்போது, குற்ற உணர்ச்சியால் இன்னும் என் மனம் அதிகமாக வேதனைப்படுகிறது.

எனக்கு என் வாழ் நாளில் அவன் எவ்வளவோ உதவி செய்திருக்கிறான். ஆனால் என்னால் கடைசியில் அவன் உடலை கூட பார்க்க முடியாமல் போய்விட்டது.

அவனின் ஐந்து வயது மகளின் எதிர்காலத்தை பற்றி நினைக்கையில் பயமாக இருக்கிறது.

இறந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் என் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். கடைசி வரை என்னால் அவனை மறக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

இதை படிக்கும் நண்பர்கள், குடிப்பவர்களாக இருந்தால், உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்,

- முடிந்தால் குடிப்பதை நிறுத்தப் பாருங்கள்

- அல்லது குடிப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்

- குடிக்கும் போது உங்கள் குடும்பத்தை பற்றி  நினைத்துக்கொள்ளுங்கள்.


Dec 22, 2010

அக்கா...? (சிறுகதை)

நான் ஒன்பதாவது படிக்கும் போதுதான் திருச்சியில் உள்ள தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் சேர்ந்தேன். தினமும் லால்குடியில் இருந்து டிரெயினில்தான் திருச்சி டவுன் ஸ்டேஷன் வரை செல்வோம். டவுன் ஸ்டேஷனில் இருந்து ஆண்டாள் தெரு வழியாக பள்ளி செல்ல எப்படியும் 9.30 ஆகும். சில தினங்கள் லேட் ஆகும். அதனால் பிரேயர் முடியும் வரை வெளியே நிற்போம். நான் ஒன்பதாவது படிக்கும் போதே நல்ல உயரமாக இருந்ததால், அரை டிரவுசர் போட்டுக் கொள்ள வெட்கப்பட்டுக் கொண்டு தினமும் பேண்ட் போட்டுக்கொண்டுதான் செல்வேன். பள்ளி சென்றதும் பேண்டை கழட்டிவிட்டு அரை டிரவுசர் மாட்டிக்கொள்வேன். பின்பு பிகாம் புனித ஜோசப் கல்லூரியில் படித்தபோதும்,நேஷனலில் போஸ்ட் கிரேஜுவேஷன் படித்த போதும் டிரெயினில்தான் சென்றேன்.

டிரெயின் வாழ்க்கை எனக்கு பல நல்ல அனுபவங்களையும் நிறைய கெட்ட அனுபவங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. அப்போது பஸ்ஸை விட டிரெயின் டிக்கட் ரொம்ப குறைந்த கட்டணம் என்பதாலும், மாணவர்களுக்கு சீசன் டிக்கட் உண்டு என்பதாலும், ஏறக்குறைய ஊரில் உள்ள திருச்சியில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவ்ர்களுமே டிரெயினில்தான் வருவார்கள். ஏகப்பட்ட பெண்களும் வருவார்கள். அனைத்து மாணவர்களுமே ஏதாவது ஒரு பெண்ணை தன்னுடைய சைட் என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருப்போம். நிறைய காதல்களை, காதலர்களை சந்தித்த காலங்கள் அது.

ரயில்வேயில் வேலை பார்ப்பவர்களும் மற்றும் திருச்சியில் வேலை பார்ப்பவர்களும் தினமும் சீட்டு ஆடிக்கொண்டு வருவார்கள். நாங்கள் பாட்டு பாடிக்கொண்டு ஜாலியாக போவோம். என்னுடைய பாட்டுக்கெல்லாம் ரசிகர் ரசிகையர்கள் இருந்த காலம் அது. எப்போதும் சந்தோசமான இருந்த நாட்கள் அவை. ஆனாலும் ஒரு விதத்தில் ஒரு சோகம் என்னை எப்பவும் அப்பிக்கொண்டிருக்கும். காரணம் என்னுடைய சிஸ்டர்களும் அதே டிரெயினில் வருவதுதான். அதனால் என்னால் எந்த பெண்ணுடனும் துணிந்து தனியாக டிரெயின்ல் செல்லவோ அல்லது பள்ளி வரை பேசிக்கொண்டே செல்லவோ முடியாமல் போய்விட்டது.

சிஸ்டர்கள் வீட்டில் 'போட்டுக் கொடுத்துவிட்டால்' என்ன செய்வது என்ற ஒரு பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில்தான் என் சோகத்தை அதிகரிப்பது போல் என் பெரியம்மா மகள் காயத்ரி எங்கள் வீட்டில் தங்கி படிப்பதற்காக லால்குடிக்கு வந்தாள். அவளுக்கும் எங்கள் சிஸ்டர்கள் படிக்கும் சீத்தா லஷ்மி ராமாசாமி கல்லூரியிலேயே சீட் கிடைத்திருந்தது.

காயத்ரி நல்ல கலகலப்பான பெண். அவளும் எங்களுடனே டிரெயினில் வந்தாள். நான் எப்போதும் அவர்களுடன் ஒரே கம்பார்ட்மெண்டில் செல்வதில்லை. சிஸ்டர்ஸ் எல்லாம் லேடிஸ் கம்பார்ட்மெண்டில் செல்வார்கள். வந்த கொஞ்ச நாளிலேயே டிரெயினில் ரொம்ப பேமஸ் ஆகிவிட்டாள் காயத்ரி. எனக்கு அது பிடிக்க வில்லை என்றாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு நாள் காயத்ரி என்னிடம்,

"ரவி உனக்கு கீதா தெரியுமா? மணக்காலில் இருந்து வருவாளே?"

"தெரியாது, ஏன்?"

"இல்லை, அவ உன் கிட்ட இந்த லட்டரை கொடுக்கச் சொன்னா?"

"எனக்கா?"

"ஆமாண்டா"

"படிச்சு பார்த்தியா?"

"லூஸு. உனக்கு வந்த லெட்டரை நான் எப்படிடா படிக்க முடியும்?"

வாங்கி படித்து பார்த்தேன். அது ஒரு காதல் கடிதம். வர்ணனையுடன் எழுதப்பட்டிருந்தது. எனக்கு என்னவோ அந்த கீதா மேல் அவ்வளவு பிடிப்பு அப்போது ஏற்படவில்லை. அது ஏன் என்பது இந்த கதைக்கு தேவையில்லாத விசயம்.

இந்த கதை என் அக்கா காயத்ரியை பற்றியது. அதனால் நான் அந்த காதல் கடிதத்தை என்ன பண்ணினேன்? என்பதை விடுவிட்டு மேலே கதைக்கு செல்வோம்.

அக்காவுக்கு அவ்வளவு நண்பர்கள் இருந்தாலும், ஏகப்பட்ட பையன்கள் (என் நண்பர்கள்) உட்பட அவள் பின்னே சுத்தினாலும், அவள் யாரையும் காதலித்ததுபோல் எனக்கு தெரியவில்லை. அவள் வரவிற்கு பின் எங்கள் வீடே எப்போதும் கலகலப்பாக இருக்க ஆரம்பித்தது. எனக்கு காயத்ரியை ரொம்ப பிடித்துவிட்டது. அக்கா என்பதையும் மீறி ஒரு தோழி போல பழகினாள்.

எங்கள் அப்பா ரொம்ப கண்டிப்பு. யாரும் அவர் முன்னே உட்கார்ந்து பேச மாட்டோம். அவ்வளவு பயம் கலந்த மரியாதை. அப்பா ஊரில் செல்வாக்கு மிக்கவர். அவர் முன்னே சேரில் அமர்ந்து அவருக்கு சமமாக அரசியலிருந்து, ஆன்மிகம் மற்றும் இலக்கியம் வரை சரிசமமாக பேசியது காயத்ரி மட்டும்தான். எங்களால் ஏன் அவ்வாறு இயல்பாக இருக்க முடியவில்லை என்று இன்றுவரை தெரியவில்லை.

அப்போது எல்லாம் நான் எல்லா பத்திரிகைகளுக்கும் கவிதைகள், துணுக்குகள், கேள்விகள் எல்லாம் எழுதிக்கொண்டிருந்த காலம். என் பெயர் வராத பத்திரிகைகளே இல்லை எனலாம். என் படைப்புகள் ஏதேனும் வந்தால் ஒரு புத்தகம் இலவசமாக அனுப்பி வைப்பார்கள். அப்போது எல்லாம் போஸ்ட் மேன் வீட்டுக்கு வரும்வரை காத்திருக்க மாட்டேன். நானே போஸ்ட் ஆபிஸ் போய் கடிதங்களை நேரடியாக வாங்கி வருவேன்.

