Jan 20, 2011

இனி ஒரு விதி செய்வோம் (சிறுகதை) - 2

காபி சாப்பிட்டனர். ரகு பேசவேயில்லை. தன் மனம் ஏன் ராஜியைப் பற்றியே நினைக்கிறது என்று அவனுக்கே தெரியவில்லை. கேட்டுவிடலாமா? கேட்டேவிட்டான்.

"ரத்னா, நான் ஒண்ணு கேட்பேன். தப்பா நினைக்க மாட்டியே?" என்றவன் சுற்றும் முற்றும் கண்களை அலைய விட்டான்.

"பயப்படாதீங்க ரகு. அக்கா சமையற்கட்டுல இருக்கா? என்ன கேட்கணும் கேளுங்க" என்றாள், தன் முடியை ஸ்டைலாக கோதிவிட்டுக்கொண்டே.

"உங்க அக்கா முகம் ஏன் சோகமா இருக்கு?" என்றவன் தவறாகத் தான் ஏதும் கேட்டுவிட்டோமோ? என்று அவள் முகத்தை நோக்கினான்.

"இவ்வளவு நாளா உங்க கிட்ட சொல்லாததற்கு மன்னிச்சிடுங்க ரகு. எங்க அக்கா ஒரு விதவை"

"அப்படியா?" என்றவன் ஏதோ மின்சாரத்தினால் தாக்குண்டவன் போல் அதிர்ந்தான்.

"ஆமாம். எங்க அக்கா கல்யாணம் ஆகி ஒரு மாதம் நல்லாத்தான் வாழ்க்கை நடத்தினா. ஆனா அது காலனுக்குப் பிடிக்கலை. அவளோட ஹஸ்பெண்டை ஆக்ஸிடண்ட் மூலமா வாங்கிட்டான். அதிலேயிருந்து இப்படியே இருக்காங்க"

"வெரி சாரிம்மா. ஆமாம், ஏன் உங்க அக்கா வேற கல்யாணம் செஞ்சுக்கலை?"

"இதெல்லாம் கேக்கறதுக்கு வேணா நல்லா இருக்கலாம். ஆனா, இந்த சமுதாயத்துக்கு ஓத்து வராது?"

"ஏன் ஒத்து வராது? ஆம்பளை எவ்வளவு பேரை வேணும்னாலும் கல்யாணம் செஞ்சுக்கலாம். பொம்பளை செஞ்சா பாவமா?" என்றவன் பெருமூச்சு விட்டவாறு சாய்ந்து உட்கார்ந்தான்.

"ரகு, நீங்க பேச்சுப்போட்டியில் பேசிப்பேசி இப்படி சொல்றீங்க. ஆனா இதெல்லாம் நடக்காத காரியம். சரி, என்ன இதெல்லாம் பேசிகிட்டு!.. வீட்டுக்கு நேரமாகலை.... போங்க சீக்கிரம்">

- என்றவள் அவன் சுசிகியில் ஏறும் வரை உடனிருந்தாள்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு அமர்ந்தவனுக்கு மூடே சரியில்லை. அவன் மனம் முழுவதும் அந்த ராஜியே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். ஒரு தம்மாவது அடிக்கலாம் என்று கடைக்குச் சென்றவன் கண்களில் அவனின் உற்ற நண்பன் கணேஷ் தென்பட்டான்.

அவனிடம் நடந்தவைகளைக் கூறினான். அனைத்தையும் பொறுமையாக கேட்ட கணேஷ்,

"ஏண்டா ரகு! நீதான் பாரதியார் கவிதைகளைப்பற்றி இப்படி பேசறியே மேடை மேடையா! பெண் சுதந்திரம் கேட்கறியே, நீ ஏன் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?"

இந்த கேள்வியைக் கேட்ட அவன் காது, அந்த வார்த்தைகளை அப்படியே பிடித்து வைத்துக்கொண்டது. சுற்றிச் சுற்றி வந்தது அந்த வரிகள். அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வந்தவன் மனம் கேட்டது,

"ஆமாம்! நீ ஏன் ராஜியை மறுமணம் செஞ்சுக்கக் கூடாது"

தீர்மானமான முடிவுடன் படுத்தான்.

அடுத்த நாள்.

