Feb 12, 2011

குழந்தை (சிறுகதை) - பாகம் 2

நீண்ட யோசனைக்கு பின் சம்மதித்தவளை கட்டி அணைத்து நெற்றியில் ஒரு முத்தமிட்டு அவளை ஆதரவாக அணைத்து படுக்க வைத்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆம்! அவள் சொல்வதும் நியாயம்தான். நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படி? தூங்க முயற்சி செய்து, முடியாமல் கொஞ்சம் காற்றாவது வாங்கலாம் என்று பால்கனிக்கு வந்தேன். விடியும் வரை தூங்கவே இல்லை. ஒரே தலைவலி. யாரோ அம்மி குழவியால் அடிப்பது போல் உள்ளது

இரண்டு நாட்கள் கழித்து நண்பன் ஒருவன் முயற்சியால் பல்லவனில் டிக்கெட் கிடைத்தது. அன்று மதியம் சென்னையை அடைந்து கலாவின் அக்கா வீட்டுக்குச் சென்றோம். டாக்டரிடன் அப்பாயிண்ட்மெண்ட் மாலை 6 மணிக்குத்தான். கலாவை கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்லி விட்டு, நான் என் நண்பனை பார்க்க சென்றேன். அவனும் ஒரு டாக்டர்தான். அவனின் ஏற்பாட்டின் பேரில்தான் எனக்கு அந்த லேடி டாக்டரின் அப்பாயிண்மெண்டே கிடைத்தது. அவனிடம் கொஞ்சம் மனம்விட்டு பேசிவிட்டு வரலாம் என நினைத்து கிளம்பினேன்.

அவனின் கிளினிக்கை நெருங்கினேன். அப்போது ஒரு பெண் என்னை கிராஸ் செய்யவே, எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே? என்று திரும்ப பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. ராகிணி! என் நினைவுகள் 15 வருடம் பின்னோக்கி சென்றது.

அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ராகிணியின் குடும்பம் எங்கள் வீட்டு ஓனரின் ஹஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்தது. அவர்களின் குடும்பமே அவர்கள் வீட்டு பண்ணையில் வேலை பார்த்தது. எங்கள் வீட்டு வேலைக்கும் ஆள் தேவைப்படவே, அவர்கள் வீட்டிலிருந்து ராகிணியை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ராகிணி அழகு என்றால் அப்படி ஒரு அழகு. எப்போதும் வெறும் பாவாடை சட்டையில்தான் உலா வருவாள். அப்போது அவளுக்கு 19 வயது இருக்கும். ஏழையாய் இருந்தாலும் கொஞ்சம் அதிக செழிப்புடனே இருந்தாள். எல்லாமே அவளுக்கு அதிகமாகவே இருந்தது. எங்கள் தெருவில் அத்தனை பெண்கள் இருந்தாலும், என் கவனம் எப்போதும் ராகிணி மேலேயே இருந்து வந்தது. அப்போது எனக்கு ஏற்பட்டிருந்த அந்த உணர்வு காதல் என்று எல்லாம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அது ஒரு இனக்கவர்ச்சி அவ்வளவுதான். ஆனால், அந்த வயதுக்கே உரிய திமிர், ஆணவம், ஆண் என்கிற அகம்பாவம் எல்லாம் எனக்கு இருந்தது. அந்த வயது நண்பர்களும் 24 மணி நேரமும் பெண்களைப் பற்றி பேசுபவர்களாகவே இருந்தனர். இப்போது நினைத்துப்பார்த்தால் தவறாக தெரிந்தாலும், அப்போது தெரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெருங்க ஆரம்பித்தேன். அவளும் என்னிடம் எந்த ஒரு விகல்பமும் இல்லாமல் பழக ஆரம்பித்தாள். ஆனால் என்னுடைய குறிக்கோள் வேறு மாதிரி இருந்தது. இப்படியே ஒரு ஆறு மாதம் போனது. ஒரு நாள் எங்கள் வீட்டில் அனைவரும் உறவினர் வீட்டின் திருமணத்திற்கு சென்றிருந்தார்கள். எனக்கு செமெஸ்டர் எக்ஸாம் என்றதால் நான் செல்லவில்லை. பரிட்சை முடிந்து வீட்டிற்கு வந்த போது மதியம் 3 மணி. ராகிணியிடம் சாவி இருந்ததால், அவள் என் வீட்டிற்கு வந்து காத்திருந்தாள். வீட்டின் உள் நுழைந்தவன், அவளையும் உள்ளே கூப்பிட்டேன்.

பேசிக்கொண்டே இருந்தோம். வீட்டில் யாரும் இல்லை. தனிமை. கல்லூரியில் படிக்கும் இளைஞனான என் அருகில் 19 வயது நிரம்பிய ஒரு அழகிய பெண். அவளின் ஏழ்மை. எல்லாமுமாக சேர்ந்து நான் அந்த தப்பை....... அப்படியே அடுத்த ஒரு வாரமும் தொடர்ந்தது. என்ன ஆனது? என்று சரியாக எனக்கு நினைவில்லை. யாரோ தூரத்து மாமா ஒருவர் ராகிணியை திருமணம் செய்து கொள்வதாக சொல்வதாகவும், இனி அவள் நார்த் இந்தியாவிலேயே இருக்கப் போவதாகவும் சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டனர். எங்கள் உறவு அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைகிறேன். பின் சில நாட்கள் அவளின் நினைவாக இருந்தேன். பின்பு காலப்போக்கில் நான் அவளை மறந்து போய்விட்டேன்.

இத்தனை வருடங்கள் கழித்து இன்றுதான் அவளைப் பார்க்கிறேன். அதே அழகு. என்ன! கொஞ்சம் சதை போட்டிருந்தாள்.

"எப்படி இருக்கீங்க?" ராகிணியின் குரல் கேட்டுத்தான் பழைய நினைவுகளிலிருந்து விடுப்பட்டேன்.

"நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?"

"எனக்கு என்ன! நல்லாத்தான் இருக்கேன்"

"நீ எப்படி இந்த ஊருல?"

"அவருக்கு சென்னையில ஒரு வேலை. அதான் வந்தோம். இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவோம். மனைவி எப்படி இருக்காங்க. எத்தனை குழந்தைங்க?" என்று சாதாரணமாக விசாரித்துக்கொண்டிருந்தாள்.

நான் அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அவளைப் பார்த்து "நீ ஏன் ஆஸ்பத்திரிக்கு? உடம்பு சரியில்லையா?"என்றேன்.

"எனக்கு ஒண்ணும் இல்லை. பையனுக்குத்தான் லேசா காய்ச்சல். மெடிக்கல்ல மருந்து வாங்கிட்டு இருக்கான்"

"உனக்கு எத்தனை குழந்தைங்க?" என்றேன்

"ஒரு பையன்" என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"எங்க அம்மா போயிட்ட" என்று ஒரு 14 வயது பையன் ராகிணியை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

ஏதோ ஒன்று உறுத்தவே நன்றாக அவனை உற்றுப்பார்த்தேன்.

அவன் காதுகள் ரெண்டும் ரொம்ப பெருசாய் இருந்தது.

எனக்கு குழந்தை பிறக்காததன் காரணமும் தெரிந்து விட திரும்பி பார்க்காமல் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன்.

1 comment:

Anonymous said...

நல்ல கதை சார்!

நல்லா கதை எழுதறீங்க. ஆனா உங்களுக்கு ஏன் ஒரு கமெண்டும் வருவதில்லை என தெரியலை.

-இளங்கோ