Jan 2, 2011

புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

போன வருடம் புத்தாண்டு பிறந்தபோது எங்கள் ஊர் லால்குடி சிவன் கோவிலில் நடராஜர் முன் அமர்ந்து தரிசித்துக்கொண்டு இருந்தேன். அன்று இரவுதான் நடராஜருக்கு அபிஷேகம். ஆருத்ரா தரிசனம். பல வருடங்கள் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடி இருந்தாலும், ஒரு கோவிலில் தெய்வத்திற்கு முன்பு அமர்ந்து புத்தாண்டை வரவேற்றது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது.

பள்ளியில் படிக்கும் காலக்கட்டத்தில், புத்தாண்டு அன்று விடியற்காலை எழுந்து அப்பாவுடன் கோயில் சென்று தரிசிப்பது வழக்கம். கல்லூரி படிக்கையில் கொண்டாடிய புத்தாண்டுகள் மிக சுவாரஸ்யமானவை. அந்த நாட்கள் இனி வரவே வராது. ஜனவரி 1 என்றாலே தூக்கக் கலக்கத்துடன் இருந்த காலம் அது.

ICWA, ACS படிக்கும் காலக்கட்டத்தில் கொண்டாடிய புத்தாண்டுகள் மிக சந்தோசம் தருபவை. காரணம் டிசம்பர் 30ம் தேதி போல்தான் பரிட்சை முடியும். அதனால் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

இந்த வருடம் மலேசியாவில் இருந்ததால், எல்லா நாட்களைப் போலவே நேற்றும் கடந்து சென்றுவிட்டது. 31ம் தேதி இரவு ஒழுங்காக நேரத்தோடு தூங்க போயிருக்கலாம். அதைவிட்டு விட்டு, அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்ன காரணத்தினால், டிவியில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்" பார்த்தோம். எனக்கு என்னவோ அவ்வளவு சிரிப்பு வரவில்லை. படமும் மிக சாதாரணமான படம். சந்தானம் அடுத்த கவுண்டமணியாக உருவாகி வருகிறார், கத்தலில், நகைச்சுவையில் இல்லை.

அந்த கடுப்புடனே உறங்கி எழுந்து காலையிலே கோயில் சென்று வந்தோம். பிறகு அடிக்க ஆரம்பித்தது மழை. எங்கும் செல்ல முடியவில்லை. கடுமையான மழை. ஒரே போர். படித்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் ஒரு வழியாக நேரம் கடந்தது.

நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்திலும், தொலை பேசி அழைப்பிலும், அவர்களுக்கு நான் பதில் அனுப்பியதிலும் சில மணி நேரங்கள் கடந்து சென்றது.

கேபிளிடம் ஒரு 25 நிமிடம் பேசினேன். "தலைவரே, தலைவரே" என்று அவர் அன்பு ஒழுக பேசிய பேச்சின் மயக்கத்தில் ஒரு ஒருமணிநேரம் சென்றது.

இரவு ஒரு நார்த் இண்டியன் வீட்டில் சாப்பிட சென்றோம். அது ஒரு வித்தியாசமான அனுபவம். நம் உணவு முறைக்கும், அவர்களின் முறைக்கும் வித்தியாசம் மிக அதிகம். நாம் சாதம் வைக்கும் தட்டில் அவர்கள் நிறைய சைடிஷ் ஐயிட்டங்களையும், நாம் காய்கறி, பொரியல் வைக்கும் சின்ன தட்டில் சப்பாத்தியையும் வைக்கிறார்கள். அதாவது காய்கறி மற்றும் சில சாலட்களை அதிகம் சாப்பிடுகிறார்கள். சப்பாத்தி ஒன்றோ இரண்டோ சாப்பிடுகிறார்கள்.

நம் வீட்டில் விருந்தினர்கள் வந்தால், அவர்கள் சாப்பிட்டு முடித்து போனவுடன் தான், வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால், அவர்கள் வீட்டில் அனைவருமே அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டது வித்தியாசமாக இருந்தது. இன்னொரு விசயம், எதையும் வீணாக்கக்கூடாது என்பதால், மீதி இருந்த அனைத்தையும், அனைவருக்கும் சரிசமமாக பிரித்து பறிமாறினார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம். கடைசியில்தான் தெரிந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பது என் வழக்கம். ஆனால், டைனிங் டேபிளில் தண்ணீர் ஜக் இல்லை. அவர்கள் வீட்டில் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதில்லை. அதற்கு அவர் சொன்ன விளக்கம்,

"சாப்பிட்ட உடன் 45 நிமிடங்கள் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும். அப்போதுதான் நன்றாக செரிமானம் ஆகும். உடனே குடித்தால், சாப்பாட்டினால் உற்பத்தியாகும் ஜீஸ் அதன் வேலையை சரிவர செய்யாது. சாப்பிட்ட உடன் சிலருக்கு வயிற்றில் ஏற்படும் ஹெவினஸ் இருக்காது"

உண்மையா என்பதை விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

31ம் தேதி இரவிலிருந்து மனதில் ஏதோ ஒரு சோகம் இருந்து கொண்டே இருந்தது. இரவு படுக்க போகையில்தான் நினைவு வந்தது.

ஆம், என் செல்லத் தங்கையை அடக்கம் செய்த நாள் ஜனவரி 1 என்று!


4 comments:

அமுதா கிருஷ்ணா said...

new information about drinking water.happy new year sir..

dondu(#11168674346665545885) said...

உண்மைதான். உணவு செரிமானம் ஆக உதவுபவை வயிற்றில் உருவாகும் அமிலங்கள். அவ்ற்றில் தன்ணீர் சேர்ப்பதால் அவை நீர்த்து விடும். பி.எச். மதிப்பெண் உயர்ந்து தன்ணீரூக்கு உரித்தான 7-க்கு அருகே செல்லும் வாய்ப்பு உண்டு.

ஆகவே தண்ணீர் உடனே அருந்துவதால் செரிமானம் பாதிக்கப்படும்.

நான் இதை சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் எங்கள் தமிழ்ப் பாடநூலில் வெளியான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணனின் கட்டுரையில் படித்துள்ளேன் (ஆனால் பி.எச். விவகாரம் எனக்கு டீடைல்டாக நான் பி.இ. முதலாம் ஆண்டு ரசாயன பாடத்தின் மூலமே தெரிந்தது).

அன்புடன்,
டோண்டு ராகவன்

iniyavan said...

//new information about drinking water.happy new year sir..//

வருகைக்கு நன்றி மேடம். உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

iniyavan said...

//நான் இதை சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் எங்கள் தமிழ்ப் பாடநூலில் வெளியான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணனின் கட்டுரையில் படித்துள்ளேன் (ஆனால் பி.எச். விவகாரம் எனக்கு டீடைல்டாக நான் பி.இ. முதலாம் ஆண்டு ரசாயன பாடத்தின் மூலமே தெரிந்தது).

அன்புடன்,
டோண்டு ராகவன்//

உங்களின் தெளிவான பின்னூட்டத்திற்கும், வருகைக்கும் நன்றி டோண்டு சார்!