அப்படி ஒரு நாள் நான் போஸ்ட் ஆபிஸ் போய் கடிதங்களை வாங்கிய போதுதான் ஒரு விநோதமான கடிதத்தை பார்த்தேன். கடிதம் காயத்ரி பெயருக்கு வந்திருந்தது. அதை கொண்டு வந்து அக்காவிடம் கொடுக்காமல், ஏதோ ஒரு உந்துதலில் கடிதத்தை பிடித்து படிக்க ஆரம்பித்தேன். கடிதத்தில் இப்படி எழுதியிருந்தது,

" என் இனிய காயத்ரிக்கு,

ஆயிரம் முத்தங்களுடன் ஆனந்த் எழுதுவது. நம் காதல் உன் வீட்டில் தெரிந்ததால் உன் அப்பா உன்னை லால்குடிக்கு படிக்க அனுப்பி வைத்து விட்டார். இப்பொது எங்கள் வீட்டிலும் தெரிந்து விட்டது. என் அத்தை பெண்ணை பேசி முடித்துவிட்டார்கள். உனக்கே தெரியும் என் அப்பாவின் செல்வாக்கை பற்றி. வரும் திங்கள் அதிகாலை வட பழனியில் கல்யாணம். நீ இந்த லட்டரை படிக்கும் நேரம் நான் வீட்டை விட்டு வெளியே வந்து, ரமேஷ் உதவியுடன், கோயம்பத்தூரில் ரமேஷ் வீட்டில் காத்து இருப்பேன். நீ எப்படியாவது வீட்டை விட்டு வெளியே வந்து விடு. நான் உன்னை கோயம்பத்தூரில் அதே முகூர்த்தத்தில் கல்யாணம் செய்து கொள்கிறேன். நான் உன்னை காலம் முழுவதும் காப்பாற்றுவேன். கவலை வேண்டாம். மறக்காமல் வந்து விடு. உனக்கு ரமேஷ் வீட்டு அட்ரஸ்தான் தெரியுமே? இருந்தாலும் இன்னொரு முறை கீழே தருகிறேன்,

......

.......

அன்பு முத்தங்களுடன்,

ஆனந்த்.

கடிதத்தை படித்தவுடன் நான் என்ன செய்திருக்க வேண்டும். உடனே காயத்ரி அக்காவிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஏதோ ஒரு வெறுப்பில் நம் வீட்டில் காதலா? என நினைத்து கிழித்து போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

வீட்டில் போனோ, செல் போனோ இல்லாத காலம் அது. வீட்டிற்கு வந்தவுடன் அக்கா என்னைக் கேட்டாள்,

"ரவி எனக்கு ஏதாவது லெட்டர் வந்ததா?"

"இல்லை" என்று கூசாமல் பொய் சொன்னேன்.


***********************

இந்த சம்பவம் நடந்து 20 வருசங்கள் ஆகிவிட்டது. இன்னும் என் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே உள்ளது. நான் ஏன் அவளிடம் அந்த கடிதத்தை கொடுக்கவில்லை?

அதன் பிறகு அக்காவிற்கும் கல்யாணம் நடந்தது. ஒரு பேரழகிக்கு அமைந்தது ஒரு சாதாரண வாழ்க்கை. இன்னும் குழந்தை வேறு இல்லை. அவள் சந்தோசமாக இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை.

ஒரு வேளை நான் அந்த கடிதத்தை கொடுத்திருந்தால் அவள் வாழ்க்கை நன்றாக அமைந்திருக்குமோ?


Dec 20, 2010

மாமா! (சிறுகதை)

பத்தாவது எக்ஸாம் லீவில்தான் நாங்கள் அந்த வீட்டில் குடிபுகுந்தோம். நல்ல பெரிய வீடு. அக்ராஹாரம். வீட்டை ஒட்டி ஒரு ஸ்டோர். அங்கு சில குடித்தனங்கள். வீட்டின் பின் பகுதியில் ஒரு பொதுவான கிணறு. குளிப்பது எல்லாம் அங்கேதான். துண்டை கட்டிக்கொண்டுதான் குளிக்க வேண்டும். பெண்களும் அங்கேதான் குளிக்க வேண்டும். இப்படித்தான் கழிந்தது என் பள்ளிக்காலமும், கல்லுரிக்காலமும்.

அப்போதுதான் எனக்கு 'மாமா' அறிமுகமானன் (ர்). ஏனென்றால் எங்களைவிட மூத்தவர். அவர் பெயர் என்ன வென்று நினைவில்லை. மாமா, மாமா என்று கூப்பிட்டு அதுவே நிரந்தர பெயராக மாறிவிட்டது. எங்களுடன் தான் எப்போதும் இருப்பான். முதலில் மாமாவைப் பற்றி சொல்லிவிடுகிறேன். மாமா எங்கள் பக்கத்து வீட்டு ஸ்டோரில் குடியிருந்த ருக்மணி மாமியின் தம்பி. ஏழை பிராமணன். அப்பா அம்மா இல்லை. அக்கா தயவில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வேலை எதுவும் இல்லை. எப்போவாவது சமையல் வேலை போவான். கொஞ்சம் அழுக்கான நாலு முழ வேட்டி, வெள்ளை நிற அரைக்கை சட்டை. இதுதான் மாமாவின் உடை. ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருக்கும். கண்களை நேருக்கு நேர் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம். அந்த அளவிற்கு பவராக இருக்கும்.

மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் ரொம்ப சிம்பிள், மாமாவிற்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் இந்த அளவிற்கு படித்து, பெரிய வேலையில் அமர்ந்ததற்கு மாமாவும் ஒரு காரணம் என்பேன். ஸ்டடி ஹாலிடேய்ஸ் சமயத்தில் என்னுடைய படிக்கும் டைம் டேபிள் எனக்குத் தெரிகிறதோ இல்லையோ மாமாவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

படிக்கும் நாட்களில் காலை 11.30 ஆனால் மாமா என் வீட்டுக்கு வந்துவிடுவான்.

"டேய் வா. படிச்சது போதும். கொஞ்சம் ரெஸ்ட் எடு. ரவிக்கடையில போய் ஒரு டீ போட்டு வரலாம்"

நானும் உடனே கிளம்புவேன். நான் ஒரு டீ சாப்பிட்டால், மாமா ஒரு டீயும் ஒரு பன்னும், சிகரட்டும் வாங்குவான். அவன் பன் வாங்கவில்லை என்றால் அவன் காலையில் ஏதோ எங்கேயோ சாப்பிட்டு வந்திருக்கிறான் என்று அர்த்தம். எந்த வேலையும் செய்யாமல் எதுவும் சாப்பிட மாட்டான். எப்போதுமே நான் தான் காசு கொடுப்பேன். நான் கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வான்.

மெடிட்டேஷனை பற்றி தெரிந்து கொண்டது மாமாவிடம்தான். இரவில் ஒரு நாள் மொட்டை மாடியில் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

"டேய், இப்போ இந்த நிலாவை நகர்த்திக் காட்டவா?'' என்றான்.

"முதலில் எனக்கு புரியவில்லை. எல்லோருமே, ஆமாம் மாமா, நகருது நகருது" என்றார்கள்.

மேகம் தான் நகர்கிறது, நிலா அல்ல என்பது எனக்குப்புரிய பல வருடங்கள் ஆனது. அந்த அளவிற்கு மாமாவின் பேச்சு ஒரு நம்பகத்தன்மையுடன் இருக்கும். எல்லா விதமான விசயங்களையும் மாமாவிடம் பேசலாம்.

மாமாவின் அக்காவிற்கு கலா என்ற ஒரு பெண் இருந்தாள். மாமாவிற்கு முறைப்பெண். ஒரு திருவிழா சமயத்தில் மாமா என்னைக் கூப்பிட்டு,

"டேய், கலா உன்கிட்ட என்னவோ பேசணுமாம். பொழுது போனோன, கிணத்தடிக்கு போ"

"என்ன விசயம் மாமா?"

"எனக்குத் தெரியாதுடா"

'நீயும் வறயா?"

"அவ உன் கிட்டத்தான் பேசணுமா?"

அதுதான் மாமா. அவன் முறைப்பெண்ணிடம் பேச என்னை தனியாக போக சொல்கிறான்.

போனேன். விசயம் ஒன்றும் பெரிதல்ல. கலாவின் தோழி என்னைப் பற்றி ஏதோ அவளிடம் சொல்லி இருக்கிறாள். அதை என்னிடம் விசாரித்தாள். நானும் பதில் சொன்னேன். ஒரு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். மாமா நான் என்ன பேசினேன் என்று என்னிடம் இன்றுவரை கேட்டதில்லை. ஆனால் மாமாவிற்கு கலா என்றால் கொள்ளைப்பிரியம் என்று எனக்குத்தெரியும்.

அந்த சமயங்களில் எனக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் மாமாதான் தீர்த்து வைத்தான். ஒரு முறை என்னை ஒருவன் பஸ் ஸ்டாண்டில் வம்பிழுக்க, மாமா எப்படியோ யார் மூலமோ தெரிந்து கொண்டு அடுத்த நாள் அவனை புரட்டி எடுத்துவிட்டான்.

நான் வேலைக்கு இண்டர்வியூ சென்றாலும், துணைக்கு கூடவே வருவான். பிறகு ஒரு வழியாக நான் வேலை கிடைத்து வெளியூரில் செட்டிலாகிவிட்டேன்.

எப்போவாவது மாமாவைப் பற்றி நினைத்துக்கொள்வேன். மாமாவின் அக்கா பையன்கள் எல்லாம் அப்போதே வேதம் பயின்று கொண்டிருந்தார்கள். மாமாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவ்வப்போது வரும்.

இந்த முறை ஊருக்குச் சென்ற போது மாமாவை பார்க்க போனேன். தெருவே முழுவதும் மாறி இருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டை மூன்றாக ஆக்கி வாடகைக்கு விட்டிருந்தார்கள். மாமா வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை.

அங்கே இருந்தவர்களிடம் மாமாவைப் பற்றி விசாரித்தேன். அங்கே தெரு கடைசியில் இருக்கும் மடத்தில் தேடச்சொன்னார்கள், போனேன்.

ஒரு மூலையில் படுத்துக்கொண்டு அங்கே இருக்கும் சிறுவர்களிடம் மாமா மேலே இருக்கும் நிலாவை நகர்த்திக்கொண்டு இருந்ததை பார்த்தேன். எங்களைப்போல் அடுத்த தலைமுறை சிறுவர்கள் மாமாவை சுற்றி.

