Dec 30, 2010

பயம் (சிறுகதை)

எப்படியாவது அந்த டிரையினை பிடித்துவிட வேண்டும். வேகமாக காரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இதுவரை இவ்வளவு வேகமாக காரை ஓட்டியதே இல்லை. புது கார் வேறு. எல்லாம் என் மகளுக்காக வாங்கியதுதான். அதில்தான் இப்போ நான் போய்க்கொண்டிருக்கிறேன். எப்படியாவது இன்னும் 20 நிமிடத்தில் அங்கே இருக்க வேண்டும். எனக்கு லேசாக ஒருவித பயமும், வெறுப்பும் வந்தது. இந்த நேரம் பார்த்தா இந்த சிக்னல் வரவேண்டும்?

சிக்னலுக்கு நிற்கும் இந்த நேரத்தில் எனைப் பற்றி உங்களுக்கு சொல்லிவிடுகிறேன். என் பெயர் ராஜன். ராஜன் கெமிக்கல்ஸ், ராஜன் பஸ் சர்வீஸ், ராஜன் தியேட்டர்ஸ், ராஜன் ஹாஸ்பிட்டல் எல்லாமே என்னுடையதுதான். கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் முன்னேறியவன் நான். இன்று பல கோடிக்கு அதிபதி. இவ்வளவு சொத்திற்கும் ஒரே வாரிசு, என் மகள் ஸ்வப்னா. அவளை பார்க்கத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.

ஏன்? இருங்கள்! சிக்னல் விழுகிறது, காரை ஓட்டிக்கொண்டே சொல்கிறேன். எப்போதும் போலத்தான் இன்றும் விடிந்தது. நான் அந்த லெட்டரை பார்க்காதவரை எல்லாம் நன்றாகவே இருந்தது. எழுந்து ஜாகிங் போகலாம் என கிளம்பியவன் கண்களில் அந்த லெட்டர் பட்டது. மனைவி கீதாவின் டிரெஸ்ஸிங் டேபிளில் ஒரு கவரின் கீழே சொறுகி இருந்தது. முதலில் அங்கே இருந்து கிளம்ப நினைத்தவன், ஏதோ ஒரு உந்துதலில் அந்த கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

" அன்புள்ள அப்பா,

உங்களிடம் ஏற்கனவே சொல்லாம் என நினைத்திருந்தேன். எனக்கு சொல்ல தைரியம் வரவில்லை. ஏனென்றால் என் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு அப்படிப்பட்டது. ஆனால், அதே சமயத்தில் நான் அவரின் மேல் வைத்திருக்கும் அன்பும் எனக்கு முக்கியமாக படுகிறது. உங்களிடம் சொல்லி 'அவருக்கே என்னை திருமணம் செய்து வையுங்கள்' என்று சொல்லலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அவர் உங்கள் தகுதிக்கு பொருந்தாதவர் என்று சொல்லி விடுவீர்களோ என்று பயமாக உள்ளது. ஆனால், அவர் நல்ல திறமையானவர். நன்றாக படித்து உள்ளார். என்னை வைத்து நன்றாக காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் பண பலமும், ஆட் பலமும் நானும் அறிந்ததுதான். அதனால் நான் உங்களிடம் அவரைப் பற்றி சொன்னால, அவரை ஏதாவது செய்துவிடுவீர்களோ என்று பயமாக உள்ளது. அதனால்தான் அவர் பெயரைக்கூட மறைத்து விட்டேன்.

தயவு செய்து கோபப்படாதீர்கள். நான் இன்று காலை டிரையினில் அவருடன் சென்னை செல்கிறேன். எங்களை வாழவிடுங்கள். எனக்கு உங்கள் சொத்துக்கள் எதுவும் வேண்டாம். அவர் மட்டும்தான் வேண்டும். அம்மாவிடமும் தயவு செய்து சொல்லிவிடுங்கள்.

