அருணுக்கு திடீரென விழிப்பு வந்தது. தலை லேசாக வலிப்பது போல் இருந்தது. திரும்பி கீதாவைப்பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். மார்பில் மேல் படுத்திருந்தாள்.மெல்ல அந்த பக்கம் திரும்பி மணியை பார்த்தான். மணி காலை 5 ஆகி இருந்தது. காபி குடித்தால் தேவலாம் போலிருந்தது. பால்காரன் வந்திருப்பான். பால் பாக்கெட் கேட்டில் மாட்டியிருக்கும். அப்படியே பால் வரவில்லையென்றாலும், ப்ரிட்ஜில் நேற்றைய பால் மீதமிருக்கும். நல்ல தூக்கத்திலிருக்கும் கீதாவை எழுப்ப மனமில்லை. நாமே ஒரு நாள் காபி போட்டுக் குடித்தால் என்ன எனத் தோன்றவே அவள் கைகளை விலக்கிவிட்டு படுக்கையை விட்டு எழுந்தான். கிச்சன் போனவனுக்கு வெளியே காலார நடந்து சென்று டீக்கடையில் டீ குடித்தால் என்ன எனத்தோன்றியது. காபி போடும் முடிவை கைவிட்டு விட்டு கதவைத்திறந்து, பக்கத்தில் தெரு முனையில் இருக்கும் டீ கடையை நோக்கி நடந்தான்.
"ஏன் சரியான தூக்கம் இல்லை". அப்போதுதான் நேற்று இரவு நடந்தது அவன் நினைவுக்கு வந்தது.
என்ன ஆயிற்று கீதாவுக்கு. நீண்ட நேர ஆக்ரோஷ புணர்வுக்கு பின் அருணைக் கேட்டாள்,
"ஏங்க, நீங்க சந்தோசமா இருக்கீங்களா?"
"ஏண்டா கண்ணமா, இப்படி ஒரு அபத்தமான கேள்வி கேட்கற?"
"இல்லைங்க, கொஞ்ச நேரம் முன்னாடி பண்ண சல்லாபத்தை பத்தி நான் கேட்கல"
"வேற?"
"கல்யாணம் ஆகி பத்து வருசமாக போகுது, உண்மையாகவே நீங்க சந்தோசமா இருக்கீங்களா?"
"எனக்கு என்னடா குறை, நான் என் கண்ணமாவோட சந்தோசமாத்தான் இருக்கேன், ஏன் இப்படி ஒரு கேள்வி"
"நீங்க எனக்காக சொல்லறீங்க"
"இல்லைடா செல்லம், இது உண்மை"
"ஏங்க, நெஞ்ச தொட்டு சொல்லுங்க, உங்களுக்கு குழந்தை இல்லைன்னு வருத்தமா இல்ல"
அப்போதுதான் அருணுக்கு புரிந்தது, அவள் எங்கு வருகிறாள் என்று.
"எனக்கு இப்போ அந்த வருத்தம் இல்லைடா"
"அப்போ முன்னாடி இருந்துச்சுதானே"
"இல்லைனு பொய் சொல்ல விரும்புலைடா"
"அதுக்காகத்தான் சொல்லறேன், நான் நேற்று சொன்னதை யோசிச்சு பார்த்தீங்களா?"
"எதைப்பத்தி?"
"நீங்க வேறு கல்யாணம் பண்ணிக்கறத பத்தி?"
"இங்க பாரு கீதா, நான் உனக்கு பல முறை சொல்லியிருக்கேன் இப்படி பேசாதனு? நான் ஒன்னும் ஞானியோ மேதையோ இல்ல. நான் ஒரு சராசரி மனிதன். எனக்கும் அந்த ஆசையெல்லாம் இருந்துச்சு. அதுக்காக மனைவிங்கர உன்னதமான உறவை கொச்சப்படுத்த விரும்புல. நான் ஒன்னும் படிக்காதவன் இல்ல. நல்லா படிச்ச உலகம் தெரிஞ்ச ஆள். உன்னை நோகடித்து, வேறு கல்யாணம் செஞ்சு, ஒரு குழந்தை பிறந்து, அப்போதான் நான் சந்தோசமா இருப்பேன்னு நீ நினைச்சா, அப்படிப்பட்ட சந்தோசம் எனக்கு தேவையில்லை. நான் உன்னை எந்த அளவு நேசிக்கறேனு உனக்குத் தெரியும். அப்படியே உன் அன்பு அரவணைப்புலேயே வாழணும் அப்படீங்கறதுதான் என் எண்ணமும், விருப்பமும். அதை சிதைக்காம இருப்பனு நான் நம்பறேன். இனிமே இதைப்பத்தி பேச மாட்டேனு நினைக்கிறேன்"
அதன் பிறகு அவள் அருணை கட்டிப்பிடித்து, நிம்மதியாக தூங்கினாள். ஆனால், அருணுக்குத்தான் தூக்கம் போனது. யோசித்து கொண்டே வந்தவனுக்கு அபோதுதான் டீக்கடை அருகே வந்துவிட்டதை கவனித்தான்.
