Dec 10, 2010

கோகிலா ஐ லவ் யூ! - 1 (சிறுகதை)

நான் 9ம் வகுப்பு போகும்போதுதான் லால்குடியில் அந்த தெருவில் குடியேறினோம். அப்போது அப்பா தாலுக் சப்ளை ஆபிஸராக (TSO) இருந்ததாக நினைவு. சொந்த வீடு எல்லாம் அப்போது இல்லை. வாடகை வீடுதான். அதற்கு வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்ட காலம் அது. அதிகம் பிராமின்கள் வாழும் இடமாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. எங்கள் தெரு முழுக்க நிறைய என் வயது ஒத்த பையன்களும், பெண்களும் இருந்தார்கள். தெருவே கலர் புல்லாக இருக்கும். ஒவ்வொருத்தரும் அவருக்கு பிடித்த பெண்களை நினைத்து கனவில் வாழ்ந்த காலம் அது. முதலில் நான் அந்த தெருவிற்கு வந்தவுடன் அவ்வளவு எளிதாக யாருடனும் பழக முடியாமல் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.

எங்கள் தெருவில் இரண்டு கிரிக்கெட் டீம் இருந்தது. நான் ஒரு சுமாரான பவுளர். என்னையும் டீமில் சேர்த்துக்கொண்டார்கள். என் கிரிக்கட் அனுபவத்தைப் பற்றி நிறைய உங்களிடம் சொல்ல வேண்டும். நீங்கள் சோர்வாக இருக்கும் நாளில் சொல்கிறேன். இன்று வேண்டாம். ஏன் என்றால் நான் சொல்லப்போகும் இந்த கதை ஒரு அழகிய பெண்ணை பற்றியது. அழகான கவிதை போன்ற அனுபவத்தை உங்களுக்கு சொல்லப் போகிறேன். இந்த கதையில், நீங்கள் "என்னை" எடுத்துவிட்டு உங்களை பொருத்திக்கொள்ளுங்கள். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஏனென்றால் உங்களுக்கும் இப்படி பட்ட அனுபவம் ஏற்பட்டு இருக்கலாம்.

என் நண்பர்கள் அனைவரும் ராமு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதுதான் வழக்கம். ஆரம்பத்தில் என்னுடன் பழக தயங்கிய என் நண்பர்கள் பின் வந்த நாட்களில் என்னுடன் ரொம்ப நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். அதற்கான காரணமாக நான் நினைத்தது இரண்டு விசயங்கள்தான். ஒன்று என் படிக்கும் திறமை, மற்றொன்று நான் கருப்பாக இருப்பது.

இரண்டாவது காரணம் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா? ஆனால் அது தான் உண்மை. தெரு முழுக்க பெண்கள். ஆனால் எல்லா பெண்களும் என்னிடம் தாராளமாக பழகியது இன்றுவரை எனக்கு புரிந்து கொள்ள முடியாத ஒரு விசயமாக இருக்கிறது.

அதற்கு முன் என்னைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஒன்று எனக்கு இருக்கிறது. நான் நல்ல உயரம். பயங்கர ஒல்லி. முகம் மட்டும் கொஞ்சம் பிரகாசமாக இருக்கும். அந்த தெருவில் இருந்த பிராமண பையன்கள் எல்லாம் நல்ல கலருடன் அழகாக இருப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்பட்டதே இல்லை. ஏனென்றால் என் பேச்சு அப்படி. எதைப் பற்றி வேண்டுமானாலும் ஒரு மணி நேரம் பேசுவேன். சுமாராக பாடுவேன். எல்லார் வீட்டிலும் கிச்சன் வரை போவேன்.

"ஏண்டி, ரவி வந்திருக்கான் பாரு. அவனுக்கு சாப்பிட ஏதாவது கொடு?" என்று எந்த வீட்டிற்கு சென்றாலும் அந்த வீட்டு மாமா, மாமியிடம் சொல்லும் அளவிற்கு நான் உரிமையுடன் பழகி வந்தேன். ஏன் அப்படி என்று? என்னை திரும்பவும் கேட்காதீர்கள்? நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே?

போரடிக்கிறேனோ? சரி விடுங்கள். நாம் மெயின் கதைக்குள் சென்றுவிடலாம்.

கோடை விடுமுறை நாட்களில் அதிக சந்தோம் எங்களுக்கு வரும். காரணம், நிறைய நேரம் தூங்கலாம், படிக்க வேண்டாம், கேரம் விளையாடலாம், கிரிக்கட் விளையாடலாம். அது மட்டுமல்ல, நிறைய நண்பர்கள் வீட்டில் மிக அழகான பெண்கள் விடுமுறைக்கு சென்னையிலிருந்தோ அல்லது பாம்பேயிலிருந்தோ வருவார்கள். அந்த ஒரு மாதமும் எங்கள் ஹார்ட் பீட் அளவுக்கு அதிகமாக துடிக்கும்.

