Feb 7, 2011

250 வது இடுகை - விவேகானந்தர்

250 வது இடுகை ஏதாவது ஒரு நல்ல விசயத்தைப் பற்றி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் இன்று நான் விவேகானந்தரைப் பற்றி கேட்ட சில நிகழ்வுகளை உங்களுடன் பகிரலாம் என நினைத்து இந்த இடுகையை எழுதுகிறேன். நான் சுவாமியைப் பற்றி எழுதுவது அனைவரும் ஏற்கனவே அறிந்த ஒன்றாக இருக்கலாம். இன்னொரு முறை ஒரு மகானைப் பற்றி படிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!

நான் பல முறை யோசிப்பதுண்டு, மகாத்மா காந்திஜி, சுவாமி விவேகானந்தர் மற்றும் ரமண மகரிஷி போல் ஏன் நம்மால் வாழ முடியவில்லை என்று. எப்படிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது மிக ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களைப் போல ஒரு சதவிகதம் வாழ்ந்தால் கூட என் வாழ்விற்கு ஒரு அர்த்தம் ஏற்படாதா என்று எண்ணுகிறேன்.

ஒரு முறை நான் சிங்கப்பூரில் தங்கி இருந்த போது மிக அழகான ஒரு பெண்ணை சந்தித்தேன். அப்போது நான் பிரம்மச்சாரி. ஒரு நாள் முழுவதும் அவளுடன் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அன்று இரவு 1 மணி வரை பேசிக்கொண்டு இருந்துவிட்டு, அவளை வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். அப்போது ஒரு என் மனதில் ஒரு ஆசை இருந்தது. ஏன் ஏதும் நடக்கவில்லை? என ஏங்கினேன். பின் நண்பர்களிடம் அதைப்பற்றி குறிப்பிட்டபோது அவர்கள் சொன்னது:

"அப்போ வடை போச்சா?"

விவேகானந்தர் சிக்காகோவில் உலக புகழ் பெற்ற அவரின் உரையை முடித்து கீழே இறங்குகிறார், அப்போது ஒரு அழகிய பெண்மணி சுவாமியை நெருங்கி,

"சுவாமி, உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என நேரடியாக கேட்கிறார். உடனே சுவாமி விவேகனந்தர் அந்தப் பெண்ணைப் பார்த்து,

"ஏனம்மா, இந்த முடிவு? என்னைக் கேட்க என்ன காரணம்?"

"உங்களைப் போல அறிவும், தெளிவான சிந்தனையும் கொண்ட ஒரு ஆண்மகனை உங்கள் மூலமாக பெற விரும்புகிறேன்" என்கிறார். அதற்கு சுவாமிஜி சொன்னாராம்.

"அதற்கு எதற்கு அம்மா என்னை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும். என்னையே நீங்கள் உங்கள் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுங்களேன்"

அவர் எங்கே? நான் எங்கே?

ஒரு முறை எங்கள் ஊரில் ஒரு நண்பரின் வீட்டிற்கு சாப்பிடக்கூப்பிட்டார்கள். பொதுவாக அவரின் வீட்டிற்கு எங்கள் தெருவைச் சேர்ந்த யாரும் சாப்பிட செல்ல மாட்டார்கள். ஏன் என்று சொல்ல விரும்பவில்லை. நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஆனால் நான் சாப்பிட போனேன். என்னதான் சாப்பிட போனாலும், என்னால் முழுமையாக சாப்பிட முடியவில்லை. பேருக்கு சாப்பிட்டுவிட்டு உடனே வீடு திரும்பினேன். நண்பரின் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என பின்னாளில் என் ச்ய்கையை நினைத்து மிகவும் வருந்தினேன்.

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மக்களுக்கு சொற்பொழிவும், விளக்கங்களும் சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டாம் நாள் இரவு ஒரு மரத்தடியில் படுத்து உறங்க ஆரம்பித்தார். அப்போது யாரோ நிற்பது போல் தெரியவே, யார் என்று பார்த்தார்.

ஒரு வயதான பெரியவர் நின்றிருந்தார். சுவாமிஜி அவரை உற்று நோக்கினார்.

