Dec 20, 2010

மாமா! (சிறுகதை)

பத்தாவது எக்ஸாம் லீவில்தான் நாங்கள் அந்த வீட்டில் குடிபுகுந்தோம். நல்ல பெரிய வீடு. அக்ராஹாரம். வீட்டை ஒட்டி ஒரு ஸ்டோர். அங்கு சில குடித்தனங்கள். வீட்டின் பின் பகுதியில் ஒரு பொதுவான கிணறு. குளிப்பது எல்லாம் அங்கேதான். துண்டை கட்டிக்கொண்டுதான் குளிக்க வேண்டும். பெண்களும் அங்கேதான் குளிக்க வேண்டும். இப்படித்தான் கழிந்தது என் பள்ளிக்காலமும், கல்லுரிக்காலமும்.

அப்போதுதான் எனக்கு 'மாமா' அறிமுகமானன் (ர்). ஏனென்றால் எங்களைவிட மூத்தவர். அவர் பெயர் என்ன வென்று நினைவில்லை. மாமா, மாமா என்று கூப்பிட்டு அதுவே நிரந்தர பெயராக மாறிவிட்டது. எங்களுடன் தான் எப்போதும் இருப்பான். முதலில் மாமாவைப் பற்றி சொல்லிவிடுகிறேன். மாமா எங்கள் பக்கத்து வீட்டு ஸ்டோரில் குடியிருந்த ருக்மணி மாமியின் தம்பி. ஏழை பிராமணன். அப்பா அம்மா இல்லை. அக்கா தயவில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வேலை எதுவும் இல்லை. எப்போவாவது சமையல் வேலை போவான். கொஞ்சம் அழுக்கான நாலு முழ வேட்டி, வெள்ளை நிற அரைக்கை சட்டை. இதுதான் மாமாவின் உடை. ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருக்கும். கண்களை நேருக்கு நேர் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம். அந்த அளவிற்கு பவராக இருக்கும்.

மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் ரொம்ப சிம்பிள், மாமாவிற்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் இந்த அளவிற்கு படித்து, பெரிய வேலையில் அமர்ந்ததற்கு மாமாவும் ஒரு காரணம் என்பேன். ஸ்டடி ஹாலிடேய்ஸ் சமயத்தில் என்னுடைய படிக்கும் டைம் டேபிள் எனக்குத் தெரிகிறதோ இல்லையோ மாமாவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

படிக்கும் நாட்களில் காலை 11.30 ஆனால் மாமா என் வீட்டுக்கு வந்துவிடுவான்.

"டேய் வா. படிச்சது போதும். கொஞ்சம் ரெஸ்ட் எடு. ரவிக்கடையில போய் ஒரு டீ போட்டு வரலாம்"

நானும் உடனே கிளம்புவேன். நான் ஒரு டீ சாப்பிட்டால், மாமா ஒரு டீயும் ஒரு பன்னும், சிகரட்டும் வாங்குவான். அவன் பன் வாங்கவில்லை என்றால் அவன் காலையில் ஏதோ எங்கேயோ சாப்பிட்டு வந்திருக்கிறான் என்று அர்த்தம். எந்த வேலையும் செய்யாமல் எதுவும் சாப்பிட மாட்டான். எப்போதுமே நான் தான் காசு கொடுப்பேன். நான் கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வான்.

மெடிட்டேஷனை பற்றி தெரிந்து கொண்டது மாமாவிடம்தான். இரவில் ஒரு நாள் மொட்டை மாடியில் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

"டேய், இப்போ இந்த நிலாவை நகர்த்திக் காட்டவா?'' என்றான்.

"முதலில் எனக்கு புரியவில்லை. எல்லோருமே, ஆமாம் மாமா, நகருது நகருது" என்றார்கள்.

மேகம் தான் நகர்கிறது, நிலா அல்ல என்பது எனக்குப்புரிய பல வருடங்கள் ஆனது. அந்த அளவிற்கு மாமாவின் பேச்சு ஒரு நம்பகத்தன்மையுடன் இருக்கும். எல்லா விதமான விசயங்களையும் மாமாவிடம் பேசலாம்.

மாமாவின் அக்காவிற்கு கலா என்ற ஒரு பெண் இருந்தாள். மாமாவிற்கு முறைப்பெண். ஒரு திருவிழா சமயத்தில் மாமா என்னைக் கூப்பிட்டு,

"டேய், கலா உன்கிட்ட என்னவோ பேசணுமாம். பொழுது போனோன, கிணத்தடிக்கு போ"

"என்ன விசயம் மாமா?"

"எனக்குத் தெரியாதுடா"

'நீயும் வறயா?"

"அவ உன் கிட்டத்தான் பேசணுமா?"

அதுதான் மாமா. அவன் முறைப்பெண்ணிடம் பேச என்னை தனியாக போக சொல்கிறான்.

