Feb 28, 2011

நான் கெட்டவன்! - பாகம் -2


நினைத்தது போலவே எல்லாம் நடந்தது. பத்திரிகைகளில் எல்லாம் என்னைப் பற்றி எழுத ஆரம்பித்தார்கள். ஏகப்பட்ட மெயில்களும், லெட்டர்களும் வந்து குவிய ஆரம்பித்தன. என் எழுத்தாளர் நண்பர்களும் என்னைக் குறை கூறினார்கள். பொதுவில் அவ்வாறு ஒத்துக்கொண்டது என் தவறு என்றார்கள். என் மனைவியும்,

"நீங்கள் அது போல் பேசியது தவறு" என்றாள்.

"உண்மையைத்தானே சொன்னேன்" என்றேன்.

"அப்போ நீங்கள் கெட்டவரா?" என்றாள்.

"யார் இந்த உலகத்தில் நல்லவர்கள்? அனைவருமே ஒரு விதத்தில் கெட்டவர்கள் தானே?" என்றேன்.

என் பதிலில் கடுப்பாகி, "உங்க கிட்ட யார் வாயைக்கொடுப்பது" என்று அவள் வேலையைப் பார்க்க போய்விட்டாள்.

யோசனையுடன் சோபாவில் அமர்ந்தவனை என் வீட்டு டெலிபோன் மணி கூப்பிட்டது.

"ஹலோ"

"இனியவன் சாரா?"

"ஆமாம். இனியவன்தான் பேசறேன். நீங்க யாரு?"

"சார், நான் அனு பேசறேன். அன்னைக்கு கலந்துரையாடல்ல மீட் பண்ணினோமே?"

'மறக்க முடியாமா உன்னை' மனதினுல் நினைத்துக்கொண்டே,

"ம்ம் சொல்லும்மா"

"சாரி சார். நான் அந்த மாதிரி கேட்டிருக்கக்கூடாது. என்னாலதான் உங்களுக்கு கெட்ட பெயர்"

"அதல்லாம் ஒண்ணும் இல்லைம்மா"

"சார், உங்களை பார்த்து பேசனும் போல இருக்கு. எப்போ வரட்டும்"

"எப்போ வேண்டுமானாலும் வரலாம்" என்று சொல்லி போனை வைத்துவிட்டு குளிக்க சென்றேன். பதினைந்து நிமிடம் இருக்கும். என் மனைவியின் குரல் கேட்டது,

"ஏங்க, உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு"

"யாருன்னு கேட்டியா"

"கேட்டேன், அனுவாம்"

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போதுதானே பேசினோம். அதற்குள்ளாக வந்துவிட்டாளே!

"உட்காரச்சொல்லும்மா. இதோ வந்துடுறேன்" என்றவன் வேகவேகமாக குளிக்க ஆரம்பித்தேன். என் ரூமிற்கு சென்று உடை அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஒரு சோபாவில் அவள் உட்கார்ந்து இருந்தாள்.

டிராக்சூட்டும், டி சர்ட்டும் போட்டு இருந்தாள். தலை கலைந்திருந்தது. முகமெல்லாம் வேர்வை. பார்க்க மிக அழகாக தெரிந்தாள்.

"என்னம்மா, இப்போத்தான் போன்ல பேசின?"

"இந்த பக்கமா ஜாகிங் போனேன் சார். அப்போத்தான் உங்க கிட்ட பேசினேன். உடனே உங்களைப்பார்க்க வேண்டும் போல் இருந்ததால், வந்துவிட்டேன். நான் அன்று அந்த கேள்வியைக்கேட்டு உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் சார்"

"அதான் ஏற்கனவே சொல்லிட்டியேம்மா" என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது என் மனைவி காபி கோப்பையுடன் வந்தாள். மனைவியிடம் அவளைப்பற்றியும், அவள் வந்ததற்கான காரணத்தையும் கூறினேன். அவளும் ஒரு புன்னைகையுடன்,

"ஏம்மா வருத்தப்படறே? ஏதோ கேட்கணும் நினைச்சு கேட்டுட்ட. பரவாயில்லை விடு" என்றவள் உள்ளே சென்றாள்.

அனு பேச ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்திலேயே அவள் மிகப்பெரிய புத்திசாலி என்று தெரிந்து கொண்டேன். எல்லா விசயங்களைப் பற்றியும் பேசினாள். நான் அவள் பேசியதைக்கேட்டேனோ இல்லையோ அவளையே, அவள் பேசும் அழகையே, அவள் தலையை ஆட்டி ஆட்டி பேசும்போது, அவள் காதில் ஆடும் தொங்கட்டான் அழகையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"சார், என்ன நான் பாட்டுக்கும் பேசிட்டே இருக்கேன். நீங்க என்னையே பார்த்துட்டு இருக்கீங்க" என்று ஓப்பனாக கேட்க ஆரம்பித்தாள்.

"நீ ரொம்ப அழகா இருக்க அனு?"

"பொய் சொல்லாதீங்க"

"உண்மைதான்"

"இந்த டிரெஸ்லயா?"

"இந்த டிரெஸ்லயே" என்றேன்.

விலகி இருந்த டி ஷர்ட்டை மேலே இழுத்துவிட்டுக்கொண்டாள். தலை முடியை கைகளால் கோதிவிட்டுக்கொண்டாள்.

அவள் வீட்டைச் சுற்றி ஒரு முறைப் பார்த்தாள். அருகில் என் மனைவியைத் தேடினாள். இல்லை என்றதும் கேட்டாள்,

"உண்மையைச் சொல்லுங்க. நீங்க ஏன் அன்னைக்கு கெட்டவருன்னு சொன்னீங்க? பொய்தானே?"

"இல்லையே?"

"அப்படீன்னா?"

"நான் கெட்டவன் தான்"

"என்னால நம்ப முடியலை சார். நீங்க கெட்டவராக இருக்கவே முடியாது"

"ஏன் அப்படி சொல்லற அனு?"

"நீங்க என்னம்மா எழுதறீங்க. எவ்வளவோ நல்ல விசயம் சொல்லறீங்க"

"எழுதுனா, சொன்னா, நான் நல்லவன்னு ஆயிடுமா?"

"இவ்வளவு நல்ல விசயங்களை எழுதறவங்க கெட்டவனாக இருக்க முடியாது"

"புரிந்து கொள் பெண்ணே! நான் என்னவெல்லாம் தவறுகள் சிறு வயதிலிருந்து செய்திருக்கிறேன், கேள்" என்று சொல்ல ஆரம்பித்தேன்.

ஆர்வத்துடன்  கேட்க ஆரம்பித்தாள்.


-தொடரும்

2 comments:

Anonymous said...

சார்,

இது சிறுகதையா?

இரண்டு பாகம் முடிஞ்சு, இன்னும் கதை முடியலை. ஆனா நல்லா போகுது.

- இளங்கோ

iniyavan said...

//சார்,

இது சிறுகதையா?

இரண்டு பாகம் முடிஞ்சு, இன்னும் கதை முடியலை. ஆனா நல்லா போகுது.

- இளங்கோ//

நன்றி நண்பா!