என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டான்,

"எப்படிடா இருக்க?''

"நல்லா இருக்கேன் மாமா. நீ எப்படி இருக்க?"

"பார்த்தா தெரியலை?"

பார்த்தேன். அதே நாலுமுழ அழுக்கு வேட்டி சட்டை. என்ன இப்போது அழுக்கு கொஞ்சம் கூட.

வலித்தது.

"என்ன மாமா? அக்கா எப்படி இருக்காங்க? உன் குடும்பத்தை பத்தி சொல்லு"

"அக்கா தவறிப்போயிட்டாங்கடா. பசங்கள் எல்லாம் புரோகிதரா மாறிட்டாங்க'

"சரி மாமா, உன் குடும்பம், மனைவி குழந்தைகளை பற்றி சொல்லு"

"எனக்கு கல்யாணம் ஆகலைடா?"

"ஏன்?"

"தெரியலை"

"கலா என்ன ஆனா மாமா?"

"ம்ம்ம். அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சே"

"அப்படின்னா"

"ஆமாம். அவளுக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிட்டாங்க"

"ஏன் மாமா? நீ நல்ல மாப்பிள்ளை இல்லையா?''

"தெரியலைடா, தெரியலை" என்று எப்போதும் போல அதே சிரிப்போடு என் கைகளை இருக்கிப்பிடித்தான்.

அவன் கண்களை சந்திக்க விருப்பம் இல்லாமல் இருந்தாலும், என்னை மீறி பார்த்தேன்.

என்னதான் மாமா சிரித்துக்கொண்டே சொன்னாலும், அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் அவனை அறியாமல் கீழே விழுந்தது.

"ஏதாவது வேண்டுமா மாமா?" என கேட்க நினைத்து கேட்காமலேயே திரும்பி விட்டேன்.

Dec 17, 2010

என்னை மன்னித்து விடு! (சிறுகதை)

இந்த இரவும் சண்டையில் முடிந்த எரிச்சலில் நான். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன். நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. தினமும் இரவில் சண்டை. அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் நான்? இன்னொரு பெண்ணுடன் பழகுவது தப்பா? எல்லா இடங்களிலும் நடப்பதுதானே? எத்தனை பேர் இரண்டு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்?

இப்படி உங்கள் முன் புலம்பிக்கொண்டிருக்கும் என் பெயர் அருண். ஒரு கம்பனியின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறேன்?. கை நிறைய சம்பளம். குறையே இல்லாத வாழ்க்கை. நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்?

எனக்கு பிரச்சனை என் செகரட்டரியால் வந்தது. என்ன பிரச்சனை என்று கேட்கின்றீர்களா? செகரட்டரி சுசீலா மிக நல்ல அழகான கேரளப் பெண். இது ஒன்று போதாதா? பிரச்சனை ஆரம்பம் ஆக? அவள் என்னை அலுவலகத்தில் கவனித்துக்கொள்ளும் அழகை நீங்கள் பார்க்க வேண்டுமே? ஒரு மனைவி கூட அப்படி கவனிக்க மாட்டாள்.

ஆனால், என்ன பிரச்சனை என்றால், சில மாலை நேரங்களில் அவள் உண்மையான மனைவி போல் அலுவலகத்தில் நடந்து கொள்வதுதான். பிடிக்கவில்லை என்றால் கண்டிக்க வேண்டியதுதானே? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

நான் பிடிக்கவில்லை என்று உங்களிடம் சொன்னேனா என்ன?

என் மனைவி கீதா மிக அழகானவள். ஆசை தீர திருமணத்திற்கு பிறகு காதலிக்கத்தான் செய்தேன். அட்டகாசமான வாழ்க்கைத்தான் வாழ்ந்தோம். 'தோம்மா' ஆம். அப்படி என்றால்? இப்போது... தினமும் சண்டை.

என்னால் அவமானப்படுத்தப்பட்ட ஏதோ ஒரு விஷ ஜந்து கீதாவிடம் என்னைப்பற்றியும், சுசீலா பற்றியும் போட்டுக்கொடுத்து விட்டது. அது உண்மையாய் இருந்தாலும், பொய் என்று எவ்வளவோ வாதாடிப்பார்த்தேன். கீதா நம்பவில்லை.

பிடிக்கவில்லை என்றால் விலகிப்போக வேண்டியதுதானே? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. விவாகரத்து வாங்கிக் கொள்ள நான் என்ன முட்டாளா என்ன? சொத்து எல்லாம் அவள் பெயரில் அல்லவா இருக்கிறது. மேலும் கீதாவின் அப்பா ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி. என்னை உயிரோடு விட்டுவிடுவாரா என்ன?

அவர் மட்டும் இல்லை என்றால் இந்த சேரியில் பிறந்த... அதாங்க எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பும், பதவியும், சொத்தும் கூடவே அவர் பெண்ணும் கிடைக்குமா? அவர் ஏன் எனக்கு அவர் பெண்ணை கொடுத்தாருனு கேட்கறீங்களா? அவருக்கு அவரோட பெண்ணைவிட சொத்து முக்கியமா பட்டுடுச்சு போல அதான் அவரோட பினாமியான எனக்கு கொடுத்துட்டார்.

அப்ப பேசாமா மூடிட்டு நல்லா வாழ்க்கையை அனுபவிக்கலாம் தானே? ஏன் இப்படி புலம்புறனு தானே கேட்கறீங்க. ஐய்யோ உங்களுக்கு நான் எப்படி சொல்வேன்,

சுசீலாங்க... சுசீலா

ஒரு தடவை அவளை... அப்பத்தான் உங்களுக்கு தெரியும்.ஐயோ என்னவோ தப்பா பேசிட்டேன். மன்னிச்சுடுங்க. சுசீலா எனக்குத்தான். எனக்கு மட்டும்தான்.

எனக்கு சுசீலா வேணும்ங்க. மனைவியா, காதலியோ, தோழியா? ஆனா அதே சமயம் கீதாவோட சொத்தும் வேணுங்க. என்ன செய்யலாம்?

தூக்கம் வருதுங்க. மீதிய காலைல பேசிக்கலாம்.

**********

ஹலோ நேத்து உங்ககிட்ட சொன்னேன் இல்லையா என் பிரச்சனைய. ஒரு வழியா ஒரு முடிவு கிடைச்சுடுச்சு.

காலைல என் பால்ய சிநேகிதன் பாலாவை பார்த்தேன்.

அவனும் நானும் சின்ன வயசுலே இருந்து சேர்ந்து ஒண்ணத்தான் சுத்துவோம். நிறைய தப்பு செஞ்சுருக்கோம். நிறைய பெண்களை சேர்ந்து..... சரி, சரி அது இப்போ முடிஞ்சு போன கதை. விசயத்துக்கு வருவோம். பாலா இப்போ டாக்டரா இருக்கான்.

என்னோட சுத்துனவன் எப்படி டாக்டரானானு கேட்கறீங்களா? அவன் அப்பவே நல்லா படிப்பான். நானும்தான். என்னதான் சின்ன வயசுல அப்படி சுத்துனாலும், நானும் MBA முடிச்சுட்டேன்ல. அதனாலதானே கீதா அப்பாவால எனக்கு பெரிய பதவி வாங்கி தர முடிஞ்சது.

பாலாட்ட விசயத்தை சொன்னேன். அவனாவது திருந்தி இருப்பான்னு பார்த்தா அவனும் அப்படித்தான் இருக்கான் நர்ஸோட. அப்புறமா அவன் அந்த ஐடியா கொடுத்தான்.

"ஏண்டா அருண் கவலைப்படுற? நான் ஒரு மாத்திரை தறேன். அதை பாலுல கலந்து அவளை குடிக்க வைச்சுடு. குடிச்சோன கொஞ்சம் மயக்கம் வறா மாதிரி இருக்கும். அது ஒரு ஸ்லோ பாய்சன் மாத்திரை. கொஞ்சம் கொஞ்சமா அவளை ஒரு மூணு மாசத்துல காலி பண்ணிடும். நீ மாட்ட மாட்ட. ஏதோ நோய் வந்து  அவள் இறந்தது போல ஆகிவிடும். அதுக்கு அப்புறம். நீ சுசீலாவோட ஜாலியா இருக்கலாம்"னு சொன்னான்.

முதல்ல எனக்கு பாவமா இருந்துச்சு கீதா மேல. என் மேல உயிரே வைச்சிருக்கான்னு நினைக்கிறேன். அதுக்காக? சுசீலாவை விடமுடியுமா?

"கீதாவை பிடிக்கும்னு சொல்லற. சுசீலாவையும் பிடிக்கும்னு சொல்லற. அது எப்படி?" உங்களுக்கு சந்தேகம் வருதா?

என்னங்க இது? ஒருத்தருக்கு இட்லி பிடிக்கும்னா, சப்பாத்தி பிடிக்கக்கூடாதா?

சரி விடுங்க. யோசிச்சு முடிவு எடுத்து மாத்திரைய வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். எங்கேயும் போயிடாதீங்க. நான் அவளுக்கு மாத்திரை பாலில் கொடுக்கும்வரை இங்கேயே இருங்க.

இதோ பால் எடுத்துட்டு வந்துட்டா. இரண்டு டம்பளர். எனக்கு ஒண்ணு. அவளுக்கு ஒண்ணு. எப்படி மாத்திரையை போடுவது?

கொஞ்சம் குடித்து பார்த்துட்டு,

"கீதா, பால்ல சக்கரை பத்துல கொஞ்சம் எடுத்து வா?" அவள் எடுத்து வருவதற்குள் கலந்து விடணும்.

