Feb 23, 2011

ரவியின் காதல் கதை -5 (பாகம் 2)

சந்தோசத்துடன் படம் பார்க்க ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் அவ்வளவு நெருக்கமாவோம் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. சில சில்மிஷங்களுடன் படம் பார்த்து முடித்தோம். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், படம் முடியும் வரை நாங்கள் இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொள்ளவில்லை. ஒரு வேளை என் கைகள் அவளுடன் பேசியிருந்திருக்கலாம். சரியாக நினைவில்லை.

இப்படியே சில நாட்கள் போனது. நான் அவள் மேல் தீவிர காதலில் மூழ்கிப்போனேன். அவளும் காதலிப்பதாகத்தான் நினைத்தேன். தினமும் பஸ்ஸில் அவளின் அருகாமை எனக்கு போதையை தந்தது. ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கூட மனம் கிடந்து அலைய ஆரம்பித்தது.

தினமும் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன். அவளும் என்னைப் பார்த்து சிரிப்பாள். இவ்வளவுதான் எங்களுக்கு உள்ளே நடந்தது. மேற்கொண்டு லவ் லெட்டர் கொடுக்கவோ, 'ஐ லவ் யூ' என்று சொல்லவோ என் மனம் விரும்பவில்லை. காரணம், அவளின் பதில் வேறு மாதிரி இருந்தால், என் மனம் தாங்காது. அதனால், கிடைக்கிற சந்தோசமே போதும் என்று மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தேன்.

யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்த என் காதலை ஒரு நாள் என் நண்பன் சாமுவிடம் சொன்னேன்.

"யாருடா அது? இன்னொரு காதலா? உருப்படவே மாட்டியா?" எந்த தெருடா அவ? என்றான்.

நான் தெருவின் பெயரை சொன்னவுடன், "எனக்கு யார் என்று காமி" என்றான்.

அவனைக்கூட்டிக்கொண்டு அவள் இருக்கும் தெருவுக்கு சென்றேன். அது ஒரு பெரிய நகர். பெரிய பெரிய தெருக்கள் மொத்தம் பத்து இருக்கும். அங்கே யார் புதிதாக நுழைந்தாலும், அங்கே இருக்கும் பையன்கள் ஆயிரத்து எட்டு கேள்விகள் கேட்பார்கள். அங்கே தாதா போல் ஒருவன் இருந்தான். அவனின் நண்பன் குமார் எனக்கும் நண்பன். அவனிடம் விசயத்தை சொன்னேன்.

"மாப்பிள்ளை! ஜாக்கிரதை. நம்ம பசங்க எல்லாம் ஒரு மாதிரி. உண்மையான காதல்னா என் கிட்ட சொல்லு. சும்மா ஒருதலைக்காதல்னா விட்டுட்டு ஓடிப் போயிடு. ஏன்னா, இங்க இருக்க பசங்க சும்மா விட மாட்டாங்க" என்று பயமுறுத்தினான்.

"இல்லை குமார். உண்மையான காதல்தான்" என்று பொய் சொன்னவன், கடைசி வரையில் அவனிடம் 'இன்னும் அவள் என்னிடம் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை' என்ற உண்மையை சொல்லவில்லை.

கடைசியாக அவள் இருந்த தெருவை கண்டுபிடித்து, நண்பன் சாமுவிடம் அவளை காண்பித்தேன். அவள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து அவள் தம்பியுடன் பேசிக்கொண்டு இருந்தாள். என்னை பார்த்தவள் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்து, உடனே உள்ளே போய் விட்டாள்.

உடனே சாமு, "வேண்டாம்டா. பிரச்சனை வரும். அவளை பின் தொடராதே"

"ஏன்?"

"காரணம் அப்புறம் சொல்றேன். வேண்டாம்னா வேண்டாம். அவ்வளவுதான்" என்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அடுத்த நாள். பஸ்ஸில் நல்ல கூட்டம். மெல்ல நகர்ந்து என் அருகில் வந்து நின்றாள். மிக நெருக்கமாக நின்றாள். உடலோடு உடல் உரசியது. என் உடல் வேதனை அடைய ஆரம்பித்தது. முதல் முறையாக என்னிடம் காயத்ரி பேசினாள்.

"எதுக்கு எங்க தெருவுக்கு வந்தீங்க?"

"உங்களை பார்க்கத்தான்"

"இனிமே வராதீங்க"

"ஏன்?"

