Dec 15, 2010

கோகிலா ஐ லவ் யூ! - 2 (சிறுகதை)

அன்று மாலையே கோபியின் கோபம் எல்லாருக்கும் தெரிந்தது. உடனே அனைவரிடமும், "அது எப்படி நம்மாத்து பெண் அவன் கூட பேசலாம்?" என்று கடுப்பில் எல்லோரையும் உசுப்பேத்திவிட்டான்.

நண்பர்கள் அனைவரும் பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டது. எல்லோரும் முயற்சிக்க வேண்டியது. யாருக்கு அதிர்ஷ்டம் இருந்து யாருடன் கோகிலா நட்போ அல்லது லவ்வோ வைத்துக்கொள்ள விரும்புகிறாளோ, மற்றவர்கள் ஒதுங்கிவிட வேண்டியது.

அன்று மாலை ராமுவின் வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது கோகிலா வந்தாள். சிறிது நேரம் அங்கே இருந்தவள் உள்ளே போய்விட்டாள். மாமி வெளியே வந்து,

"ரவி, நீ நன்னா மேத்ஸ் போடுவியாமே? கோகிக்கு ஏதோ மேத்ஸ்ல டவுட் இருக்காம், கொஞ்சம் சொல்லித்தர முடியுமா?"

நண்பர்களின் பொறாமைக்கு நடுவில் வீட்டின் உள்ளே நுழைந்தேன். மேத்ஸ் சொல்லிக்கொடுத்தேனோ இல்லையோ நிறைய பேசினேன். பேசினோம். பேச்சு அப்படியும் இப்படியும் போனது. முடிவில் எனக்கு என்ன பிடிக்கும் அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதில் போய் நின்றது.

அடுத்த ஒரு வாரத்தில் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டொம். அவள் என்னை என்ன நினைத்தாளோ எனக்குத் தெரியாது, ஆனால், நான் அவளை என் காதலியாகத்தான் நினைத்தேன். அந்த வெள்ளிகிழமை மாலை என்னால் மறக்க முடியாத நாள்.

என்னைத் தனியாக கூப்பிட்ட கோகிலா, "ரவி, இன்னைக்கு மாலை கோயிலுக்கு போகலாமா?" என்றாள். ஏன் என்னை மட்டும் கூப்பிட்டாள், மற்ற நண்பர்களை கூப்பிடவில்லை? என்று நீங்கள் என்னைக் கேட்டால், என்னிடம் பதில் இல்லை. வேண்டுமானால் கோகிலாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எங்கள் ஊர் கோயிலைப் பற்றி சொல்ல வேண்டும். மிகப் பெரிய கோவில். சிதம்பரத்திற்கு அடுத்து ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடக்கும் கோயில் எங்கள் ஊர் பெரிய கோயில். வருடா வருடம் டிசம்பர் மாதம் திருவாதிரை மிக கோலாகலமாக நடக்கும். கிட்டத்தட்ட 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில், தினமும் இரவு வெளி மண்டபத்தில் சொற்போழிவு, இசை, நடன, பொம்மலாட்டம் என ஏதாவது ஒன்று நடக்கும். தினமும் நடராஜரின் நடனம் நடக்கும். கடைசி நாள் நடராஜரும், அம்பாளும் ஆக்ரோசமாக நடனமாடுவதை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். கோயிலை சுற்றி பார்த்து வெளியில் வரவே ஒரு மணி நேரம் ஆகும். அவ்வளவு பெரிய கோவில்.

அந்த கோயிலின் அம்மன் சன்னதியில்தான் நான் கோகிலாவிற்காக காத்துக்கொண்டிருந்தேன். தூரத்தில் யாரோ ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். யாரோ என்று நினைத்து உட்கார்ந்து இருந்தேன்.

"ஹாய், ரவி?" என்றவுடன்தான் திரும்பி பார்த்தேன்.என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. திரும்பி பார்த்தால், கோகிலா. தினமும் மிடியிலும், சுடிதாரிலும் பார்த்த என் கண்கள் தாவணியில் அவளை பார்த்ததும் பரவசத்தின் உச்சத்திற்கு போனது.

நீல நிற பட்டுத்தாவணி. பிங்க் கலர் பட்டுப்பாவடை, அதே நிறத்தில் ஜாக்கட். தலை நிறைய மல்லிகைப்பூ. நன்றாக அழுத்தி வாரிய இரட்டை ஜடை. தாவணியின் மேல், பார்க்கக் கூடாத இடத்தில் செயின் தொங்கியது. ஏனோ அந்த செயினின் மேல் பொறாமையாக இருந்தது.

மொத்தத்தில் பார்ப்பதற்கு அம்மன் போல இருந்தாள். அடுத்த ஒரு மணி நேரமும் நான் தெய்வத்தை தரிசிக்கவே இல்லை. எப்போது கோயிலில் இருந்து வந்தோம், எப்போது நான் வீட்டிற்கு போனேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால், கோயிலில் அவள் என் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செயதது நன்றாக நினைவில் இருக்கிறது. அன்று இரவு முழுவதும் நான் இந்த உலகத்திலேயே இல்லை.

