எங்கள் ஊரில் தமிழ் படங்கள் வருவது மிக குறைவு. ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் படங்கள் நிச்சயம் வரும். இவர்கள் படங்கள் மொத்தமே வருடத்திற்கு நான்கு படங்கள் வந்தால் பெரிய விஷயம். ஏனென்றால் வருடத்திற்கு ஒரு படம்தான் இவர்கள் நடிக்கின்றார்கள். ஒவ்வொரு படமும் முதல் நாளே பார்த்துவிடுவது எனது வழக்கம். அப்படித்தான் 'மன்மதன் அம்பு' படமும் பார்க்க சென்றோம். கமலும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் மிக ஆசையுடனும், ஆர்வத்துடனும் சென்றோம்.
இவ்வளவு போரான, எரிச்சல் தரக்கூடிய ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை. கமலின் நகைச்சுவை படங்கள் எல்லாம் எப்படி இருக்கும்? எப்படி வயிறு குலுங்க சிரித்திரிப்போம்? ஆன்லைனில் டிக்கட் புக் செய்யும் போது, 'படத்தின் பிரிவு' என்ற இடத்தில் காமெடி என்று போட்டிருந்தார்கள். ஒரு இடத்தில் கூட எனக்கு சிரிப்பே வரவில்லை. அழுகைதான் வந்தது. முதல்நாள் இரவுதான் 'பாணா காத்தாடி' படம் பார்த்து இருந்தேன். அதில் கருணாஸின் நகைச்சுவையை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன். அந்த சந்தோசம் இந்த படத்தை பார்த்தவுடன் ஓடி போய்விட்டது. படம் 'A' செண்டர் மக்களுக்காக எடுத்ததாக தெரிகிறது. எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். அதுவும் அந்த புரோடியுசர் தம்பதியினர் பேசும் வசனங்கள் ஒரு எழவும் புரியவில்லை. கிரேஸி மோகன் வசனம் இல்லாமல் கமல் நகைச்சுவை படத்தில் நடித்தால் இப்படித்தான் இருக்கும் போல.
அப்படியானால், படத்தில் பிடித்த விசயமே இல்லையா என்று கேட்டால், இருக்கிறது, என்பேன். என்ன அது?
திரிஷாவின் உடைகள்தான்!
***********************************************
என் அலுவலகத்தில் என் கீழே பணிபுரியும் நண்பர் ஒருவர் கிறிஸ்துமஸுக்கு விடுமுறை கேட்டார். எனக்கு ஒரே ஆச்சர்யம். அவரோ ஒரு இந்து. எதற்காக விடுமுறை கேட்கிறார். விசாரித்தேன். அவர் சொன்ன காரணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னவென்றால், அவர்கள் வீட்டில் எல்லா பண்டிகையுமே கொண்டாடுவார்களாம். ஏன் அப்படி? என்று அவரிடம் கேட்டால்,
"பண்டிகை என்றாலே சந்தோசம் வந்துவிடும். அந்த சந்தோசத்தை பெறுவதற்கு எந்த மத பண்டிகையாய் இருந்தால் என்ன?"
அவர் சொன்னது சரிதான் இல்லை?
இங்கே முஸ்லீம்களும், சீனர்களும், தீபாவளி அன்று இந்தியர்கள் வீட்டுக்கும், முஸ்லீம்களும், இந்தியர்களும் சீன பிறந்தநாள் அன்று சீனர்கள் வீட்டுக்கும், சீனர்களும், இந்தியர்களும் ரம்ஜான் அன்று முஸ்லீம்கள் வீட்டுக்கும் செல்வது வழக்கம்.
***********************************************
சமீபத்தில் திருச்சியிலிருந்து எனக்கு ஒரு SMS வந்தது.
"திருச்சி - திருவரம்பூர் சாலையில் நிறைய காலி மனைகள் இருப்பதாகவும், விலை மிக குறைவு என்றும், 31ம் தேதிக்குள் புக் செய்தால், ஒரு பிளாட்டுக்கு ஒரு பிளாட் இனாமாக கொடுப்பதாகவும்" வந்தது.