அந்த பெரியவர், "சுவாமி, நீங்க ரெண்டு நாட்களா மக்கள்கிட்ட நிறைய பேசினீங்க. அது எல்லாம் என்ன என்று எனக்குப்புரியவில்லை. ஆனால் ஒரு விசயம் மட்டும் எனக்கு புரிந்தது. நீங்கள் இரண்டு நாட்களா ஏதும் சாப்பிடலை. நான் சமைச்சு கொடுத்தா சாப்பிடுவீங்களானு எனக்குத்தெரியலை. அப்படியே சாப்பிட்டாலும், நான் சமைச்சதை சாப்பிட்டதற்காக இந்த மக்கள் உங்களைப் பற்றி தப்பா நினைப்பாங்களேன்னு கவலையா இருக்கு. ஆனா நீங்க பசியா இருக்கீங்கன்னு தெரியுது. அதனால, கோதுமை, அடுப்பு, மற்ற பொருட்கள் எல்லாம் தனித்தனியா கொண்டு வந்திருக்கேன். நீங்களே சமைச்சு சாப்பிடுங்க" என்று சொன்னாராம்.

அதற்கு சுவாமிகள், "பெரியவரே, என்னை பசிக்குதா சாப்பிடுறீயானு கேட்டது எங்க அம்மா மட்டும்தான். அதன் பிறகு நீங்கதான் கேட்டு இருக்கீங்க. அதனால் நீங்க என் தாய் மாதிரி. என் தாய் சமைச்சு கொடுப்பதை நான் வேண்டாம்னு சொல்வேனா? நீங்களே சமைச்சு கொடுங்க. நீங்கள் கொடுக்கப்போகும் உணவை காசி கோயிலின் பிரசாதத்தை விட உயர்வாக நினைக்கிறேன்" என்றாராம்.

ஒரு முறை கோலாலம்பூரில் ஒரு 5ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்து இருந்தேன். ரூமில் நுழைந்த எனக்கு அங்கே இருந்த ஸ்மெல் பிடிக்கவில்லை. புகார் சொன்னதும் வேறு ரூம் மாற்றிக்கொடுத்தார்கள். புது ரூமில் கீழே உள்ள மேட்டில் ஏதோ சிந்தி அழுக்காக இருந்தது. மீண்டும் புகார் செய்யவே, மீண்டும் வேறு ரூம் கொடுத்தார்கள். "நாம் இவ்வளவு பணம் தருகிறோம். நல்ல ரூம் கொடுத்தால் என்ன என நினைத்தேன்"

ஒரு முறை சுவாமி அமெரிக்காவில் இருந்த போது, மெத்தையில் படுக்காமல், தரையில் துண்டு விரித்து படுத்தாராம். அங்கே இருந்தவர்கள்,

"சுவாமி, நீங்கள் ஏன் தரையில்?" என்று கேட்டார்களாம்.

சுவாமிஜி பதில் இப்படி சொன்னாராம்,

"எங்கள் இந்தியாவில் கோடிக்கான மக்கள் இருக்க இடம் இல்லாமல் தெருவோரத்திலும், பிளாட்பாரத்திலும் படுத்து தூங்குகையில், நான் எப்படி இங்கே மெத்தையில் தூங்க முடியும்"

இதுதான் மகான்களின் குணம். இது போல் பல விசயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த மாதிரி விசயங்களை கேள்வி பட்டு, இப்போது நான் நினைப்பது, சிந்திப்பது எல்லாம் ஒரே ஒரு விசயம்தான்,

"என்னால் அவர்களைப்போல மகான்களாக வாழ முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒரு நல்ல மனித நேயமிக்க மனிதனாகவாவது வாழ வேண்டும் என எண்ணுகிறேன். முயற்சிக்கிறேன்"

பார்ப்போம்!


3 comments:

CS. Mohan Kumar said...

250-க்கும் ஆயிரம் தொடவும் வாழ்த்துக்கள்.

iniyavan said...

//250-க்கும் ஆயிரம் தொடவும் வாழ்த்துக்கள்//

வருகைக்கிற்கும், வாழ்த்திற்கும் நன்றி மோகன்.

Anonymous said...

Good one