Jan 19, 2011

இனி ஒரு விதி செய்வோம் (சிறுகதை) - 1

(அனைத்துலக இளைஞர் ஆண்டை ஒட்டி நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை. எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டது. போட்டி ஆரம்பிக்கும் 40 நிமிடங்களுக்கு முன் தலைப்பு கொடுத்தார்கள். 40 நிமிடங்களில் எழுதி முடித்த கதை. இத்தனை வருடங்கள் கழித்து இதைப் படிக்கும் போது இரண்டு விசயங்கள் தோன்றுகிறது: 01. கல்லூரி படிக்கும் போதே ஒரளவு கதை எழுத வந்திருக்கிறது. 02. தொடர்ந்து எழுதி இருந்தால் நானும் ஒரு நல்ல எழுத்தாளராக வந்திருக்க முடியும். இந்த கதையை கொஞ்சம் மாற்றலாம்தான். ஆனால், எனக்கு விருப்பம் இல்லை. அதனால், எங்கள் கல்லூரி ஆண்டு விழா மலரில் வந்த கதையை உங்களுக்காக அப்படியே தருகிறேன்)

இனி கதை:

காலை மணி 10 இருக்கும். அந்த லைப்ரரியே நிரம்பி வழிந்தது. ஜோசப் கல்லூரி மாணவர்கள் போலும்! அவர்கள் ரெபரன்ஸ் செக்க்ஷனில் அமர்ந்திருந்தனர். அந்த ஹாலில் உள்ள நான்காவது டேபிள் சேரில் அமர்ந்தான் ரகு. அவனுக்கு 19, 20 வயது இருக்கலாம். ஸ்டோன் வாஷ் பேண்ட், ஸ்டோன் வாஷ் ஷர்ட் அணிந்திருந்தான். முகத்தில் தாடி காணாமல் போயிருந்தது. மீசையும்தான். கையில் பாரதியார் கவிதை. அன்று மாலை நடக்கவிருக்கும் பேச்சுப் போட்டிக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள அந்தப் புத்தகத்தை எடுத்திருந்தான். ஆனால் மனமோ, அவன் காதலி ரத்னாவின் மேலிருந்தது.

"என்ன பேசிவிட்டாள் அவள்? ரகு செய்தது இதுதான். ரத்னா நேற்று அவனைச் சினிமாவிற்குக் கூப்பிட்டிருந்தாள். அவளின் அம்மா, அப்பா ஊருக்கு சென்றிருந்தார்கள். இவன் 'வேறு வேலை இருக்கிறது' என்று சொல்லி, சினிமாவிற்கும் போகவில்லை, அவள் வீட்டிற்கும் போகவில்லை.

அதற்காகக் காலையிலிருந்து இவனிடம் அவள் பேசவேயில்லை.அவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? தெரியாமல் திகைத்தான்.

மாலை போட்டியும் முடிந்தது. வழக்கம் போல ரகுதான் 'ஃபர்ஸ்ட்'. பெண்கள் விடுதலையைப் பற்றிப் பேசியிருந்தான். பரிசை அவளிடம் காண்பிக்க சென்றான்.

"ஹாய், ரத்னா?" -ரகு.

..... "என்னம்மா!, என்னமோ மாதிரி இருக்க?" குழைந்தான் ரகு. பக்கத்தில் அமர்ந்தான். இவனுக்குத் தெரியும் அவள் கோபமாயிருக்கிறாள் என்று. அவள் தலையைக் கோதிவிட்டான்.

"என்னம்மா! இன்னைக்கு ஷாம்பு போட்டியா?" என்றவன் தன் உதடுகளை அவள் பிடறி அருகே கொண்டு சென்றான். அவள் மறுக்கவில்லை.

"யாரும் என்னோட பேச வேண்டாம்!" அவளிடமிருந்து பதில் வந்தது.

"நேற்று சினிமாவுக்கு வரலை, அவ்வளவுதானே, போனா போகுது விடு, இன்னைக்குப் போகலாம். ப்ளீஸ்! சிரிம்மா, சிரி.. சரி, அதுக்காக என்ன வேணாலும் செய்யிறேன்.

"அப்படின்னா எங்க வீட்டுக்கு வர்றீங்களா?"

"சரி. ஆனா ஒரு கண்டிஷன். ரொம்ப நேரம் இருக்க மாட்டேன்"

கிளம்பினர் இருவரும்.

அந்த ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது அவளின் வீடு. 'சுசுகியை' ஓரத்தில் நிறுத்தியவன் படிகளில் கால் வைத்தான்.அவன் கண்களுக்கு அதிர்ச்சி! ஏதேனும் "மின்னல்கொடி மின்னிவிட்டுப் போய் விட்டதோ" நினைத்தான். காரணம் வேறு. ஒரு அழகான பெண் கதவை திறந்ததுதான்.

"என்ன ரகு! அங்கேயே நின்னுட்டிங்க? வாங்க, வாங்க. இவங்க என் அக்காதான். பேரு ராஜி" என்று பொறிந்த ரத்னா தன் கடமை முடிந்துவிட்டதாய் நினைத்து உள்ளே சென்றாள்.

"உள்ளே வாங்க" அந்த மின்னல்கொடி ராஜியிடமிருந்து அந்தத் தேன் குரல் வந்தது. உள்ளே சென்றான்.

"என்ன சாப்பிடறீங்க?"

"சும்மா காபி போதும்" என்றவன் அவள் கண்களைச் சந்தித்தான்.

அழுதிருப்பாள் போலிருக்கிறது. நல்ல நிறம். ரத்னாவை விட உயரம் சற்று கூடுதல். செழிப்பான உடல். அவள் கண்களைக் காண்பதற்கென்றே கோடி பிறவி எடுக்கலாம். நீண்ட முடி. அதில் குதிரைவால் சடை போட்டிருந்தாள். ஆக மொத்தம் செதுக்கி வைத்த பொற்சிலை. ஆனால் அவள் முகத்தில் ஒரு சோகம். 'என்னவென்று ரத்னாவிடம் கேட்க வேண்டும்' நினைத்துக்கொண்டான். டிரஸ் செய்துகொண்டு தேவதை போல் காபி கொண்டு வந்தாள் ரத்னா.

காபி சாப்பிட்டனர். ரகு பேசவேயில்லை. தன் மனம் ஏன் ராஜியைப் பற்றியே நினைக்கிறது என்று அவனுக்கே தெரியவில்லை. கேட்டுவிடலாமா? கேட்டேவிட்டான்.

தொடரும்

2 comments:

vinu said...

next episode seekiramaaaaaaaaaaaaaaaaaa
plzzzzzzzzzz

iniyavan said...

//next episode seekiramaaaaaaaaaaaaaaaaaa
plzzzzzzzzzz//

வருகைக்கு நன்றி வினு.