இது உண்மையா? என்று அறிந்து கொள்வதற்கு அந்த போன் நம்பருக்கு நான் ஒரு பதில் அனுப்பினேன்.
"Nework is not available" என்று செய்தி வந்தது. அதனால் என்னால் அனுப்ப முடியவில்லை.
எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க!
இந்த செய்தியை பார்த்ததும், எனக்கு ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது.
கல்யாணம் பண்ணிவிட்டு ஊரிலிருந்து மனைவியுடனும் ஒரு பென்ணுடனும் பஸ்ஸை விட்டு இறங்கும் ஒருவனை பார்த்து இன்னொருவன் கேட்கிறான்,
"என்ன ராமு, கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? கூட யாரு இன்னொரு பொண்ணு?"
"அது ஒண்ணும் இல்லைண்ணே. அவங்க வீட்டுல நிறைய பொண் பிள்ளைங்க. ஒரு பொண்ணு கட்டுனா ஒண்ணு இலவசம்னாங்க. அதான் கூடவே அவ தங்கச்சியையும் கூட்டிட்டு வந்துட்டேன்".
***********************************************
சமீபகாலமாக 'சிறுகதை' எழுதும் காய்ச்சல் வந்து அலைகிறேன். நிறைய எழுத ஆரம்பித்து உள்ளேன். நிறைய நண்பர்கள் மெயில்கள் மூலமும், சேட் மூலமும், தொலைபேசி மூலமாகவும், நல்லா இருக்கிறது, அதனால் தொடர்ந்து எழுதுங்கள் என்கிறார்கள். அடுத்த வருடத்தில் நிறைய சிறுகதைகளும், ஒரு தொடர்கதையும் எழுத ஆசை.
உங்களின் கருத்தினை அறிய ஆவலாய் உள்ளேன். படிக்கும் நண்பர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
***********************************************
போன வருடம் இதே நாள் மாலையில் நண்பர் மணீஜி ஆபிஸில், நண்பர்கள் மணிஜி, கேபிள் சங்கர், அகநாழிகை பொன் வாசுதேவன், பைத்தியக்காரன், கார்க்கி, பெஸ்கி, சூர்யா கண்ணன், மோகன் குமார் ஆகியோரை சந்தித்தேன்.
அந்த இனிமையான சந்திப்பினை இன்னும் அசைப்போட்டுக் கொண்டிருக்கிறேன். மீண்டும் எப்பொழுது சந்திக்கப்போகிறேன்? எனத்தெரியவில்லை.
***********************************************
ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தாலும், இன்னும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது என்ன? என்பது சரியாக பிடிபடவில்லை.
படிப்பிற்காக கஷ்டப்படுபவர்களுக்கும், நோயால் வாடுபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்ய ஒரு டிரெஸ்ட் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். போன வருமே தோன்றிய எண்ணம் இன்னும் செயல்படாமல் இருக்கிறது.
2011ல் செயல்படுத்த ஆசை. பார்ப்போம்!
***********************************************
6 comments:
மிக்ஸர் நல்லா இருக்கு?
இனிய ஞாபகங்கள். மீண்டும் சந்திப்போம்.
//இனிய ஞாபகங்கள். மீண்டும் சந்திப்போம்.//
நிச்சயம் பெஸ்கி. வருகைக்கு நன்றி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
// 2011ல் செயல்படுத்த ஆசை. பார்ப்போம்! //
சாதிப்பீர்கள் ... சாதிக்க வாழ்த்துகள்.
//சாதிப்பீர்கள் ... சாதிக்க வாழ்த்துகள்//
நன்றி ராகவன் சார். உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
nalla ennam padeka udava and vasadhi elladhavarkaluku maruthuv udave seidha nalla ennam VAZLGA VALLMUDAN NADPUDAN NAKKEERAN
Post a Comment