ம்ம்ம் இதொ இன்னும் ஒரு வினாடி. அப்பா எப்படியோ கலந்துட்டேன். கீதா வந்தவுடன் சக்கரையை கலந்த டம்ளரை என்னிடம் கொடுத்தாள். மாத்திரைய கலந்த டம்ளரை அவளிடம் கொடுத்தேன்.

குடித்தோம்.

என்ன இது ஒரு மாதிரி இருக்கு????

"குடிச்சோன கொஞ்சம் மயக்கம் வறா மாதிரி இருக்கும்"

இடைச்செறுகல்:


அருணுக்கு மட்டும்தான் பாலா போல பால்ய சிநேகிதன் இருக்கணுமா என்ன?


Dec 16, 2010

கவிதை எழுத ஆசை!

எப்படியாவது கவிஞனாக
ஆசைப்பட்டு
வார்த்தைகளை தேடுகிறேன்
எந்த வார்த்தைகளை எடுத்து
எப்படி கோர்ப்பது? எந்த வார்த்தைகளை
விட்டு விடுவது என்று குழம்பித் தவிக்கிறேன்
வார்த்தைகளும் என்னிடம் குழம்பி
தவிக்கின்றன.
பேப்பரை போல வார்த்தைகளையும்
கிழித்து போடுகிறேன் குப்பையில்
எதேச்சையாக பார்க்கிறேன்
குப்பை கூடையே ஒரு கவிதையாய்
தெரிகிறது.
கவிதைக்கு என்னை பிடிக்கிறதோ
இல்லையோ
என்னை கவிதைக்கு
பிடித்திருக்கிறது போலும்.

******************************

மழைக்கால இரவு
மலைமேல் நானும் அவளும்
மற்றும்
கொஞ்சம் மழையும் காற்றும்
நேரம் ஆக ஆக
மழையையும் காற்றையும்
உரசக்கூட விடவில்லை
நாங்கள்
காலை வரை
அங்கே இருந்தபோதும்
அவளும் நானும்
எங்களின் குடும்பத்தைப் பற்றி
கேட்டுக்கொள்ளவேயில்லை.

******************************

காலங்களில் நீ வசந்தம்
கலைகளிலே நீ ஓவியம்
என்று என்னைப் பார்த்து
பாடிய கோடி வீட்டு கோபாலை
அடித்து துவைத்தனர் என் வீட்டினர்.
காரணம் கோபால் ஒரு ஏழையோ
அல்லது வேறு ஜாதியோ
என்ன எழவோ? எனக்குத்
தெரியாது
கோபால் பிள்ளை குட்டியுடன்
சுகமாக இருக்கிறானாம் இப்போ?
நான்
நாற்பது வயதில் கல்யாணம் ஆகாமல்
உணர்ச்சியற்ற ஜடமாய்.
கோபாலுக்காவது கட்டி வைத்திருக்கலாம்
என்கிறார் அப்பா, கல்யாணம்
பண்ணி வைக்க துப்பில்லாமல்
இப்போது!

******************************

பெண்களை
நேருக்கு நேர் பார்க்கக்கூடாது
என ஒவ்வொரு முறையும்
நினைக்கிறேன் ஆனால் மறக்கிறேன்
ஒவ்வொரு முறையும்.
ஓவ்வொரு ஜோடிக்கண்களும்
ஓவ்வொரு கதை சொல்கின்றன
எனக்கு!
அன்பு, பாசம், காதல்
துரோகம் என!
சில நேரங்களில் சில பெண்கள்
என் கண்களை பார்க்க தவிர்ப்பதை
வியப்புடன் கடந்திருக்கிறேன்.
ஒரு வேளை அவர்களுக்கும்
என் கண்கள் பல விரும்பாத
செய்திகள் சொல்லி இருக்கலாம்.

******************************

Dec 15, 2010

கோகிலா ஐ லவ் யூ! - 2 (சிறுகதை)

அன்று மாலையே கோபியின் கோபம் எல்லாருக்கும் தெரிந்தது. உடனே அனைவரிடமும், "அது எப்படி நம்மாத்து பெண் அவன் கூட பேசலாம்?" என்று கடுப்பில் எல்லோரையும் உசுப்பேத்திவிட்டான்.

நண்பர்கள் அனைவரும் பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டது. எல்லோரும் முயற்சிக்க வேண்டியது. யாருக்கு அதிர்ஷ்டம் இருந்து யாருடன் கோகிலா நட்போ அல்லது லவ்வோ வைத்துக்கொள்ள விரும்புகிறாளோ, மற்றவர்கள் ஒதுங்கிவிட வேண்டியது.

அன்று மாலை ராமுவின் வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது கோகிலா வந்தாள். சிறிது நேரம் அங்கே இருந்தவள் உள்ளே போய்விட்டாள். மாமி வெளியே வந்து,

"ரவி, நீ நன்னா மேத்ஸ் போடுவியாமே? கோகிக்கு ஏதோ மேத்ஸ்ல டவுட் இருக்காம், கொஞ்சம் சொல்லித்தர முடியுமா?"

நண்பர்களின் பொறாமைக்கு நடுவில் வீட்டின் உள்ளே நுழைந்தேன். மேத்ஸ் சொல்லிக்கொடுத்தேனோ இல்லையோ நிறைய பேசினேன். பேசினோம். பேச்சு அப்படியும் இப்படியும் போனது. முடிவில் எனக்கு என்ன பிடிக்கும் அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதில் போய் நின்றது.

அடுத்த ஒரு வாரத்தில் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டொம். அவள் என்னை என்ன நினைத்தாளோ எனக்குத் தெரியாது, ஆனால், நான் அவளை என் காதலியாகத்தான் நினைத்தேன். அந்த வெள்ளிகிழமை மாலை என்னால் மறக்க முடியாத நாள்.

என்னைத் தனியாக கூப்பிட்ட கோகிலா, "ரவி, இன்னைக்கு மாலை கோயிலுக்கு போகலாமா?" என்றாள். ஏன் என்னை மட்டும் கூப்பிட்டாள், மற்ற நண்பர்களை கூப்பிடவில்லை? என்று நீங்கள் என்னைக் கேட்டால், என்னிடம் பதில் இல்லை. வேண்டுமானால் கோகிலாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எங்கள் ஊர் கோயிலைப் பற்றி சொல்ல வேண்டும். மிகப் பெரிய கோவில். சிதம்பரத்திற்கு அடுத்து ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடக்கும் கோயில் எங்கள் ஊர் பெரிய கோயில். வருடா வருடம் டிசம்பர் மாதம் திருவாதிரை மிக கோலாகலமாக நடக்கும். கிட்டத்தட்ட 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில், தினமும் இரவு வெளி மண்டபத்தில் சொற்போழிவு, இசை, நடன, பொம்மலாட்டம் என ஏதாவது ஒன்று நடக்கும். தினமும் நடராஜரின் நடனம் நடக்கும். கடைசி நாள் நடராஜரும், அம்பாளும் ஆக்ரோசமாக நடனமாடுவதை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். கோயிலை சுற்றி பார்த்து வெளியில் வரவே ஒரு மணி நேரம் ஆகும். அவ்வளவு பெரிய கோவில்.

அந்த கோயிலின் அம்மன் சன்னதியில்தான் நான் கோகிலாவிற்காக காத்துக்கொண்டிருந்தேன். தூரத்தில் யாரோ ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். யாரோ என்று நினைத்து உட்கார்ந்து இருந்தேன்.

"ஹாய், ரவி?" என்றவுடன்தான் திரும்பி பார்த்தேன்.என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. திரும்பி பார்த்தால், கோகிலா. தினமும் மிடியிலும், சுடிதாரிலும் பார்த்த என் கண்கள் தாவணியில் அவளை பார்த்ததும் பரவசத்தின் உச்சத்திற்கு போனது.

நீல நிற பட்டுத்தாவணி. பிங்க் கலர் பட்டுப்பாவடை, அதே நிறத்தில் ஜாக்கட். தலை நிறைய மல்லிகைப்பூ. நன்றாக அழுத்தி வாரிய இரட்டை ஜடை. தாவணியின் மேல், பார்க்கக் கூடாத இடத்தில் செயின் தொங்கியது. ஏனோ அந்த செயினின் மேல் பொறாமையாக இருந்தது.

மொத்தத்தில் பார்ப்பதற்கு அம்மன் போல இருந்தாள். அடுத்த ஒரு மணி நேரமும் நான் தெய்வத்தை தரிசிக்கவே இல்லை. எப்போது கோயிலில் இருந்து வந்தோம், எப்போது நான் வீட்டிற்கு போனேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால், கோயிலில் அவள் என் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செயதது நன்றாக நினைவில் இருக்கிறது. அன்று இரவு முழுவதும் நான் இந்த உலகத்திலேயே இல்லை.

அவளுக்கு ஏதாவது கொடுக்க நினைத்த நான் என்ன தருவது என நினைத்து குழம்பிப் போனேன். சிங்கிள் டீக்கே வழியில்லாத நான் அவளுக்கு என்ன பரிசு தர முடியும்? நண்பர்களும் என்னை விட்டு சற்று விலகி இருப்பது போலவே இருந்தது. கடைசியில் என்னிடம் இருந்த ஒரு பழைய டைரியை எடுத்துக்கொண்டு போய் அவளுக்கு கொடுக்கப்போனேன்.

