Jan 13, 2011

நோகடிக்கக் கூடாது!

ஒரு வழியாக செவ்வாய் கிழமை காலை குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட திருச்சி வந்து சேர்ந்தேன். நிறைய நண்பர்களை சந்திக்க ஆசை. நேரம் கிடைக்குமா? எனத்தெரியவில்லை. எப்பொழுதும் என்ன வேலைகள் எல்லாம் பார்க்க வேண்டும்? என்றைக்கு என்ன வேலை பார்க்க வேண்டும் என்று ஒரு செக் லிஸ்ட்டுடன் வருவேன். இப்பொதும் அப்படித்தான். இருந்தாலும், முதலில் நான் பார்க்க நினைத்தது, என் நண்பனின் குடும்பத்தை. 25 நாட்களுக்கு முன் அவன் எங்களை விட்டு பிரிந்து இறைவனிடம் சென்றுவிட்டான். நண்பர்களின் வட்டத்தில் முதல் மரணம் இது.. அவனைப் பற்றியும் அவன் மரணத்தைப் பற்றியும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

முதலில் என் நண்பனின் அண்ணனை சந்தித்தேன். அவனும் எனக்கு மிக நெருக்கம். முதலில் என்னை சந்தித்தவுடன் வந்த அழுகையை அடக்கிக்கொண்டான், நானும்தான். நானும் அவனும் அவன் தம்பி வீட்டிற்கு சென்றோம். சென்ற வழியில் அவன் கூறிய விசயங்கள் தான் என்னை இந்த இடுகையை எழுத வைக்கிறது. அவன் இறந்ததோ ஹார்ட் அட்டாக்கில். குடிப்பழக்கம் தான் காரணம். ஆனால், ஊரில் உள்ளவர்கள் பல விதமாக பேசுவதாக கூறி வருத்தப்பட்டான். எனக்கு இதில் நிறைய அனுபவம் இருந்ததால், அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே சென்றேன்.

வீட்டை நெருங்குகையில் அவனிடம் சொன்னேன்,

"இழப்பின் வலி எனக்கு மிக நன்றாகத் தெரியும். நிறைய அனுபவித்துவிட்டேன். அதனால் என்னால் எதுவும் பேச முடியாது. அமைதியாக மட்டுமே என்னால் இருக்க முடியும். உன் அம்மா அப்பாவிற்கோ, உன் தம்பியின் மனைவிக்கோ என்னால் எதுவும் ஆறுதல் கூற முடியாது என நினைக்கிறேன்' என்றேன்.

ஆனால் வீட்டில் நுழைந்தவுடன், அவன் கதறி அழ ஆரம்பித்துவிட்டான். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்கள் கலங்குகின்றன. வீடு முழுக்க அவனின் போட்டோக்களும், அவன் பொருட்களும். மிகப்பெரிய படிப்பாளன். ஒரு அறை முழுவதும், ஜெயகாந்தனில் தொடங்கி எஸ் ராவரை புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிறான். அவனின் வீட்டின் கோலத்தை பார்த்தோமானால் அவன் 100 வருடம் வாழ வேண்டும் என நினைத்திருப்பான் என தெரிந்தது. அவ்வளவு ஆசையாக அனைத்தையும் வாங்கி வைத்திருக்கிறான்.

"உலகத்திலேயே மிகக் கொடுமையான விசயம் என்னவென்றால் நண்பனின் இழப்பிற்கு பின் அவன் மனைவிக்கு ஆறுதல் சொல்வதுதான். என்ன சொல்லி தேற்ற முடியும். அவன் போயிருக்கக்கூடாது, இருந்தாலும்.... என்று, பேசிப்பாருங்கள், அதன் வலித்தெரியும்"

நான் அவன் அப்பாவிடம் சொன்னது, "யாரையும் அதிகம் அந்த பெண்ணிடம் அண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களின் வேதனை அவர்களுக்குத்தான் தெரியும். அவர்களாகவே அழுது சரியாகி விடுவார்கள். என்ன கொஞ்ச காலம் பிடிக்கும். மறதி ஒன்றுதான் ஆண்டவன் நமக்கு கொடுத்த வரம். ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும், மறப்பது எவ்வளவு கடினம் என்பதும்" என்று பேசி ஒரு மாதிரி சமாளித்தேன்.

