Dec 30, 2011

ஒரு சுய அலசல்!


பொதுவாக நான் நிறைய படிப்பது போலவே நிறைய பேசுவேன். இந்தப் பழக்கம் எப்படி எங்கே இருந்து ஆரம்பித்தது என்று தெரியவில்லை. அதே சமயம் நான் ஒரு மேடைப் பேச்சாளன் கிடையாது. யார் என்னிடம் பழகினாலும் உடனே 'கலகல' என்று பேச ஆரம்பித்துவிடுவேன். இந்தப் பழக்கமே எனக்கு நிறைய நண்பர்களை கொடுத்திருக்கிறது. எதிரிகளை கொடுத்ததில்லை. ஏனென்றால் எனக்கு எதிரிகள் என்றே யாரும் கிடையாது. அனைவரும் நண்பர்களே. ஆனால், அதிகம் பேசுவதால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அது பல சமயங்களில் மன நிம்மதியை கெடுத்துவிடுகிறது.

இந்தப் பிரச்சனை என்னுடன் பிறந்தது முதல் இருக்கிறது என்றே நினைக்கிறேன். என்னிடம் பேசுபவர்கள் மற்றவர்களிடம் அப்படியே சொன்னால் பரவாயில்லை. சில சமயம் திரித்து சொல்லிவிடுகிறார்கள். அப்படி அவர்கள் ஏதாவது கேள்விபட்டால் நேராக நம்மிடம் வந்து விசாரித்தால் நல்லது. ஆனால் யாரும் அப்படிச் செய்யாமல் மனதிற்குள்ளாகவே வைத்து நம் மேல் வெறுப்பை வளர்த்துக்கொள்கிறார்கள். எங்கள் வீட்டில் அடிக்கடி சொல்வதுண்டு, "உங்கள் ஜாதகம் நன்றாக இருப்பதால் உங்கள் பேச்சினால் எந்த பிரச்சனையும் அதிகமாக வருவதில்லை. இல்லை என்றால் நீங்கள் பேசும் பேச்சிற்கு...." உண்மைதான் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை எங்கள் பழைய முதலாளியிடம் ஒரு முறை சின்ன மனஸ்தாபம் வந்தபோது அவரிடமே சாவால் விட்டேன், 

"இதே கம்பனியில் நான் ஒரு பெரிய ஆளாக வந்து காண்பிக்கிறேன் பாருங்கள்" என்று. 

அவரோ, "நான் உன்னை அவ்வாறு வர விட மாட்டேன்" என்றார். 
"வந்து காண்பிக்கிறேன்" என்றேன்.

பிறகு யோசித்து பார்த்த போது அது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிகிறது. அவர் நினைத்திருந்தால் அன்றே என்னை நிறுவனத்திலிருந்து தூக்கி இருக்கலாம். ஏதோ நல்ல நேரம் என்றுதான் நினைக்கிறேன். அப்படி நடக்கவில்லை. 

ஒரு இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பது என்று, ஒரே ஒரு நாள் முயற்சி செய்து பார்த்தேன், ஆகா, அருமை. அந்த இரண்டு மணி நேரமும் நான் அமைதியாக சந்தோசமாக இருந்தேன். பேசாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் வருவதில்லை. அதற்காக ஊமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அளவோடு பேச வேண்டும். அப்படித்தான் முடிவு எடுத்து வைத்திருந்தேன். நேற்று ஒரு நண்பருக்கு போன் செய்தேன், அரை மணி நேரப் பேச்சிற்கு பிறகுதான் தெரிந்தது, 'நான் மட்டும்தான் பேசியிருக்கேன்' என்பது. நாய் வாலை நிமித்த முடியுமா?

திருவள்ளுவர் அன்றே சொல்லி இருக்கிறார்:

"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

-ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்கு காரணமாகிவிடும்.

*************************************************

இதே போல என்னிடம் இருக்கும் இன்னொரு குறை அடிக்கடி கோபப்படுவது. எத்தனையோ முயற்சிகள் செய்து கோபத்தைக் கட்டுப்படுத்தினாலும், சில சமயங்களில் கோபம் உச்சத்துக்கு சென்று விடுகிறது. திரும்ப சாதாரண நிலமைக்கு வர நீண்ட நேரம் பிடிக்கிறது. கடைசியில் யோசித்துப் பார்த்தோமானால் அந்த கோபத்தினால் அடைந்த பயன் எதுவும் இல்லை. உடல்நிலைதான் கெட்டுப்போகிறது. "கோபத்தைக் குறைத்துக்கொள்" என்று சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் அதை நடைமுறைப் படுத்துவது என்பது மிகக் கடினம்.

இதைப் பற்றியும் ஏற்கனவே எங்கேயோ எழுதியிருந்ததாக நினைவு. நமக்கு யார் மீது கோபம் வரும் என்றால், "யாரிடம் கோபம் செல்லுபடியாகுமோ அவர்களிடம்தான் நாம் கோபப்படுவோம்"  நம்மை விட பலசாலியிடமோ அல்லது நம்மை திருப்பித் தாக்குபவர்களிடமோ நாம் கோபம் கொள்வதில்லை. அப்படியானால் என்ன அர்த்தம்? நம் மனதிற்கு தெரிகிறது? யாரிடம் கோபம் கொள்ள வேண்டும் யாரிடம் கோபம் கொள்ளக்கூடாது என்று? 

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்"

ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டுமானால், சினத்தை கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

இப்படி அறிவுரை சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் நடைமுறை படுத்தும் போது ரொம்ப சிக்கல். சில சமயங்களில் நாம் கோபப்பட்டுத்தான் ஆக வேண்டும். சில சமயங்களில் கோபப்படுவது போல் நடிக்கவாவது செய்ய வேண்டும். இல்லையேல் பிரச்சனைதான். சில சந்தர்ப்பங்களில் கோபத்தைக் கட்டுபடுத்த வேண்டும்.

எங்கள் பகுதியில் மேம்பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் 15 கிலோ மீட்டர் கடக்க 35 நிமிடங்கள் ஆகிறது. முன்பு 9 நிமிடங்களில் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு வருவேன். இப்போது 35 நிமிடங்கள் பழகிப் போய்விட்டது. 

நேற்று முன் தினம் அதே 15 கிலோ மீட்ட்ரைக் கடக்க, நீங்கள் நம்ப மாட்டீர்கள் மூன்று மணி நேரம் ஆனது. இன்ச் இன்ச்சாக கார் நகர்ந்தது. நல்ல பசி. காரை விட்டு எங்கும் இறங்க முடியாது. காரில் வேறு எந்த வேலையும் பார்க்க முடியாது. பாடல்கள் ஒரு ஸ்டேஜிற்கு பிறகு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. மூன்று மணி நேரம் கழித்து வீட்டை அடைந்தவுடன், மனசு கடந்து அலைகிறது. யாரிடம் சண்டைப் போடலாம் என்று.  

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றாலும், அந்த மூன்று மணி நேர டிராபிக் ஜாம் பிரச்சனை மனதில் கோபமாக மாறி சண்டைப் போட ஆள் தேடுகிறது.

இந்த இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் அடுத்த ஆண்டிலாவது முழுமையாக வெளிவர முடியுமா என்று பார்க்க வேண்டும்.Dec 28, 2011

மிக்ஸர் – 28.12.2011


சச்சின் 100வது சதம் எடுப்பார் என மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பல பேரில் நானும் ஒருவன். சச்சின் ஆடிக்கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் சச்சின் அவுட் ஆனார். நான் என்னையறியாமல், “ஐய்யோ சச்சின் அவுட் ஆகிவிட்டாரே” என கத்திவிட்டேன். உடனே நண்பர் கடுப்பாகி என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார், “நான் எவ்வளவு முக்கியமான விசயம் உங்களுடன் பேசிக்கோண்டிருக்கிறேன். சச்சின் அவுட்டானது உங்களுக்கு முக்கியமாய் போய்விட்டதா?” என்றார். “என்னை பொருத்தவரை முக்கியம் தான்” என்றேன். உடனே அவர், “இதனால்தான் நம் நாடு உருப்பிடாமல் போகிறது. சச்சின் சொத்து எவ்வளவு தெரியுமா?” என்று பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு கிரிக்கெட் விளையாட்டு ரசிகன், ஒரு கிரிக்கெட் ப்ளேயர் அவனுக்குப் பிடித்த வீரனின் விளையாட்டை ரசிப்பது தவறா? அவரது சொத்து எவ்வளவாக இருந்தால் எனக்கு என்ன? அதற்கும் அவர் விளையாட்டை ரசிப்பதற்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

*****************************************************************
அதே போல் தனுஷின் “கொலை வெறிடி” பாடலை, இதெல்லாம் ஒரு பாடலா? மொக்கைப் பாடல். இதற்கு எதற்கு இவ்வளவு அலப்பறை?. இதற்கு போய் மன்மோகன் சிங் தனுஷை விருந்துக்கு கூப்பிட்டுகிறார்? எல்லாம் லக்கு, என்று வாயில் வந்ததை சொல்கிறார்கள். லக்கோ இல்லை மொக்கையோ அந்த பாடலில் ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால்தானே அந்தப் பாடல் இவ்வளவு மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. நம்மால் ஏன் ஒருவரின் வெற்றியை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏன் நம் மனம் மறுக்கிறது? என்ன காரணம்? நம்மால் முடியாத ஒன்றை ஒரு செயலை மற்றொருவர் செய்து பெயர் வாங்கும் போது ஏன் நம்மால் மனம் வந்து அந்த செயலை பாராட்ட முடியவில்லை? தடுப்பது எது? புரியவில்லை.

*****************************************************************
“உ” பதிப்பகம் ஆரம்பித்தவுடன் சில நண்பர்கள் (பதிவுலக நண்பர்கள் அல்ல), “ஏன் உனக்கு இந்த வேலை? இதெல்லாம் உனக்குத் தேவையா? உன்னால் தொடர்ந்து நடத்த முடியுமா? நிச்சயம் நஷ்டத்தில் வெகு விரைவில் மூடிவிடப் போகிறாய்?” என்று சொல்கிறார்கள். யாருமே எந்த ஒரு தொழிலையும் நம்மால் நடத்த முடியாது, விரைவில் மூடிவிடுவோம் என்று நினைத்து ஆரம்பிப்பது இல்லை. அதே போல் நல்ல எண்ணத்துடன் லாப நோக்கின்றித்தான் ஆரம்பித்திருக்கிறோம். முடிந்தவரை வரை நன்றாக கொண்டு வர முயற்சி செய்வோம். பார்ப்போம்!

*****************************************************************
“சென்ற வருடத்தில் நான்” என்று ஒரு இடுகை எழுதலாமா? என யோசித்து எழுத ஆரம்பித்தேன். நிறைய நல்ல விசயங்கள் நடந்திருக்கின்றன. சில விசயங்களுக்காக பொருளாதார நஷ்டம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் விரிவாக எழுத நினைத்த நான், ஒரே ஒரு காரணத்தினால் எழுத வேண்டாம் என நிறுத்திக் கொண்டேன். என்ன காரணம் என்பதை கடைசியில் சொல்கிறேன்.

*****************************************************************
“ “ழ” பதிப்பகம் வெளியிட்ட என் புத்தகங்களான “வீணையடி நீ எனக்கு” மற்றும் “சாமான்யனின் கதை” நிறைய விற்றிருக்கிறது. மக்களிடையே நன்றாக போய் சேர்ந்திருக்கிறது. அதனால் எனக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. பார்க்கும் நண்பர்கள் எல்லாம் என் புத்தகங்கள் பற்றித்தான் பேசுகிறார்கள்” என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை. பாதிப் புத்தகங்கள் அப்படியே விற்காமல் இருக்கின்றன என்ற உண்மையை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம் ஏன் புதுசா “நான் கெட்டவன்” புத்தகம்னு கேக்கறீங்களா? புலி வாலை புடிச்ச கதை உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு என் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று தோன்றினால், டிஸ்கவரி புக் பேலஸை தொடர்பு கொள்ளவும்.

*****************************************************************
“நான் கெட்டவன்” புத்தகம் இன்னும் வெளியீடு காணவில்லை. ஆனால் ஆன் லைனில் கிடைக்கிறது. எப்படி போன பாராவில் புத்தகம் அதிகம் விற்கவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டேனோ, அதே போல் நீங்களும் ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். புத்தகம் வெளிவராத நிலையில் எப்போடியோ என் புத்தகத்தை படித்த ஒரு பெண் வாசகி, சென்னையிலிருந்து தொலை பேசியில் தொடர்பு கொண்டு, “புத்தகம் வாசிக்க அருமையாக இருக்கிறது. ரொம்ப நன்றாக வந்துள்ளது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று பாராட்டினார். இது பொய் இல்லை என்பதை நிரூபிக்க அந்தப் பெண் பேசிய போது ஒரு பிரபல பதிவர் உடன் இருந்தார் என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். புத்தகம் விற்கப்போகிறதோ இல்லையோ, அந்த குறிப்பிட்ட வாசகியின் பாராட்டையே நான் என் புத்தகத்தின் வெற்றியாக கருதுகிறேன். புத்தகத்தை வாங்க மேலே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

*****************************************************************
முன்பு போல் என்னால் புதுப் பட பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. நான் எப்போதும் செல்லும் தளங்களுக்குச் சென்று டவுண்ட் லோட் என்று போட்டால், “ப்ளே” ஆகிறதே ஒழிய என்னால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை. எனக்கு “மூணு, நண்பன், கழுகு, வேட்டை” படப் பாடல்களும் மற்ரும் சில பழைய பாடல்களும் தரவிறக்கம் செய்ய வேண்டும். நண்பர்கள் யாராவது எந்த வலைத்தளத்தின் மூலம் இந்த பாடல்களை தரவிறக்கம் செய்யலாம் என்று சொல்ல முடியுமா?