ஒரு டீயை ஆர்டர் செய்தவன் மறுபடி யோசிக்க ஆரம்பித்தான். உண்மையில் அவனுக்கும் குழந்தை ஏக்கம் இருக்கத்தான் செய்தது. அதற்காக இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள அவன் மனம் ஒப்பவில்லை. அதே குறை தனக்கு இருந்தால், அவளை நாம் மறுமணம் செய்துக்கொள்ள அனுமதிப்போமா? என்ன உலகம் இது? அதே போல் எல்லோரும் குழந்தையை காரணம் காட்டி மறுமணம் செய்ய ஆரம்பித்தால், இந்த சமுதாயம் என்ன ஆவது? அப்போ நான் அவளுடன் பத்து வருடமாக மனதுடன், உடலுடன் கலந்து வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? இவ்வாறு பல வாறு சிந்திக்கையில், டீயை நீட்டினார் கடைக்காரர். டீ மிகுந்த சுவையாக இருந்ததை உணர்ந்தான். ஒரு வேளை அவன் மனம் தெளிவானதை அது உணர்த்தியதோ? ஒரு தெளிவான முடிவுடன், வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டின் கதவைத் திறந்தான். அதற்குள், கீதா குளித்து முடித்து, சாமி கும்பிட்டு, அழகான புடவையில் மங்களகரமாக இருந்தாள். அதுதான் கீதா என சந்தோசப்பட்டான்.
"எங்க போனீங்க?"
"சும்மா, டீ குடிக்க போனேன்"
"ஏன் எழுப்பி விட்டால் நான் போட்டு தர மாட்டேனா?"
"அதுக்கில்லைடா, நீ நல்லா அசந்து தூங்கிட்டு இருந்தியா, அதான் எழுப்ப வேணாமேனு"
"சரி, குளிச்சிட்டு வாங்க, டிபன் ரெடியா இருக்கு"
"கண்ணம்மா, உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிடு போறேன் இன்னைக்கு"
"எங்கங்க?"
"அது சஸ்பன்ஸ்"
"போலாமா?"
"எங்கன்னு சொல்லுங்க, அப்போதான் வருவேன்"
"நான் ஒரு நல்ல இடத்துக்குத்தான் கூட்டிட்டு போறேன், வா போகலாம்"
"சரி, சரி, நீங்க கிளம்புங்க, நான் ரெடி, நீங்க வந்தது சப்பிட்டு விட்டு கிளம்பலாம்".
அடுத்த அரை மணி நேரத்தில் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். கார் அந்த அநாதை இல்லத்தின் வாசலில் நின்றது. கீதா ஆச்சர்யத்துடனும், ஒரு சந்தேகத்துடனும் அருணை பார்த்தாள்.
"என்னங்க, இங்க கூட்டி வந்துருக்கீங்க"
"சும்மாதான், உள்ள வா"
அங்கிருக்கும் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளை காண்பித்தான் அருண். கூடவே அந்த நிறுவனத்தின் தலைவி, ஒவ்வொறு குழந்தையைப்பற்றியும், எப்படி இங்கே வந்தார்கள் என்பதை பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தார்கள். கீதாவின் முகம் மாறுவதை அருண் கவனிக்க வில்லை.
முடிவில் கீதாவைப்பார்த்து அருண் கேட்டான்,
"கீதா இதுல எந்த குழந்தை உனக்கு பிடிச்சிருக்கு?"
பதில் வராமல் போகவே திரும்பி பார்த்தான். அவள் வேக வேகமாக காரை நோக்கி போய்க்கொண்டிருந்தாள். அந்த நிறுவனத்தின் தலைவி அருணை பார்த்து கேட்டாள்,
"ஏங்க, நீங்க இங்க எதுக்காக வந்துருக்கீங்க அப்படிங்கறத உங்க மனைவி கிட்ட சொல்லலியா"
"இல்ல மேடம், இங்க வந்து சொல்லிக்கலாமுனு நினைச்சேன்"
"இல்ல சார், இதல்லாம் சாதாரண விசயமில்ல, தெளிவா சொல்லி கூட்டி வரணும். முதல்ல அவங்கள போய் சமாதனம் பண்ணற வழிய பாருங்க?"
"சாரி, மேடம்" என்றவன் காரை நோக்கி கிளம்பினான்.
காரில் ஏறியவுடன், " சாரிடா, உன் கிட்ட சொல்லாமல் இங்க கூட்டி வந்தது தப்புதான். அதுக்ககாக மூன்றாவது மனிதருக்கு முன்னாடி இப்படி என்னை அவமானப்படுத்தலாமா?"
கீதா ஒன்றும் பேசவில்லை முகத்தில் சோக ரேகைகள். கண்கள் கலங்கியிருந்தது. வீடு வரும் வரை இருவரும் ஒன்றும் பேச வில்லை. ஒரே அமைதி.
நேரே சென்று அவள் ரூமுக்கு சென்று கதவை சாத்தி படுத்து விட்டாள். அருணும் ஹாலிலெயே படுத்தான். மதியம் சமையல் இல்லை.
