Feb 2, 2011

சில நம்பிக்கைகள்!

நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். அப்பா அவரின் இளமை காலத்தில் தந்தை பெரியாருடன் மிக நெருக்கமாக இருந்தவர். ஏகப்பட்ட கடவுள் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். தந்தை பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்தவர். அதனால், அப்பாவின் கல்யாண ஊர்வலத்தை பிராமணர்கள் வாழும் தெருவில் நுழையவிடாமல் தடுத்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அப்பா தீவிரமாக தி.க வில் இருந்துள்ளார். அதே அப்பாத்தான் தீவிர கடவுள் பக்தராக மாறிப்போனார். எதனால் இந்த மாற்றம்? தெரியவில்லை. ஆனால் நான் அப்படி இல்லை. ஆரம்பகாலத்திலிருந்தே கடவுள் நம்பிக்கை உள்ளவான வளர்க்கப்பட்டேன். அப்படியே வாழ்கிறேன். இதைச் சொல்ல பெருமைப்படுகிறேன். எங்கள் ஊர் முழுவதும் கோயில். அதனால் எங்கள் ஊர் இளைஞர்கள் தீவிர கடவுள் பக்தர்களாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. உருவம் படைத்த கடவுள் உண்மையா? ஏன் இத்தனை கடவுள்கள் என்கிற சர்ச்சைக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை.

கோயில் சென்று வழிப்பட்டால் மனதிற்கு நிம்மதி ஏற்படுகிறது. நிம்மதியைத் தவிர வேறு என்ன வேண்டும் நமக்கு!

கவிஞர் கண்ணதாசன் தீவிர கடவுள் எதிர்ப்பாளராக இருந்தவர். பின் கடவுள் மதிப்பாளராக மாறிப்போனார். அவர் எப்படி மாறிபோனார் என்பதை தெரிந்துகொள்ள அவரின் "வனவாசம்" படியுங்கள்.

************************************************************

என் அப்பா எங்கள் குல தெய்வம் கோயிலை கட்டினார். 150 வருடமாக ஒரு பானையில் இருந்த எங்கள் குல தெய்வம் என் அப்பாவின் முயற்சியால் கோயிலில் குடியேறியது. நான் ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் நான் செய்யும் முதல் வேலை எங்கள் குல தெயவம் குடியிருக்கும் சந்நிதிக்கு செல்வதுதான். பின்புதான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பேன். எங்கள் கோவிலுக்கு காம்பவுண்ட் சுவர் எழுப்பி, தளம் அமைத்து பாத்ரூம், ஒரு ரூம் மற்றும் வாட்டர் சப்ளை போன்ற வசதிகளை ஏற்படுத்த ஆசை. குலதெய்வம் கோவில்களைப் பொறுத்தவரை ஒருவரே செலவு செய்யக்கூடாது. அனைத்து பங்காளிகளும் சேர்ந்துதான் செய்ய வேண்டும். அதற்கான முதல் முயற்சியாக இந்த முறை எங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் ஒரு பஸ் வைத்து அழைத்துச்சென்றேன். திருச்சி வழியாக சென்றால், ஒரு மணி நேரம் முப்பது நிமிடம் ஆகும். லால்குடியில் இருந்து செங்கரையூர் புதிய பாலம் வழியாக சென்றால் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், டிரைவரிடம் புதிய பாலம் வழியாக போகச்சொன்னேன். ராகு காலம் கழித்து கிளம்பினோம். கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதாக ஏற்பாடு. ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும், டிரைவர்,

"சார், இந்த வழியாக சென்றால் ஒரே மேடு பள்ளமாக  இருக்கும். வேறு வழியாக செல்லவா?" என்றார்.

நானும் வயதானவர்கள் பஸ்ஸில் இருந்ததால் ஒப்புக்கொண்டேன். ஒரு மணி நேரம் ஆகியும் குறிப்பிட்ட சாலையை அடையாததால் குழப்பமானேன். எந்த இடம் என்று பார்த்தால் அவர் தஞ்சாவூர் தாண்டி வேளாங்கண்ணி ரோட்டில் போய்க்கொண்டிருந்தார். எங்கள் கோவில் இருப்பதோ திருச்சி செங்கிப்பட்டி தாண்டி தச்சங்குறிச்சி என்னும் கிராமத்தில். அவர் திருக்காட்டுப்பள்ளியில் நுழைந்திருக்க வேண்டும். டிரைவர் புதியவர் போல. எல்லோரும் கடுப்பாகிவிட்டார்கள். நான் கோபத்தில் இருந்தாலும், அவரிடம் காட்டிக்கொள்ளாமல், திரும்ப அவரிடம் விளக்கமாக எடுத்துச்சொல்லி, தஞ்சாவூர் வரவைத்து, பின்பு திருச்சி ரூட்டில் போய் கோவிலை அடைந்தோம். ஒரு மணி நேர பயணத்திற்கு பதில் இரண்டு அரை மணி நேரம் ஆனது. ஒண்ணரை மணி நேரம் லேட்.