*****************************************************************

நான்காவது பாராவிற்கான விடை. எழுதியதை நிறுத்தியதற்கு காரணம், சென்ற வருடத்தில் எனக்கு ஒரு வயது அதிகமாகி விட்டது என்ற உண்மை தோன்றியதால். மனதளவில் 16 ஆக நினைத்தாலும், வயது அதிகாமாகிக்கொண்டிருக்கிற கசப்பான உண்மையையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

*****************************************************************

Dec 26, 2011

அழிக்கப் பிறந்தவன்!


என்னைப் போல ஆரம்ப நிலையில் இருக்கும் எழுத்தாளர்கள் புத்தகம் போட வேண்டும் என்று நினைக்கையில் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம். நாம்தான் பதிப்பகங்களை அணுக வேண்டும். அவ்வளவு சுலபமாக யாரும் புத்தகம் போட அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு நாம் நன்கு பிரபலமானவராக இருக்க வேண்டும், நண்பர் யுவகிருஷ்ணாவைப் போல அல்லது கேபிள் சங்கரை போல. ஓரளவு நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 

"உ" பதிப்பகம் ஆரம்பித்தவுடன் நான் இரண்டு புத்தகங்களுக்கான கட்டுரைகளை/ கதைகளை கேபிள் சங்கரிடம் கொடுத்தேன். என்னதான் நான் பதிப்பாளராக அவதாரம் எடுத்திருந்தாலும் என்னுடைய ஒரு புத்தகத்தை சரியில்லை என்று கேபிள் நிராகரித்துவிட்டார். 

வருத்தம் இருந்தாலும், நல்ல படைப்புகள் மட்டும்தான் வெளிவர வேண்டும் என்ற அவரின் எண்ணம் எனக்குப் பிடித்திருந்தது. அந்த சூழ்நிலையில் இன்னொரு புத்தகம் யாருடையதைப் போடலாம் என்று நினைக்கையில் நண்பர் யுவ கிருஷ்ணா தொடராக எழுதிக் கொண்டிருந்த "அழிக்கப் பிறந்தவன்" கண்களில் பட்டது. நான் அவரிடம் கேட்கலாமா என நினைத்துக்கொண்டிருக்கையில், கேபிள் சங்கரே போன் செய்து, "யுவாவின் நாவலை நாம் புத்தகமாக கொண்டு வரலாமா?" என்றார்.
நான் உடனே யுவாவிடம் கேட்டுப்பார்க்கச் சொன்னேன். யுவாவும் உடனே ஒப்புதல் வழங்கிவிட்டார். பின் நாவலை படிப்பதற்காக அவரிடம் அனுமதி வாங்கி எனக்கு அனுப்பி வைக்கச் சொன்னேன். உடனே படித்து என் கருத்தினை சொல்லுமாறு கேட்டார். ஏனென்றால் அடுத்த நாள் அட்டைப்படம் டிஸைன் செய்து, உடனே லே அவுட்டுக்கு அனுப்ப வேண்டும். அதனால் சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு 9 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான் தெரியும் எனக்கு. பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஒரே படபடப்பு. ஹார்ட் பீட் பயங்கரமாக அடிக்க ஆரம்பித்துவிட்டது. உடனே கிளைமாக்ஸை படிக்காமல் ஒரு அரை மணி நேரம் தள்ளிப்போட்டேன். பின் ஒரு குறுஞ்செய்தி கேபிளுக்கும், யுவாவிற்கும் அனுப்பினேன்:

"I am in 16th Chapter. Reading with full tension. I just want to have a break and read after half an hour to enjoy the climax and the story. Congrats Yuva and thanks Cable"

பின் 30 நிமிடங்கள் கழித்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அற்புதமான நடையில் விறுவிறுப்பாக எழுதப்பட்ட நாவல். இரவு 11.35க்கு நாவலை படித்து முடித்தேன். உடனே தொலை பேசியில் நண்பர் யுவகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு பாராட்டினேன். நண்பர் கேபிளுக்கும் நன்றி தெரிவித்தேன். அன்று இரவு முழுவதும் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. நாவலுக்குள் சென்றுவிட்டதால், மாரியும், நெடுஞ்செழியனும், வாப்பாவும், கொசுவும் என் தூக்கத்தை கெடுத்துவிட்டார்கள்.

சுஜாதா நாவலின் போதுதான் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். அதன் பிறகு யுவகிருஷ்ணாவின் நாவலைப் படித்த பிறகுதான் அந்த அவஸ்தையை மீண்டும் அனுபவித்தேன். இந்த நாவலை திரைக்கதையாக அமைத்தால், "மங்காத்தா" போல் நல்ல வெற்றி படமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.

யுவகிருஷ்ணாவின் "அழிக்கப் பிறந்தவன்" மிகப் பெரிய வெற்றி அடைவது உறுதி. யுவாவின் எழுத்துக்களை எப்பொழுதுமே விரும்பி படிப்பவன் நான். நிச்சயம் அவருக்கு தமிழ் எழுத்துலகத்தில் நல்ல ஒரு இடம் காத்திருக்கிறது.

"உ" பதிப்பகம் மூலமாக யுவகிருஷ்ணாவின் நாவலை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன். விரைவில் நாவல் வெளியீடு தொடர்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறேன். பதிவுலக நண்பர்களின் மேலான ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.


Dec 22, 2011

தமிழ் மணம் - உ பதிப்பகம்

என் நேற்றைய இடுகையை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் போய்விட்டதால் வேறு ஒரு இடுகை மூலம் அந்த லிங்கை இணைக்கிறேன்:


உ பதிப்பகம்


Dec 21, 2011

"உ" பதிப்பகம்சிறு வயதில் எல்லோரும் ஏகப்பட்ட கனவுகளுடன் வாழ்ந்திருப்போம். நானும் அப்படித்தான். அதில் ஒரு கனவு நிறைய கதைகள் எழுதி பெரிய எழுத்தாளராக வரவேண்டும் என்பது. அந்த உந்துதலில்தான் 'சலங்கை" என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினோம். ஆனால் பல காரணங்களால் எங்களால் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது.

அதன் பிறகு வாழ்க்கைத் திசை மாறி போய்விட்டாலும், அந்தக் கனவு மட்டும் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது. எனக்குப் பிடித்தது படிப்பதும், பேசுவதும் மற்றும் எழுதுவதும்தான். ஆனால் பார்ப்பதோ வேறு தொழில். இருந்தாலும் பிடித்தத் தொழிலையும் செய்து பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன்.

ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கஷ்டம் என்று புரிந்து கொண்டேன். பத்திரிகைகள் நிறைய இருந்தாலும், முன்புபோல் நிறைய சிறுகதைகள் வெளி வருவதில்லை. அப்படியே வந்தாலும் மிகப் பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே வெளி வருகின்றன. நம் கதைகளும் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு கடுமையாக உழைத்தேன். ஆனால் அதுவும் அவ்வளவு சுலபம் இல்லை என போகப் போக புரிந்தது. அந்த சமயத்தில்தான் வலைப்பூ என்னை சுவீகரித்துக்கொண்டது. நிறைய எழுத ஆரம்பித்தேன்.

என் ஆசை "ழ" பதிப்பகத்தின் மூலம் கடந்த மார்ச் மாதம் நிறைவேறியது. "சாமன்யனின் கதை" மற்றும் "வீணையடி நீ எனக்கு" என்ற என்னுடைய இரண்டு புத்தகங்களும் வெளியானது. ஓரளவிற்கு விற்கவும் செய்தது. சிலர் என்னிடம் 'இன்னும் நன்றாக எழுத வேண்டும், இவர் போல் இல்லை அவர் போல் இல்லை" என்றெல்லாம் சொன்னார்கள்.

ஒரு வகுப்பில் ஒருவர்தான் முதல் ரேங்க் எடுக்க முடியும். 50 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் எல்லோருமே முதல் ரேங்க் வாங்க முடியுமா என்ன? அதனால் மற்ற ரேங்க் எடுக்கும் மாணவர்கள் எதற்கும் லாயக்கு இல்லை என முடிவு கட்ட முடியுமா?

எல்லோருமே எடுத்தவுடன் பெரிய எழுத்தாளர் போல எழுத முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியின் விளைவாகத்தான் முதல் இரண்டு புத்தகங்கள் வெளியானது.

பின் இரண்டு குறுநாவல்களும், 11 சிறுகதைகளும் எழுதி முடித்தவுடன் என் நண்பர் L.C நந்தகுமார் படித்துவிட்டு "இதையும் ஏன் புத்தகமாக போடக்கூடாது" என்றார். மிகப்பெரிய பதிப்பகங்களை அணுகினேன். ஆனால் சரியான பதில் கிடைக்காத சமயத்தில், என் பதிவுலக குரு, கேபிள் சங்கர், "ஏன் நீங்களே ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க கூடாது?" என்றார்.

"நான் இருப்பது மலேசியாவில். எப்படித் தலைவரே இது சரி வரும்?" என்றேன்.

" நீங்கள் ஆரம்பியுங்கள். நான் உதவுகிறேன்" என்றார். உடனே என் நண்பரை L.C நந்தகுமாரை அணுகினேன்,

"நான் முதலீடு செய்கிறேன். நீங்கள் ஆரம்பிங்கள்" என்றார்.

இப்படி ஒரு மணி நேரத்தில் ஆரம்பித்ததுதான் "உ" பதிப்பகம்.

நண்பர்கள் யாரும் என் புத்தகங்களுக்காக மட்டும் ஆரம்பித்தது "உ" பதிப்பகம் என்று எண்ண வேண்டாம். முதலில் நண்பர் கேபிள் சங்கரின் "தெர்மோக்கோல் தேவதைகளும்" என்னுடைய "நான் கெட்டவன்" புத்தகங்களும் வெளி வருகிறது. புத்தக கண்காட்சிக்குள் வெளியிட முடிவு செய்துள்ளோம்.


போகப் போக மற்றவர்களின் படைப்புகளும் புத்தகமாக வெளி கொணர நினைத்திருக்கிறோம். பதிவுலகில் நன்றாக எழுதும் நண்பர்களுக்கே முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

நண்பர்கள் அவர்களுடைய படைப்புகள் வெளிவர வேண்டும் என்று விரும்பினால், நண்பர் கேபிள் சங்கரையோ அல்லது என்னையோ தொடர்பு கொள்ளலாம்.

விரைவில் புத்தகங்கள் வெளியீடு பற்றிய செய்திகளோடு உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

 "உ"  என்று பிள்ளையார் சுழி போட்டு பதிப்பகத்தை ஆரம்பித்திருக்கிறோம். இது மென்மேலும் வளர பதிவுலக நண்பர்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.

Dec 19, 2011

அஞ்சனா!


நான் இப்படி ஒரு சிக்கலில் மாட்டுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. காரணம் அஞ்சனா என்பதா? இல்லை காதல் என்பதா?

அஞ்சனா என் அழகிய காதலி. அஞ்சனாவை நான் காதலிக்க ஆரம்பித்தது அவளின் அழகைப் பார்த்து அல்ல! அவளுக்கும் கிரிக்கெட் பிடிக்கும் என்பதால்தான். ஆம். நான் ஒரு கிரிக்கெட் ப்ளேயர். திருச்சி மாவட்டத்தின் இரண்டாவது டிவிஷன் லீகில் விளையாடிக்கொண்டிருந்தேன். எங்கள் அணியின் கேப்டன் நான். போன வருட கடைசி மேட்சில் ஜெயித்தவுடன் எங்கள் அணி முதல் டிவிஷனில் நுழைந்துவிட்டது. எங்கள் அணியில் அனைவருமே நன்றாக ஆடினோம் என்றாலும், என்னுடைய பங்கு அந்த மேட்சில் மகத்தானது. 5 விக்கெட்களும் 65 ரன்னும் எடுத்திருந்தேன்.

எனக்கு ஏகப்பட்ட பாராட்டுகள். அன்றைய மேட்சின் முடிவில்தான் நான் அஞ்சனாவைச் சந்தித்தேன். என்னுடைய ஹீரோ ஹோண்டாவை எடுக்க நகர்கையில் ஒரு குரல்,

"கன்கிராட்ஸ். அருமையான ஆடினீங்க" குரல் வந்த திசையை நோக்கினேன். ஒரு அழகானப் பெண் சுடிதாரில். 

"நன்றிங்க" என்றேன் நாணத்துடன். அவளும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. நானும் பேசவில்லை. உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டேன். அன்று முழுவதும் அவளது அழகு என் மனக்கண் முன் வந்து சென்றது. அடுத்தவாரம் ஒரு லீக் மேட்ச் இருந்தது. மேட்சில் விளையாடுவதற்காக என் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். போகும் வழியில் ஒரு காபி குடிக்க நினைத்து வசந்தபவனில் வண்டியை நிறுத்தினேன்.

