Jan 3, 2011

சேது??? (சிறுகதை)

அவசரமாக சென்னை ஏர்போட்டிற்கு ஹோட்டலில் இருந்து கிளம்புபோதுதான் அவனைப் பார்த்தேன். பார்த்த முகமாக இருக்கவே, மறுபடி ஒரு முறை அவனைப் பார்க்க திரும்பும்போது அவனும் என்னைப் பார்ப்பதை கவனித்தேன். இரண்டாவது பார்வையிலேயே அவன் என் பால்ய சிநேகிதன் சேது என்பது தெரிந்துவிட்டது. உடனே ஓடிப்போய்,

"ஹேய் நீ சேது இல்லை?"

"ஹேய் நீ ரவி இல்லை?"

என்றெல்லாம் சொல்லி கட்டிப்பிடித்துக்கொள்ளவில்லை நாங்கள். மாறாக,

"ரவி, எப்படிடா இருக்க?" என்று அவன் கேட்க, "சேது நீ எப்படி இருக்க" என்று அவனைக் கேட்க, இருவரும் அருகில் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பால்ய விஷயங்களை பேச ஆரம்பித்தோம். இத்தனை நாள் என் மனதில் தேக்கி வைத்திருந்த 'அந்த விசயத்தை' கேட்கலாமா? என நினைத்தேன். அந்த விஷயம் என்ன? என்பதை அறிய ஒரு இருபது வருஷம் பின்னோக்கி செல்வது அவசியமாகிறது.

நான் ஒன்பதாவதோ இல்லை பத்தாவதோ படிக்கும் போதுதான் சேது எங்கள் ஊருக்கு குடி வந்தான். அவன் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி இருந்தது. சாதாரணமாக பழக ஆரம்பித்த நாங்கள் வெகு சீக்கிரத்திலேயே நல்ல நண்பர்கள் ஆனோம்.

அவனும் ஓரளவு கிரிக்கெட் ஆடுவான். அவனை எங்கள் கிரிக்கெட் டீமில் எவ்வளவோ முயற்சி செய்தும் எங்கள் கேப்டன் அவனை சேர்த்துக்கொள்ளவே இல்லை. ஏற்கனவே பந்து பொறுக்கி போட நிறைய பேர் இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

விடுமுறை சமயத்தில் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். கேரம், செஸ் எல்லாம் விளையாடுவோம். கோபு என்ற இன்னொரு நண்பனும் எங்களோடு விளையாடுவான். செஸ்ஸில் நான் கோபுவிடம் தோற்பது போல் இருந்தால், உடனே சேது யாருக்கும் தெரியாமல் செஸ் போர்டை மெல்ல ஆட்டிவிடுவான். அதனால் மறுபடியும் கேமை ஆரம்பிப்போம்.

நானும் சேது வீட்டிற்கு அடிக்கடி செல்வதுண்டு. அவனுக்கு ஒரு அக்கா, ஒரு தம்பி மற்றும் இரண்டு தங்கைகள். அவன் அக்காவும் எங்களுடன்தான் டிரெயினில் வருவாள். மாமி, அதாவது சேதுவின் அம்மா என்னிடம் ரொம்ப நன்றாக பேசுவார்கள். மாமா அவ்வளவு பேசமாட்டார். எப்போதும் எதையோ பறிகொடுத்ததைப் போலவே இருப்பார்.

ஒரு நாள் நாங்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடிய போது பந்து எதிரில் உள்ள வீட்டின் கார் பார்க்கில் விழுந்துவிட்டது. அங்கே ஒரு பெரிய இடம் இருக்கும். அங்கே எங்களைவிட வயதில் பெரிய அண்ணன்கள் ஷெட்டில் காக் விளையாடுவார்கள். நான் பந்தை எடுக்க உள்ள சென்றபோது அவர்கள் விளையாடி முடித்து தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பேசியதை நான் கேட்டிருக்கக் கூடாது.

"உண்மையாவாட சொல்ற?''

"ஆமாம். இதுல பொய் சொல்றதுல என்ன இருக்கு?"