கொடுத்தேன். சந்தோசமாக வாங்கிய அவள்,"நன்றி" என்று சொல்லிவிட்டு ஒரு மான் போல துள்ளி ஓடியது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

மாமி அடுத்த நாள் என்னைக் கூப்பிடுவதாக ராமு என் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டு ஏதோ காரணமாக சென்னை சென்றான். என்னவோ, ஏதோ என்று பதறி அடித்துக்கொண்டு அவள் வீட்டிற்கு ஓடினேன்.

"ரவி, கோகிக்கு ஏதோ புஸ்தகம் எல்லாம் வாங்கணுமாம். ராமுவும் இல்லை. அவளை திருச்சிக்கு கூட்டி போய் வாங்கித்தரயா?"

"சரி. மாமி"

திருச்சிக்கு போனோம். பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் கேட்டேன்,

"எங்க புத்தகம் வாங்கலாம் கோகிலா? ஹிக்கின் பாத்தம்ஸ்"

'புஸ்தகமா யாருக்கு வேணும்?"

"மாமி சொன்னாங்க?"

"ஆமாம். அப்புறம் எப்படி உங்க கூட வரதாம்"

"அதுக்காகா? பொய் சொல்லலாமா?"

"அதல்லாம் அப்புறம் பேசலாம். கலையரங்கத்துல ரஜினி நடித்த 'மாப்பிள்ளை' ஓடுதாம். படம் பார்க்கலாம் வாங்க"

படம் ஆரம்பித்தது. நான் படத்தை பார்க்கவில்லை. அவளும்தான். மெல்ல என் கைகளை அவள் கைகளோடு இணைத்துக்கோண்டாள். அந்த அனுபவம் அழகிய கவிதை.

வீட்டிற்கு வந்தோம். அவள் வீட்டில் யாரும் இல்லை. நாங்கள் மட்டுமே அங்கே இரண்டு மணி நேரம் தனியாக இருந்தோம். அந்த இரண்டு மணிநேரம் நாங்கள் என்ன செய்தோம்? ம்ம்ம் இப்போது அது உங்களுக்கு தெரிந்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. ஏன் எனக்கே...?

அடுத்த நாள் சென்னை கிளம்பினாள். கண்ணிருடன் வழி அனுப்பி வைத்தேன். நிச்சயம் மீண்டும் வருவேன் என்றாள். கல்யாண புடவை என்ன கலர்? என்றெல்லாம் முடிவு செய்து வைத்திருந்தோம்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.


வீட்டின் கீழே ஏதோ சத்தம். யாரோ வந்திருக்கின்றார்கள் போல. யார் அது?ராமுதான்.

அம்மா அவனிடம் பேசுவது காதில் கேட்டது,

"ஏம்பா நீயாவது அவனிடம் சொல்லக்கூடாதா? அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டா நான் என் கண்ண மூடுவேன்ல"

"நான் எத்தனை தடவைமா சொல்றது. கோகிலாவுக்கு கல்யாணம் ஆகி, இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்காங்கன்னு. அவன் கேட்டாத்தானே"

ராமு எப்பவும் இப்படித்தாங்க, நிறைய பொய் சொல்லுவான். கோகிலா நிச்சயம் வறேனு சொல்லிட்டு போயிருக்கா. எப்படி வராம போவா?

எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? சென்னைக்கு போனிங்கன்னா, கோகிலாவை பார்த்தீங்கன்னா, நான் அவளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க. ப்ளீஸ்!

Dec 10, 2010

கோகிலா ஐ லவ் யூ! - 1 (சிறுகதை)

நான் 9ம் வகுப்பு போகும்போதுதான் லால்குடியில் அந்த தெருவில் குடியேறினோம். அப்போது அப்பா தாலுக் சப்ளை ஆபிஸராக (TSO) இருந்ததாக நினைவு. சொந்த வீடு எல்லாம் அப்போது இல்லை. வாடகை வீடுதான். அதற்கு வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்ட காலம் அது. அதிகம் பிராமின்கள் வாழும் இடமாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. எங்கள் தெரு முழுக்க நிறைய என் வயது ஒத்த பையன்களும், பெண்களும் இருந்தார்கள். தெருவே கலர் புல்லாக இருக்கும். ஒவ்வொருத்தரும் அவருக்கு பிடித்த பெண்களை நினைத்து கனவில் வாழ்ந்த காலம் அது. முதலில் நான் அந்த தெருவிற்கு வந்தவுடன் அவ்வளவு எளிதாக யாருடனும் பழக முடியாமல் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.

எங்கள் தெருவில் இரண்டு கிரிக்கெட் டீம் இருந்தது. நான் ஒரு சுமாரான பவுளர். என்னையும் டீமில் சேர்த்துக்கொண்டார்கள். என் கிரிக்கட் அனுபவத்தைப் பற்றி நிறைய உங்களிடம் சொல்ல வேண்டும். நீங்கள் சோர்வாக இருக்கும் நாளில் சொல்கிறேன். இன்று வேண்டாம். ஏன் என்றால் நான் சொல்லப்போகும் இந்த கதை ஒரு அழகிய பெண்ணை பற்றியது. அழகான கவிதை போன்ற அனுபவத்தை உங்களுக்கு சொல்லப் போகிறேன். இந்த கதையில், நீங்கள் "என்னை" எடுத்துவிட்டு உங்களை பொருத்திக்கொள்ளுங்கள். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஏனென்றால் உங்களுக்கும் இப்படி பட்ட அனுபவம் ஏற்பட்டு இருக்கலாம்.

என் நண்பர்கள் அனைவரும் ராமு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதுதான் வழக்கம். ஆரம்பத்தில் என்னுடன் பழக தயங்கிய என் நண்பர்கள் பின் வந்த நாட்களில் என்னுடன் ரொம்ப நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். அதற்கான காரணமாக நான் நினைத்தது இரண்டு விசயங்கள்தான். ஒன்று என் படிக்கும் திறமை, மற்றொன்று நான் கருப்பாக இருப்பது.

இரண்டாவது காரணம் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா? ஆனால் அது தான் உண்மை. தெரு முழுக்க பெண்கள். ஆனால் எல்லா பெண்களும் என்னிடம் தாராளமாக பழகியது இன்றுவரை எனக்கு புரிந்து கொள்ள முடியாத ஒரு விசயமாக இருக்கிறது.

அதற்கு முன் என்னைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஒன்று எனக்கு இருக்கிறது. நான் நல்ல உயரம். பயங்கர ஒல்லி. முகம் மட்டும் கொஞ்சம் பிரகாசமாக இருக்கும். அந்த தெருவில் இருந்த பிராமண பையன்கள் எல்லாம் நல்ல கலருடன் அழகாக இருப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்பட்டதே இல்லை. ஏனென்றால் என் பேச்சு அப்படி. எதைப் பற்றி வேண்டுமானாலும் ஒரு மணி நேரம் பேசுவேன். சுமாராக பாடுவேன். எல்லார் வீட்டிலும் கிச்சன் வரை போவேன்.

"ஏண்டி, ரவி வந்திருக்கான் பாரு. அவனுக்கு சாப்பிட ஏதாவது கொடு?" என்று எந்த வீட்டிற்கு சென்றாலும் அந்த வீட்டு மாமா, மாமியிடம் சொல்லும் அளவிற்கு நான் உரிமையுடன் பழகி வந்தேன். ஏன் அப்படி என்று? என்னை திரும்பவும் கேட்காதீர்கள்? நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே?

போரடிக்கிறேனோ? சரி விடுங்கள். நாம் மெயின் கதைக்குள் சென்றுவிடலாம்.

கோடை விடுமுறை நாட்களில் அதிக சந்தோம் எங்களுக்கு வரும். காரணம், நிறைய நேரம் தூங்கலாம், படிக்க வேண்டாம், கேரம் விளையாடலாம், கிரிக்கட் விளையாடலாம். அது மட்டுமல்ல, நிறைய நண்பர்கள் வீட்டில் மிக அழகான பெண்கள் விடுமுறைக்கு சென்னையிலிருந்தோ அல்லது பாம்பேயிலிருந்தோ வருவார்கள். அந்த ஒரு மாதமும் எங்கள் ஹார்ட் பீட் அளவுக்கு அதிகமாக துடிக்கும்.

பின்னே இருக்காதா? 365 நாளும் தாவணியில் வளைய வரும் பெண்களை பார்த்து பழகிய கண்களுக்கு, திடீரேன சுடிதார், மிடி என்று பெண்கள் வளைய வந்தால்....

அந்த கோடை விடுமுறை என் வாழ்க்கையை புரட்டி போடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அன்று ராமு வீட்டில் உட்கார்ந்து அடுத்த நாள் நடக்க போகும் கிரிக்கட் மேட்சை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு கார் ராமு வீட்டிற்கு வந்தது. அதிலிருந்து ஒரு மாமா, ஒரு மாமி மற்றும் ஒரு அழகிய பெண் இறங்கினார்கள்.

அவ்வளவுதான் எங்கள் அனைவரின் கண்களும் அவளை நோக்கிப் பாய்ந்தன.

"யாருடா ராமு?''

"எங்க சித்தியும் சித்தப்பாவும்டா. சென்னையிலேருந்து வந்துருக்கா?"

" அது யாருடா?"

"எங்க சித்தி பொண்ணு கோகிலாடா?"

உள்ளே நுழையப்போனவள், எல்லோரையும் பார்க்காமல் என்னை மட்டும் பார்த்து,

"ஹாய்" என்றாள்.

நண்பர்கள் அனைவரும் என்னை தீயினால் சுட்டு பொசுக்குவதை போல் பார்ப்பதை நிராகரித்து விட்டு,

"ஹாய்" என்றேன்.

இங்கே கோகிலாவைப் பற்றி சொல்ல வேண்டும். நீங்கள் வருசம் 16 படம் பார்த்து இருக்கின்றீர்களா? அதில் வரும் குஷ்பு போல் இருப்பாள். வயதுக்கு மீறிய வனப்பு. அவளை பார்த்தவுடனே கனவு காண்பீர்கள்.

அவள் உள்ளே போனவுடன் யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. ரொம்ப கடுப்பானவன் கோபிதான். சேகர், பாச்சா, சாமு, நாரயணன் அவர்கள் எல்லோரும் ஓரளவு அமைதி ஆகிவிட்டார்கள். எங்கள் செட்டில் கோபு கொஞ்சம் அதிகப்படி. அவனுக்கு அப்போது 25 வயது இருக்கும்.

அவன் விடும் கதைகளை கேட்பதே எங்களுக்கு பொழுது போக்காக இருந்த காலம் அது. எந்த பெண்ணை பார்த்தாலும், அவளை இணைத்து ஏதாவது கதை சொல்வான். அது பொய் என்றாலும், அவனுக்காக அதை கேட்டுக்கொண்டிருப்போம். அப்படிப்பட்ட அவனை பார்த்து பேசாமல் என்னை பார்த்து பேசினால் சும்மா இருப்பானா?


-தொடரும்

Dec 9, 2010

என் கண்கள் குளமாயின?

அழுகை, கோபம், சிரிப்பு இதெல்லாம் ஒவ்வொரு வகையான உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இதில் எதையுமே நாம் கட்டுப்படுத்தக்கூடாது. நான் எப்போது ஒரு வித சிரிப்புடனே உலா வருபவன். ஆனால், மிக மென்மையான மனம் எனக்கு என்று நினைக்கிறேன். என்னால் சினிமாவில் வரும் சோகமான காட்சிகளை கூட சாதாரணமாக பார்க்க முடியாது. சிறு வயதில் இருந்தே மிக சோகமான தருணங்களை நிறைய சந்தித்திருக்கிறேன். அதனால் எந்த உணர்ச்சிகளையும் என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.

அப்பா இறந்த தினத்தில் இங்கு இருந்து  ஊர் போய் சேரும் வரை அழுது கொண்டே சென்றேன். கண்களில் தண்ணீரே இல்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் ஊருக்கு சென்று உடம்பை பார்த்தவுடன் வந்த அழுகை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

என்னுடைய நண்பர் ஒருவர். தெய்வ நம்பிக்கை அதிகம் இல்லாதவர். மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் கண்கள் கலங்கி நான் பார்த்ததில்லை. மிகவும் அமைதியானவர். அவர் உயிருக்கு உயிராக நேசித்த அவரின் அம்மா கேன்சர் வந்து படுத்த படுக்கையில் இருந்தார். பல லட்சங்கள் செலவு செய்தார். அவர்களை காப்பாற்ற முடியாது என்று நன்றாக தெரிந்தும் நிறைய செலவு செய்தார். காரணம் அம்மா மேல் உள்ள அளவுக்கதிகமான பாசம், பிரியம், அன்பு மற்றும் நேசம். மருத்துவர்கள் கை விட்ட நிலையில், ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். நாள் முழுவதும் அம்மா அருகிலேயே இருந்தார்.

தினமும் பக்தி சம்பந்தமான புத்தகங்களையும், பகவத் கீதை புத்தகங்களையும் படித்து காண்பிப்பார். கடைசி இரண்டு வாரமும் அம்மாவின் அருகிலேயே இருந்தார். ஒரு நாள் அவரின் அம்மா இறந்து போனார். ஆனால், சொன்னால் நம்ப மாட்டீர்கள். நண்பர் கடைசி வரை ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை. எங்களுக்கு எல்லாம் பெரிய ஆச்சர்யம். எப்படி அவரால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிந்தது. என்னால், தாங்காமல் அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

"ஏன் அழ வேண்டும். நான் அம்மாவிற்கு ஒரு மகனாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து விட்டேன். மேலும் எனக்கு அழுகையும் வரவில்லை"

என்னால் அவர் கூறிய பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அதுதான் உண்மை. அவர் கடைசி வரை அழவே இல்லை. சினிமாவில் சோக காட்சியை பார்த்து அழும் என்னால் அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இன்று வரை அவர் கண்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நான் காணவில்லை.

இதை எல்லாம் நான் ஏன் இங்கு நினைவு படுத்துகிறேன். காரணம் இருக்கிறது. சென்ற வாரம் என் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவத்தை பாருங்கள்.

மலேசியாவில் பிச்சைக்காரர்களை நான் பார்த்தது இல்லை. அதனால் ஏழைகளே இல்லை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மை நிலை அது அல்ல. ஏழைகளே இல்லாத நாடே இல்லை போல. நாட்டுக்கு நாடு ஏழைகளின் சதவிகிதம் வேண்டுமானால் மாறுடலாம். ஆனால் எல்லா நாடுகளிலும் பாவப்பட்ட ஜீவன்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

எங்கள் கம்பனியின் தோட்ட வேலை செய்யும் இளைஞர். ஒரு 28 வயது இருக்கும். மிக அமைதியான பையன். நல்ல வேலை செய்பவன். பாத்ரூம் மற்றும் டாய்லெட் கிளீன் செய்ய என்று தனிப்பட்ட காண்ட்ரெக்டர்கள் உண்டு. சில சமயங்களில் அவர்கள் வராமல் இருப்பது உண்டு. அந்த சமயங்களில் டாய்லெட் கிளீன் செய்வதிலிருந்து, ஆபிஸ் கிளீன் செய்வது வரை எல்லா வேலைகளையும் இந்த இளைஞன் செய்வது வழக்கம்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் அவன் என் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் அவனில் ஒரு மாற்றத்தை என்னால் உணர முடிந்தது. ஆனால் என்ன என்று புரியவில்லை. தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அழவில்லை. எனக்கோ மலாய் மொழி தெரியாது. அதனால் அருகில் உள்ள நபரை அழைத்து என்ன? என்று விசாரிக்கச் சொன்னேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். விசயம் அப்படிப்பட்டது.

விசாரித்தவுடன் தான் தெரிந்தது. அன்று நடு இரவில் அவனின் மனைவி ஏதோ ஒரு நோயால் இறந்துவிட்டார். இரவோடு இரவாக மனைவியை அடக்கம் செய்து விட்டு, காலையில் ஏதுமே நடக்காதது போல அலுவலகம் வந்துவிட்டார். சொந்தக்காரர்கள் யாரும் இல்லை. மாமனார் இருப்பது வேறு இடத்தில். அவர்கள் குடும்பத்திலும் ஏழ்மை.

என்ன ஒரு கொடுமை பாருங்கள். அவனுக்கு இரண்டு குழந்தைகள் வேறு. இனி எப்படி அவர்களை கரையேற்றப்போகிறான். பிறகு நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்த்து அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.

கோடிக் கோடியாய் கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். ஆனால், ஏழைகளுக்கு ஏன் இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் ஏற்படுகிறது?

ஆண்டவா! உன் திருவிளையாடல்களுக்கு ஒரு அளவில்லையா???


Dec 8, 2010

சில Follow Up செய்திகள்!

நான் போன இடுகையில் "கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு" என்று சில விசயங்களை எழுதியிருந்தேன். அதைப் படித்தவுடன் எங்கள் சிங்கப்பூர் கம்பனியின் இயக்குநர் என்னை தொலை பேசியில் அழைத்தார்.

"என்ன உலக்ஸ், நல்லாதான் எழுதி இருக்க. ஆனா, அந்த மாதிரி ஆக்ஸிடண்ட் எல்லாம் ஆகாமல் இருக்க என்ன வழின்னு சொன்னியா?"

"அதான் கவனமா ஓட்டணும்னு சொல்லி இருக்கேனே சார்"

"கவனமா பார்த்து ஓட்டுங்கனு பொதுவா சொன்னா போதுமா?"

"வேற என்ன சொல்லனும்?"

"நிறைய"

அவர் சொன்னதற்கு இணங்க எனக்கு தெரிந்த சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

01. காரை எப்போது எங்கு நிறுத்தினாலும் ஹேண்ட் ப்ரேக் போட்டுத்தான் நிறுத்த வேண்டும். அப்போதுதான் நாம் வண்டியை எடுக்கும்போது ஏதேனும் கவனக்குறைவால் மிக சிறிய தவறுகள் ஏற்பட்டால் கூட, ஹேண்ட் ப்ரேக் ரிலிஸாகாமல் இருப்பதால், உடனே சரி செய்து கொள்ள முடியும்.

02. அடிக்கடி வண்டியை சர்வீஸ் செய்து நல்ல கண்டிஷனில் வைத்துக்கொள்ள வேண்டும்.

03. கோபமாக இருக்கும் எந்த தருணத்திலும் கார் ஓட்டக்கூடாது.

04. சிகனல்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

05. கார் ஒட்டும் போது எக்காரணத்தைக் கொண்டும் கைதொலை பேசி உபயோகிக்க கூடாது. அப்படி ஏதேனும் தலை போகும் அவசரமான அழைப்பு வந்தால், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, போன் பேசி முடித்துவிட்டு, பின்பு காரை ஓட்ட வேண்டும்.

06. சாலையில் செல்லும் போது நம் கண்ணில் எப்போதும் முன்னால் போகும் காரின் பின் டயர் தெரிய வேண்டும். அந்த அளவு தூரத்தில்தான் நம் கார் செல்ல வேண்டும். அப்போதுதான் 'சடன் பிரேக்' போட்டாலும், உடனே நம்மால் சுதாரித்துக்கொள்ள முடியும்.

07. இரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது.

08. ஹை வேயில் போகும் போது, என்ன ஸ்பீட் லிமிட்டோ அதை விட அதிகமாக போவதை தவிர்க்க வேண்டும்.

09. நெடும் பயணத்தின் போது அசதியினால் தூக்கம் வரும்போல் இருந்தால், எங்காவது நிறுத்தி, சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் காரை ஓட்டுவது நல்லது.

10. உடன் பயணிப்பவருடன் பேச நேர்ந்தால், நாம் பேசிக்கொண்டு இருந்தாலும் நம் கண்கள் எப்போதும் சாலையிலேயே இருக்க வேண்டும். திரும்பி திரும்பி பேசுதல் கூடாது.

******************************************************

போன மாதம் ஒரு இடுகையில் "நானும் சிக்ஸ் பேக்ஸ் ABSம்" என்று எழுதி இருந்தேன். நான் பல வருடங்களாக ஜிம்மும், யோகாவும், நடைப் பயிற்சியும் செய்து வந்தாலும் வயிறு மட்டும் குறையாமலே இருந்து வந்தது. 60 நாட்களுக்கு முன்பு என் வயிற்றின் அளவின் விபரம்:

மேல் வயிறு: 34 இன்ச்

நடு வயிறு: 35.5 இன்ச்

கீழ் வயிறு (பேண்ட் போடும் இடம்) : 34 இன்ச்

நான் எழுதியிருந்தவைகளை உண்மையாக கடைப்பிடிக்க ஆரம்பித்த உடன், குறிப்பாக உணவு பழக்கத்தை மாற்றிய உடன், என் வயிற்றின் அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நான் ஜிம்மில் சரி பார்க்கையில் என் வயிற்றின் அளவுகள் முறையே:

மேல் வயிறு: 33 இன்ச்

நடு வயிறு: 34 இன்ச்

கீழ் வயிறு (பேண்ட் போடும் இடம்) : 33 இன்ச்

கட்டுரையின் முடிவில் நான் விளையாட்டாக இப்படி சொல்லியிருந்தாலும்,

"சிக்ஸ் பேக் வந்தவுடன் இப்போ இருக்கும் அனைத்து பேண்ட்களையும் என்ன செய்வது என்று தெரியவில்லை"

இப்போது உண்மையிலேயே பேண்ட்டுகளை என்ன செயவதென்று தெரியவில்லை. எல்லாமே லூஸாக மாறிவிட்டது.

சிக்ஸ் பேக் பெற முடியாவிட்டாலும், வயிற்றை நார்மலாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

இந்த உடனடி மாற்றத்திற்கான முக்கியமான காரணமாக நான் நினைப்பது இரவில், இட்லி, தோசை, சாதம் போன்ற கார்போ ஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, வெறும் இரண்டு சப்பாத்தியும் காய்கறிகளும், பழங்களும் சாப்பிடுவதுதான்.

நானும் முன்பு வயிற்றை குறைப்பது கஷ்டம் என்றுதான் நினைத்து வந்தேன். இப்போது அது ஒரு கஷ்டம் அல்ல என்பதை புரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் சப்பாத்திக்கு மாறும்போது ஒரு சில நாட்கள் அசதியாக இருந்தது. இப்போது பழகிவிட்டது, இப்போது வயிறு லேசாக உள்ளது. மனதில் ஒரு சந்தோசம் ஏற்பட்டுள்ளது.

நீங்களும் முயற்சிக்கலாமே!

******************************************************

தோழர் அதிபிரதாபன் வழிக்காட்டுதலினால் புது டெம்ப்ளேட் மாற்றியுள்ளேன். எப்படி இருக்கிறது என்று சொல்லவும்.

******************************************************

Dec 3, 2010

கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு...?

நண்பர் ஒருவருக்கு அவரின் நண்பர் BMW காரை குறைந்த அளவிற்கு விற்க முன் வந்தார். பேசி முடிவானவுடன் நண்பரிடம் டிரையல் ரன்னுக்காக அவர் காரை நண்பரிடம் கொடுத்தார். சென்ற வாரம் நண்பர் தன் குடும்பத்துடன் அருகில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சிக்கு சென்றார். அது கொஞ்சம் மலை மேலே உள்ளது. அங்கே சென்று விட்டு வரும் போது சரியான மழை. சாதாரண காரை பல வருடங்கள் ஓட்டிவிட்டு BMW கார் ஓட்டத்துவங்குபவர்கள் மிக கவனமாக ஓட்ட வேண்டும். காரணம் BMW ஒரு அதிவேக கார். உள்ள உடகார்ந்து செல்லும்போது 150 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் கூட நமக்கு ஒன்றுமே தெரியாது. அப்படி ஒரு ரதம் போல போகும். அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும். நண்பர் சந்தோசமாக பாடிக்கொண்டே வந்து கொண்டிருந்திருக்கிறார். பின்னால் இருந்த தன் இரண்டு வயது மகளிடம் திரும்பி பேசி, அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு முன்பக்கம் திரும்பி பார்க்கையில், கார் ஓடு பாதையை விட்டு விலகி மலையிலிருந்து 15 அடி கீழே விழுந்து, தலை கீழான நிலையில் அப்படியே ஒரு 50 அடிதூரத்திற்கு இழுத்து சென்று ஒரு இடத்தில் மோதி நின்று இருக்கிறது. நண்பர் எப்படியோ சுதாரித்துக்கொண்டு, பின் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்து மற்றவர்களையும் வெளியே இழுத்து காப்பாற்றி விட்டார். நேரமோ மாலை 6.30. அந்த இடத்தில் யாரும் இல்லை. பிறகு கம்பனிக்கு போன் செய்து, அவர்கள் வந்து போலிஸ் வந்து எல்லாவற்றையும் கிளீயர் செய்து இருக்கிறார்கள். ஆண்டவன் புண்ணியத்தில் சிறு சிறு சிராய்ப்புகளுடன் மொத்த குடும்பமும் தப்பித்துவிட்டது. காரை கிரேன் வைத்து எடுத்து சென்றுள்ளாகள்.

நண்பர்கள் சிலர், 'அந்த காரை வாங்காதே. அபசகுனமாகப்படுகிறது" என்கிறார்கள். ஒரு சிலர், "BMW கார் என்பதால்தான் அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்து உள்ளீர்கள். மற்ற கார்கள் என்றால், இந்நேரம் அவ்வளவுதான்' என்கிறார்கள். நண்பர் குழம்பி போய் உள்ளார்.

எது எப்படியோ, மலையில் இருந்து வரும்போது, மழை பெய்து கொண்டிருக்கும்போது கவனமாக ஓட்டாமல், பின்னால் திரும்பி பார்த்து பேசிக்கொண்டே ஓட்டியது எவ்வளவு பெரிய தவறு?

*************************************************

சென்ற வாரம் தமிழ் நாட்டில், நண்பர் ஒருவரின் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். சம்பந்தப்பட்ட நபர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து காரை வீட்டின் முன்னே உள்ள கார் பார்க்கில் பார்க் செய்துள்ளார். வீட்டின் உள்ளே வரும்போது அவரின் இரண்டு வயது பையன் நின்று கொண்டிருப்பதை கவனித்திருக்கிறார். கவனமாக காரை நிறுத்தி இருக்கிறார். ஆனால் ஒரு நிமிட அவகாசத்தில் அவரின் மகன் கார் கதவின் மிக அருகில் வந்து நினறதை அவர் கவனிக்கவில்லை. காரை நிறுத்தியவுடன் வேகமாக கதவை திறக்க, கதவு அருகில் நின்று கொண்டிருந்த அவர் மகன் மேல் வேகமாக இடிக்க, இடித்த வேகத்தில் அருகில் இருந்த சுவற்றில் அவன் மோத, ஒரு சில நிமிடத்தில் அவர் கண் முன்னே, அவர் பையன் இறந்துவிட்டான். சம்பவத்தை நேரில் பார்த்தவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து, இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் ஆஸ்பத்திரியில் உள்ளார்.

*************************************************

அடுத்த சம்பவத்தை பாருங்கள்:

பல மாதங்களுக்கு முன் மலேசியாவில் நடந்தது. இங்கு உள்ள வீடுகளில் எல்லாம் கார் நிறுத்தும் இடம் மிகப் பெரியதாக நீளமாக இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் இரண்டு, மூன்று கார்கள் எல்லாம் நிறுத்துவார்கள். ஒருவர் தன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு கிளம்ப, காரை ரிவர்ஸில் எடுக்கும்போது, காரின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவரின் மூன்று வயது மகன் திடீரென காரின் பின்னால் வர, அவசரத்தில் இவர் காரை நிறுத்துவதற்கு பதில் ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட, கார் வேகமாக அந்த மகனின் மேல் மோதி............................

பெற்றோர்களின் கண் முன்னே அந்த பிள்ளை......

இதெல்லாம் எதனால் நிகழ்கிறது? என்னதான் விதி என்று நாம் ஒதுக்கிவிட நினைத்தாலும், உண்மையான காரணம் போதிய கவனமின்மைதான்.

கார் வைத்திருப்பவர்கள், அதிலும் சிறு குழந்தை வைத்திருப்பவர்கள் காரை எடுக்கும் போதும், வைக்கும் போதும், ரிவர்ஸ் எடுக்கும் போதும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ஒரு நிமிடத்தில் நாம் செய்யும் தவறுகளுக்கு வாழ் நாள் முழுவதும் வருத்தப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

*************************************************

Static electricity in Petrol Stations:


As a continuation of the video about static electricity in which a girl had a fire accident on getting out of her car and directly touching the nosepiece, we come across a similar case:

With the generalisation of self-service facilities in petrol stations people should be warned about the outbreak of fires resulting from static electricity while they are pouring in petrol.