நான் ஏன் ஒன்றும் பேச மாட்டேன் என சொன்னேன் என்றால்,என் தங்கை இறந்த பிறகு ஒரு சம்பவம் நடந்தது. அதன் பிறகுதான் நான் இப்படி மாறிப்போனேன். ஒரு தமபதியினர் வீட்டிற்கு வந்தார்கள். வந்தவருக்கும் என் அப்பாவிற்கும் நடந்த மறக்க முடியாத உரையாடலில் இருந்து அவர் பேசியதை மட்டும் கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள்.

"ரொம்ப கஷ்டப்பட்டாங்களோ?"

"கிட்னி பெயிலியராமே?"

"ரொம்ப வலிச்சிருக்கும் இல்லை"

"உங்க பொண்ணு. எவ்வளவு கஷ்டமா இருக்கும் உங்களுக்கு?"

"எப்படித்தான் தாங்கிக்கறீங்களோ?"

"ஆப்பரேஷன் பண்ணும்போது எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க?"

"கல்யாணம் வேற ஆகலை"

"நல்ல வேளை. ஒரு வேலை பிழைச்சிருந்தா, அவங்களுக்கு மருந்து வாங்கியே ரொம்ப கஷ்டப்படுவீங்க?"

"என்ன காரணம்? ஜாதகம் பார்த்தீங்களா?"

"உங்க பொண்ணு, அதுவும் 25 வயசுல, ரொம்ப பாவம சார் நீங்க?"

இப்படி பேசிப்பேசி அப்பாவை அழ வைச்ச கொடுமயை பண்ணினார், மிக நல்ல பொறுப்பில் இருந்த ஒரு மனிதர்.

ஏற்கனவே இழப்பின் வலியில் இருக்கும் ஒருவரிடம் அதைப்பத்தி பேசி, அவரை ரணகளமாக்கி, அவர் துக்கத்தை அதிகப்படுத்தலாமா?

அதற்கு எதுவும் பேசாமல் வந்து விடுவதே நல்லது அல்லவா?

8 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்.எதுவும் பேசாமல் இருப்பதே இந்த மாதிரி தருணத்தில் நல்லது.

iniyavan said...

//ஆமாம்.எதுவும் பேசாமல் இருப்பதே இந்த மாதிரி தருணத்தில் நல்லது.//

வருகைக்கு நன்றி மேடம்.

sriram said...

உலக்ஸ்,
வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நானும் இம்மாதிரியான சமயங்களில் அதிகம் பேச மாட்டேன்.

சாவு வீட்டுக்குப் போகும் போது கையில் கொஞ்சம் பணம் எடுத்துப் போவேன்.
உங்க கிட்ட பணம் இருக்கும், இந்நிலையில் அதை எடுக்க முடியுமா இல்லயான்னுத் தெரியாது, இப்போதைக்கு வச்சிக்கோங்க, மத்ததை அப்புறம் பேசிக்கலாமுன்னு சொல்லி கொடுத்திடுவேன்.

சாவுக்கு அப்புறம் போனால், உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க (சர்ட்டிஃபிக்கேட் வாங்குறது போன்றவை) என்று சொல்லி விட்டு வந்துவிடுவேன், இவ்ளோதான் எனக்குத் தெரிஞ்ச துக்கம் விசாரிக்குறது

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

vinu said...

naaan vilangugalai veetiTkkul viduvathillay;manithargalai mattumthaan;


ungalukku enathu aallntha mounangalllllll

iniyavan said...

//சாவுக்கு அப்புறம் போனால், உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க (சர்ட்டிஃபிக்கேட் வாங்குறது போன்றவை) என்று சொல்லி விட்டு வந்துவிடுவேன், இவ்ளோதான் எனக்குத் தெரிஞ்ச துக்கம் விசாரிக்குறது

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

தங்களின் வருகைக்கும், தெளிவான பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

iniyavan said...

naaan vilangugalai veetiTkkul viduvathillay;

வருகைக்கு நன்றி வினு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்

kitchasfl said...

thanks ulags.
when met with an accident first call was to our friend sendhil that too very early in the morning.
that much helpful and very friendly .realy we will miss him.