ஆர்டர் செய்துவிட்டு காபிக்காக காத்திருக்கும் போது மீண்டும் அஞ்சனா. வந்தவள் என் எதிரில் உட்கார்ந்து என்னையே பார்த்தாள்.

"ஹாய்" என்றேன்.

"ஹாய்" என்றவள், "இன்னைக்கும் மேட்ச் இருக்கா?" என்றாள்.

"இருக்கு" என்றவன், அவளைப் பார்த்து "நான் ராஜ்" என்றேன்.

"தெரியும்" என்றாள்.

"நீங்கள்?"

"அஞ்சனா"

"நான் ஒண்ணு உங்களைப் பத்தி சொல்லலாமா?" என்று கேட்டு முடிப்பதற்குள்,

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு ஜொள்ளு விடாம, நானும் உங்க கூட மேட்சுக்கு வரலாமானு சொல்லுங்க?" என்றாள்.

அதற்கு மேல் அவளிடம் நான் சொல்ல வந்ததை சொல்லாமல், "ம். போகலாமே" என்றேன்.

அவளுக்கும் ஒரு காபி ஆர்டர் செய்தேன். என் முகத்தையே பார்த்துக்கொண்டு காபி குடித்துக்கொண்டிருந்தாள். நான் அவளின் காபி குடிக்கும் அழகையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

"ஹலோ! இன்னொரு நாளைக்கு உங்களுக்காக இரண்டு காபி குடிக்கிறேன். அப்போ உத்து பாத்துக்கங்க. இப்போ மேட்சுக்கு டைம் ஆச்சு போலாம் வாங்க"

கொஞ்சம் வெட்கத்துடன் பணத்தை கவுண்ட்டரில் கொடுத்துவிட்டு வண்டியைக் கிளப்பினேன். ரொம்ப நாள் பழகியவள் போல வண்டியில் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு உட்கார்ந்து கொண்டாள். 

பிரேக் பிடிக்காமல் ரொம்ப ஜாக்கிரதையாக ஓட்டிக்கொண்டு அண்ணா ஸ்டேடியத்தை அடைந்தேன். அன்று என்னவோ என்னால் சரியாக விளையாட முடியவில்லை. அவள் நினைவிலே பந்துகளை எதிர்கொண்டேன். எப்படியோ அந்த மேட்சில் ஜெயித்துவிட்டோம். இருந்தாலும் எனக்கு திருப்தி இல்லை.

ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்கள் அனைவரும் சினிமா செல்வோம். சினிமா முடிந்து பீர் அடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு இரவு 11 மணிக்கு வருவோம். அந்த ஞாயிறு சூப்பர் ஸ்டார் ரஜினி படம் போகலாம் என்று கலையரங்கம் தியேட்டருக்குச் சென்றோம். நிறைய கும்பல், தியேட்டர் மேனேஜர் தெரிந்தவராக இருந்ததால் மிகவும் ஈசியாக டிக்கெட் வாங்கிவிட்டோம்.

உள்ளே செல்லலாம் என நினைக்கையில், "ஹாய் ராஜ்" என்று ஒரு குரல். திரும்பி பார்த்தால் அஞ்சனா அவளின் தோழிகளுடன்.

"ராஜ், டிக்கெட் கிடைக்கல. கொஞ்சம் வாங்கித் தரமுடியுமா?"

அதைவிட வேறு என்ன வேலை? நண்பர்கள் எப்படியோ மேனேஜரிடம் சொல்லி அவர்களுக்கும் டிக்கெட் வாங்கிவிட்டார்கள். உள்ளே சென்று அமர்ந்தோம். ஆச்சர்யமாக அஞ்சனா என் அருகில் வந்து அமர்ந்தாள். எனக்கு படபடப்பானது. படம் ஆரம்பித்த ஒரு பத்து நிமிடங்கள் கழித்து என் வலது கையில் அவள் கையை வைத்து இருக்கிப் பிடித்துக்கொண்டாள். எனக்கு அவள் கைகளை விலக்க வேண்டும் என்று தோன்றவில்லை. 

மெல்ல என் காதருகில் வந்து, "ஐ லவ் யூ ராஜ்" என்றாள். என் காதலை அவளுக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. மெல்ல அவள் கன்னத்தை என் பக்கம் திருப்பி ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் கண்கள் கிறங்கிய நிலையில் என்னைப் பார்த்தாள்.

அதன் பிறகு தினமும் சந்தித்தோம். நிறைய பேசினோம். நிறைய படங்கள் பார்த்தோம். நிறைய முத்தங்கள் கொடுத்துக்கொண்டோம். ஒரு முறை திருச்சி மலைக் கோட்டையில் மேலே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று, "என்னை எப்போ கல்யாணம் பண்ணிப்ப ராஜ்?" என்றாள்.

"அஞ்சனா, என்னோட ஒரே குறிக்கோள் குறைந்த பட்சம் ரஞ்சிலயாவது ஆடணும். அடுத்த மாதம் நடக்கும் லீக்ல நான் நல்லா விளையாண்டா, எங்கள் டீம் ஜெயித்தால் நிச்சயம் எனக்கு சென்னை டீம்ல இடம் கிடைச்சுடும். பின் நம் கல்யாணம்தான்" என்றேன்.

சிரித்தாளே ஒழிய ஒரு பதிலும் சொல்லவில்லை.

அஞ்சனா மிகப் பெரிய தொழிலதிபரின் மகள். அவளுக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி. அவள் அப்பா, அம்மா, தம்பி பெங்களுரில் இருக்கிறார்கள். இவளும் அண்ணனும் திருச்சியில் அத்தை வீட்டில் தங்கிப் படிக்கிறார்கள். ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட செல்லம். ஆனால் அவள் அண்ணன் சொல்வதைத்தான் அவர் அப்பா கேட்பதாக அடிக்கடி கூறுவாள். எனக்கும் அவள் அண்ணனை சந்திக்க ஆசை. ஆனால் யார் என்று கூற மறுத்துவிட்டாள். 'சமயம் கிடைக்கும் போது சொல்கிறேன்' என்றாள்.

நானும் அந்த விசயத்தை அத்தோடு விட்டுவிட்டேன். கடுமையான வலைப் பயிற்சினை மேற்கொண்டேன். நல்ல பார்மில் நான். இதோ நாளை காலை பைனல் மேட்ச். என் தலை எழுத்தை மாற்றியமைக்கப் போகும் மேட்ச்.

மாலை அஞ்சனா போன் செய்தாள். உடனே வீட்டிற்கு வரச்சொன்னாள். சென்றேன்.

******************************

இதோ மேட்ச் முடியும் தருவாயில் இருக்கிறது. எதிர் டீம் 175 ஆல் அவுட். எங்கள் டீம் மிக நன்றாக ஆடிக்கொண்டிருந்தார்கள். 150 ரன்னுக்கு 3 விக்கெட். அப்போதுதான் நான் இறங்கினேன். என்ன நடந்தது என் டீமிற்கு என்றுத் தெரியவில்லை. ஒரு பக்கம் நான் அடித்துக்கொண்டிருக்கிறேன். மறுபக்கம் மள மளவென விக்கெட் விழுகிறது. 169 ரன்னுக்குள் 8 விக்கெட் விழுந்துவிட்டது. ஜெயித்துவிடலாம் என்று நினைக்கையில் 170 ரன் எடுக்கும் போது ரன் அவுட்டில் இன்னொரு விக்கெட் காலி.

இருப்பது ஒரு ஓவர். எடுக்க வேண்டியது 6 ரன். நல்ல வேளை நான் பேட் செய்ய ஓடி வந்துவிட்டேன். இத்தனை விக்கெட்டுகளும் எடுத்தது ஆனந்த். எதிர் அணி கேப்டன். நான் எதிர்பார்த்தது போலவே கடைசி ஓவர் அவன் தான் போட வருகிறான்.

முதல் பாலில் மிடானில் ஒரு ஷாட் அடித்தேன். 2 ரன்கள். எதிரில் இருப்பவனிடம் சிங்கிள்ஸ் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.  2வது மற்றும் மூன்றாவது பால்களில் ரன்கள் ஏதும் எடுக்க முடியவில்லை. நாலாவது பாலில் ஸ்கெயர்கட்டில் இரண்டு ரன்கள். 174க்கு 9 விக்கெட். இருப்பது இரண்டு பால்கள். 5 வது பால். ரன் எடுக்க முடியவில்லை. ஒரு பால் எடுக்க வேண்டிய ரன் 2.

**********************************

அஞ்சனா போன் செய்தவுடன் அவளைச் சந்திக்க சென்றேன். ஒரே டென்ஷனாய் இருந்தாள்.

"என்ன? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?"

"ராஜ், அப்பாட்ட பேசினேன். அவர் நம்ம காதலை ஒத்துக்கலை. அடம் பிடிக்கிறார். பெரிய தொழிலதிபர் மகன் ஒருத்தனை சொல்லி, அவனை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றார்"

"நீ என்ன சொன்ன?"

"முடியாதுனுட்டேன். இருந்தாலும் அவர் பிடிவாதமா இருக்கார். ஒரே ஒரு வழிதான் இருக்கு"

"என்ன அது?"

"எங்க அண்ணா சொன்னா அப்பா கேப்பார்"

"அப்போ பேசிப் பார்க்க வேண்டியதுதானே"

"அவன் ஒரு கண்டிஷன் போடறான்"

"என்ன கண்டிஷன்?"

"உனக்கு ஆனந்த் தெரியுமில்லை"

"தெரியுமே! நாளைக்கு அவன் டீம் கூடத்தானே பைனல் விளையாடப்போறோம்"

"ஆனந்த் தான் என் அண்ணன். அவனும் உன்னை மாதிரியே கிரிக்கெட் வெறியன். நம்ம காதலை அப்பாட்ட சொல்லி சம்மதம் வாங்கணும்னா நாளைக்கு நடக்கபோற மேட்ச்ல உங்க டீம் தோக்கணும்னு சொல்றான். அதனால.........................."

விறுவிறுவென்று வீட்டிற்கு வந்துவிட்டேன்.

**********************************

இன்னும் ஒரு பால்தான் இருக்கிறது. எடுக்க வேண்டிய ரன்கள் 2. ஜெயித்தால் நிச்சயம் ரஞ்சி ஆடலாம். தோற்றால் இடம் கிடைப்பது கஷ்டம். இதோ ஆனந்த் ஓடி வருகிறான்.

இப்போ நான் என்ன செய்வது? கல்யாணமா அல்லது லட்சியமா?

அந்த பாலை அடிப்பதா? வேண்டாமா?


Dec 9, 2011

விரைவில்....


Dec 5, 2011

ஹலோ...


"ஹலோ"

"ம் சொல்லுடா"

"டேய் இந்த வார கல்கி வந்துடுச்சா?"

"ம்ம் அதான் பார்த்துட்டு இருக்கேன்"

"என்னோட கதை ஒண்ணு வந்துருக்கா பாரு?"

"இரு பாக்குறேன்"

சில நிமிட நிசப்தம்.

"ஆமா வந்துருக்கு"

"படிச்சிட்டு சொல்றியா?"

"இப்போ வேலையா இருக்கேன். அப்புறம் பேசறேன்"

டக்.

************************************************

"உலக்ஸ் பேசறேன். இந்த வாரம் கல்கி படிச்சியா?"

"ம்ம் படிச்சேன்"

"அதுல என் கதை ஒண்ணு"

"ம் படிச்சேனே"

சில நிமிடங்கள் காத்திருந்தேன். ஏதாவது பேசுவான் என்று.

பதில் கடைசி வரை வரவே இல்லை.

************************************************

இன்னொருவர் நெருங்கிய உறவினர். 

நண்பர்களுக்கு மெயிலின் மூலம் சந்தோசத்தைப் பகிர்கையில் அவருக்கும் அனுப்பிவிட்டேன் போல. அவரின் பதில் இதோ.....

"Don't send me any more mails. I don't read your blog or your stories"

************************************************

"நண்பா, கல்கில..."

"இங்க கல்கி கிடைக்கறதே கஷ்டம். தேடிப் பார்க்கணும். முடிஞ்சா வாங்கி படிச்சிட்டு சொல்றேன்"

"நான் வேணும்னா கதையின் லிங்க் அனுப்பவா?"

"இல்லை. நான் வாங்கி படிச்சிட்டு உனக்கு சொல்றேன்"

அவர் இன்னும் எனக்கு போன் செய்து சொல்கிறார்.

******************************************************

இது போல பல உதாரணங்களை சொல்லலாம். 


என்னைப் பொருத்தவரை எழுதுவதிலேயே மிகவும் சிரமமான காரியம் சிறுகதை எழுதுவதுதான். சிறுகதைக்கான கரு எப்போது தோன்றும்? எப்படித் தோன்றும் என்று சொல்ல முடியாது. எந்த நேரத்திலும் சடாரென ஒர் மின்னல் போல் வந்து போகும். அந்தக் கருவை உள்வாங்கி ஒரு சிறுகதையாக எழுதி முடிப்பதற்குள் மனம் ஒரு நிம்மதி இல்லாமல்  தவித்துக்கொண்டிருக்கும். அந்த அனுபவமே ஒரு பிரசவ வேதனைதான். 