கோவிலை அடைந்தோம். அங்கே இருந்தவர்களிடம் தாமதத்திற்கான காரணத்தை சொன்னேன். உடனே அவர்கள் என்னிடம் இப்படி சொன்னார்கள்:

"நல்ல வேளை இப்போ வந்தீர்கள். இல்லை என்றால் நீங்கள் எமகண்டத்தில் பொங்கல் வைப்பது போல் ஆகி இருக்கும். அம்பாளாக பார்த்து உங்களை எமகண்டம் தாண்டி இங்கே வர வழைத்து விட்டாள்"

அப்போதுதான் வாட்சைப் பார்த்தேன். அவர்கள் சொன்னது சரிதான்.

அதுதான் தெய்வ நம்பிக்கை என்பது. நம்பாதவர்களை குறை சொல்லவில்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் சொல்லும் விசயம் புரியும்.

************************************************************

1992லிருந்து ஏழுமலையானின் தீவிர பக்தனாக ஆனேன். ஏன் என்று சொல்ல ஒரு புத்தகமே எழுத வேண்டும். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் எங்கள் குலதெய்வத்தையும், ஏழுமலையானை மட்டுமே வேண்டுவேன். உடனே அந்த காரியம் நடக்கும். பையன் உருவாவதற்கு முன்பே பையன் பிறந்தால் அவன் பெயர் "வெங்கடேஷ்" என்று பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து அனைவரிடமும் சொன்னேன். அது போலவே, பிறந்தவுடன் அவனுக்கு அதே பெயர் வைத்தேன். ஏழுமலையானை நம்புபவர்களுக்குத்தான் அவரின் பவர் தெரியும்.

ஒருமுறை திருப்பதியில் வாங்கிய கயிர் ஒன்றை கையில் கட்டியிருந்தேன். 1998 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு தங்க பிரேஸ்லெட் வாங்கினேன். கையில் அணிந்தவுடன், திருப்பதி கயிர் இருந்ததால், இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு பார்க்க ஒரு மாதிரி இருந்தது. நண்பர்கள் அனைவரும் ஒரு ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நண்பர்களிடம் சொன்னேன்,

"இந்த திருப்பதி கயிர் கையில் இல்லாமல் இருந்தால் பிரேஸ்லெட் அழகாக தெரியும் இல்ல"

நம்ப மாட்டீர்கள். அடுத்த அரை மணி நேரத்தில் என் கையில் இருந்த பிரேஸ்லெட் மாயமாய் மறைந்து போனது. உடனே அதை நான் கவனிக்கவில்லை. ஒரு மணி நேர அரட்டைக்கு பின் கவனித்தேன். நண்பர்கள் அனைவரும் வீடு முழுக்கத்தேடினோம். கிடைக்கவில்லை. நான் சோபாவை விட்டு எங்கும் எழுந்து செல்லவில்லை. மனம் வேதனை ஆனது.

மனம் உருக ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டேன். அடுத்த நாள் நண்பர் ஒருவர் வாஷின் மெஷினில் கிடந்ததாக எடுத்துக்கொடுத்தார். அது எப்படி அங்கு போனது என்று எங்கள் யாருக்குமே தெரியவில்லை. அப்போதில் இருந்து கையில் கயிரை கட்டி இருக்கிறேன்.

அந்த சம்பவத்தில் இருந்து எங்கள் ஹஸ்ட் ஹவுஸில் இருந்த எல்லோருமே தீவிர ஏழுமலையான் பக்தர்களாக மாறிபோனார்கள்.

நண்பர்களுக்கு இந்த சம்பவங்களை நம்புவது கஷ்டமாக இருக்கலாம்.

ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

நம்பிக்கைத்தானே வாழ்க்கை!


4 comments:

தனி காட்டு ராஜா said...

//ஏழுமலையானை நம்புபவர்களுக்குத்தான் அவரின் பவர் தெரியும்.//

:))

அமுதா கிருஷ்ணா said...

ஒருத்தரின் ஜாதகப்படி அதில் நடக்கும் திசைப்படி கடவுளை நம்பாததும் பிறகு நம்புவதும் நடக்கிறது. ஒவ்வொருவரின் ஜாதகமே அதற்கு காரணமாகும்.

iniyavan said...

//:))//

வருகைக்கு நன்றி தனி காட்டு ராஜா.

iniyavan said...

//ஒருத்தரின் ஜாதகப்படி அதில் நடக்கும் திசைப்படி கடவுளை நம்பாததும் பிறகு நம்புவதும் நடக்கிறது. ஒவ்வொருவரின் ஜாதகமே அதற்கு காரணமாகும்//

வருகைக்கு நன்றி அமுதா மேடம்.