அவளுக்கு ஏதாவது கொடுக்க நினைத்த நான் என்ன தருவது என நினைத்து குழம்பிப் போனேன். சிங்கிள் டீக்கே வழியில்லாத நான் அவளுக்கு என்ன பரிசு தர முடியும்? நண்பர்களும் என்னை விட்டு சற்று விலகி இருப்பது போலவே இருந்தது. கடைசியில் என்னிடம் இருந்த ஒரு பழைய டைரியை எடுத்துக்கொண்டு போய் அவளுக்கு கொடுக்கப்போனேன்.

கொடுத்தேன். சந்தோசமாக வாங்கிய அவள்,"நன்றி" என்று சொல்லிவிட்டு ஒரு மான் போல துள்ளி ஓடியது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

மாமி அடுத்த நாள் என்னைக் கூப்பிடுவதாக ராமு என் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டு ஏதோ காரணமாக சென்னை சென்றான். என்னவோ, ஏதோ என்று பதறி அடித்துக்கொண்டு அவள் வீட்டிற்கு ஓடினேன்.

"ரவி, கோகிக்கு ஏதோ புஸ்தகம் எல்லாம் வாங்கணுமாம். ராமுவும் இல்லை. அவளை திருச்சிக்கு கூட்டி போய் வாங்கித்தரயா?"

"சரி. மாமி"

திருச்சிக்கு போனோம். பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் கேட்டேன்,

"எங்க புத்தகம் வாங்கலாம் கோகிலா? ஹிக்கின் பாத்தம்ஸ்"

'புஸ்தகமா யாருக்கு வேணும்?"

"மாமி சொன்னாங்க?"

"ஆமாம். அப்புறம் எப்படி உங்க கூட வரதாம்"

"அதுக்காகா? பொய் சொல்லலாமா?"

"அதல்லாம் அப்புறம் பேசலாம். கலையரங்கத்துல ரஜினி நடித்த 'மாப்பிள்ளை' ஓடுதாம். படம் பார்க்கலாம் வாங்க"

படம் ஆரம்பித்தது. நான் படத்தை பார்க்கவில்லை. அவளும்தான். மெல்ல என் கைகளை அவள் கைகளோடு இணைத்துக்கோண்டாள். அந்த அனுபவம் அழகிய கவிதை.

வீட்டிற்கு வந்தோம். அவள் வீட்டில் யாரும் இல்லை. நாங்கள் மட்டுமே அங்கே இரண்டு மணி நேரம் தனியாக இருந்தோம். அந்த இரண்டு மணிநேரம் நாங்கள் என்ன செய்தோம்? ம்ம்ம் இப்போது அது உங்களுக்கு தெரிந்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. ஏன் எனக்கே...?

அடுத்த நாள் சென்னை கிளம்பினாள். கண்ணிருடன் வழி அனுப்பி வைத்தேன். நிச்சயம் மீண்டும் வருவேன் என்றாள். கல்யாண புடவை என்ன கலர்? என்றெல்லாம் முடிவு செய்து வைத்திருந்தோம்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.


வீட்டின் கீழே ஏதோ சத்தம். யாரோ வந்திருக்கின்றார்கள் போல. யார் அது?ராமுதான்.

அம்மா அவனிடம் பேசுவது காதில் கேட்டது,

"ஏம்பா நீயாவது அவனிடம் சொல்லக்கூடாதா? அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டா நான் என் கண்ண மூடுவேன்ல"

"நான் எத்தனை தடவைமா சொல்றது. கோகிலாவுக்கு கல்யாணம் ஆகி, இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்காங்கன்னு. அவன் கேட்டாத்தானே"

ராமு எப்பவும் இப்படித்தாங்க, நிறைய பொய் சொல்லுவான். கோகிலா நிச்சயம் வறேனு சொல்லிட்டு போயிருக்கா. எப்படி வராம போவா?

எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? சென்னைக்கு போனிங்கன்னா, கோகிலாவை பார்த்தீங்கன்னா, நான் அவளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க. ப்ளீஸ்!

6 comments:

sriram said...

உலக்ஸ்
கதை நல்லா வந்திருக்கு, நடை சரளமா இருக்கு.
அடிக்கடி கதை எழுதுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

tsekar said...

Super Love story.

iniyavan said...

//உலக்ஸ்
கதை நல்லா வந்திருக்கு, நடை சரளமா இருக்கு.
அடிக்கடி கதை எழுதுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

நன்றி ஸ்ரீராம்.

நிச்சயம் எழுதுகிறேன்.

iniyavan said...

//Super Love story.//

வருகைக்கு நன்றி சேகர்.

Ravisankaranand said...

நல்லாத்தான் இருக்கு.. இன்னும் நிறையா எழுதுங்க உலக்ஸ்... அடுத்த முறை லால்குடி வரும் முன் ப்ளாக்ல முன்கூட்டியே சொல்லிடுங்க.. வழக்கம் போல மலேசிய திரும்பின பிறகு தான் நாங்க தெரிஞ்சுகிரா மாதிரி பண்ணாதீங்க :)

iniyavan said...

//நல்லாத்தான் இருக்கு.. இன்னும் நிறையா எழுதுங்க உலக்ஸ்...//

வருகைக்கு நன்றி ரவிசங்கர்.

//அடுத்த முறை லால்குடி வரும் முன் ப்ளாக்ல முன்கூட்டியே சொல்லிடுங்க.. வழக்கம் போல மலேசிய திரும்பின பிறகு தான் நாங்க தெரிஞ்சுகிரா மாதிரி பண்ணாதீங்க :)//

நிச்சயம் சொல்கிறேன்.