சில கதைகள் கரு தோன்றிய சில மணி நேரங்களில் கதையாக உருமாறிவிடும். சில கருக்கள் கதைகளாக மாற பல நாட்கள் ஆகும். அதுவரை மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு, கதையாக மாறும் வரை ஒரு மாதிரி இம்சித்துக்கொண்டே இருக்கும்.

அப்படி கஷ்டப்பட்டு நாம் எழுதும் ஒரு சிறுகதை ஏதேனும் ஒரு பத்திரிகையில் வெளியாகும் போது இருக்கும் சந்தோசம் அலாதியானது. அப்போது நம் கதையை யாராவது படித்து பாராட்ட மாட்டார்களா? என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். இது தவிர்க்க முடியாதது.

நான் எழுத வந்தவுடன் என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது என்னவென்றால், 'நம் கூட இருக்கும் நண்பர்களோ அல்லது உறவினர்களோ அல்லது உடன்பிறந்தவர்களோ நம்மைப் பாராட்டுவது என்பது மிகவும் அரிதான விசயம்'. என்பதுதான். ஏன் அவர்களால் தம் கூட இருக்கும் ஒரு நண்பனையோ அல்லது உறவினரையோ அவர்களின் திறமையான ஒரு செயலுக்கு பாராட்ட வேண்டும் என்று தோன்ற மாட்டேன் என்கிறது என்று தெரியவில்லை? எது அவர்களைத் தடுக்கிறது?

ஆனால் இதையெல்லாம் மீறி நிறைய முகம் தெரியாத நண்பர்கள் மெயிலின் மூலமும் தொலைப் பேசியின் மூலமும் கதையைப் பற்றி பேசி அவர்களின் பாராட்டைத் தெரிவிக்கும் போது மற்றவர்கள் மேல் இருக்கும் வெறுப்பு தானாக மறைந்து போய்விடுகிறது.

நான் எழுதிய அந்தக் கதையை இந்த தளத்தில் விவாதித்திருக்கிறார்கள் பாருங்கள்:

அமுதாDec 1, 2011

கோமதி


வர வர என்னுடைய மனதில் அடிக்கடி எதிர்மறையான எண்ணங்களும், சில சமயம் வக்ர எண்ணங்களும் தோன்றுகிறன. அதை எல்லாம் என்னால் வெளியே சொல்ல முடியாது. யாருக்காவது தெரிந்தால் என்னை மிகவும் கேவலமாகப் பார்ப்பார்கள். ஏன் எனக்கே கேவலமாகத்தான் தெரிகிறது. எனக்கு அவ்வாறு எண்ணங்கள் தோன்றுவது தவறு என்று தெரிந்தாலும், அப்படித் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. ஏனென்றால் என்னை மீறி அந்த செயல் நடக்கிறது.

கோமதியை நான் மணம் முடிக்கும் போதே அவளுக்கு வயது 28. மிகவும் ஏழ்மையான குடும்பம். கையில் ஒரு பைசா வாங்காமல் திருமணம் செய்து கொண்டேன். மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழல். இருந்தும் சந்தோசமாகத்தான் இருக்கிறோம். சந்தோசத்திற்கான சாட்சியாக மூன்று பெண் குழந்தைகள்.

கஷ்டப்பட்டு ஓரளவுக்கு அவர்களைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். என் இப்போதைய கவலை எல்லாம் "நான் எப்படி இவர்களை கரை சேர்க்கப் போகிறேன்" என்பதுதான். அவர்கள் திருமணத்திற்கு வேறு பணம் சேர்க்க வேண்டும். வரும் வருமானம் வாயிக்கும் வயிற்றுக்குமே போய்விடுகிறது. இந்த நிலையில் எங்கிருந்து நான் பணம் சேமிக்க? எனக்கும் இன்னும் ஆறு வரும் சர்வீஸ்தான் இருக்கிறது. அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான், என் நண்பன் சேகர் அந்த யோசனையைச் சொன்னான்.

LICயில் ஏதோ புதிதாக ஒரு ஸ்கீம் வந்திருப்பதாகவும், அதில் சேர்ந்தால். பாலிஸிக்கு பாலிஸியும் ஆச்சு, பெண்கள் கல்யாணத்துக்கு சேமித்தார் போலும் ஆகிவிட்டது என்று கூறினான். எனக்கு ஆரம்பத்திலிருந்து LIC என்றாலே ஒரு பயம் உண்டு. யாராவது அதைப் பற்றி பேசினால் காத தூரம் ஓடுவேன். LIC என்றாலே எனக்கு சாவுதான் நினைவுக்கு வரும். அலுவலகத்தில் எல்லோரும் இன்கம்டாக்ஸை குறைப்பதற்காக பாலிஸி எடுத்திருக்கிறார்கள்.

எவ்வளவோ நண்பர்கள் வற்புறுத்தியும் நான் எந்த பாலிஸியும் எடுக்கவில்லை. சாவு பயம் மட்டும் காரணமில்லை. இன்கம்டேக்ஸ் கட்டும் அளவிற்கு என் சம்பளம் இல்லை என்பதும் ஒரு காரணம். ஆனால், நண்பர்களோ "இன்கம் டேக்ஸுக்காக என்று ஏன் நினைக்கிறாய்? ஒரு சேமிப்பாக கூட பாலிஸி எடுக்கலாம் இல்லையா?" என்று எவ்வளவோ கேட்டும் மறுத்து விட்டேன்.

ஆனால் சமீபகாலமாக ஒருவித பயம் என்னை ஆட்கொண்டு என்னை நிம்மதி இல்லாமல் செய்கிறது. வேறு ஒன்றும் இல்லை? "எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ?" என்று அதிகம் பயப்படுகிறேன். அப்படி ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், மூன்றுப் பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு கோமதி கஷ்டப்படுவாளே? என்று கவலையாக இருக்கிறது.

இரவில் படுக்கும் போது கடவுளிடம் "நான் காலையில் எழுந்துவிட வேண்டும்" என்று வேண்டிக்கொண்டே படுக்கச் செல்கிறேன். இதனால் அடிக்கடி முழிப்பு வந்து என்னைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். உயிரோடிருப்பதை உறுதி செய்துக் கொள்கிறேன். தினமும் இப்படித்தான் நடக்கிறது.

சமீபகாலமாக இந்த பயம் மிகவும் அதிகரித்துவிட்டது. காரணம் என் சம வயதைக் கொண்ட இரு நண்பர்களின் மரணம். அவர்களைப் போல் எனக்கும் ஏதேனும் ஆகிவிட்டால்? இதில் என்னக் கொடுமை என்றால் அனைத்தையும் என்னால் என் மனைவியிடம் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. நான் என் கவலைகளைச் சொல்லி அவளை பயமுறுத்த விரும்புவதில்லை. இருக்கும் கஷ்டங்களில் இந்தக் கஷ்டத்தை வேறு அவளுக்கு கொடுக்க விரும்பவில்லை.

அதனால் சேகர் சொன்ன யோசனையின்படி பாலிஸி எடுக்க முடிவு செய்து அவனிடம் சொன்னேன். அன்று மாலையே சேகர் ஒரு LIC ஏஜெண்டை வீட்டிற்கு கூட்டி வந்தான். ஏகப்பட்ட ஸ்கீமை என்னிடம் விவரித்தார் அந்த ஏஜெண்ட்.

முடிவில் நான்,

 "சார், அநாவசியமா எதுக்கு எல்லாத்தையும் என்னிடம் விளக்குறீங்க. என்னோட பட்ஜெட்டுக்கு ஏத்த பாலிஸிய சொல்லுங்கன்னு" ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்னேன்.

முடிவில ஒரு 1,50,000 ரூபாய்க்கு ஒரு பாலிஸியை ஒப்புக்கொண்டேன்.

"'என்னால் மாதா மாதம் பிரிமியம் கட்ட முடியாது. வருடத்திற்கு ஒரு முறைதான் கட்ட முடியும்" என்றேன்.

ஒரு வழியாக ஒப்புக்கொண்டு "வருடத்திற்கு ரூபாய் 15,000 பிரிமியம் கட்ட வேண்டும்" என்றார்.

"சரி" என்று சொல்லி கையெழுத்து போடப் போகும் போது, என்னைப் பார்த்து அவர்,

"சார், அப்படியே உங்க மனைவி பேர்லயும் ஒரு பாலிஸி போடுங்க" என்றார்.

எனக்கு கோபம் வந்து, "அதெல்லாம் வேணாம்" என்றேன்.

அவர் என்னை விடவில்லை. தொடர்ந்து வற்புறுத்தினார். அதனால் ஏற்படும் நன்மைகளை விளக்கிச் சொன்னார். நான் கேட்பதாக இல்லை. 

மீண்டும் அவர், "வேண்டுமானால், உங்கள் பாலிஸி தொகையை குறைத்துக்கொண்டு, உங்கள் பெயரில் ஒரு லட்சத்திற்கும், உங்கள் மனைவி பெயரில் ஒரு லட்சத்திற்கும் பாலிஸி எடுங்களேன். பிரிமியம் ஆளுக்கு 10,000 ரூபாய்தான் வரும். கூட ஒரு 5,000 ரூபாய்தான் நீங்கள் கட்ட வேண்டி இருக்கும்" என்று எடுத்துக் கூறினார்.

சேகரும், "ஆமாம் சார், அவர் சொல்வது சரிதான். அப்படியே செய்யலாமே" என்றார். எனக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. கடுப்பில்,

"அப்படி என்றால் நான் எந்த பாலிஸியும் போட விரும்பவில்லை" என எழுந்தேன்.

"கோபித்துக்கொள்ளாதீர்கள் சார். உங்கள் நல்லதுக்குச் சொன்னேன். பிடிக்கவில்லை என்றால் வேண்டாம். உங்களுக்கு மட்டும் போடுங்கள்"

பின் சமாதானமாகி பாலிஸியில் கையெழுத்திட்டேன். சேகர்தான் என்னை மிகவும் கடிந்து கொண்டான்,

 "கோமதி பெயரிலும் பாலிஸி எடுத்திருக்க வேண்டும். ஏன் இப்படி இருக்கின்றீர்கள்?. என்னால் உன்னை புரிந்து கொள்ளவே முடியவில்லை" என்றான்.

"அதுக்கு இல்லை சேகர். ஏனோ என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பிடிக்கவில்லை"

"என்னக்காரணம்?"

"காரணம் என்னவென்று என்னால் சொல்ல முடியவில்லை"

"ஓரளவுக்கு என்னால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் அதிகம் பயப்படுகிறீர்கள், நெருப்பு என்று சொன்னால் சுடாது சார்"

"இருந்தாலும் வேண்டாம் சேகர்"

அதன் பிறகு சேகர் என்னைத் தொந்தரவு செய்வதே இல்லை.

இருந்தாலும் அவ்வப்போது மரண பயம் வந்து போய்க்கொண்டுதான் இருந்தது. பாலிஸி எடுத்ததால் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

இது நடந்து ஒரு ஆறு மாதம் ஆகி இருக்கும். அதிகாலை 4 மணி. கோமதி என்னை எழுப்பினாள்,

"என்னம்மா இப்ப?" தூக்கக் கலக்கத்தில் நான்.

"கொஞ்சம் எழுந்துருங்களேன்"

"ஏன், என்ன? ஆறு மணி ஆயிடுச்சா என்ன?"

"இல்லை நெஞ்செல்லாம் ஏதோ பிசையறா மாதிரி இருக்கு. இடது தோள் பட்டைல வலிக்கிறா மாதிரி இருக்கு"

பதறி அடித்து எழுந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அதிகாலை என்ன செய்வது? ஏதாவது முதலுதவி செய்ய வேண்டுமா? என்று கூட யோசிக்கவில்லை. உடனே அவளைப் அப்படியே படுக்க வைத்துவிட்டு பெரிய பெண்ணை எழுப்பி பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஆட்டோ பிடிக்க ஓடினேன். எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போய்விடலாம். ஒன்றும் ஆகாது. மனதை திடப்படுத்திக்கொண்டு ஓடினேன்.

ஆட்டோ கிடைக்க இருபது நிமிடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஒரு வழியாக ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வருவதற்குள், என் ஆசை மனைவியின் உயிர் என்னை விட்டு பிரிந்து போய்விட்டிருந்தது.

பிள்ளைகள் ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள். என் கண்களில் தாரத்தாரையாக கண்ணிர்.

அப்போதுதான் அந்த எண்ணம் மனதில் தொன்றியது:

"கோமதிக்கும் பாலிஸி எடுத்துருக்க வேண்டுமோ"


Nov 25, 2011

சரத்பவார் - அன்னா ஹசாரே!


கடும் விலைவாசி. ஷேர் மார்க்கெட் சரிவு. பணவீக்கம். என்றும் இல்லாத அளவிற்கு ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ஏறக்குறைய 53 ரூபாய் ஆகிவிட்டது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது. ரிசர்வ் பேங்க் உடனடியாக தலையிட்டு அமெரிக்க டாலரை கையிலிருப்பில் இருந்து எடுத்து வெளியில் விட வேண்டும். அதனால் ஓரளவு இந்திய ரூபாயின் மதிப்பு உயரலாம். ஆனால், நிதியமைச்சர் பிராப் முகர்ஜியோ எதுவும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

இந்தியா ஒரு Self Sufficient Country. நாம் பெட்ரோல் மட்டுமே அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம். மற்ற பொருட்கள் எல்லாம் அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம். இப்படி இருக்கையில் எங்கிருந்து வந்தது இந்த பணவீக்கம்? தவறு எங்கோ பெரும் அளவில் நடந்து கொண்டிருக்கிறது. கவனிக்க வேண்டிய அரசாங்கமோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ஓரளவு பணம் உள்ளவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வார்கள். ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில்!  ஆனால் இப்போது நடப்பது என்ன? ஷேர் மார்க்கெட் பாயிண்ட் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதலுக்கே மோசம்!