எங்களை தேட முயற்சி செய்யாதீர்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்"

இப்படி ஒரு கடிதத்தை உங்கள் மகள் உங்களுக்கு எழுதி இருந்தால், உங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லுங்கள். எனக்கு பதட்டத்தில் எதுவுமே ஓடவில்லை. கீதாவை எழுப்பலாம் என்றால், நாங்கள் இருவருமே இரவு நிறைய நேரம் கழித்துதான் தூங்கியது ஞாபகம் வந்தது. அதற்கும் நான் தான் காரணம். அதனால் அவளை எழுப்பி விசயத்தை சொல்லி டைம் வேஸ்ட் செய்ய விரும்பாமல் உடனே காரை எடுத்து கிளம்பிவிட்டேன்.

இதோ ரயில்வே ஸ்டேஷன் வந்துவிட்டது.

சார், கொஞ்சம் வெயிட் பண்ணறீங்களா? உள்ளே போய் பார்த்துட்டு வந்துடறேன்.

"என்னது இது? எங்கேயும் இல்லை. டிரெயின் இங்கேதானே இருக்கு. இன்னும் டிரெயின் கிளம்பக்கூட இல்லையே. ஒரு வேளை பஸ்ஸில் போய் இருப்பாளோ? இல்லையே லெட்டரில் டிரெயின் என்றுதானே உள்ளது? "

என் செல்போன் அடிக்கவே, யார் அது? குழம்பி போய் பார்த்தால், ஸ்வப்னா. பதட்த்ததுடனும், கலங்கிய கண்களுடனும் போனை எடுத்தேன்.

"பாப்பா, என்னடா? இப்படி செஞ்சிட்டே?"

"என்ன டாடி? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் ஒரு மாதிரி பேசறீங்க? நானும் அம்மாவும் டைனிங் டேபிள்ல எவ்வளவு நேரமா காத்திருக்கிறது? எங்க போனீங்க. காரை வேற காணோம்? அம்மா கிட்டையும் ஒண்ணும் சொல்லையாம்?"

"அப்ப நீ ஸ்டேஷனுக்கு.. அந்த லட்டர்?"

"என்ன உளறீங்க டாடி. சீக்கிரம் வாங்க"

சார், என் பொண்ணு சார், என் பாப்பா சார், வீட்ல இருந்து பேசறா?

நான் வீட்டுக்கு பறந்துட்டு இருக்கேன் சார்!

அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டில் நான்.

"என்னங்க ஆச்சு?"

"ஒண்ணும் இல்லை?"

ஸ்வப்னா, வீட்டுல இருக்கா! அப்போ அந்த லெட்டர்???

"டாடி, அம்மா என்னை திட்டிட்டே இருக்கா?"

"ஏம்பா, குழந்தைய திட்டுற?"

"குழந்தையா, அவ என்ன பண்ணா தெரியுமா? நேத்து என்னோட பர்சனல் சூட்கேஸை திறந்து நம்ம லவ் லெட்டர்ஸ், நான் எங்க அப்பாவுக்கு கடைசியா எழுதுன லெட்டரை எல்லாம் எடுத்து படிச்சிருக்கா?"

நான் ஏன் தேம்பி தேம்பி அழுகிறேன் என்று கீதாவும், ஸ்வப்னாவும் அதிர்ச்சியுடன், பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆமாம், ஏன் சார்?


8 comments:

அசால்ட் ஆறுமுகம் said...

அருமை....

பாலாஜி சங்கர் said...

நல்ல திருப்பம்

iniyavan said...

//அருமை....//

நன்றி அசால்ட் ஆறுமுகம்.

iniyavan said...

//நல்ல திருப்பம்//

வருகைக்கு நன்றி பாலாஜி சங்கர்.

பாஸ்கர் said...

Superb

Anonymous said...

nice one and very well written... Puthandu vazhthukkal... Inigo

iniyavan said...

//Superb//

நன்றி பாஸ்கர்.

iniyavan said...

//nice one and very well written... Puthandu vazhthukkal... Inigo//

வருகைக்கு நன்றி நண்பா. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.