என்னுடைய 100வது புத்தக வெளியீட்டு விழாவில்தான் அவளைச் சந்தித்தேன். புத்தக வெளியீடு விழா முடிந்ததும் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏறக்குறைய ஆண்களும் பெண்களுமாய் நூறு பேர் அந்த ஹாலில் அமர்ந்து இருந்தார்கள். சாதாரணமாக எழுத ஆரம்பித்த நான் ஒரு 15 வருடங்களில் நூறு புத்தகங்கள் எழுதுவேன் என்றும், இத்தனை ஆயிரம் வாசகர்களை பெறுவேன் என்றும் கனவிலும் நினைக்கவில்லை.
நான் சாதரணமாக எழுதிய அத்தனை கதைகளையும் மக்கள் மிகவும் ரசிக்க ஆரம்பித்தார்கள். விருதுகள் குவிய ஆரம்பித்தன. 'இனியவன்' என்கிற என் பெயர் வராத பத்திரிகைகளே இல்லை. சராசரி மக்களின் உறவுகளை வைத்துத்தான் பெரும்பாலும் எழுதினேன்.
கலந்துரையாடல் ஆரம்பித்தது. வழக்கம் போல எல்லோரும்,
"அந்த கதையில ஏன் ரவி கோகிலாவை கல்யாணம் பண்ணிக்கலை?"
"ஏன் ஒரு கதையில நண்பனோட அம்மாவை பத்தி தப்பா எழுதுனீங்க?"
'ஏன் உங்க கதைகள்ல பெரும்பாலும் கதாநாயன் பெயர் ரவின்னும், நாயகி பேர் கீதானும் வருது?"
"அக்கா"ன்னு ஒரு கதை எழுதுனீங்களே அது உண்மை கதையா? அது உண்மையா இருந்தா, அந்த லெட்டரை ஏன் உங்க அக்காகிட்ட தகுந்த சமயத்துல கொடுக்கல?"
"நீங்க எழுதுன முதல் கதையில, நாயகன் காதலியை விட்டுவிட்டு அவள் விதவை அக்காவை கல்யாணம் செய்வதாய் முடித்திருந்தீர்களே? நீங்கள் ஏன் அவ்வாறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை?"
என்று சரமாரியாக கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். நானும் பதில்கள் சொல்லிக்கொண்டே வந்தேன்.
கடைசியில்தான் அவள் கேள்வி கேட்க எழுந்தாள். தன் பெயர் அனு என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள். வயது ஒரு 20 இருக்கலாம். சின்ன வயது ரேவதி போல துறு துறு என்று இருந்தாள். பார்க்க லட்சணமாக இருந்தாள். அவள் உடுத்தியிருந்த உடை மூலமே அவளைப் பற்றிய ஒரு நல்ல இமேஜ் என் மனதில் ஏற்பட்டது. அங்கே வந்த பெண்கள் பெரும்பாலானோர் ஸ்கர்ட், ஜீன்ஸ் என்று அணிந்து வந்திருக்க, இவள் மட்டும் புடவையில் ரொம்ப அடக்கமாக இருந்தாள். பார்க்க மிக அழகாக இருந்தாள்.
"சார்! தப்பா எடுத்துக் கொள்ளவில்லை என்றாள் உங்களிடம் ஒரு கேள்வி" என்று என் அனுமதியை எதிர்பார்த்து என் கண்களைப் பார்த்தாள்.
நான் தலை ஆட்டவே,
"சார், உங்கள் கதைகள் பெரும்பாலும் ஒரு வித நல்லத்தன்மை உடைய ஷாப்ட் கதைகளாகவே உள்ளன. கதாநாயகன் பெரும்பாலும் நல்லவனாகவே காட்டப்படுகிறானே. நீங்கள் அந்த அளவு நல்லவரா?"
ஒரு எழுத்தாளனின் பிரச்சனை என்னவென்றால், அவன் எழுத்து தான் அவன் வாழ்க்கை என்று வாசகர்கள் நினைத்துவிகிறார்கள். சில சமயம் அவனின் நிஜ பிம்பம் தெரியும்போது வருத்தப்படுகிறார்கள்.