விலைவாசி உயர்வை விவாதிப்பதற்கு எதிர்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தால் ஆளும் கட்சி அதை தடுக்கிறது. தினமும் விலைவாசி உயர்வால் மக்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள். என்னதான் செய்வார்கள் மக்கள்? அதான் கோபம் கொண்ட ஹர்வீந்தர்சிங் என்னும் இளைஞர் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் கூட்டாளியுமான சரத் பவாரை கன்னத்தில் அறைந்து தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் அறைந்தது சரியா இல்லையா என்று விவாதிப்பதை விட அவரின் கோபத்தில் உள்ள நியாயத்தை பாருங்கள்.

அவரால் முடிந்திருக்கிறது. பல பேரால் முடியவில்லை. அதுதான் உண்மை. மன்மோகன்சிங் தன் டெம்ளேட் அறிக்கையின் மூலம் 
"இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது" என்று கூறுகிறார். இது போல் எதற்கும் சரியான பதில் அளிக்க முடியாத பிரதமரைத்தான் நாம் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

முக்கியமான பொறுப்பில் உள்ள பிரணாப் முகர்ஜியோ, "இந்த நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?" என்று கேட்கிறார். இந்த கேள்வியை பொது மக்களாகிய நாம் அல்லவா கேட்கவேண்டும்? இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததற்கு அவர் வெட்கம் அல்லவா பட வேண்டும். எங்கே தன்னையும் இப்படி யாராவது அடித்துவிடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டதோ என்னவோ?

பார்லிமெண்டில் இருப்பவர்கள் யாரும் ஏழை இல்லை. அதனால் அவர்களுக்கு விலைவாசி உயர்வினால் ஏழைகள் படும் வேதனை அறிந்திருக்க நியாயமில்லை.

இது போல் சம்பவம் நடப்பதை நாமும் விரும்பவில்லை. அதே போல் எம்மைப் போல் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இப்படிப்பட்ட காட்சியினை பார்க்கும் போதும், அதை பார்த்து வெளிநாட்டினர் அடிக்கும் கமெண்ட்டுகளை கேட்கும் போதும் அளவுக்கு அதிகமான வேதனை அடைகிறோம்.

தொலைக்காட்சியில் அந்த காட்சியை அடிக்கடி காண்பிப்பதை உடனே நிறுத்த வேண்டும். மானம் போகிறது.

முன்பு ஒரு முறை நான் அன்னா ஹசாரேவை பற்றி எழுதியபோது என் நெருங்கிய நண்பர்கள் கூட கோபித்துக்கொண்டார்கள். ஆனால் இப்போது பாருங்கள் அவர் புத்தியை காண்பித்துவிட்டார். இவரா காந்தியவாதி? மகாத்மா காந்தி ஒரு போதும் இது போன்ற சம்பவங்களை ஆதரிக்க மாட்டார். 

ஆனால் இந்த திடீர் காந்தியவாதி கேட்கும் கேள்வியை பார்த்தீர்களா? "ஒரே ஒரு முறைதான் அறைந்தாரா?" எனக் கேட்டிருக்கிறார். எவ்வளவு நக்கல், கிண்டல் பாருங்கள்?

இன்னொரு ஹர்வீந்தர்சிங் உருவாகமல் தடுப்பது அரசாங்கத்தின் கடமை. அதற்கு என்ன செய்ய வேண்டும்? உடனடியாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசி உயர்வை ஓரளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் இரண்டாவது முறையாக அவர்களை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு அவர்கள் செய்யும் நன்றியாகவும், உதவியாகவும் இருக்கும்.


Nov 16, 2011

கல்கி!


சிறு வயதிலிருந்தே நான் மிகவும் ரசித்து படித்த புத்தகங்கள் இரண்டு. ஒன்று ஆனந்த விகடன் இன்னொன்று கல்கி. 1985லிருந்து 1990 வரை என்னுடைய பெயர் வராத பத்திரிகைகளே இல்லை எனலாம். ஆனால் நீங்கள் நினைப்பது போல கதைகளோ அல்லது கட்டுரைகளோ எழுதி வந்ததில்லை. கேள்விகள், துணுக்குகள் மற்றும் விமர்சனங்களில் என் பெயர் பெரும்பாலும் இருக்கும். 

எங்கள் ஊரில் இருந்த ஆர். சிவராஜ் அவர்கள் நிறைய பத்திரிகைகளில் எழுதுவார். இருபது வருடங்களுக்கு முன் அவர் எழுதிய ஒரு கதை கல்கியில் வெளீயானது. எங்களுக்கு எல்லாம் ஒரே சந்தோசம். ஏனென்றால் அவரின் பெயரோடு எங்கள் ஊரின் பெயரும் சேர்ந்தே வந்தது. அவரால் நானும் உந்தப்பட்டு நிறைய கதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போதே 50 கதைகள் கிட்ட எழுதியிருப்பேன். ஆனால், ஒன்று கூட வெளியாகவில்லை. பின் மேல்படிப்பினால் என் எழுத்து வாழ்க்கை அப்படியே நின்று போனது.

கல்கிக்கும் எனக்கும் ஆன தொடர்பு பற்றி ஏற்கனவே "கல்கியும், நானும் பாக்யராஜும்"  என்ற தலைப்பில் இப்படி எழுதியிருக்கிறேன்:

"ஒரு முறை கல்கியில் நான் கேட்ட ஒரு கேள்வி என் பத்திரிக்கை தொடர்பை துண்டித்துவிட்டது. நானாகத்தான் எழுதுவதை நிறுத்தினேன். அப்படி என்ன கேள்வி கேட்டேன்?

1985 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போது தமிழ்நாடு முழுவதும் ஒரே வெள்ளம். நான் கல்கியில் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தேன்:
"நாடே வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்போது, தமிழக முதல்வர் எம்.ஜி,ஆர், கே. பாக்யராஜின் "சின்னவீடு" ப்ரீவியூ பார்க்கசென்றது நியாயமா"?

நான் ஒரு தீவிர எம்ஜிஆர் வெறியன். சும்மா இப்படி ஒரு கேள்வி கேட்க போக, அந்தவார கல்கியின் கேள்வி பதில் பகுதியின் தலைப்பே என் கேள்விதான். அதுமட்டுமல்ல, எல்லா கல்கி விளம்பரத்திலும் இந்த கேள்விதான். அதற்கு ஒரு பக்கம் பதில் எழுதி பாக்யராஜையும், தலைவரையும் சாடியிருந்த்ததாக நினைவு.

அதற்கு அடுத்தவாரம் கே. பாக்யராஜிடமிருந்து மறுப்பு வந்திருந்தது. அதையும் கல்கியில் பிரசிருத்திருந்தார்கள். அவரின் மறுப்பின் கடைசியில் இப்படி எழுதியிருந்தார்:

" தலைவரின் பெயரை கெடுப்பதற்காக, நீங்களே இப்படி ஒரு கேள்வி கேட்டு, அதற்கு பதிலும் கொடுத்துருக்கின்றீகள். பெரியவங்க தப்பு செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி, சின்னவங்க தப்பு செஞ்சா செறுப்பால அடினு ஒரு பழமொழி இருக்கு. நீங்க செஞ்ச தப்ப பெரியவங்க செஞ்ச தப்பா நினைச்சு மன்னிக்கிறேன்"

அடுத்த வார கல்கியில அதற்கு திரும்பவும் பதில் எழுதியிருந்தார்கள்,

" எங்களுக்கு நாங்களே கேள்வி கேட்டு பதில் எழுதவேண்டிய அவசியமில்லை. தேவையென்றால் எங்கள் அலுவலகம் வாருங்கள், அந்த கேள்வி எழுதிய கடிதத்தையும் காண்பிக்கிறோம். நாங்களும் நீங்க செஞ்ச தப்பை பெருமாள் செஞ்சதாவே நினைச்சு மன்னிக்கிறோம்"

அதற்கு பிறகு ஏகப்பட்ட கடிதங்கள், அப்பாவிடம் ஏகப்பட்ட திட்டு. அதையெல்லாம்விட எனக்கு பிடித்த எனதருமை டைரக்டருக்கும், தலைவருக்கும் போய் மனக்கஷ்டத்தை கொடுத்துவிட்டோமே என மனம் நொந்து, வெம்பி, அழுத நாட்கள் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.

அப்பொழுது எழுத நிறுத்தியவன்தான், திரும்ப இப்போதுதான் எழுத வருகிறேன்"

பின் 2009 மார்ச்சில் வலைப்பூ ஆரம்பித்தவுடன் மீண்டும் கதைகள் எழுத ஆரம்பித்தேன். முதல் கதை ஆனந்தவிகடனில் 2009 ஜீன் மாதம் வெளியானது. மனம் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. இனி தொடர்ந்து நம் கதைகள் பத்திரிகைகளில் வரும் என எண்ணி நிறைய எழுத ஆரம்பித்தேன். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போது "ழ" பதிப்பகம் என்னை அணுகவே எழுதிய அனைத்து கதைகளையும் புத்தகமாக வெளியிட சம்மதித்தேன்.

ஆனால் பத்திரிகைகளில் என் கதைகள் வரவேண்டும் என்கிற கனவு மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அதற்காக நிறைய பார்மேட்டுகளில் கதைகளை முயற்சி செய்து பார்த்தேன். என்னுடைய தொடர் முயற்சிகள் வீணாகவில்லை.  


இதோ என்னுடைய சிறுகதைகளில் ஒன்றான "அமுதா" இந்த வார கல்கியில் வெளியாகி உள்ளது. விசயம் கேள்வி பட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் மெயில்பாக்ஸில் இருக்கும் அனைத்து நண்பர்களிடத்திலும் என் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டேன். நண்பர்கள் அனைவரும் என்னை வாழ்த்தியது என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

கல்கியை உடனே வாங்கி படிக்க ஆசை. ஆனால், நான் இருக்கும் இடத்தில் தமிழ் பத்திரிகைகள் கிடைக்காது. கோலாலம்பூரில்தான் கிடைக்கும். நல்லவேளையாக எனக்கு கோலாலம்பூரில் மீட்டிங் பிக்ஸானது. இந்தியாவில் ஞாயிறு காலையே வெளியாகும் என்பதால் இங்கும் வெளியாகும் என்று நினைத்து ஞாயிறு காலை காரில் கிளம்பி கோலாலம்பூர் சென்றேன். ஆனால் கல்கி வரவே இல்லை. அன்று மட்டும் மூன்று முறை சென்றேன். வரவில்லை. பின் திங்கள் ஒரு மூன்று முறை சென்றேன். கடைக்காரர் இரவு வரச்சொன்னார்.

டென்ஷனுடன் இரவு சென்றேன். எனக்காக எடுத்து வைத்திருந்தார். உடனே என்னைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,

"ஏன் சார் நேற்றிலிருந்து இந்த அலை அலையறீங்க? அப்படி என்ன இந்த வார கல்கியில விசேஷம்?"

"என் கதை கல்கியில வந்திருக்குங்க"

"அந்த சிறுகதை நீங்க எழுதுனதா?"

"ஆமாம்"

"ரொம்ப நல்லா இருந்துங்க. நான் ஏற்கனவே படிச்சுட்டேன். கல்கியில கதை வர அளவுக்கு வளர்ந்துட்டீங்க. வாழுத்துக்கள். நிறைய எழுதுங்க" என்றார்.

அவரிடம் நன்றி சொல்லி கிளம்ப நினைக்கையில், என்னுடன் வந்திருந்த எங்கள் கம்பனியின் சேர்மன், கடைக்காரர் என்னை வாழ்த்தியதைப் பார்த்து சந்தோசப்பட்டு அங்கு இருந்த அனைத்து கல்கி புத்தகங்களையும் வாங்கி மும்பைக்கு எடுத்து சென்றுவிட்டார். பின் கதையினை படித்து விட்டு எங்கள் சேர்மனும் பாராட்டியது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோசமாக நினைக்கிறேன்.

என் கதையை வெளியிட்ட கல்கி நிறுவனத்திற்கும், , கல்கியின் உதவி ஆசிரியர் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி நிறைய நல்ல கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன். பார்ப்போம்!

இதில் என்ன பெரிய விசயமா? இவ்வளவு சந்தோசப்பட வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம்

என்னைப் பொருத்தவரை, என் பதவியினால், என் சம்பளத்தால் கிடைக்கும் சந்தோசங்களை விட, என் கதை கல்கியில் வந்த சந்தோசமே மிகப்பெரிய சந்தோசமாக எனக்குத் தோன்றுகிறது. 


Nov 3, 2011

என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்?


