Feb 22, 2011

ரவியின் காதல் கதை -5 (பாகம் 1)

நன்றாக நினைவில் உள்ளது. நான் காதல் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் மிக மிக குறைவு. அப்படி நான் காதல் இல்லாமல் இருந்த ஒரு நாளின் காலையில்தான் அவளை பஸ்ஸில் பார்த்தேன். அன்று நான் செல்ல வேண்டிய டிரெயினை மிஸ் செய்துவிட்டதால், பஸ்ஸில் செல்ல வேண்டியதாகிவிட்டது. பின்பு தினமும் சில காலங்கள் நான் பஸ்ஸில்தான் செல்வேன் என்று அன்று நான் நினைக்கவில்லை.

அவள் பெயர் காயத்ரி. அவள் ரொம்ப அழகு என்று திருப்பி திருப்பி சொன்ன பல்லவியையே சொல்லிச் சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. சாமி படம் பார்த்தீர்களா? அதில் திரிஷா பிராமணா ஆத்து பொண் போல வருவாளே? அவள் போல்தான் நம் கதையின் நாயகி இருப்பாள். பார்த்த மாத்திரத்தில் நான் அவளை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அன்றிலிருந்து காயத்ரி என் கனவில் வர ஆரம்பித்தாள்.

தினமும் சரியாக அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டு செல்ல ஆரம்பித்தேன். அவள் போகும் பஸ்ஸிலேயே போக ஆரம்பித்தேன். கூடுமான வரை அவள் அருகில் நிற்க முயற்சித்தேன். அவளிடம் எப்படி பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பிப்போனேன். அப்பொழுதுதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் அவள் பஸ்ஸில் ஏறுகையில் ஒரு புத்தகம் கீழே விழுந்தது. பஸ்ஸில் நல்ல கூட்டம் வேறு. அந்த புத்தகத்தை நான் எடுத்து அவளிடம் கொடுப்பதற்காக திரும்பினேன். அதற்குள் அவள் கூட்டத்தின் உள்ளே சென்று விட்டாள்.

மெயின்கார்ட் கேட் வந்ததும் அவசர அவசரமாக இறங்கி அவளுக்காக காத்திருந்தேன். அவள் இறங்கியவுடன் அவளை நெருங்கினேன். இருதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. ஒரு வித பதட்டத்துடன் அவளை நெருங்கி,

"ஹலோ" என்றேன்.

என்ன? என்பதுபோல் என்னைப் பார்த்தவளை நெருங்கி,

"இந்தாங்க உங்க புக். நீங்க பஸ்ல ஏறும்போது கீழே விழுந்துடுச்சு" என்று சொல்லி அவளிடம் புத்தகத்தை நீட்டினேன்.

வாங்கி பார்த்தவள், "சாரிங்க! இது என் புத்தகம் இல்லை" என்று கொடுத்துவிட்டு, என்னை திரும்பி பார்க்காமல் அவள் கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அசடு வழிய நின்று கொண்டிருந்தவன் புத்தகத்தை பிரித்து பார்த்தேன். அதில் வேறு யாரோ பெயர் இருந்தது. வந்த கடுப்பில் அந்த புத்தகத்தை தூக்கி எரிந்து விட்டு நான் என் கல்லூரிக்கு சென்றேன்.

ஆனால் மனம் முழுவதும் ஒருவித சந்தோசம் ஒட்டிக்கொண்டது. ஏனென்றால் என்னிடம் அவள் பேசினாளே? அவள் மட்டும்தான் அழகு என்று நினைத்திருந்த எனக்கு அவள் குரலும் அழகு என்ற விசயம் அன்றுதான் தெரிந்தது.

அன்று மாலையிலிருந்து ஒரு சிறு மாறுதல் அவளிடம் ஏற்பட்டு இருந்ததை கவனித்தேன். மெல்ல என்னைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தாள். அது போதாதா? எனக்கு. உடனே சுவிட்சர்லாந்து சென்று சில டூயட்கள் பாட ஆரம்பித்தேன்.

நாளாக நாளாக பஸ்ஸில் அவள் அருகில் சென்று நிற்க ஆரம்பித்தேன். சில முறை அவளின் கால்கள் என் கால்களின் மேல் பட்டது. அப்போது ஏற்பட்ட மின் காந்த அதிர்வினால் என் உடல் டயர்டானது. அப்படியே நாட்கள் சில சென்றன. அவள் என்னிடம் நேரடியாக பேசவில்லையே தவிர அவள் தோழியிடம் பேசுவது போல் என்னிடம் பேசலானாள்.

அவளை நினைத்து நினைத்து உருக ஆரம்பித்தேன். அவளும் அப்படித்தான் என்று நம்பினேன். ஒரு நாள் நண்பர்களுடன் சினிமா சென்றேன். அங்கே அவள் தோழிகளுடன் நிற்பதை பார்த்தேன். நான் பார்த்துக்கொண்டிருந்த போதே அவள் என்னை நோக்கி வருவது தெரிந்தது.

நண்பர்கள் என்னை ஒருவிதமாக பார்ப்பது தெரிந்தது. அன்று அவள் எனக்குப் பிடித்த நீலக் கலர் தாவணியும், வெள்ளைக் கலர் பாவடையும் அணிந்து மிக கவர்ச்சியாக இருந்தாள்.

நேராக என்னிடம் வந்தவள்,

"ஒரு நான்கு டிக்கட் வாங்கித்தர முடியுமா?" எனக்கேட்டாள்.

அதை விட வேறு எனக்கு என்ன வேலை?

உடனே எனக்குத்தெரிந்த நண்பர் மூலம் டிக்கட் வாங்கினேன். அவர்கள் அனைவரும் எங்கள் சீட் அருகில் அமர்கின்ற வகையில் டிக்கெட் வாங்கினேன்.

நினைத்து போலே என் அருகில் அம்ர்ந்தாள். படம் துவங்கியது. சிறிது நேர டென்ஷனுக்கு பிறகு மெல்ல பேச்சுக் கொடுத்தேன். அவளும் பேச துவங்கினாள். என் கையை எடுத்து சேரின் கைப்பிடியில் வைத்தேன்.

என்ன ஆச்சர்யம்! என் கையின் மேல் அவள் கையை வைத்தாள்.

-தொடரும்


1 comment:

Anonymous said...

சார்,

இது உண்மை கதையா?

-இளங்கோ