150 cases of this type of fire have been investigated and the results were very surprising.

1- Of the 150 cases, more happened to women than men, due to their habit of getting in and out of the vehicle while the petrol is being poured in.

2- In the majority of cases the people had re-entered their cars when the hose was still pouring petrol out (the danger of the triggers on the nosepieces). When they finished refuelling and got out to remove the hose pistol the fire began, as a result of the static electricity.

3- The majority of those affected used rubber-soled footwear and clothes of synthetic fibres.

4- Never use mobile phones when filling up with fuel.

5- It is well known that it is the vapour that comes from the petrol that burns and causes the fire when it makes contact with static charges.

6- In twenty-nine of the cases analysed, the people re-entered their vehicles and later touched the pistols during the petrol fuelling process. This happened in cars of different varieties of makes and models.

7- Seventeen fires occurred before, during or immediately after the cap of the petrol tank was removed and before starting to fill up with petrol.

8- The static charge often results from when a passenger rubs their clothes against the upholstery of the seats on getting in or out of the vehicle. To avoid this, it is recommendable that NOBODY gets in or out of the vehicle while the petrol is being poured in. Movement in or out should only be done BEFORE starting, or when the fuelling is finished and the petrol cap placed.

9- MAXIMISE THE PRECAUTIONS if the petrol has spilt or splashed onto the ground. Highly inflammable vapours are immediately produced which can be ignited by sparks of static electricity from the turning on of electronic equipment (mobile phones, remote controls, etc.) or by the ignition of the vehicle itself. BEFORE starting up the engine again, the spilt petrol must be gathered or neutralised by the petrol station staff.

LOADING PETROL:

IN YOUR VEHICLE: Stop, put the handbrake on and turn off the engine, radio and lights

NEVER: Never return to your vehicle while you are pouring in fuel.

AS A PRECAUTION: Get used to closing the car door on getting out or into the vehicle and in this way the static electricity will be discharged on touching something metallic.

After closing the door TOUCH THE METAL PART OF THE BODYWORK before touching the petrol pump pistol. By doing this the static electricity in your body will be discharged on the metal and not on the pistol.

RESPECT THE SAFETY REGULATIONS

As mentioned, we undertake this as a daily task, both inside and outside the company. The following bulletin aims to raise public awareness of this danger.

Source: Shell Safety Bulletin.

Dec 1, 2010

மிக்ஸர் மாதிரி!எனக்கு உலக இலக்கியம் தெரியாது. உலக இசையைப் பற்றிய அறிவும் இல்லை. உலக சினிமாவும் அதிகம் பார்த்தது கிடையாது. தமிழ் படங்களைத்தவிர நான் பார்த்த வேற்று மொழிப்படங்கள் 'பிட்டு' படங்களாகத்தான் இருக்கும். ஒரு சராசரியான சாதாரண தமிழன் நான். இதற்காக என்றுமே வருத்தப்பட்டதில்லை நான். இசையை ரசிக்க, அனுபவிக்க உலக இசை தெரிந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை வேறு உலகத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு இசையை யார் எனக்கு கொடுத்தாலும் அதை நான் ரசிப்பேன்.

எனக்கு இளையராஜாவின் இசை ஒன்று போதும். சோறு தண்ணீர் தேவையில்லை. இளையராஜாவின் பாடல்களை மட்டுமே கேட்டு என்னால் உயிர் வாழ முடியும் என்று நினைக்கிறேன். இளையராஜாவின் இசை என் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. தனி அறையில் அமர்ந்து இசைஞானியின் இசையை கேட்டு அழுவேன், சிரிப்பேன், நடனமாடுவேன் ஆம் நான் ஒரு எமோஷனல் இடியட்.

இப்போது நிறைய இசை அமைப்பாளர்கள் வந்துவிட்டாலும் எல்லோருமே எனக்கு இளையராஜாவுக்கு அப்புறம்தான். முதல் காதலியை எப்படி மறக்க முடியாதோ அப்படி எனக்கு இளையராஜா. அப்படி பட்ட இளையராஜாவின் இசையை யாராவது குறை சொன்னால் வருத்தமாக இருக்கிறது.

நல்ல படங்களை பார்த்து படத்தோடு ஒன்றிவிடுவது என் வழக்கம். அழுகை வந்தால் அழுவேன், சிரிப்பு வந்தால் சிரிப்பேன். இது உலக படம் போல் இல்லை, உலக இசை போல் இல்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். என் ஊரில் எனக்கு தேவையானது கிடைக்கும்போது, நான் தேவையில்லாமல் அடுத்த ஊரை நாடுவதில்லை.

ஒரு படத்தை பார்த்துவிட்டு கண்கள் குளமாகலாம். ஆனால், விமர்சனங்களை பார்த்து கண்கலங்க முடியுமா? ஆம். நான் இன்னும் நந்தலாலா பார்க்கவில்லை. இன்னும் மலேசியாவில் வெளியாகவில்லை. ஆனால் நண்பர்களின் அனைத்து விமர்சனங்களையும் படித்துவிட்டேன். விமர்சனங்கள் படித்தே என் கண்கள் கல்ங்குகிறது. ஓரளவிற்கு படத்தை அனைவருமே என் கண் முன்னால் நிறுத்திவிட்டார்கள். எப்போது பார்க்க முடியும் என்று தெரியவில்லை.

நேற்று நந்தலாலாவின் பேக் க்ரவுண்ட் இசையை கேட்டு கலங்கி போனேன். எவ்வளவு அற்புதமான கலைஞன்!


இப்படி நம்மால் இந்த படத்தை பார்க்க முடியவில்லையே என நினைத்து வருந்தி டிவி சேனல்களை திருப்பிக்கொண்டிருந்த போது, ஒரு சேனலில் 'சின்னத்தம்பி' படம் ஆரம்பமானது. ஒரு 10 நிமிடம் பார்க்கலாம் என்றுதான் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், என்னால் படம் முடியும் வரை எழுந்து செல்ல முடியவில்லை. அற்புதமான படம், நல்ல இசை, பாவாடை சட்டையில் இளமையான குஷ்பு, பிரபுவின் அசாத்தியமான நடிப்பு, கவுண்டமணியின் நகைச்சுவை என அனைத்தும் கலந்த அட்டகாசமான கலவை.

ஒரு இருபது வருடம் பின்னோக்கி போய்விட்டேன். பாருங்கள், இத்தனை வருடங்கள் கழித்தும் அந்த படத்தை பார்க்கும்போது முன்பு பார்த்த அதே உணர்வுகள் ஏற்படுகிறது. "போவோமா ஊர்கோலம்" பாடல் காட்சியை பார்க்கும் போது நான் இந்த உலகத்திலேயே இல்லை. சிறிது நேரம் கழித்து தான் உணர்ந்தேன், எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று.

சுந்தர் சி இப்போது சின்னத்தம்பி படம் பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவார். ஏன் என்று கேட்கின்றீர்களா? நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நானே சொல்ல முடியுமா என்ன?**************************************************************

பாராளுமன்றம்  13 நாட்களாக முடங்கி கிடக்கிறது. காங்கிரஸ் கூட்டுக்குழு அமைக்க ஒப்புக்கொள்ள மறுக்கிறது. எதிர்கட்சிகளும் விடுவதாக இல்லை. கர்நாடகாவில் ஊழல் எடியூரப்பாவை முதலமைச்சராக இருக்க அனுமதித்துவிட்டு, மத்தியில் பாஜாக ஊழலை எதிர்த்து போராடுவதில் என்ன நியாயம் என்று தெரியவில்லை. இதற்கு முன்பு அமைக்கப்பட்ட கூட்டுக்குழு அறிக்கைகளினால் எந்த ஒரு பலனும் இல்லை என்று தெரிந்தும், காங்கிரஸ் ஏன் அமைக்க மறுக்கிறது என்றும், எதிர்கட்சிகள் ஏன் வற்புறுத்துகின்றன் என்றும் தெரியவில்லை.

பாராளுமன்றம் முழுவதுமாக முடங்கும் பட்சத்தில் பாதிக்கப்ப்டபோவது மக்களாகிய நாம் தான். இதற்கு மாற்று வழி என்ன? குடியரசு தலைவர் தலையிட்டு ஏதேனும் செய்ய முடியுமா?

சட்டம் தெரிந்த யாராவது விளக்கினால் நல்லது. அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

**************************************************************

நேற்று எனக்கு இப்படி ஒரு மெயில் வந்தது:

"Indians r poor but India is not a poor country". Says one of the swiss bank directors. He says that "280 lac crore" of Indian money is deposited in swiss banks which can be used for 'taxless' budget for 30 yrs. Can give 60 crore jobs to all Indians. From any village to Delhi 4 lane roads.Forever free power suply to more than 500 social projects. Every citizen can get monthly 2000/- for 60 yrs. No need of World Bank & IMF loan. Think how our money is blocked by rich politicians. We have full right against corrupt politicians. Itna forward karo ki pura INDIA padhe. Take this seriously, You can forward jokes, then why not this?

எனக்கு இந்த மெயிலை படித்தவுடன் சிரிப்புத்தான் வந்தது. விசயம் உண்மையாக இருக்கலாம். ஆனால், இதை பல நபர்களுக்கு அனுப்புவதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது?

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.

**************************************************************