கேட்டவன் அந்த இடத்தின் சொந்தக்காரன். பதில் சொன்னவன் சேது வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரன். சேது பெயர் அடிபடவே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

"எப்படிடா, நடந்துச்சு"

"ஒரு நாள் எங்க வீட்டுல மாமி டிவி பார்க்க வந்தாங்க. பார்த்துட்டே இருக்கும் போது யாரோ காலால என் காலை தேய்க்கிறாமாதிரி இருந்துச்சு. நான் யாரோனு நினைச்சு விட்டுட்டேன். திரும்பவும் உரசவே யாருனு பார்த்தா, மாமிடா. அதான் நம்ம சேதுவோட அம்மா"

"அப்புறம்?"

"அடுத்த நாள் வீட்டுக்கு அரிசி மூட்டை எடுத்துத் தர கூப்பிட்டாங்க. போனா, கெஞ்சுறாங்கடா. மாமாவால முடியலைடா. அப்படி இப்படினு சொல்லி, எல்லாம் முடிஞ்சு போச்சுடா. இப்போ டெயிலி வேணுமாம்"

"வீட்டுல யாரும் இருக்க மாட்டாங்களா?"

"எல்லாம் காலேஜுக்கும், ஸ்கூலுக்கும் போயிடாறாங்கல்ல'

அதற்கு மேல் எனக்கு அங்கே நிற்க பிடிக்கவில்லை. தலை சுத்துவது போல் இருந்தது. மாமியா, இப்படி என நினைத்து தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு அவன் வீட்டிற்கு செல்வதை தவிர்த்தேன். அவனுடனும் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்துக்கொண்டேன்.

சில காலம் எங்கள் ஊரில் இருந்தவர்கள், பக்கத்து ஊருக்கு குடிபெயர்ந்தார்கள். பின்பு நண்பர்கள் மூலம் அவன் அக்காவிற்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், தம்பி எங்கோ வெளிநாட்டில் இருப்பதாகவும், தங்கைகளில் ஒருத்தி எவனுடனோ ஓடி போய்விட்டதாகவும் அறிந்தேன்.சேதுவும் வேலை கிடைத்து சென்னைக்கு வந்து விட்டதாக சொன்னார்கள்.

அதன்பிறகு இன்றுதான் அவனை சந்திக்கிறேன்.

எனக்கு எப்போதும் மனதில் உறுத்திக்கொண்டே இருந்த அந்த விசயத்தைப் பற்றி அவனிடம் இன்று கேட்டுவிட நினைத்து கடைசியில் கேட்டேவிட்டேன்,

நான் அப்போ கேள்விப்பட்டதை அவனிடம் கொஞ்சம் நாகரிகமாக சொல்லிவிட்டு,

"உனக்கு அதெல்லாம் தெரியுமா?" என்றேன்.

"தெரியுமே?" என்றான் கொஞ்சமும் குழம்பாமல்.

"தெரிந்துமா நீ வீட்டுல?" எனக்கேள்வியை முடிப்பதற்கு முன், அவன் கூறினான்,

"ஆயிரம் இருந்தாலும் அவங்க என் அம்மா இல்லையாடா! நீ என்னை விட்டு விலகிப்போனது போல் என்னால் அவ்வளவு ஈசியாக விலக முடியுமா என்ன?"

3 comments:

Anonymous said...

கதை நல்லா இருக்கு! (கதையாய் இருக்கும் பட்சத்தில்?

Anonymous said...

Nalla kadahai.. Inigo

iniyavan said...

உங்கள் நடை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் தவறினாலும் பிசகி இருந்திருக்கும். காமம் சம்பந்தமாக எழுதும்போது இம்மி பிசகினாலும் சொதப்பிவிடும்.

நீங்கள் சரியாகக் கயாண்டிருக்கிறீர்கள். profile ஐப் பார்த்தேன். நிதி நிர்வாகம் என்றிருக்கிறது. மகிழ்ச்சி.

அன்புடன்

கோபி ராமமூர்த்தி

http://ramamoorthygopi.blogspot.com/