Dec 22, 2010

அக்கா...? (சிறுகதை)

நான் ஒன்பதாவது படிக்கும் போதுதான் திருச்சியில் உள்ள தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் சேர்ந்தேன். தினமும் லால்குடியில் இருந்து டிரெயினில்தான் திருச்சி டவுன் ஸ்டேஷன் வரை செல்வோம். டவுன் ஸ்டேஷனில் இருந்து ஆண்டாள் தெரு வழியாக பள்ளி செல்ல எப்படியும் 9.30 ஆகும். சில தினங்கள் லேட் ஆகும். அதனால் பிரேயர் முடியும் வரை வெளியே நிற்போம். நான் ஒன்பதாவது படிக்கும் போதே நல்ல உயரமாக இருந்ததால், அரை டிரவுசர் போட்டுக் கொள்ள வெட்கப்பட்டுக் கொண்டு தினமும் பேண்ட் போட்டுக்கொண்டுதான் செல்வேன். பள்ளி சென்றதும் பேண்டை கழட்டிவிட்டு அரை டிரவுசர் மாட்டிக்கொள்வேன். பின்பு பிகாம் புனித ஜோசப் கல்லூரியில் படித்தபோதும்,நேஷனலில் போஸ்ட் கிரேஜுவேஷன் படித்த போதும் டிரெயினில்தான் சென்றேன்.

டிரெயின் வாழ்க்கை எனக்கு பல நல்ல அனுபவங்களையும் நிறைய கெட்ட அனுபவங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. அப்போது பஸ்ஸை விட டிரெயின் டிக்கட் ரொம்ப குறைந்த கட்டணம் என்பதாலும், மாணவர்களுக்கு சீசன் டிக்கட் உண்டு என்பதாலும், ஏறக்குறைய ஊரில் உள்ள திருச்சியில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவ்ர்களுமே டிரெயினில்தான் வருவார்கள். ஏகப்பட்ட பெண்களும் வருவார்கள். அனைத்து மாணவர்களுமே ஏதாவது ஒரு பெண்ணை தன்னுடைய சைட் என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருப்போம். நிறைய காதல்களை, காதலர்களை சந்தித்த காலங்கள் அது.

ரயில்வேயில் வேலை பார்ப்பவர்களும் மற்றும் திருச்சியில் வேலை பார்ப்பவர்களும் தினமும் சீட்டு ஆடிக்கொண்டு வருவார்கள். நாங்கள் பாட்டு பாடிக்கொண்டு ஜாலியாக போவோம். என்னுடைய பாட்டுக்கெல்லாம் ரசிகர் ரசிகையர்கள் இருந்த காலம் அது. எப்போதும் சந்தோசமான இருந்த நாட்கள் அவை. ஆனாலும் ஒரு விதத்தில் ஒரு சோகம் என்னை எப்பவும் அப்பிக்கொண்டிருக்கும். காரணம் என்னுடைய சிஸ்டர்களும் அதே டிரெயினில் வருவதுதான். அதனால் என்னால் எந்த பெண்ணுடனும் துணிந்து தனியாக டிரெயின்ல் செல்லவோ அல்லது பள்ளி வரை பேசிக்கொண்டே செல்லவோ முடியாமல் போய்விட்டது.

சிஸ்டர்கள் வீட்டில் 'போட்டுக் கொடுத்துவிட்டால்' என்ன செய்வது என்ற ஒரு பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில்தான் என் சோகத்தை அதிகரிப்பது போல் என் பெரியம்மா மகள் காயத்ரி எங்கள் வீட்டில் தங்கி படிப்பதற்காக லால்குடிக்கு வந்தாள். அவளுக்கும் எங்கள் சிஸ்டர்கள் படிக்கும் சீத்தா லஷ்மி ராமாசாமி கல்லூரியிலேயே சீட் கிடைத்திருந்தது.

காயத்ரி நல்ல கலகலப்பான பெண். அவளும் எங்களுடனே டிரெயினில் வந்தாள். நான் எப்போதும் அவர்களுடன் ஒரே கம்பார்ட்மெண்டில் செல்வதில்லை. சிஸ்டர்ஸ் எல்லாம் லேடிஸ் கம்பார்ட்மெண்டில் செல்வார்கள். வந்த கொஞ்ச நாளிலேயே டிரெயினில் ரொம்ப பேமஸ் ஆகிவிட்டாள் காயத்ரி. எனக்கு அது பிடிக்க வில்லை என்றாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு நாள் காயத்ரி என்னிடம்,

"ரவி உனக்கு கீதா தெரியுமா? மணக்காலில் இருந்து வருவாளே?"

"தெரியாது, ஏன்?"

"இல்லை, அவ உன் கிட்ட இந்த லட்டரை கொடுக்கச் சொன்னா?"

"எனக்கா?"

"ஆமாண்டா"

"படிச்சு பார்த்தியா?"

"லூஸு. உனக்கு வந்த லெட்டரை நான் எப்படிடா படிக்க முடியும்?"

வாங்கி படித்து பார்த்தேன். அது ஒரு காதல் கடிதம். வர்ணனையுடன் எழுதப்பட்டிருந்தது. எனக்கு என்னவோ அந்த கீதா மேல் அவ்வளவு பிடிப்பு அப்போது ஏற்படவில்லை. அது ஏன் என்பது இந்த கதைக்கு தேவையில்லாத விசயம்.

இந்த கதை என் அக்கா காயத்ரியை பற்றியது. அதனால் நான் அந்த காதல் கடிதத்தை என்ன பண்ணினேன்? என்பதை விடுவிட்டு மேலே கதைக்கு செல்வோம்.

அக்காவுக்கு அவ்வளவு நண்பர்கள் இருந்தாலும், ஏகப்பட்ட பையன்கள் (என் நண்பர்கள்) உட்பட அவள் பின்னே சுத்தினாலும், அவள் யாரையும் காதலித்ததுபோல் எனக்கு தெரியவில்லை. அவள் வரவிற்கு பின் எங்கள் வீடே எப்போதும் கலகலப்பாக இருக்க ஆரம்பித்தது. எனக்கு காயத்ரியை ரொம்ப பிடித்துவிட்டது. அக்கா என்பதையும் மீறி ஒரு தோழி போல பழகினாள்.

எங்கள் அப்பா ரொம்ப கண்டிப்பு. யாரும் அவர் முன்னே உட்கார்ந்து பேச மாட்டோம். அவ்வளவு பயம் கலந்த மரியாதை. அப்பா ஊரில் செல்வாக்கு மிக்கவர். அவர் முன்னே சேரில் அமர்ந்து அவருக்கு சமமாக அரசியலிருந்து, ஆன்மிகம் மற்றும் இலக்கியம் வரை சரிசமமாக பேசியது காயத்ரி மட்டும்தான். எங்களால் ஏன் அவ்வாறு இயல்பாக இருக்க முடியவில்லை என்று இன்றுவரை தெரியவில்லை.

அப்போது எல்லாம் நான் எல்லா பத்திரிகைகளுக்கும் கவிதைகள், துணுக்குகள், கேள்விகள் எல்லாம் எழுதிக்கொண்டிருந்த காலம். என் பெயர் வராத பத்திரிகைகளே இல்லை எனலாம். என் படைப்புகள் ஏதேனும் வந்தால் ஒரு புத்தகம் இலவசமாக அனுப்பி வைப்பார்கள். அப்போது எல்லாம் போஸ்ட் மேன் வீட்டுக்கு வரும்வரை காத்திருக்க மாட்டேன். நானே போஸ்ட் ஆபிஸ் போய் கடிதங்களை நேரடியாக வாங்கி வருவேன்.

அப்படி ஒரு நாள் நான் போஸ்ட் ஆபிஸ் போய் கடிதங்களை வாங்கிய போதுதான் ஒரு விநோதமான கடிதத்தை பார்த்தேன். கடிதம் காயத்ரி பெயருக்கு வந்திருந்தது. அதை கொண்டு வந்து அக்காவிடம் கொடுக்காமல், ஏதோ ஒரு உந்துதலில் கடிதத்தை பிடித்து படிக்க ஆரம்பித்தேன். கடிதத்தில் இப்படி எழுதியிருந்தது,

" என் இனிய காயத்ரிக்கு,

ஆயிரம் முத்தங்களுடன் ஆனந்த் எழுதுவது. நம் காதல் உன் வீட்டில் தெரிந்ததால் உன் அப்பா உன்னை லால்குடிக்கு படிக்க அனுப்பி வைத்து விட்டார். இப்பொது எங்கள் வீட்டிலும் தெரிந்து விட்டது. என் அத்தை பெண்ணை பேசி முடித்துவிட்டார்கள். உனக்கே தெரியும் என் அப்பாவின் செல்வாக்கை பற்றி. வரும் திங்கள் அதிகாலை வட பழனியில் கல்யாணம். நீ இந்த லட்டரை படிக்கும் நேரம் நான் வீட்டை விட்டு வெளியே வந்து, ரமேஷ் உதவியுடன், கோயம்பத்தூரில் ரமேஷ் வீட்டில் காத்து இருப்பேன். நீ எப்படியாவது வீட்டை விட்டு வெளியே வந்து விடு. நான் உன்னை கோயம்பத்தூரில் அதே முகூர்த்தத்தில் கல்யாணம் செய்து கொள்கிறேன். நான் உன்னை காலம் முழுவதும் காப்பாற்றுவேன். கவலை வேண்டாம். மறக்காமல் வந்து விடு. உனக்கு ரமேஷ் வீட்டு அட்ரஸ்தான் தெரியுமே? இருந்தாலும் இன்னொரு முறை கீழே தருகிறேன்,

......

.......

அன்பு முத்தங்களுடன்,

ஆனந்த்.

கடிதத்தை படித்தவுடன் நான் என்ன செய்திருக்க வேண்டும். உடனே காயத்ரி அக்காவிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஏதோ ஒரு வெறுப்பில் நம் வீட்டில் காதலா? என நினைத்து கிழித்து போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

வீட்டில் போனோ, செல் போனோ இல்லாத காலம் அது. வீட்டிற்கு வந்தவுடன் அக்கா என்னைக் கேட்டாள்,

"ரவி எனக்கு ஏதாவது லெட்டர் வந்ததா?"

"இல்லை" என்று கூசாமல் பொய் சொன்னேன்.


***********************

இந்த சம்பவம் நடந்து 20 வருசங்கள் ஆகிவிட்டது. இன்னும் என் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே உள்ளது. நான் ஏன் அவளிடம் அந்த கடிதத்தை கொடுக்கவில்லை?

அதன் பிறகு அக்காவிற்கும் கல்யாணம் நடந்தது. ஒரு பேரழகிக்கு அமைந்தது ஒரு சாதாரண வாழ்க்கை. இன்னும் குழந்தை வேறு இல்லை. அவள் சந்தோசமாக இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை.

ஒரு வேளை நான் அந்த கடிதத்தை கொடுத்திருந்தால் அவள் வாழ்க்கை நன்றாக அமைந்திருக்குமோ?


3 comments:

Anonymous said...

அருமையான கதை

- இளங்கோ

iniyavan said...

//அருமையான கதை//

வருகைக்கு நன்றி நண்பரே!

Anonymous said...

நல்ல கதை.. நண்பரே..