போனேன். விசயம் ஒன்றும் பெரிதல்ல. கலாவின் தோழி என்னைப் பற்றி ஏதோ அவளிடம் சொல்லி இருக்கிறாள். அதை என்னிடம் விசாரித்தாள். நானும் பதில் சொன்னேன். ஒரு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். மாமா நான் என்ன பேசினேன் என்று என்னிடம் இன்றுவரை கேட்டதில்லை. ஆனால் மாமாவிற்கு கலா என்றால் கொள்ளைப்பிரியம் என்று எனக்குத்தெரியும்.

அந்த சமயங்களில் எனக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் மாமாதான் தீர்த்து வைத்தான். ஒரு முறை என்னை ஒருவன் பஸ் ஸ்டாண்டில் வம்பிழுக்க, மாமா எப்படியோ யார் மூலமோ தெரிந்து கொண்டு அடுத்த நாள் அவனை புரட்டி எடுத்துவிட்டான்.

நான் வேலைக்கு இண்டர்வியூ சென்றாலும், துணைக்கு கூடவே வருவான். பிறகு ஒரு வழியாக நான் வேலை கிடைத்து வெளியூரில் செட்டிலாகிவிட்டேன்.

எப்போவாவது மாமாவைப் பற்றி நினைத்துக்கொள்வேன். மாமாவின் அக்கா பையன்கள் எல்லாம் அப்போதே வேதம் பயின்று கொண்டிருந்தார்கள். மாமாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவ்வப்போது வரும்.

இந்த முறை ஊருக்குச் சென்ற போது மாமாவை பார்க்க போனேன். தெருவே முழுவதும் மாறி இருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டை மூன்றாக ஆக்கி வாடகைக்கு விட்டிருந்தார்கள். மாமா வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை.

அங்கே இருந்தவர்களிடம் மாமாவைப் பற்றி விசாரித்தேன். அங்கே தெரு கடைசியில் இருக்கும் மடத்தில் தேடச்சொன்னார்கள், போனேன்.

ஒரு மூலையில் படுத்துக்கொண்டு அங்கே இருக்கும் சிறுவர்களிடம் மாமா மேலே இருக்கும் நிலாவை நகர்த்திக்கொண்டு இருந்ததை பார்த்தேன். எங்களைப்போல் அடுத்த தலைமுறை சிறுவர்கள் மாமாவை சுற்றி.

என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டான்,

"எப்படிடா இருக்க?''

"நல்லா இருக்கேன் மாமா. நீ எப்படி இருக்க?"

"பார்த்தா தெரியலை?"

பார்த்தேன். அதே நாலுமுழ அழுக்கு வேட்டி சட்டை. என்ன இப்போது அழுக்கு கொஞ்சம் கூட.

வலித்தது.

"என்ன மாமா? அக்கா எப்படி இருக்காங்க? உன் குடும்பத்தை பத்தி சொல்லு"

"அக்கா தவறிப்போயிட்டாங்கடா. பசங்கள் எல்லாம் புரோகிதரா மாறிட்டாங்க'

"சரி மாமா, உன் குடும்பம், மனைவி குழந்தைகளை பற்றி சொல்லு"

"எனக்கு கல்யாணம் ஆகலைடா?"

"ஏன்?"

"தெரியலை"

"கலா என்ன ஆனா மாமா?"

"ம்ம்ம். அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சே"

"அப்படின்னா"

"ஆமாம். அவளுக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிட்டாங்க"

"ஏன் மாமா? நீ நல்ல மாப்பிள்ளை இல்லையா?''

"தெரியலைடா, தெரியலை" என்று எப்போதும் போல அதே சிரிப்போடு என் கைகளை இருக்கிப்பிடித்தான்.

அவன் கண்களை சந்திக்க விருப்பம் இல்லாமல் இருந்தாலும், என்னை மீறி பார்த்தேன்.

என்னதான் மாமா சிரித்துக்கொண்டே சொன்னாலும், அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் அவனை அறியாமல் கீழே விழுந்தது.

"ஏதாவது வேண்டுமா மாமா?" என கேட்க நினைத்து கேட்காமலேயே திரும்பி விட்டேன்.

6 comments:

Unknown said...

ஆழமான கதை .. உணர்வுகளின் தவிப்பை உணர முடிகிறது, மாமாவின் அந்த ஒரு சொட்டு கண்ணீரில் ..

iniyavan said...

ஆழமான கதை .. உணர்வுகளின் தவிப்பை உணர முடிகிறது, மாமாவின் அந்த ஒரு சொட்டு கண்ணீரில் ..

வருகைக்கு நன்றி செந்தில்.

செழியன் said...

கதை அருமை! வாழ்த்துக்கள்

iniyavan said...

//கதை அருமை! வாழ்த்துக்கள்//

நன்றி செழியன்

J.P Josephine Baba said...

நல்ல கதை.வாழ்த்துக்கள்!!!

J.P Josephine Baba said...

வறுமை என தாங்கள் சொல்லியுள்ளதில் எனக்கு கருத்து இல்லை. இது தனி மனித ஒழுக்கத்தின் அவலம் என்று கதைக்கலாம்.