சிறு வயதில் இருந்தே என்னை செம்மை படுத்தியது புத்தகங்கள்தான். படிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களை படிக்கும் போது ஏற்படும் சுகம்.... எப்படி சொல்வது? அந்த சுகத்தை சொல்லி புரிய வைக்க முடியாது. அதை அனுபவித்தால்தான் தெரியும். பள்ளி பருவத்திலிருந்தே எப்போதும் நண்பர்களுடன் நூலகத்தில்தான் அதிக நேரம் செலவு செய்திருக்கிறேன். பின்பு எங்கள் வீட்டிலும் மிகப் பெரிய நூலகம் அளவிற்கு புத்தகங்களை என் சித்தப்பா பாதுகாத்து வருகிறார்.

எங்கள் ஊர் நூலகத்தை பழைய இடத்திலிருந்து புது இடத்திற்கு மாற்றினார்கள். யாருமே எதிர்க்கவில்லை. காரணம் சாதாரண இடத்திலிருந்து மிகவும் நல்ல இடத்திற்கு மாற்றினார்கள். புதிதாக ஒரு நூலகர் வந்து சேர்ந்தார். அவர் முயற்சி எடுத்து மிகவும் அருமையாக நூலகத்தை நடத்தி வருகிறார். அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் எல்லாம் நூலகத்தை நன்றாக பராமரிப்பது என்பது இயலாத காரியம். எங்கள் ஊரில் உள்ள அனைவரும் கொடுத்த நன்கொடையால்தான் நூலகம் மிகவும் நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

இன்றும் ஊருக்கு போகும் போது எல்லாம் நூலகம் செல்லாமல் வருவதில்லை. நூலகத்தின் அருமை என் போன்ற வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்குத்தான் மிக அதிகம் தெரியும் எனலாம். ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் நிறைய புத்தகங்கள் வாங்கி நானும் இங்கே உள்ள வீட்டிலேயே ஒரு நூலகத்தை வைத்துள்ளேன். ஆனால் அனைத்தையும் படித்து முடித்தாகிவிட்டது. இனி அடுத்த முறை ஊருக்கு போகும் வரை காத்திருக்க வேண்டும். நானாவது ஆறு மாத்திற்கு ஒரு முறை இந்தியா செல்கிறேன். நிறைய நண்பர்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் செல்கிறார்கள். அவர்கள் நிலமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்!

சமீபத்தில் எங்கள் ஊரில் உள்ள ஒரு பேங்கின் மேனேஜர் பதவி உயர்வில் பரோடா சென்றார். அங்கிருந்து சென்ற வாரம் மலேசியாவில் இருக்கும் எனக்கு போன் செய்தார். "படிக்க ஒரு புத்தகம் இல்லை. உங்கள் புத்தகங்களையே பல முறை படித்து விட்டேன்"  ஏனென்றால் அங்கே இருக்கும் நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் இல்லை.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நான் சென்றதில்லை. ஆனால் கேள்விபட்டதுண்டு. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம். 180 கோடி செலவில் அனைவரும் பயன்பெறும்படி அமைக்கப்பட்டுள்ளது. 

கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அதை மாற்றுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. முதல்வர் நூலகத்தை மாற்றுவதற்காக சொல்லும் காரணமும் ஏற்புடையதாக இல்லை. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவனை அமைப்பதில் எல்லோருக்கும் சந்தோசமே. அதை ஏன் நூலகம் இருக்கும் இடத்தில் அமைக்க வேண்டும்? ஏன் சென்னையில் இடமா இல்லை? புதிதாக ஒரு இடத்தை வாங்கி அங்கே கட்ட வேண்டியதுதானே?

நல்ல ஒரு மாற்றம் வேண்டும் என்றுதானே மக்கள் ஆட்சியை மாற்றினார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், இப்படி தடாலடியான முடிவுகள் எடுப்பது சரியா? 

எங்கள் ஊர் நூலகத்தில் புரவலர் சான்றிதழ் பெற்றவன் என்ற முறையிலும், ஒரு சிறிய எழுத்தாளன் என்ற முறையிலும் மற்றும் ஒரு நல்ல வாசகன் என்ற முறையிலும் என் எதிர்ப்பையும், வருத்தத்தையும், கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.


Nov 1, 2011

கலாச்சார வேறுபாடு?


அம்மா பேசும்போது எல்லாம், " சீக்கிரம் குடும்பத்தோடு வந்து இங்கே செட்டிலாகிவிடு" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நானும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறேன்.

நான் பள்ளியில் படிக்கும் போது பல பெண்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு பெண்ணைப் பற்றி... வேண்டாம். அதை ஒரு நாவலாக எழுத எண்ணம் இருப்பதால் அதைப்பற்றி இங்கே பேச வேண்டாம். விட்டு விடுவோம், பள்ளியில் ஏற்படுவது எல்லாம் காதல் அல்ல, அது ஒரு இனக் கவர்ச்சிதான் என்று இப்போது புரிவது போல் இருக்கிறது. ஆனால், அதை காதல் என்றும் பலர் சொல்கிறார்கள். அப்போது எல்லாம் எந்த பெண்ணுடன் பேசும் போதும் ஒரு பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். யாராவது வீட்டில் போட்டுக்கொடுத்து விட்டாலோ அல்லது பேசியதை வீட்டில் உள்ளவர்கள் பார்த்துவிட்டால் என்ன ஆகும்? என்று ஒரே கவலையாக இருக்கும். உடம்பெல்லாம் நடுங்கும். பல விசயங்களை கற்பனையிலேயே நினைத்துக்கொண்டு வாழ்ந்த காலம் அது. உண்மைகள் புரிய பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

நான் மேலே ஏன் இப்படி இரண்டு பாராக்கள் எழுதினேன் என்பதற்கு நீங்கள் இந்த கட்டுரையை முழுவதும் படிப்பது அவசியமாகிறது.

சென்ற மாதத்தில் ஒரு நாள் இங்கே உள்ள நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு கண்சல்டன்ஸி ஏஜன்ஸி வைத்துள்ளார். பேச்சு மெல்ல அவர் குடும்பத்தை பற்றி நகர்ந்தது. பேச்சு வாக்கில் 'கல்லூரியில் படிக்கும் அவர் பெண் லண்டன் சென்றிருக்கிறார்' என்றார்.

நான் "எதற்கு?" என்றேன்.

"சும்மா சுற்றிப்பார்க்க" என்றார்.

நான் ஏதோ கல்லூரி சுற்றுலா போல என்று நினைத்து, "மாணவர்கள் அனைவரும் சென்றிருக்கின்றார்களா?" என்றேன்.

"இல்லை. அவர் பாய் பிரண்டுடன்" என்றார்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்னது! பாய் பிரண்டுடனா? எத்தனை நாட்கள்?" என்றேன்.

"பத்து நாட்கள்" என்றார்.

எனக்கு தலை சுற்றாத குறை. கல்யாணம் ஆகாத இளம் ஆணும் பெண்ணும் தனியாக பத்து நாட்கள், அதுவும் வேறு ஒரு நாட்டில்? 

"என்ன சார்? இது தப்பில்லையா?" என்றேன்.

"எது தப்பு?"

"கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி சுற்றுவது?"

"என்னைப் பொருத்தவரை இது தவறில்லை. எப்படி இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள். நான் அப்படியே தடுத்தாலும், அவர்கள் இங்கேயே எங்கோ ஒரு இடத்தில் தப்பு செய்ய வாய்ப்பிருக்கிறது இல்லையா?. அதற்கு பதில் நாமே அனுமதித்து விடலாமே" என்றார்.

என்னால் அவரின் கருத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. மேலும் அவரிடம் பேசியதிலிருந்து அவரும் இப்படி லவ் மேரஜ் செய்தவர்தான் என்று தெரிந்து கொண்டேன்.

இங்கே நம் நாடு போல இல்லை. 98 சதவிகிதம் காதல் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். பள்ளி படிக்கும்போதே எல்லோருக்கும் பாய் பிரண்டு, கேர்ள் பிரண்டு உண்டு. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கிறார்கள். பள்ளி படிக்கும் போதே எல்லோரும் கையில் செல் போன் வைத்திருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்து வீட்டு சின்னப் பெண் தன் பாய்பிரண்டை தைரியமாக வீட்டிற்கே அழைத்து செல்வதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அந்த பெண்ணை அவள் பாய் பிரண்டுடனும், அந்த பெண்ணின் தாயாருடனும் ஒரு பொது இடத்தில் பார்த்தேன். வியந்து போனேன். இது போல் நம் நாட்டில் நடக்குமா?

நான் இந்த கலாச்சாரத்தை குறை சொல்லவில்லை. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்கிறார்கள். ஆனால், நம் நாட்டு கலாச்சாரத்தில் நாம் ஊறி இருப்பதால் என்னால் சில விசயங்களை ஜீரணிக்க முடிவதில்லை.

எனக்கு தெரிந்த இன்னொரு நண்பரின் வீட்டு பெண் பல வருடங்கள் தன் காதலனுடன் ஒரே வீட்டில் தனியாக வாழ்ந்தாள். ஆனால் சமீபத்தில் கல்யாணம் நடந்து நன்றாக குடும்பம் நடத்துகிறார்கள். உங்களுக்கு சந்தேகம் வரலாம், ஏன் அவர்கள் முன்பே கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று? இங்கு பெண்கள் ஆண்கள் இருவருமே என்னதான் காதலித்தாலும், ஒரளவு வாழ்க்கையில் செட்டிலான உடன்தான் திருமணமே செய்து கொள்கிறார்கள். 

ஆனால் கல்யாணம் வரை அவர்கள் மற்ற விசயங்களை தள்ளிப்போடுவார்கள் என்று நினைத்தோமானால் நம்மை போல் ஏமாளி யாரும் இருக்க முடியாது.

எப்போதும் டிவியில் பாடல்கள் பார்க்கும்போது நான் என் இளமைக்காலங்களுக்கு சென்றுவிடுவேன். மனதளவில் இருபது வாலிபனாகவே உணர்வேன். பலவிதமான கற்பனைகளுடனும், கமெண்ட் அடித்துக்கொண்டும் பார்த்து ரசிப்பேன். இப்போது அப்படி முடிவதில்லை. காரணம் பிள்ளைகளும் என்னுடன் சேர்ந்து டிவி பார்க்கிறார்க்ள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பயமாக இருக்கிறது.

நேற்று என் பெண் என்னிடம் கேட்டாள், "டாடி, "காமம்''னா என்ன?" 

முதலில் அதிர்ந்தாலும், அவளுக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை மட்டும் சொல்லி புரிய வைத்தேன்.

நேற்று அம்மாவிடம் பேசிய போது சொன்னேன்,

"அம்மா, அடுத்த ஜூனில் இருந்து பிள்ளைகளை திருச்சியில் படிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்"

Oct 31, 2011

மரண தண்டனை...


குழப்பமாக விடிந்தது நீதிபதி குலசேகர பாண்டியனுக்கு. மிகுந்த பயத்துடன் எழுந்தான் சேகர். தலைவலிப்பது போல் உணர்ந்தார் குலசேகர பாண்டியன். சேகருக்கு உடல் முழுவதும் வேர்த்தது.

***********************************************

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள். 

"வேண்டாங்க, போதுங்க. குழந்தை முழிச்சிடப்போகுது"

"இன்னும் ஒரு தடவை நித்யா. ப்ளீஸ்"

"இதுக்கு மேல கேட்ககூடாது"

"சரி சரி"

"உடனே அய்யாவுக்கு கோபம் வந்துடும். இன்னும் கிட்ட வாங்க" என்ற நித்யா சேகரை நெஞ்சோடு அணைத்து அவன் கன்னத்திலும், நெத்தியிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

"போதுமா! பேசாம தூங்குங்க"

"ரொம்ப தேங்க்ஸ்டா" 

"எதுக்கு?" என்று கேட்டுக்கொண்டே நைட்டிக்கு மாற ஆரம்பித்தாள்.

"எல்லாத்துக்கும்தான்" என்றவன் அவளை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

இது தினமும் அவர்களுக்குள் நடப்பதுதான். எல்லாம் முடிந்ததும், நித்யாவின் முத்தமும் அணைப்பும் இல்லாமல் சேகரால் தூங்க முடியாது. இவன் கெஞ்சுவதும், அவள் மறுப்பதும்..... அன்றாட நிகழ்வு.

சேகர் நித்யாவை துரத்தி துரத்தி காதலித்தான். முதலில் நித்யா சேகரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கும் நடப்பதுதான். நித்யா பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள். சேகர் பரம ஏழை. எப்படியோ அவளை துரத்தி துரத்தி ஒரு வழியாக நித்யாவிற்கும் பிடிக்கும்படி செய்துவிட்டான். நித்யாவின் அப்பா அவர்கள் காதலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. முதலில் சேகரை மிரட்டிப்பார்த்தார். பின் அவனை பணத்தால் வாங்க பார்த்தார். முடியாமல் போகவே ஆளை வைத்து அடித்தும் பார்த்தார். அதுவும் முடியாமல் போகவே நித்யாவை அவசர அவசரமாக வேறு ஒரு சொந்தக்கார பையனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டார்.

சேகரால் தடுக்க முடியவில்லை. அவ்வளவுதான் என்று நினைத்திருந்த வேளையில் நித்யா வீட்டைவிட்டு ஓடி சேகர் வீட்டுக்கு வந்துவிட்டாள். இரவோடு இரவாக சேகர் பக்கத்து ஊரில் உள்ள கோயிலில் நித்யாவை திருமணம் செய்து கொண்டான்.

