Feb 14, 2011

எப்படியும் வாழலாம்?


1997 ஆம் வருடம். எங்கள் கம்பனிக்கு நிறைய ISO container கள் தேவைப்பட்டது. அப்போது ஒரு நண்பரின் மூலம் ஒரு மிகப்பெரிய கம்பனியின் அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு ஒருவரை சந்தித்தேன். அவர்தான் எங்கள் ஊருக்கான ஏஜென்ஸியை எடுத்து இருந்தார். பார்க்க நல்ல உயரம். டை எல்லாம் கட்டி ஒரு மிகப்பெரிய மேனஜருக்கான தகுதியுடன் இருந்தார். பிறகு அவர் மூலம் எங்கள் கம்பனிக்கு தேவையான கண்டெயினர்கள் தடையில்லாமல் கிடைத்தன. Frieght விலை ஏறும்போது எல்லாம் அவரிடம் என்று முறையிடுவேன். அவரும் அவரின் தலைமை அலுவலகத்துக்கு பேசி ஓரளவு விலையை எப்போது குறைத்து தருவார்.

இப்படியாக எங்களுடைய தொடர்பு ஒரு மூன்று நான்கு வருடங்கள் இருந்தது. அப்போது எல்லாம் அடிக்கடி நாங்கள் சந்தித்து உரையாடுவோம். அப்படியே ஒரு நல்ல நட்பும் உருவாகி இருந்தது. எங்கள் கம்பனியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு எல்லாம் அவர் வந்ததுண்டு. காலப்போக்கில் எங்கள் கம்பனியின் தேவைகள் மாற, அவருடன் ஆன என்னுடைய தொடர்பு விட்டுப்போய் விட்டது.

அதற்கு பிறகு அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நானும் அவரை சுத்தமாக மறந்துபோனேன்.

சென்ற வாரம், பிள்ளைகள் பீச் போகலாம் என்றார்கள். பீச் போய் பல மாதங்கள் ஆகி இருந்ததால், உடனே கிளம்பினோம். எனக்கு பீச் சென்றால் முதலில் மணலில் நடக்கத்தான் ஆசையாக இருக்கும். நான் மனைவியையும், குழந்தைகளையும் ஒரு இடத்தில் அமர செய்துவிட்டு நிறைய தூரம் நடக்க ஆரம்பித்தேன். பிள்ளைகள் மணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து, பையன் 'ஏதேனும் சாப்பிடலாம்ப்பா' என்று சொன்னதால், அருகே இருக்கும் கடைக்கு சென்றோம்.

கடை என்றால் மிகப்பெரிய கடை இல்லை. அங்கு இருந்த எல்லா கடைகளுமே ஒரு டெண்ட் உள்ளே மிக சிறிய கடைகளாக இருந்தன. சிறிய கடைகளாக இருந்தாலும், அங்கே எல்லாவிதமான கூல் டிரிங்ஸ், பர்கர்,சில வகையான மலேசியின் உணவுவகைகள் மற்றும் பாஸ்ட் புட் உணவு வகைகள் கிடைத்தன.

ஒரு கடையில் சென்று எல்லோருக்கும் பர்கர் ஆர்டர், 100+ ஆர்டர் செய்தேன். அப்போது அந்த கடையின் ஓனர் போல இருந்தவர் என்னைப் பார்த்து மலாய் மொழியில்,

"உங்கள் பெயர் என்ன?" என்றார்.

நான் பொதுவாக தெரியாத நபர்களிடம் என் உண்மையான பெயரை சொல்வதில்லை.

"ரவி" என்றேன்.

"நீங்கள் எங்கு வேலை செய்கின்றீர்கள்?" என்றார்.

கம்பனியின் பெயரை சொன்னேன்.

உடனே அவர், "அப்படியா? அங்கு வேலை செய்த ஒரு நபரை எனக்கு நன்றாக தெரியுமே?" என்று ஒரு கணம் யோசித்தவர,

"நீங்கள் உலக்ஸ்தானே?" என்றார்.

"ஆமாம்" என்றவன் ஆச்சர்யத்துடன், "நீங்கள்?" என்றேன்.

"நான் தான்...." அவரின் உண்மையான பெயரை சொன்னார். நான் ஆடிப்போய் விட்டேன். அவர் வேறு யாரும் அல்ல. நான் முதல் பாராவில் குறிப்பிட்டிருந்த நபர்தான்.

நம்ப முடியாமல், "நீங்கள் எப்படி இங்கே?" என்றேன். ஏனென்றால் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் ஒரு கிளையில் மேனேஜராக வேலை பார்த்த ஒரு நபர், ஒரு பீச்சின் ஓரத்தில் ஒரு டெண்ட் கடையில் பர்கர் விற்றுக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்!

"இல்லை உலக்ஸ். நான் சில காரணங்களால் அந்த கம்பனியை விட்டு விலக வேண்டியது ஆகிவிட்டது. என் மனைவியும் இறந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் தவிர்த்தேன். அப்போதுதான்" என்றவர் சற்று நிறுத்தி அவர் அருகில் நின்றவர்களை பார்த்தார்.

அருகில் ஒரு நடுத்தர வயது பெண், இரண்டு நன்கு வளர்ந்த பெண் பிள்ளைகள், 18, 20 இருக்கலாம், இரண்டு பெரிய பையன்கள்.

"அப்போதுதான் இவர்களை சந்தித்தேன். இந்த பெண்ணை மணந்து கொண்டேன். இப்போது இந்த தொழில் செய்கிறேன்"

"கடைக்கு வாடகை"

"இல்லை. வாடகை எதுவும் இல்லை"

"வீடு எங்கே?" என்றேன்.

பக்கத்தில் உள்ள ஒரு டெண்டை காண்பித்தார்.

"இதுவா?" என்றேன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம். நான்கு பேர் தாரளமாக படுக்கலாம். நாங்கள் ஆறு பேர் தங்குகிறோம்"

அந்த பெண்ணின் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாகத்தான் என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அவரிடம் இருந்து விடைப்பெற்றேன்.

பீச் இருப்பது ஊரை விட்டு விலகி சில கிலோ மீட்டர் தொலைவில். இரவில் ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். என்னதான் டூர்ஸ்ட் பகுதியாக இருந்தாலும் இரவு 11 மணிக்கும் மேல் ஆட்கள் இருப்பது அரிது.

எப்படிப்பட்ட மனிதன் பாருங்கள்! என்ன மாதிரி வேலையில் இருந்தவர், வேலை போய், மனைவி போய், தாடி வைத்துக்கொண்டு அலையாமல், ஏதோ வருகையில் நல்ல படியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரின் தற்போதைய நிலமையை நினைத்து நான் வருத்தப்பட்டாலும், 'என்ன தொழில் செய்தால் என்ன? யாரிடமும் கை ஏந்தாமல், சொந்தமாக தொழில் செய்கிறேன் பார்' என்ற அவரின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.


6 comments:

Pranavam Ravikumar said...

Very Very Nice...! வாழ்த்துக்கள்..

iniyavan said...

//Very Very Nice...! வாழ்த்துக்கள்..//

வருகைக்கு நன்றி ரவிக்குமார்.

அமுதா கிருஷ்ணா said...

படிச்சுட்டு கஷ்டமாக இருக்கிறது..

iniyavan said...

//படிச்சுட்டு கஷ்டமாக இருக்கிறது..//

வருகைக்கிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அமுதா மேடம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கஷ்டமாக இருக்கிறது

அஜீம்பாஷா said...

HE IS THE MAN TO BE ADMIRED. I AM PROUD OF HIM.