பின்னே இருக்காதா? 365 நாளும் தாவணியில் வளைய வரும் பெண்களை பார்த்து பழகிய கண்களுக்கு, திடீரேன சுடிதார், மிடி என்று பெண்கள் வளைய வந்தால்....

அந்த கோடை விடுமுறை என் வாழ்க்கையை புரட்டி போடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அன்று ராமு வீட்டில் உட்கார்ந்து அடுத்த நாள் நடக்க போகும் கிரிக்கட் மேட்சை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு கார் ராமு வீட்டிற்கு வந்தது. அதிலிருந்து ஒரு மாமா, ஒரு மாமி மற்றும் ஒரு அழகிய பெண் இறங்கினார்கள்.

அவ்வளவுதான் எங்கள் அனைவரின் கண்களும் அவளை நோக்கிப் பாய்ந்தன.

"யாருடா ராமு?''

"எங்க சித்தியும் சித்தப்பாவும்டா. சென்னையிலேருந்து வந்துருக்கா?"

" அது யாருடா?"

"எங்க சித்தி பொண்ணு கோகிலாடா?"

உள்ளே நுழையப்போனவள், எல்லோரையும் பார்க்காமல் என்னை மட்டும் பார்த்து,

"ஹாய்" என்றாள்.

நண்பர்கள் அனைவரும் என்னை தீயினால் சுட்டு பொசுக்குவதை போல் பார்ப்பதை நிராகரித்து விட்டு,

"ஹாய்" என்றேன்.

இங்கே கோகிலாவைப் பற்றி சொல்ல வேண்டும். நீங்கள் வருசம் 16 படம் பார்த்து இருக்கின்றீர்களா? அதில் வரும் குஷ்பு போல் இருப்பாள். வயதுக்கு மீறிய வனப்பு. அவளை பார்த்தவுடனே கனவு காண்பீர்கள்.

அவள் உள்ளே போனவுடன் யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. ரொம்ப கடுப்பானவன் கோபிதான். சேகர், பாச்சா, சாமு, நாரயணன் அவர்கள் எல்லோரும் ஓரளவு அமைதி ஆகிவிட்டார்கள். எங்கள் செட்டில் கோபு கொஞ்சம் அதிகப்படி. அவனுக்கு அப்போது 25 வயது இருக்கும்.

அவன் விடும் கதைகளை கேட்பதே எங்களுக்கு பொழுது போக்காக இருந்த காலம் அது. எந்த பெண்ணை பார்த்தாலும், அவளை இணைத்து ஏதாவது கதை சொல்வான். அது பொய் என்றாலும், அவனுக்காக அதை கேட்டுக்கொண்டிருப்போம். அப்படிப்பட்ட அவனை பார்த்து பேசாமல் என்னை பார்த்து பேசினால் சும்மா இருப்பானா?


-தொடரும்

6 comments:

Thenammai Lakshmanan said...

கதை அருமையா போகுது.. சிறுகதை தொடர் கதையா வருதே,, :))

Unknown said...

நல்ல துவக்கம் ..

iniyavan said...

//கதை அருமையா போகுது.. சிறுகதை தொடர் கதையா வருதே,, :))//

தங்களின் முதல் வருகைக்கு நன்றி மேடம்.

ஒரே இடுகையில எழுத முடியல மேடம். அப்புறம் அது ஒரு பக்கக் கதை டெம்ப்ளேல் மாதிரி ஆயிடும். அதுவும் இல்லாம சொல்ல வந்த விசயத்தை தெளிவா சொல்ல முடியாம போயிடும் அதான்.

iniyavan said...

//நல்ல துவக்கம் ..//

நன்றி செந்தில்.

Ravisankaranand said...

உலக்ஸ்.. நலமா... ? சாரி பாஸ் .. ரொம்ப நாளா பிசியா இருந்துட்டேன் இருந்தாலும், உங்க பதிவுகள தொடர்ந்தோ இல்லே சேர்த்து வெச்சோ படிசுகிட்டு தான் இருக்கேன்..
எல்லாமே நல்லா தான் இருக்கு, கதையும் செமத்தியா இருக்கு.. தாலுக்கா ஆபிஸ் எதிர்த்தாப்ல தான் எங்கப்பா கடை இருக்கு... நீங்க சிருதையூர்ல இருந்தீங்களா??

iniyavan said...

//உலக்ஸ்.. நலமா... ? சாரி பாஸ் .. ரொம்ப நாளா பிசியா இருந்துட்டேன் இருந்தாலும், உங்க பதிவுகள தொடர்ந்தோ இல்லே சேர்த்து வெச்சோ படிசுகிட்டு தான் இருக்கேன்..
எல்லாமே நல்லா தான் இருக்கு, கதையும் செமத்தியா இருக்கு.. தாலுக்கா ஆபிஸ் எதிர்த்தாப்ல தான் எங்கப்பா கடை இருக்கு... நீங்க சிருதையூர்ல இருந்தீங்களா??//

வருகைக்கு நன்றி ரவி சங்கர்.