"வராதீங்கன்னா வராதீங்க. அவ்வளவுதான்" என்று நகரப்போனவளை இடுப்புடன் அணைத்து பின் முதுகில் சின்னதாக ஒரு முத்தமிட்டேன். திரும்பி கண்களால் என்னை சுட்டெரித்தவள், உடனே கும்பலில் நகர்ந்து பஸ்ஸின் கடைசிக்கு சென்றாள்.

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. தப்பு பண்ணிவிட்டோமே? என தவித்தேன். அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை.

அடுத்த நாள் காலை. அவளிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று சீக்கிரமே பஸ் ஸ்டாண்டு சென்றேன். அங்கே அவள் அருகில் நின்றவர்களைப் பார்த்து என் இருதயமே வெடித்து விடுவது போல் இருந்தது.

அவள் இருக்கும் அந்த நகரத்தின் தாதாவும், குமாரும் இருந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று என் உள்ளுணர்வு சொல்லியது. என்னை டின் கட்டப்போகிறார்கள் என்ற நினைப்பே என்னை தள்ளாட வைத்து.

என்னைப் பார்த்த குமார், "ரவி, யாரோ காயதிரிகிட்டே பஸ்ஸல் தினமும் தொந்தரவு பண்ணறாங்களாம். யாருன்னு உனக்குத் தெரியுமா? நீயும் டெய்லி இந்த பஸ்லதானே போற?"

எனக்கு ஒரு கணம் இதயமே துடிப்பை நிறுத்திவிட்டது போல ஆனது. நான் காயதிரியைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்தாள்.

"தெரியலையே?" என்றேன்.

"ரவி! இவளை நான் காதலிக்கிறேன். நான்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். எவனாவது கிண்டல் பண்ணினான்னா, நீ கொஞ்சம் கண்டிச்சு வை அவனை. எதாவது பிர்ச்சனையினா, என் கிட்டயோ அண்ணன் கிட்டயோ சொல்லு" என்று அந்த தாதாவைக் காட்டினான் குமார்.

எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை.

உடனே காயத்ரி பக்கம் திரும்பியவன்,

"இங்க பாரு காயத்ரி, ரவி என் நண்பன். எவனாலயாவது பிரச்சனைனா இவன் கிட்ட சொல்லு" என்றவன் பஸ் ஸ்டாண்டை விட்டு உடனே கிளம்பினான்.

போன உயிர் திரும்பி வந்தது. என்னைக் காட்டிக்கொடுக்காதத்துக்கு பார்வையாலேயே நன்றி சொன்னேன். அன்றிலிருந்து அந்த பஸ்ஸில் செல்வதை நிறுத்தினேன். பிறகு அப்பாவிற்கு மாற்றலாகவே குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்று விட்டேன்.

எனக்கு சில விசயங்கள் மட்டும் அன்று புரியவே இல்லை.

"அவள் ஏன் என்னை காட்டிக்கொடுக்கவில்லை?"

"அவள் குமாரை காதலிக்கும் பட்சத்தில் என்னுடன் ஏன் நெருக்கமாக பழகினாள்?"

அதற்கான விடை இருபது வருடங்கள் கழித்து சென்ற மாதம் கிடைத்தது.

பல வருடங்களுக்குப் பிறகு என் பூர்வீக நிலம் சம்பந்தமாக என் ஊருக்கு சென்றேன். நான் ஊரில் இருந்த போது காயத்ரியையும், அவள் குழந்தையையும் கோயிலில் சந்தித்தேன்.

என்னைப்பார்த்தவள், சந்தோசத்துடன்,

"எப்படி இருக்கீங்க?" என்றாள்.

"நல்லா இருக்கேன்" என்றவன், "எங்கே உன் ஹஸ்பெண்ட்?" என்றேன்.

பூக்கடையில் பூ வாங்கிக்கொண்டிருந்த ஒருவனை காண்பித்தாள். அது குமார் இல்லை. வேறு யாரோ ஒருவன். அவள் அழகுக்கு சம்பந்தம் இல்லாதவன்.

"என்ன காயத்ரி, அப்போ நீ குமாரை காதலிக்கலையா?"

"இல்லை"

"அவன் உன் முன்னாலே என்கிட்ட சொன்னானே உன்னைக் காதலிப்பதாய்?"

"அவன் தானே சொன்னான். நான் சொல்லலியே?" என்றாள்.1 comment:

Anonymous said...

என்ன சார்! இப்படி முடிச்சுட்டீங்க?

-இளங்கோ