ஊரில் இருந்தால் பிரச்சனை என்று சென்னைக்கு ஓடி வந்துவிட்டான். ஐந்து வரும் ஓடிவிட்டது. ஒரு குழந்தையும் ஆகிவிட்டது.

***********************************************

குலசேகர பாண்டியன் பொதுவாக எதற்கும் கவலை படாதவர். மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் அப்பா ஒரு பெரிய பண்ணையார். அவர்கள் பரம்பரையிலேயே அதிகம் படித்தவர் இவர் ஒருவர்தான். அப்பாவின் எதிர்ப்புகளை மீறி சட்டம் படித்தவர். பின் படிப்படியாக முன்னேறியவர். அகில இந்தியா அளவில் நடந்த நீதிபதிகள் தேர்வில் முதல் ரேங்க் எடுத்தவர். பலவருட கடின உழைப்புக்கு பிறகு இப்போது உச்ச நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். இவரின் தீர்ப்பு எப்போதுமே சரியாக இருக்கும் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர். மிகுந்த மரியாதையுடன் அனைத்து சட்ட வல்லுனர்களும் இவரை பார்ப்பார்கள். இவரின் தீர்ப்பை பல சமயங்களில் மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவு வழக்கின் தீவிரத்தை உணர்ந்து தீர்ப்பு கொடுப்பவர்.

"என்னப்பா? தீவிர சிந்தனை. இந்தாங்க காபி" என்று காபி நீட்டிய மகள் கீர்த்தியை உற்று நோக்கினார். மனம் லேசானது. அதே சமயம் கொஞ்சம் வருத்தமும் ஏற்பட்டது. 

"ஒண்ணும் இல்லைமா"

கீர்த்தி சென்றவுடன் மீண்டும் சிந்திக்கலானார்.

***********************************************

சென்ற வருடத்தில் ஒரு நாள்.

"நித்யாஆஆஆஆஆஅ" என்ற அலறல் அந்த தெருவையே கிடுகிடுக்க வைத்தது. பக்கத்து வீட்டில் இருந்தவர் அவசர அவரமாக ஓடினார். வீட்டின் கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் நித்யா. கையில் கத்தியுடன் சேகர். ஓரத்தில் குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. 

''என்ன ஆச்சு?" அவர் கேட்க கேட்க மயங்கி விழுந்தான் சேகர். அவர்தான் போலிஸுக்கு தகவல் சொல்லி அனுப்பினார். போலிஸ் வந்து பாடியை கைப்பற்றி போஸ்மார்ட்டம் செய்து இது ஒரு கொலை என்று முடிவு செய்தது. நித்யாவின் அப்பா ஒரு படையுடன் வந்தார். போலிஸ் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே சேகரை அவரின் ஆட்கள் அடித்து உதைத்தனர். சேகர் ஒன்றுமே பேசவில்லை.

இரண்டு நாட்களுக்கு பின் சேகர் வாயை திறந்தான். போலிஸின் அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரே பதிலையே சொன்னான்.

"சார் நான் என் பொண்ணுக்கு சளி மருந்து வாங்க கடைக்கு போயிருந்தேன். நான் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது நித்யா படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இருந்தாள். அவளின் நெஞ்சில் கத்தி குத்தி இருந்தது. உயிர் லேசாக இருந்தது. அதனால் அவளை பிழைக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் கத்தியை உருவினேன். பின் சிறிது நேரத்தில் அவள் மூச்சு நின்றுவிட்டது. சத்தியமாக நான் அவளை கொலை செய்யவில்லை" என்றவன் ஓஓஓஓஒ என கதறி அழ ஆரம்பித்து விட்டான்.

***********************************************

கீர்த்திக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு குழந்தை இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. நேற்றுக்கூட ஒரு டாக்டரிடம் கூட்டிச் சென்றிருந்தார். அவர் சொன்னது............ சிந்தனையில் இருந்து விடுபட்டவர்,

"கமலா" என்று மனைவியை அழைத்தார். 

''என்னங்க?"

"சாயந்திரம் ரெடியா இருங்க. கோவிலுக்கு போயிட்டு வரலாம்"

என்றவர் குளிப்பதற்காக பாத்ரூமை நோக்கி சென்றார்.

***********************************************

சாட்சியங்கள், சூழ்நிலைகள் எல்லாம் சேகருக்கு எதிராகவே அமைந்தன. அதோடு நித்யாவின் அப்பாவின் பணம் வேறு விளையாடியது. அதனால் சேகருக்கு கோர்ட்டில் சேகர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதித்தார்கள். அவனின் நண்பர்கள் தயவால் கேஸ் ஹை கோர்ட்டுக்கு போனது. நித்யாவின் அப்பா பணத்தை தண்ணீராக செலவழித்தார். அங்கும் சேகருக்கு மரண தண்டனை உறுதி செய்யப் பட்டது.

இதோ இன்று சேகருக்கு உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பு.

***********************************************

கோர்ட் ஆரம்பித்தது. நீதிபதி குல சேகரப பாண்டியன் கோர்ட்டில் நுழைய ஆரம்பித்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். சேகர் அழைத்து வரப்பட்டு கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டான். சேகர் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டான். எதிரே நித்யாவின் அப்பா அவரின் ஆட்களுடன் ஒரு விதமான கோபத்துடன் உட்கார்ந்து இருந்தார்.

வக்கில்கள் எல்லோரும் சேகருக்கு தூக்குத்தண்டனை உறுதி என்று பேசிக்கொண்டார்கள். இறுதிக்கட்ட விசாரணை முடிந்ததால், அரசு தரப்பு வக்கில் அவர் தரப்பு வாதத்தை முடித்துக்கொண்டு சேகருக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்ய சொல்லி நீதிபதியிடம் சொல்லிவிட்டு அமர்ந்தார்.

கோர்ட் ஒரு முப்பது நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. 

மீண்டும் கோர்ட் ஆரம்பித்தவுடன், நீதிபதி குலசேகர பாண்டியன் தன் தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார்,

"சாட்சியங்களும், விவாதங்களையும் வைத்து பார்க்கையில் சேகர்தான் அவர் மனைவி நித்யாவை கொலை செய்தார் என்று தோன்றினாலும், போலிஸ் பல விசயங்களில் அதை நிரூபிக்க தவறி விட்டது. எடுத்துக்காட்டாக..............

அதனால் Benefit of Dubtஐ சேகருக்கு அளித்து, அவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கிறேன்"

தீர்ப்பைக் கேட்ட கோர்ட் சலசத்தது. அனைத்து கோர்ட்டுகளிலும் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு அப்படியே மாற்றாக இந்த தீர்ப்பு அமைந்தது விவாத்துக்குள்ளானது. ஆனாலும் அந்த தீர்ப்பு நீதிபதி குலசேகர பாண்டியனால் கொடுக்கப்பட்டதால், அதில் நியாயம் இருக்கலாம் என்று அனைவருக்கும் தோன்றியது.

***********************************************

நேற்று மாலை. கீர்த்தியை ஸ்பலிஸ்டிடம் கூட்டிச்சென்றார் நீதிபதி குலசேகர பாண்டியன். பல பரிசோதனைக்கு பிறகு, "இன்னும் ஒரே ஒரு டிரீட்மெண்ட் தான் பாக்கி அதையும் செய்துவிடலாமா?"

"என்ன டாக்டர் இது? இன்னும் எத்தனை ஊசிகள், மாத்திரைகள்? எப்படி என் பெண் தாங்குவாள்?"

"என்ன பண்றது சார். இது எல்லாம் நம் கையிலா இருக்கு. ஒரு உயிர் உண்டாவது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை சார். அதுவும் இல்லாம ஒரு உயிரின் மதிப்பு என்ன என்பது இந்த மாதிரி சமயங்களில்தான் நம்மலால உணர முடியுது இல்லை சார்"

***********************************************

Oct 30, 2011

பாக்யராஜ், ரதி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி


எனக்கு பாக்யராஜ் என்றால் அவ்வளவு பிரியம். சிறு வயதில் அவருடைய அனைத்து படங்களையும் பல முறை பார்த்து ரசித்திருக்கின்றேன். இந்தியாவிலேயே அவர் அளவு ஸ்கிரின் ப்ளேயில் கொடிக்கட்டி பறந்தவர் யாரும் இல்லை எனலாம். அவருடைய படங்களின் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பாரதிராஜாவுடன் இருந்த சமயங்களில் வந்த படங்கள் அற்புதமானவை எனலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது நம்மை புதுப்பாடல்கள் ஆக்கிரமித்து விட்டன. என்னதான் A R ரகுமான் ஆஸ்கார் அவார்ட் வாங்கி இந்தியாவை பெருமை படுத்தி இருந்தாலும், என்னால் இன்னமும் இளையராஜாவை விட்டு வெளியே வர முடியவில்லை.

இன்னமும் என் வீட்டில், காரில் என் செவிகளை இனிமையாக்குவது இளையராஜாவின் பாடல்கள்தான். ஏறக்குறைய அனைத்து பாடல்களும் என் வசம் இருந்தாலும், இல்லாத சில பாடல்களும் அவ்வவ்ப்போது நினைவுக்கு வருகின்றன. அவைகளை தேடித்தேடி டவுண்ட்லோட் செய்கிறேன்.

ஆகஸ்டில் இந்தியா சென்ற போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது. அதிகாலை விமானம் என்பதால் வீட்டிலிருந்து இரவே கிளம்ப வேண்டி இருந்தது. அதனால் இரவில் ஒரு டாக்ஸியில் சென்றோம். நான்கு மணி நேர பயணம். டாக்ஸி ஓட்டியவர் ஒரு மலேசியர். பெயர் யாசின். கார் வீட்டை விட்டு கிளம்பியதுமே என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துவிட்டார்.  இளையராஜாவின் அற்புதமான பழைய பாடல்கள் அடங்கிய ஆடியோ சிடியை ஆன் செய்தார். சந்தோசத்துடனும், கொஞ்சம் அதிர்ச்சியுடனும் அவரைப் பார்த்து கேட்டேன், 

"நீங்கள் எப்படி இந்த பாடல்களை எல்லாம்?"

"ஏன் கேட்கக்கூடாதா? அற்புதமான இசை அமைப்பாளர் உங்கள் இளைய ராஜா" என்றவர் சில பாடல்களை தமிழில் பாடி ஆச்சர்யப்படுத்தினார். அதுதான் இளையராஜா. ஒரு மலாய் பேசும் நபரையும் தன் இசையால் கட்டிப் போட முடியும் என்று நிரூபித்து விட்டார்.  அன்றுதான் மறந்து போன பல இளையராஜா பாடல்களை மீண்டும் கேட்டேன். அன்றைய இரவை ஒரு அற்புதமான இரவாக மாற்றி எங்களை சந்தோசத்தினால் ஆழ்த்தினார் அந்த டாக்ஸி டிரைவர்.

மலேசியாவுக்கு திரும்பி வந்தபோதும் அவரையே ஏற்போட்டுக்கு வரச்சொல்லி இருந்தேன். இந்த முறை வேன் எடுத்து வந்திருந்தார். ஆச்சர்யம் என்னவென்றால், வேனில் ஒரு டிவியும் DVD ப்ளேயரையும் எங்களுக்காக ஏற்பாடு செய்து இளையராஜா பாடல்களை எல்லாம் எங்களுக்காக பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த சமயத்தில் பார்த்த பாடல் இந்த பாடல். அதன் பிறகு தினமும் குறைந்தது ஐந்து முறையாவது பார்க்கிறேன், கேட்கிறேன்.

ஆடியோ மட்டும் கேட்டால், ஜானகியின் அற்புதமான தேன் கலந்த குரலையும், மலேசியா வாசுதேவனின் மயக்க வைக்கும் குரலையும், இளையராஜாவின் தேனிசையையும் கேட்டு மகிழலாம்.

வீடியோவில் பார்த்தால் என் அன்புக்குறிய பாக்யராஜின் நடையையும், ரத்தி அக்னிஹோத்திரியின் மழலையான வாயசைப்பையும் காணலாம். இதோ உங்களுக்காக அந்த பாடல்:


Oct 29, 2011

சேமிப்பு முக்கியமா? அல்லது இன்றைய சந்தோசம் முக்கியமா?


சமீபத்தில் பல யோசனைகளுக்கு பிறகு I Pad 2 வாங்கலாம் என்று கோலாலம்பூரில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் சென்றிருந்தேன். என்னுடன் ஒரு இந்திய நண்பரும் வந்திருந்தார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அங்கு இருந்த சேல்ஸ் மேனிடம் பலவித சந்தேகங்களைக் கேட்டு, தெளிவடைந்த பிறகு வாங்கலாம் என்று முடிவெடுத்து என்ன கலர் என்று யோசித்துக்கொண்டிருந்த போது நண்பர் என்னைத் தனியே கூப்பிட்டார்.

"உலக்ஸ், I Pad 2 வாங்கித்தான் ஆக வேண்டுமா?"

"ஆம்"

"ஏன்? அதனால் என்ன பயன்?"

"சின்னதாக அடக்கமாக உள்ளது. டச் ஸ்கீரின், WIFI, 3G உள்ளது. பார்க்க அழகாக உள்ளது. நிறைய புத்தகங்கள் படிக்கலாம்"

"ஏன் இது எல்லாம் உங்கள் லேப் டாப்பில் இல்லையா?"

"இருக்கிறது. இருந்தாலும் இது தனி"

"கையில் ப்ளாக்பெரி வைத்துள்ளீர்கள். அலுவலகத்தில் டெஸ்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. லேப் டாப் உள்ளது. வீட்டிலும் கம்ப்யூட்டர் வைத்துள்ளீர்கள்"

"ஆமாம்"

"அப்படி என்றால் I Pad 2 எதற்கு?"

யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது மணி இரவு 9.30 மணி ஆகிவிட்டது. நான் வாங்கப்போவது இல்லை என்று தெரிந்தவுடன், "போடா, சாவு கிராக்கி" என்பது போல் என்னைப் பார்த்த சேல்ஸ்மேன் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார். மொத்தத்தில் என்னை வாங்கவிடாமல் யோசிக்க வைத்துவிட்டார். இதே போல் தான் என் I Phone 4 கனவு இன்னொரு நண்பரால் நிராசையாகிப்போனது. அன்று இரவு முழுவதும் என் கனவில்  I Pad 2 வே வந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் நான் சென்ற அனைத்து மீட்டிங்களிலும் எல்லோருமே  I Pad 2 வைத்திருப்பதை நான் பார்த்தேன். அவரும் பார்த்தார். அடுத்த நாள் அலுவலகம் வந்தோம். எங்கள் அலுவலக கடை நிலை ஊழியர் முதற்கொண்டு ஏறக்குறைய அனைவரும்  I Phone 4 அல்லது உயர் ரக போன் வைத்திருக்கின்றார்கள்.

அன்று மதியம் மீண்டும் அந்த பேச்சு வந்தது. அவர் என்னிடம் மீண்டும் கேட்டார், "என்ன இது இங்கு எல்லோரும் இவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறார்கள்"

"ஆமாம், மலேசியாவில் அப்படித்தான்" என்றேன்.

இங்கு அனைவர் வீட்டிலும் குறைந்தது இரண்டு கார்கள் இருக்கும். பிள்ளைகள் நிறைய இருக்கும் வீட்டில் நான்கு கார்கள் இருக்கும். சொந்த வீட்டில் இருப்பார்கள். அனைத்து வசதிகளும் இருக்கும். மிகப்பெரிய எல் இ டி தொலைக்காட்சி இருக்கும்.  எல்லாமே இருக்கும்.  என் வீட்டிற்கு இரு புறம் உள்ள வீட்டிலும் நான்கு கார்கள் உள்ளது. அதில் ஒரு கார் நிச்சயம் வெளிநாட்டு காராக இருக்கும். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்த்தீர்களானால் மிக சாதாரண வேலையில் இருப்பார்கள். கணவன் மனைவி இருவரும் வேலை செய்வார்கள். ஆனாலும் மிக குறைந்த சம்பளத்தில்தான் வேலை செய்பவர்களாக இருப்பார்கள், பின் எப்படி இந்த ஆடம்பர வாழ்க்கை சாத்தியமானது?

காரணம் அனைத்துமே வங்கி கடன் மூலம் வாங்கிவிடுகிறார்கள். சம்பளம் வாங்கியவுடன் 85% சதவிகித சம்பளத்தை வீட்டு லோன், கார் லோன் என்று அடைக்கிறார்கள். அதே போல் அதிக இன்கிரிமெண்ட் வருகிறது என்று வைத்துக்கொள்வோம், அதையும் சேமிக்க மாட்டார்கள். அதை வைத்து வேறு ஒரு பொருளை வாங்குவார்கள். இப்படி வாழ்க்கையை மிக ஆடம்பரமாக நவீன யுகத்துடன் வாழ்கிறார்கள்.

இவ்வளவையும் நண்பரிடம் விளக்கினேன். பின் சொன்னேன், "இவர்கள் நம்மைபோல் அல்ல. அனைத்தையும் அந்த கணத்திலேயே அனுபவிக்கிறார்கள்"

அவர் உடனே, "என்ன அனுபவித்து என்ன பயன்? அனைத்தும் கடன்தானே?" என்றார்.

"இருந்தால் என்ன? இன்றைய தினத்தில் அவர்கள் சந்தோசமாக இருக்கின்றார்களா இல்லையா?"

"இருக்கலாம். இருந்தாலும் நம்மைபோல் அவர்கள் சேமித்து வைக்கவில்லையே?"

"அதனால் என்ன பயன்?"

"நாம் காலரை தூக்கிவிட்டு இருக்கலாம் நமக்கு ஒரு கடனும் இல்லை என்று"

"இங்கு அப்படி நாம் நடந்தால் யார் நம்மை பார்ப்பார்கள். மொத்த நாட்டின் மக்களே இப்படி வங்கி மூலம் கடன் வாங்கி வாழ்க்கையை அனுபவிக்கும் போது நீங்களோ நானோ அவர்களிடம் சென்று எனக்கு கடனே இல்லை என்று சொன்னால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அதனால் என்ன பயன்? நமக்கு என்ன ஏதேனும் சர்டிஃபிகெட்டா தரப்போகிறார்கள்" என்றேன்.

"உண்மைதான்" என்றவர், "இருந்தாலும் சேமிப்பு முக்கியம் இல்லையா?" என்றார்.

"அளவுக்கு அதிகமான சேமிப்பால் யாருக்கு என்ன பயன்? நாம் அனுபவிக்காமல், பணம் பேங்கில் FD யில் இருப்பதால் என்ன பயன்? ஒரு வேளை ஏதாவது ஒன்று நமக்கு ஏற்பட்டுவிட்டால், ஒரு வெளிநாட்டு கார் உபயோகிக்காமல்,   I Pad 2 வும் அனுபவிக்காமலே போய்விடுவோம் இல்லையா" என்றேன்.

அடுத்த நாள், "உலக்ஸ் அடுத்த வாரம் நாம்   I Pad 2  வாங்க வேண்டும்" என்றார்.

"ஏன் இந்த திடீர் முடிவு?"

அவர் நண்பர் சொன்ன ஒரு விசயத்தை என்னிடம் கூறினார். அவரின் நண்பரின் அப்பா தீவிர காந்தியவாதியாக இருந்திருக்கிறார். அதிகமாக செலவு செய்ய மாட்டாராம். ரெயிலில் செல்வதாக இருந்தால் கூட இரண்டாம் வகுப்பில்தான் செல்வாராம். அவருக்கு ஒரு குரு இருந்திருக்கிறார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் விமானத்தில்தான் செல்வாராம். மிகப்பெரிய செலவாளியாம். ஆனால் அவர் பணத்தில் அல்ல அந்த இயக்கத்தின் பணத்தினால். இவர்கள் பணம் சேமித்து அவரிடம் கொடுப்பார்களாம். அவர் செலவு செய்வாராம்.

ஒரு தருணத்தில் அந்த குரு இறந்துவிட்டாராம். அவரை சொந்த ஊருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய வேண்டுமாம். அப்போது அவரின் மனைவி சிஷ்யர்களிடம் பண உதவி கேட்டிருக்கிறார். இவர்கள் ரயிலுக்கான பணத்தை திரட்டி கொடுத்த போது அவர் மனைவி சொன்னாராம்,

"காலம் முழுவதும் விமானத்தில் சென்றவர், இப்போது மட்டும் டிரெயினில் எப்படி?" என்று சொல்லி இவர்களிடம் பணத்தை வாங்கி பிணத்தை விமானத்தில் கொண்டு சென்றாராம். இவர்கள் விதியை நினைத்து இரண்டாம் வகுப்பு ரெயிலில் சென்றார்களாம். எப்படி இருக்கிறது பாருங்கள்?

"அதனால் நீங்கள் சொல்வது சரிதான். தேவைக்கு அதிகமாக சேமித்து வைப்பதை விட வாழ்க்கையை அந்த கணத்தில் அனுபவிப்பதில் தவறில்லை" என்றார்.

சரிதானே?

Oct 28, 2011

நாங்க என்னத்தான் செய்யறது?


ஏற்கனவே தீபாவளிக்கு ஊருக்கு போக முடியாத கடுப்புல இருந்த என்னை ஒரு மலாய் நண்பர் சந்தித்தார். 

"ஏன் சார் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றார்.

"தீபாவளியை ஊர்ல கொண்டாட முடியாம போச்சு. அதான்"

"அதான் இங்க கொண்டாடறீங்க இல்லை"

"ஊருல கொண்டாட மாதிரி வருமா சார்?"

"அங்க எப்படி கொண்டாடுவீங்க?"

"அங்க வீட்டுல எல்லாரும் இருப்பாங்க. அதிகாலை எழுந்துடுவோம். எல்லோரும் எண்ணய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்டு, ஸ்வீட் எல்லாம் சாப்பிட்டு, வெடிவெடித்து கொண்டாடுவோம். நண்பர்களை சந்திப்போம். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். புதிய சினிமா பார்ப்போம்"

"இங்கேயும் அதான செய்யறீங்க?"

"இங்க அப்படி இல்லை சார். இப்ப நம்ம தெருவுல பாருங்க. நாங்க மட்டும்தான் தீபாவளி கொண்டடறோம். மத்தவங்க எல்லாம் இஸ்லாமியர்கள். எங்கள் ஊரில் அப்படி அல்ல. தீபாவளி பண்டிகை என்பது நாடே கொண்டாடும் ஒரு பண்டிகை. ஊரில் எங்கு பார்த்தாலும் மக்கள் சந்தோசமாக இருப்பார்கள். மற்ற நாட்களில் பார்த்தீர்களானால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் மக்கள் அனைவரும் தங்கள் சோகங்களை மறந்துவிட்டு சந்தோசமாக இருப்பார்கள். நினைத்து பாருங்கள் ஊரே சந்தோசமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று. ஒருவர் மட்டும் சந்தோசமாக இருப்பதைவிட ஒரு ஊரே மகிழ்ச்சியாக இருப்பது என்பது எப்போதும் இல்லாதது." இப்படியாக விளக்கிச் சொன்னேன். நண்பருக்கு புரிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் சென்று விட்டார்.

கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு நண்பர்கள் எல்லோரிடமும் பேசி அவர்களின் சந்தோசங்களை தொலைபேசியின் மூலம் எனக்கும் பரவ செய்து கொண்டேன். சரி, புதுப்படத்திற்காவது போகலாம் என்றால் அதில் ஒரு பிரச்சனை.

'மங்காத்தா' வந்தபோதும் அதே பிரச்சனைதான். 18+ படம். பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள். பிள்ளைகள் இல்லாமல் படம் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஒரு விசயம் மட்டும் புரியவில்லை. இங்கே 'ஆஸ்ட்ரோ முதல் திரை' என்று ஒரு சேனல் உள்ளது. அதில் மங்காத்தா ரிலீஸாகி 50 நாட்களுக்குள் படத்தை போட்டுவிட்டார்கள். 15 வெள்ளி கொடுத்தால், தொடர்ந்து 48 மணி நேரம் அந்த படம் வரும். அப்போது குடும்பமே பார்க்கலாம். என்னதான் சென்சார் செய்து இருந்தாலும் எல்லா வசனங்களும் அப்படியேத்தான் உள்ளன (ஒரு சில வசனங்களில் ஆடியோ கட்). 18+ என்பதற்கான அர்த்தம் என்ன? என்பது எனக்கு புரியவில்லை. வீட்டில் பிள்ளைகள் பார்க்கலாம், தியேட்டரில் பார்க்க கூடாதா?

அதே போல் இப்போது வேலாயுதம். இதுவும் 18+. பிள்ளைகள் பார்க்க முடியாது. அதனால் நாங்களும்!

சரி, ஏழாம் அறிவு பார்க்கலாம் என்றால், "டைட்டில் மட்டும் நல்லா இருக்கு, டாக்குமெண்ட்ரி மாதிரி இருக்கு, முதல் பகுதி நல்லா இருக்கு, இரண்டாம் பகுதி சரியில்லை, பாட்டு மட்டும் நல்லா இருக்கு, ஸ்ருதி டிரஸ் மட்டும்தான் நல்லா இருக்குனு" ஆளாளுக்கு விமர்சனம் எழுதிட்டாங்க. இதனால் படம் பார்க்குற ஆர்வமே போயிடுச்சு.

விமர்சனங்கள் படித்தால் ஏறக்குறைய கதையும் ஓரளவு தெரிந்துவிடுகிறது. மங்காத்தா பார்க்கும் வரை விமர்சனங்கள் படிக்காமலே இருந்தேன். அதனால்தான் என்னால் படத்தை ரசிக்க முடிந்தது.

மொத்தத்துல ஏறக்குறைய எல்லோரும் படத்தை பார்த்துடுறாங்க. அப்புறம் விமர்சனம் எழுதிடறாங்க. நம்மால விமர்சனத்தை படிச்சுட்டு பார்க்க முடியாம போயிடுது.

எங்களுக்கே எப்பவாவதுதான் தமிழ் படம் வரும். அதும் ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடும். அதையும் நாங்கள் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. 

ஏன் இப்படி புலம்பறேன் என்கின்றீர்களா? தீபாவளி ஊர்ல கொண்டாட முடியாம போச்சேங்கற எரிச்சல்தான். வேற என்ன?