ரத்னா வீட்டிற்கு சென்றான். அவள் கல்லூரி சென்றிருந்தாள். தெரிந்துதான் அங்கு சென்றான். இவனைக் கண்ட ராஜியின் கண்களில் அதிர்ச்சி.

"ரத்னா இல்லையே?" என்றாள் சிறிது அதிர்ச்சி கலந்த வெட்கத்துடன்.

"பரவாயில்லை. நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். அவள் அச்சப்படவே, "நீங்க விரும்பலைனா வெளியே போயிடுறேன்"

"இல்லை இல்லை, உட்காருங்க" என்றவள் சேரை எடுத்து போட்டாள்.

"இங்க பாருங்க. நான் அதிகம் பேசிப் பழக்கம் இல்லாதவன். எல்லாம் மேடையோட சரி. அதனால நேரடியாகவே உங்களைக் கேட்கிறேன். உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. என்னை உங்களுக்கு பிசிச்சுதுனா நான் உங்களை கல்யாணம் செஞ்சுக்குறேன்"

இதைக் கேட்டவள் அதிர்ந்தாள். பேசினாள். கேள்வி மேல் கேள்வி கேட்டாள். பதில் சொன்னான் ரகு. தன் பேச்சுத் திறமை முழுவதையும் உபயோகித்தான்.

"உங்க அப்பா! அம்மா!" - வினவினாள் ராஜி.

"அதைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்"

ரத்னாவிற்கு விரிவாக லெட்டர் எழுதி வைத்து விட்டு அவளுடன் தன் வீட்டிற்கு சென்றான்.

நிச்சயம் ராஜியின் பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். தன் பெற்றோரிடம் அனுமதி வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையுடன் அவன் சென்றான். அவன் பார்வையில் நல்ல இதயம் தெரிந்தது.

இலவச இணைப்பு:

வீட்டிற்கு வந்தவுடன் லெட்டரைப் படித்த ரத்னா மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்,

"ரகு! நீங்க விதவையைக் கல்யாணம் செஞ்சுக்கப்போறதுனால, என்னை ஏமாத்திட்டதா நினைச்சுட்டீங்க. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நீங்க எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுதான், எங்க அக்காகிட்ட உங்களை அறிமுகப்படுத்தி வைச்சேன். எனக்கு எத்தனையோ மாப்பிள்ளைங்க இனி வருவாங்க! ஆனா எங்க அக்காவுக்கு....? உங்களைப்போல நல்லவர் கிடைக்கறது கஷ்டம். நானா உங்க கிட்ட கேட்கக் கஷ்டமாயிருந்தது. அதனாலதான் எங்க அக்காவை அறிமுகம் பண்ணி வைச்சேன்,

இந்த இளைஞர் ஆண்டுல, நீங்க விதவையை மணந்ததப் பெருமையா நினைச்சி சந்தோசப் படுவீங்அன்னு தெரியும். அதுக்குக் காரணமா, நான் இருந்ததை நினைச்சு நான் சந்தோசப்படுவேன்"

---- அவள் கண்கள் கலங்கியதென்னமோ உண்மைதான்.3 comments:

Unknown said...

ஒரு நல்ல எழுத்தாள ஆளுமையுள்ள கதை இது.

கதைகளில் இருக்கவேண்டிய சமுதாய மாற்றத்திற்கான விதைகள் பரவலாக இப்போதுள்ள கதைகளில் இருப்பதில்லை. ஆனால் அப்போதே இதற்க்கான விதையை நீங்கள் போட்டிருக்கிறீர்கள் என்பது ஆச்சர்யம் ...

iniyavan said...

//ஒரு நல்ல எழுத்தாள ஆளுமையுள்ள கதை இது.

கதைகளில் இருக்கவேண்டிய சமுதாய மாற்றத்திற்கான விதைகள் பரவலாக இப்போதுள்ள கதைகளில் இருப்பதில்லை. ஆனால் அப்போதே இதற்க்கான விதையை நீங்கள் போட்டிருக்கிறீர்கள் என்பது ஆச்சர்யம் ...//

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி செந்தில்.

பாஸ்கர் said...

உங்கள் பதிவுகளில் நல்ல quality இருக்கிறது