அருணும் தப்பு பண்ணிவிடோமோ என குழப்பத்திலிருந்தான். இரவு வந்தது.
கீதாத்தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
"என்ன டிபன் செய்யட்டும்?"
"உனக்கு புடிச்சதை செய்டா, கண்ணம்மா"
"ஏங்க உங்களுக்கு என்மேல் கோபமே வராதா?"
"ஏன் கோபம் வரணும்?"
"இல்ல ஒண்ணுமே சொல்லாம நான் பாட்டுக்கு அந்த இடத்த விட்டு வந்துட்டேன், அதான்"
"தப்பு என் பேர்லதானேடா, நான் உன்ன விசயத்தச் சொல்லி கூட்டி போயிருக்கணும்"
"ஏன் அங்க கூட்டி போனீங்க? நான் தத்து எடுக்க ஒத்துக்குவேனு எப்படி நம்புனீங்க"
"என் கண்ணம்மா, இதுவரை நான் சொன்னத மீறினது இல்ல, அதனால இதையும் ஒத்துக்குவனு நினைச்சேன்"
"அது எப்படீங்க, யாரோ பெத்தக் குழந்தைய நாம பெத்ததா வளர்க்கறது?"
"நமக்கு குழந்தைன்னா உயிர், நமக்கோ அதுக்கு குடுப்பினை இல்ல, அதனால அநாத குழந்தைய எடுத்து வளர்த்தா என்ன தப்பு?"
"நமக்கு குடுப்பினை இல்லைனு சொல்லாதீங்க, எனக்குத்தான் இல்ல, உங்களுக்கு இருக்கு"
"உனக்கு பல தடவை சொல்லிட்டேன், எனக்கு நீதான் முக்கியம்னு"
"அதுக்காக எப்படிங்க, யாரோ பெத்த குழந்தைய, நாம பெத்த மாதிரி நினைச்சு வளர்க்க முடியும்?"
"கீதா, இதே மாதிரி உங்க அம்மா, அப்பா நினைச்சிருந்தாங்கன்னா?"
"என்ன சொல்றீங்க?"
"இவ்வளவு நாள் சொல்லாம வைச்சிருந்த உண்மைய இப்போ சொல்றேன் கேள். உங்க அப்பா இறக்கறதுக்கு முன்னாடி எனக்கு சொன்ன விசயம். உங்கிட்ட சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கின விசயம். உங்க அப்பா அம்மாவுக்கு கல்யாணம் ஆகி 12 வருசம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்ல. பார்க்காத வைத்தியர் இல்ல. போகாத கோயில் இல்ல. ரொம்ப யோசனைக்கு பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து பேசி முடிவு பண்ணி, கடைசியில உன்ன அநாதை இல்லத்துலேந்து தத்து எடுத்துருக்காங்க. அன்னைக்கு அவங்க அப்படி உன்ன தத்து எடுக்கலைனா, நீ இப்படி என்னோட வாழ முடியுமா?"
"அப்போ நான் அநாதையா"
"இல்லைடா, இப்போத்தான் நான் இருக்கேனே?"
அதற்கு பிறகு கீதாவின் கண்களில் இருந்து ஒரே கண்ணீர். ஏதோ பேருக்கு சாப்பிட்டார்கள், காலையில் சுட்ட பழைய தோசையை. பிறகு ஒன்றும் பேசாமல் அப்படியே அருணை கட்டிப்பிடித்து உறங்கிவிட்டாள்.
காலையில் கீதாத்தான் அருணை எழுப்பினாள்.
"என்னம்மா, இவ்வளவு சீக்கிரம்?"
"வாங்க சீக்கரம் போனாத்தானே, என்னுடன் விளையாடப்போகும், எனக்கு சந்தோசம் கொடுக்கப்போகும் என் குழந்தையை பார்க்கமுடியும்"
ஆச்சர்யமாகப் பார்த்து அப்படியே அவளைக் கட்டிப்பிடித்தான்.
"நோ, நோ அதெல்லாம் இனிமே தினமும் கிடையாது, என் குழந்தைக்கும் நேரம் வேணும் இல்ல"
சந்தோசத்துடன் குளிக்க சென்றான் அருண். அடுத்த அரைமணியில் அதே அநாதை இல்லத்திற்கு வந்தவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் அதன் தலைவி. அதிக நேரம் எடுக்க வில்லை. மிக விரைவில் குழந்தையை செலக்ட் செய்தாள் கீதா.
கோயிலுக்கு போகலாம் என்றாள். பக்கத்திலுள்ள கோயிலுக்கு சென்றார்கள்.
கீதா, " இதே சந்தோசம் எப்பவும் எனக்கு இருக்க வேண்டுமென இறவனிடம் வேண்டினாள்"
அருண் மனதிற்குள் தன் மாமனாரிடம் மன்னிப்பு கேட்டான், தான் சொன்ன பொய்க்காக!
(இது முன்பு நான் எழுதிய சிறுகதை. இது ஆனந்தவிகடனில் வெளிவந்தபோது கடைசி பகுதி மட்டுமே வந்தது. இதோ முழுக்கதையும் உங்களுக்காக)