திடீரென இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் அவன் நல்லவனா இல்லை கெட்டவனா? என்று. அதுவும் இல்லாமல் நல்லவன் என்றால் யார்? கெட்டவன் என்றால் யார்? யார் அதற்குறிய வரைமுறையை தீர்மானித்தது? ஒருத்தருக்கு ஒருவரின் செயல் நல்லவையாக படலாம். ஆனால் அதே செயல் இன்னொருவருக்கு கெட்டவையாக படலாம்.
என்னைப் பொறுத்தவரை கொலை செய்பவன், கற்பழிப்பவன், துரோகம் செய்பவன், திருடுபவன், அடுத்தவன் சொத்தை அபகரிப்பவன் மட்டும்தான் கெட்டவர்கள் என்று சொல்ல மாட்டேன். ஒருவரின் மனதை நோகடித்து அதனால் அவர்கள் வருந்த நேர்ந்தால், அப்படி ஒரு செயலை செய்தவனும் என்னைப் பொறுத்தவரை கெட்டவன்தான். அப்படி பார்க்கப் போனால், இங்கே யார் நல்லவர்? என் அகராதிப்படி அனைவரும் கெட்டவர்களா? அப்போ மகாத்மா காந்தி மட்டும்தான் நல்லவரா?
என் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தது. சபையில் ஒரு சிறு சல சலப்பு ஏற்பட்டது. எல்லோரும் என் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
"நல்லவனா? கெட்டவனா?"
"தெரியலயேமா? தெரியலையேமா?" என்று நாயகன் கமல் போல தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை.
அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு குடித்தேன். தெளிவாக அந்த பெண்ணைப் பார்த்து சொன்னேன்,
"நான் ரொம்ப கெட்டவனம்மா?"
யாரும் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை என்று அங்கு ஏற்பட்ட கூச்சலில் இருந்தே தெரிந்தது. அந்த பெண்ணும் இந்த பதிலை எதிர்பார்த்திருக்கமாட்டாள். நாளை எல்லா பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தி இதுதான்,
"இனியவன் கெட்டவர். அவரே ஒப்புக்கொண்டார்"
அந்தப் பெண் அனுவின் கேள்வியும், என் பதிலும் என் வாழ்க்கையை புரட்டிப்போட போகிறது என்று அன்று நான் அறிந்திருக்கவில்லை.
-தொடரும்
5 comments:
ஒருவரின் மனதை நோகடித்து அதனால் அவர்கள் வருந்த நேர்ந்தால், அப்படி ஒரு செயலை செய்தவனும் என்னைப் பொறுத்தவரை கெட்டவன்தான். //
அருமை
புடவைன்னா அடக்கம்.. மடிசார்னா முழு அடக்கம்..ஜீன்ஸ் நோ அடக்கம்.. ஆணுக்கு அங்கவஸ்திரம் என்னாச்சு?...குடுமி??? . காதுல வைரத்தோடு போட்டா இன்னும் கூட ஆண் அழகா?. இருப்பானே?..
:))
// பயணமும் எண்ணங்களும் said...
ஒருவரின் மனதை நோகடித்து அதனால் அவர்கள் வருந்த நேர்ந்தால், அப்படி ஒரு செயலை செய்தவனும் என்னைப் பொறுத்தவரை கெட்டவன்தான். //
அருமை//
நன்றி!
பயணமும் எண்ணங்களும் said...
புடவைன்னா அடக்கம்.. மடிசார்னா முழு அடக்கம்..ஜீன்ஸ் நோ அடக்கம்.. ஆணுக்கு அங்கவஸ்திரம் என்னாச்சு?...குடுமி??? . காதுல வைரத்தோடு போட்டா இன்னும் கூட ஆண் அழகா?. இருப்பானே?..
:))
நான் நீங்கள் நினைக்கும் அர்த்தத்தில் எழுதவில்லல.
உங்களின் வருகைக்கிற்கும், நன்றி தோழி.
Post a Comment