Feb 4, 2011

பேய்கள்???

சிறு வயதில் நிறைய பேய்க் கதைகள் கேட்டிருக்கிறேன். கல்லூரிக் காலக்கட்டத்திலும் நண்பர்கள் மூலம் நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அப்போது எல்லாம் ஒரு சிறிதளவு பயம் மனதில் இருந்தாலும் அதிகம் பயந்தது இல்லை. பிறகு பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது. நான் இப்போது இருக்கும் ஊரின் மக்கள் ஆவிகள், பேய்கள் உண்மை என்று நம்புகிறார்கள். எங்கள் ஊரைச்சுற்றி நிறைய பேய்க்கதைகள் சுற்றி வருகின்றன. எங்கள் அலுவலக்தில் பணிபுரிந்த ஒருவர் சொன்ன கதை இது:

அவரின் நண்பர் ஒருநாள் ஹைவேயில் போய்க்கொண்டிருந்தாராம். ஒரு அழகான பெண் லிப்ட் கேட்டாளாம். இவரும் காரில் ஏற்றிக்கொண்டாராம். மிகவும் செக்ஸியாக இருந்தாளாம். பேசிக்கொண்டே வந்தாளாம். திடீரெனெ திரும்பி பார்த்தாராம். அழகான பெண்ணுக்கு பதில் ஒரு எலும்புக்கூடுதான் இருந்ததாம். நண்பர் ஷாக்காகி அவரின் வண்டி இன்னொரு வண்டியின் மீது மோதி, ஸ்பாட்டிலேயே ஆள் காலியாம்.

நானும் ஒரு 500 தடவையாவது அந்த ஹைவேயில் போய்க்கொண்டிருக்கிறேன். ஒரு முறை கூட அந்த அழகிய பேய் என்னிடம் லிப்ட் கேட்கவே இல்லை.

ஒரு நாள் அதிகாலை 4.15க்கு எங்கள் ஊரில் இருந்து கோலாலம்பூருக்கு அலுவலக வேலை விசயமாக காரில் கிளம்பினேன். நானும் அந்த நண்பரும், இன்னும் சில நண்பர்களும். 120 கிலோ மீட்டர் ஸீபிடில் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். நண்பர் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், "பொதுவாக இந்த இடத்தில்தான் பேய்கள் அமர்ந்திருக்கும். அவைகளின் இருப்பிடம் ஹைவேயும், ஆளில்லாத வீடும் தான்" என்றார். எனக்கு பேய்கள் பற்றிய பயம் சிறிதும் இல்லை என்றாலும், நண்பர் கூறியவுடன் என் காரின் ஸ்பீட் ஆட்டோமேட்டிக்காக 80க்கு வந்தது. பின்பு சுதாரித்து வேகமாக செல்ல அடுத்த அரைமணி நேரம் ஆனது.

திருச்சியில் ஒரு ஆஸ்பத்திரி. உறவினர் ஒருவர் ஆப்பரேஷன் ஆகி மரணப்படுக்கையில் இருந்தார். அவருக்கு துணையாக இருந்தவர், அவர் அருகே இருக்கும் கட்டிலில் படுத்து இருந்தார். அவரால் சரியாக தூங்க முடியவில்லை. யாரோ அவரை அமுக்குவது போல் இருந்திருக்கிறது. உடனே அங்கே இருந்த நர்ஸ்களை கூப்பிட்டு கேட்டுள்ளார். அவர்கள் சொன்னார்களாம்:

"இங்கே அப்படித்தான் இருக்கும். இந்த அறையில் அகால மரணமடைந்தவர்கள் நிறைய பேர். அவர்கள் ஆவி இங்குதான் சுற்றிக்கொண்டிருக்கும். அதான் இப்படி. நீங்கள் அங்கே படுக்காதீர்கள்"

அதன் பிறகு அவர் அங்கே படுத்திருப்பார் என்று நினைக்கின்றீர்களா?

எங்கள் கம்பனியிலும் ETP ஏரியாவில் பேய்கள் உலாவுவதாக நைட் ஷிப்ட்டில் வேலை பார்க்கும் நண்பர்கள் சொல்கிறார்கள். நானும் பல நாட்கள் இரவில் வேலை பார்த்ததுண்டு. ஆனால் நான் பேயை பார்த்தது இல்லை. அதற்கு இன்னொரு நண்பர் சொல்லும் காரணம்:

"எல்லோர் கண்களுக்கும் பேய்கள் தெரியாது. குறிப்பிட்ட சிலரால்தான் பார்க்க முடியும்"

என் அலுவலகத்தில் ஒருவரின் அண்ணன் மூன்று வருடங்களுக்கு முன்னே அகால மரணமடைந்தார். அவர் ஒரு பெரிய வீடு கட்டியிருந்தார். அந்த புதிய வீட்டிற்கு இதுவரை யாரும் குடி போகவில்லை. காரணம் கேட்டால், அந்த வீட்டில் பேய்கள் உலாவுகிறதாம். உண்மையா? என்று நண்பரிடம் கேட்டேன்.

"ஆமாம் சார், நானே கண்ணால் பார்த்தேன்"

"ஆண் பேயா? பெண் பேயா?" இது நான்.

"பெண் பேய் சார்"

"என்ன வயசு இருக்கும்?"

"20 வயசு இருக்கும்"

"அழகா இருக்குமா?"

"நல்ல அழகு"

"பேசாம ஒரு நாள் அந்த அழகிய பேயை என் வீட்டிற்கு வரச்சொல்லேன்"

"அது வீட்டுக்கு எல்லாம் வராது சார். இந்த வீட்டுலத்தான் இருக்கும்"

"ஏன் அந்த பேய்க்கு என் வீட்டிற்கு வர பயமா?"

கடுப்பான நண்பர்,

"இவ்வளவு பேசும் நீங்கள், தைரியமானவராய் இருந்தால் ஒரு இரவு அந்த வீட்டில் தங்கி இருங்கள். காலையில் உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால், அந்த வீட்டை உங்கள் பெயருக்கு எழுதி தருகிறேன்"

பதில் சொல்லவில்லை நான்.

காரணம் எனக்கு இந்தியாவிலேயே வீடு இருப்பதால், மலேசியாவில் இன்னொரு வீடு தேவையா? என யோசிக்கிறேன்.


2 comments:

Anonymous said...

ஹலோ,

தைரியம் இருந்தா அந்த வீட்டுக்கு போய் ஒரு இரவு தங்க வேண்டியதுதானே?

- பாஸ்கர்

iniyavan said...

Ulaks,

I just read your blog. It reminded me an event. One day when I was taking my normal round in ETP, I suddently felt as if I don't have any energy to stand on my legs and I was about to fall down. Somehow I managed and returned to office. When I visited the clinic in the same eveing, Dr.Guna checked my BP and told me that everything was alright and nothing abnormal.

Ramakrishna Paramahamsa said ' One who saw a Ghost is better than the other as he knew there is a life after death and he will not do sins '.

Regards,
Bala