Feb 11, 2011

குழந்தை (சிறுகதை) - பாகம் 1

நேற்றிலிருந்து ஒரே தலைவலி. தலை பாரமாக இருக்கிறது. சாதாரண தலைவலி என்றால் ஒரு மாத்திரை போட்டு வலியை தடுத்துவிடலாம். ஆனால் தலை முழுவதும் யாரோ அம்மி குழவியால் அடிப்பது போல் உள்ளது. இதற்கு ஒரு மாத்திரை அல்ல, நூறு மாத்திரை போட்டால் கூட வலி போகாது. வலி போக எனக்குத் தேவை, மன நிம்மதி. அது இப்போது எனக்கு கிடைக்கும் என தோன்றவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் கலா. என் தர்மபத்தினி. எனக்கு அவள் மேல் கோபம் வருவதற்கு பதில் வருத்தம்தான் வருகிறது. நடக்குமா? நடக்காதா? என்று தெரியாத விசயத்தைப் பற்றியே இருபத்து நான்கு மணி நேரமும் பேசிக்கொண்டு இருக்கிறாள். ஆனால், அவளைச் சொல்லியும் குற்றம் இல்லை. கல்யாணம் ஆன எல்லா பெண்களுக்கும் ஏற்படும் அதே கவலைதான்.

எங்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகிறது. எங்கள் கல்யாணம் பெற்றோர்களாய் பார்த்து பேசி முடிவு செய்த கல்யாணம். நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறேன். கை நிறைய சம்பளம் வாங்குகிறேன். கலாவும் மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவள்தான். எங்கள் இருவரின் குடும்பமுமே நல்ல பணக்கார குடும்பம். கல்யாணம் மிக விமர்சையாக நடந்தது. ஊரே எங்கள் கல்யாணத்தை பார்த்து பொறாமை பட்டது. எல்லோரும் எங்களை "மேட் ஃபார் ஈச் அதர்" என்றார்கள். கல்யாணம் ஆன புதிதில் நாங்கள் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஹனிமூனுக்கு காஷ்மீர் போனோம். தாஜ்மஹால் போனோம். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண் பிள்ளைகளுக்கும் இரண்டு காதுகளும் கொஞ்சம் பெரிதாக இருக்கும். என்ன காரணம்? என்று தெரியவில்லை. முதலில் எனக்கு அது குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தாலும், கலா என்னை 'காந்தி காது' என்று சொல்லி கிண்டலடிக்க ஆரம்பித்தவுடன், அந்த வருத்தமும் போய்விட்டது.

இப்படி சந்தோசமாகத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. பின் என்ன கவலை என்கின்றீர்களா? கல்யாணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. முதல் இரண்டு வருடம் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை நாங்கள். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல கவலை அதிகமாய்விட்டது. இத்தனைக்கும் ஜாதகம் எல்லாம் பொருந்தித்தான் கல்யாணம் செய்து கொண்டோம். ஜாதகப்பிரகாரம் எனக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறது. அதனால் நான் நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன். ஆனால் கலாதான் ரொம்ப வருத்தப்படுகிறாள்?

பார்க்காத ஜோசியர்கள் இல்லை. போகாத கோயில்கள் இல்லை. சுத்தாத அரசமரங்கள் இல்லை. இருந்தும் ஒரு பிரயோஜனும் இல்லை.

பார்க்கும் டாக்டர்கள் எல்லாம் சொல்லும் ஒரே விசயம். இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. 'குழந்தை பிறக்கும்' கொஞ்சம் பொறுத்திருங்கள். நானும் எத்தனையோ முறை கலாவிடம் சொல்லி பார்த்துவிட்டேன், கொஞ்சம் காத்திருக்கலாம் என்று. அவள் கேட்டால்தானே? நேற்றும் அப்படித்தான்:

"ஏங்க பக்கத்து வீட்டு மாலினி ஏதோ ஒரு நாட்டு வைத்தியர்கிட்ட போய்ட்டு வந்தாளாம். மூணு மாசம் டிரீட்மெண்ட் முடிந்து இப்போ முழுகாம இருக்கலாம்"

"என்ன டிரீட்மெண்டாம்?"

"ஏதோ மூலிகை மருந்தாம், பத்திய சாப்பாடாம், அதுவும் மண்பானையிலத்தான் சாப்பிடனுமாம்"

"கலா, நீ ஏன் போட்டு குழப்பிக்கிற?. அதான் டாக்டர் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டாருல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணா குழந்தை பிறக்கும்னு சொல்லுறாருல்ல. அப்புறம் ஏன் கவலைப்படுற?"

"எப்படிங்க கவலைப்படாம இருக்க முடியும்? உங்க வீட்டுல எல்லோருக்கும் குழந்தைகள் இருக்கு. எங்க வீட்டுலயும் எல்லோருக்கும் குழந்தைகள் இருக்கு. நமக்கு மட்டும் இல்லைனா, வருத்தப்படமா, சந்தோசப்படவா முடியும்? வெளிய தலை காட்ட முடியலை. ஒரு நல்ல காரியத்துக்கு போக முடியலை. எனக்கு மட்டும் ஏன் இப்படி? ஆண்டவன் ஏன் நம்மை சோதிக்கிறான்?" என்று அழ ஆரம்பித்தவளை கொஞ்சம் ஆதரவாக அணைத்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன்.

"கலா, எனக்கு மட்டும் வருத்தம் இல்லைனு நினைக்கிறீயா? இருக்கு. ஆனா நான் உள்ளுக்குள்ளயே வைச்சு குமுறிக்கிட்டு இருக்கேன். நீ என் கிட்ட சொல்லுற அவ்வளவுதான். நான் தான் ஒரு குழந்தைய தத்து எடுத்து வளர்க்கலாம்னு சொல்றேன். அதையும் ஒத்துக்க மாட்டேங்கறே?"

"அது எப்படிங்க? நமக்கே நமக்குன்னு நம்ம குழந்தை வேண்டும்ங்க. அடுத்தவங்க குழந்தையை என்னால எடுத்து வளர்க்க முடியாதுங்க"

"அப்படி இல்ல கலா. இப்படியே எல்லோரும் நினைச்சா, அனாதை குழந்தைகளோட கதி"

"அவங்களை பாதுக்காக்க நிறைய பேர் இருக்காங்க" என்று சொன்னவளிடம் இதற்கு மேல் அந்த சப்ஜக்ட்டை பற்றி பேச விரும்பாமல், பேச்சை திசை மாற்றினேன்.

"கலா, ஒண்ணு வேணா பண்ணலாம். சென்னையில என் நண்பனுக்கு நல்லா தெரிஞ்ச ஒரு டாக்டர் இருக்காங்க. அவங்களை வேணா போய் ஒரு தடவை பார்த்துட்டு வரலாமா?"

- தொடரும்

No comments: