Dec 27, 2010

ராஜேஷின்.....? (சிறுகதை)

நான் +1 படிக்கும் போது அறிமுகமானான் ராஜெஷ். பார்க்க நல்ல சிகப்பாக இருப்பான். கண்ணாடி அணிந்திருப்பான். ஓரளவு உயரமாக இருப்பான். வந்த கொஞ்ச நாட்களிலேயே என்னுடன் நெருங்கி பழக ஆரம்பித்தான். சில மாதங்களுக்கு பிறகு அவன் ராஜி என்ற பெண்ணைப் பற்றி என்னிடம் அடிக்கடி பேச ஆரம்பித்தான்.

அப்போது எல்லாம் நான்  "ரவியின் காதல் கதை-2 " குறிப்பிட்டுருந்த சுதாவின் பின்னால் அலைந்து கொண்டிருந்த காலம். அதனால் அவன் சொல்லும் விசயங்களை எல்லாம் தினமும் கதை போல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவன் ராஜியிடம் தினமும் பேசுவதை ஒன்றுவிடாமல் சொல்ல ஆரம்பித்தான். அவைகளை எல்லாம் நான் இந்த கதையில் உங்களிடம் சொல்ல முடியாது. ஏனென்றால் அனைத்தும் கொஞ்சம் "A" ரகம். இருந்தாலும் அந்த வயதிற்கே உள்ள ஒரு உணர்ச்சியில் தினமும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஒரு நாள் ராஜேஷ், "ரவி, உன்னை ராஜி பார்க்கணுங்கறாடா?" என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னை ஏண்டா பார்க்கணுமாம்?"

"இல்லை, தினமும் நாம பேசிக்கறதை எல்லாம் அவகிட்ட சொல்லுவேன். அதனால அது யாருனு பார்க்க ஆசைப்படறா? நானும் இன்னைக்கு மதியம் கூட்டிட்டு வறேனு சொல்லிட்டேன்"

"மதியம் கிளாஸ் இருக்கேடா?"

"இன்னைக்கு ஒரு நாள் கட் அடிச்சுடலாம்டா?"

வேறு வழியில்லாமல் அன்று மதியம் ஸ்கூல் கட் அடிப்பது என்று முடிவெடுத்தேன்.

மதியம் ஐஸ்கிரீம் ஷாப்பில் சந்திப்பதாக ஏற்பாடு. திருச்சி NSB ரோட் போயிருக்கீங்களா? இப்போ எல்லாம் மாறிப்போச்சு. பாதி இடத்தை சாரதாஸ் வாங்கி போட்டாச்சு. முன்னாடி அங்கே ஒரு வஸந்த பவன் இருக்கும். சின்ன கடைதான். சாப்பாடு எல்லாம் அருமையா இருக்கும். சரவணபவன் மாதிரியே வஸந்த பவனிலும் எங்கே சாப்பிட்டாலும் ஒரே சுவையாதான் இருக்கும். இப்போ இன்னொரு வஸந்தபவன் இருக்கு, விஸ்வாஸ் புக் டிப்போ பக்கத்துல. நான் அதை சொல்லலை. இப்போ சாரதாஸ் இருக்கும் இடத்திலேயே ஒரு வஸந்தபவன் இருந்தது. அதன் எதிரில் ஒரு ஐஸ்கிரீம் கடை உண்டு. கல்லூரி பள்ளி மாண மாணவிகள் அதிகம் கூடும் இடம். இப்போது அந்த கடையும் இல்லை.

அந்த ஐஸ்கிரிம் கடையில்தான் நானும் ராஜேஷும் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் மிக அழகான ஒரு பெண் அங்கே வரவே, கடையில் இருந்த அனைவரின் பார்வையும் அவள் மேலே விழுந்தது. ஏனென்றால் அப்படி ஒரு அழகு. பாவாடை தாவணியில் இருந்தாள். திக் ப்ளூ தாவாணி, லைட் ப்ளூ பாவாடை. இரட்டை ஜடை பின்னி ஒரு சடையை முன்னே விட்டிருந்தாள். தலையில் மல்லிகைப்பூவை இரண்டு ஜடைகளுக்கும் இடையில் ஒருவாறு தொங்கவிட்டு கட்டியிருந்தாள். பார்க்க மிக அழகாக இருந்தாள். அவளையே நானும் பார்த்துக்கொண்டிருந்த வேலையில்தான்,

"ஹேய் ராஜி, இங்கே வா" எனக்கூப்பிட்டான் ராஜேஷ். வந்தவள் அவன் பக்கத்தில் அமர்ந்தாள். நான் அவள் எதிரில் அமர்ந்தேன். அறிமுகப்படலத்துக்கு பிறகு என்னுடன் சரளமாக பேச ஆரம்பித்தாள். அப்போது பக்கத்து டேபிளில் ஒருவன் அவன் எதிரே உள்ள பெண்ணின் காலை ஏதோ செய்து கொண்டிருந்தான். அதை ரகசியமாக என்னைகூப்பிட்டு காண்பித்தாள். எனக்கு ஒரே வெட்கமாக போய்விட்டது.

சிறிது நேரத்தில் என் காலிலும் ஏதோ உரசுவதை உணர்ந்த நான், அப்போதுதான் கவனித்தேன் அது ராஜியின் கால் என்று. திடுக்கிட்ட நான் உடனே ஒரு நடுக்கத்துடன் காலை எடுத்துக்கொண்டேன். ராஜியும் ஹோலிகிராஸில் படிக்கிறாள் என தெரிந்து கொண்டேன். அப்போது, ராஜேஷ்,

"ராஜி, தெரியுமா? இவன் ஆளும் உங்க காலேஜில்தான் படிக்கிறா" என்றான். அவள், "யார் அது?" என்று கேட்க, நான் சுதாவின் பெயரை சொன்னேன்.

"ஏதேனும் ஹெல்ப் வேணுமாடா?. நான் அவள்கிட்ட பேசவா?"

"வேண்டவே வேண்டாம்" என் மறுத்துவிட்டேன். இரண்டு மணிநேரம் அங்கே செலவழித்த நாங்கள் பள்ளிவிடும் நேரம் பஸ் ஸ்டாண்ட் சென்றோம். ஏதோ ஒரு காரணத்தினால் அன்று மாலை பஸ் ஸ்ட்ரைக். அவர்கள் வீடு இருந்தது திருவானைக்காவலில்.

ராஜிதான் என்னிடம், "வாடா அப்படியே பேசிட்டே, காவேரி பாலத்துல நடந்துட்டே எங்க வீட்டுக்கு போகலாம். அங்கே இருந்து ராஜேஷ் அவன் வண்டியிலே உங்க வீட்டுக்கு டிராப் பண்ணுவான்" என்றாள்.

நானும் ஜொல் விடுவதற்காக "சரி" என்று ஒப்புக்கொண்டு அவளுடனும், ராஜேஷ் கூடவும் பேசிக்கொண்டே சென்றேன். என்னவெல்லாம் அந்த வயதில் பேசக்கூடாதோ அவ்வளவையும் எங்களுடன் பேசினாள். வெட்கப்பட்டுக்கொண்டே நடந்து போய்க்கொண்டிருந்தோம். ஒரு வழியாக அவள் வீடு வந்தது. அடுத்த வீடுதான் ராஜேஷ் வீடு. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவள் சப்பாத்தி சாப்பிடுமாறு எனக்கு சப்பாத்தியும், குருமாவும் கொடுத்தாள். சாப்பிட்டுவிட்டு அமர்ந்தபோது, அவர்கள் இருவரும் பேசியதை வெட்கத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து கீழே இருந்து ராஜியின் அம்மா, "ராஜி, இன்னும் என்ன பண்ணிட்டுருக்க மாடியில?"

"ராஜேஷோடவும், அவன் பிரண்டு கூடவும் பேசிகிட்டு இருக்கேம்மா?"

"என்னதான் பேசுவீங்களோ, அக்கா தம்பி இருவரும்"

ஷாக்காகி போனேன் நான்.

ராஜி ஒரு விதத்தில் அவனுக்கு அக்கா முறை வேண்டும் என்பதை நான் அறிந்த போது எனக்கு ஏற்பட்ட கோபமும், படிக்கும் உங்களுக்கு அவன் மேலே ஏற்படும் கோபமும் நியாயமானதுதான்.

4 comments:

kashyapan said...

இனியவன் அவர்களே! எனக்குத்தெரிந்த பெராசிரியையின் மகள் டெல்லியில் படித்துக் கொண்டிருந்தார்.பெராசிரியையின் மூத்த சகோதரியின் மகன் அங்கெயே படித்தான்.இருவரும் திருமணம் செய்து கோண்டார்கள். ஒருமகன்,மகளோடு இப்போது அமெரிக்காவில் வாழ்கிறார்கள்.உண்மை கற்பனையைவிட ஆச்சரியமானது---காஸ்யபன்

Anonymous said...

nalla kadhai nadai irukkiradhu... Inigo

iniyavan said...

//உண்மை கற்பனையைவிட ஆச்சரியமானது---காஸ்யபன்//

ஆம் நண்பரே!

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி காஸ்யன்.

iniyavan said...

//nalla kadhai nadai irukkiradhu... Inigo//

நன்றி நண்பா!