Mar 23, 2011

முனுசாமி சிரித்தான்! (சிறுகதை) - பாகம் 1

முனுசாமி சிரித்ததே இல்லை. அவன் பிறந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கிறான். அவன் பிறந்தது அப்படி ஒன்றும் பெரிய ஆஸ்பத்திரியில் எல்லாம் இல்லை. அவன் பிறந்தது ஒரு சேரியில். அவனுக்கு பிரசவம் பார்த்தது ஒரு வயதான மருத்துவச்சி. பெரிய ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் வசதியானவர்கள் கிடையாது. பிறந்த அன்று அழ ஆரம்பித்தவன் இன்று வரை அழுதுகொண்டிருக்கிறான். அவன் வாங்கி வந்த வரம் அப்படி. அவன் குடும்பம் வசிப்பது ஒரு குடிசையில். அதுவும் புறம்போக்கு இடத்தில்.

முனுசாமியின் அம்மா அங்கு உள்ள பணக்கார வீடுகளில் பாத்திரம் கழுவி, துணி துவைத்து ஏதோ சம்பாரிக்கிறாள். அவன் அப்பாவுக்கு அவ்வளவு பொறுப்பு கிடையாது. ஆட்டோ ஓட்டுகிறார். அதுவும் சொந்த ஆட்டோ கிடையாது. ஏதோ தினமும் கொஞ்சம் வருமானம் வருகிறது. அதை வைத்து ஏதோ குடும்பம் நடக்கிறது. முனுசாமி பிறந்த அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு தங்கையும், நான்கு வருடத்தில் ஒரு தங்கையும் பிறந்தார்கள். ஒரு ஏழைக் குடும்பத்தில் மொத்தம் மூன்று குழந்தைகள். என்ன செய்வது? சேரியில் வாழ்பவர்களுக்கு இரவில் மட்டுமே கொஞ்சம் சந்தோசம் ஏற்படும். அதன் விளைவாக குழந்தைகள்.

முனுசாமி ரொம்ப அழகாக இருப்பான். அவனைப்பார்த்தால் யாரும் சேரியில் இருக்கிறான் என்று சொல்ல மாட்டார்கள். இயற்கையாகவே அவன் அவ்வளவு அழகு.படிப்பிலும் படு சுட்டி. அவனை எல்லா டீச்சர்களுக்கும் பிடித்து இருந்தது. அந்த அளவுக்கு சிறந்த மாணவனாக இருந்தான். ஆனால், குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதனால் அவன் அம்மா தாயம்மா, அவள் வேலை செய்யும் ஒரு பங்களா வீட்டில் அவனையும் வேலையில் சேர்த்துவிட்டாள். அன்றுதான் அவனுக்கு கிரகம் பிடிக்க ஆரம்பித்தது. முனுசாமி காலையில் அவர்கள் வீட்டிற்கு சென்று அம்மாவுக்கு உதவியாக, அனைத்து வேலைகளும் செய்வான். கார் கழுவுவான். எல்லாப் பொருட்களையும் துடைப்பான். சில சமயம் வீட்டை பெருக்குவான். கார்டனில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவான். அம்மா கலந்து தரும் காபியை எல்லோருக்கும் கொண்டு குடுப்பான். இப்படி... பல வேலைகள் அம்மாவுக்கு ஒத்தாசையாக இருப்பான்.

அந்த பங்களா வீட்டில் இருந்த எஜமானர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களின் பெண்....? அவள் பெயர் பிருந்தா. அவளும் முனுசாமி படிக்கும் பள்ளியில்தான் படித்தாள். அவர்கள் வசித்த ஊர் ஒரு கிராமத்திலும் சேராத டவுனிலும் சேராத இடம். அதனால் ஓரளவு நல்ல பள்ளிக்கூடங்களும் இருந்தன. தாயம்மா நிறைய பேரின் கையை காலை பிடித்து முனுசாமியை ஒரு நல்லப் பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தாள்.

ஒரு நாள் பள்ளியில், டீச்சர் பிருந்தாவிடம் பாடம் நடத்தி முடித்தவுடன், ஒரு கேள்வியை கேட்டார். அவள் படிப்பில் மக்கு. அவளால் அந்த கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. உடனே டீச்சர் முனுசாமியை கூப்பிட்டு,

"முனுசாமி, நீ பதில் சொல்லு?' என்றார்.

மிகச் சரியான பதிலை சொன்னான் முனுசாமி. உடனே டீச்சர்,

"பிருந்தா ஏன் உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இங்க பாரு, ஏழையாய் இருந்தாலும், அவர்கள் கஷ்டப்பட்டாலும், படிப்பில் எவ்வளவு சுட்டியாக இருக்கிறான் பார். நீயும் இருக்கிறாயே? எல்லாம் பணத்திமிர். உனக்கு படிப்பில் கவனம் இல்லை"

பிருந்தா அழும் நிலைக்கு ஆளானாள். அன்று மாலை முனுசாமி அவன் அம்மாவுடன் பிருந்தா வீட்டிற்கு வேலைக்கு சென்றான். வழக்கம் போல அவன் அம்மா சமைத்துக்கொண்டிருந்தாள். கணவன், மனைவி இருவரும் வேலை பார்ப்பதால், தாயம்மா தினமும் மாலையே அவர்களுக்கு சமைத்து வைத்துவிடுவாள். ஆனால், அன்று மாலை முனுசாமி அங்கே சென்றதும், பிருந்தாவின் அப்பா அவனைக் கூப்பிட்டார்.

"என்ன ஐயா?" என்று கேட்டுக்கொண்டே பக்கத்தில் சென்றான்.

"ஏண்டா, ஸ்கூல்ல நீ இன்னைக்கு பிருந்தாவோட புத்தகத்தை எடுத்து ஒளிய வைச்சிட்டியாம். அதனால டீச்சர் இவளை அடிச்சாங்களாம். ஏண்டா இப்படி பண்ணே"

"இல்லங்கையா, நான் அப்படி எல்லாம் பண்ணலை"

"பொய் வேற சொல்றயா? பிச்சிபுடுவேன் பிச்சி. என்ன நினைச்சிட்டு இருக்க. ஒழுங்கு மரியாதையா இரு. தாயம்மா, உன் பிள்ளைக்கிட்ட சொல்லி வை. அப்புறம் ரெண்டு பேரையும் வேலையை விட்டு தூக்கிடுவேன்"

"அய்யா, நான் கண்டிச்சு வைக்கிறேன் அய்யா" என்று சொல்லி அம்மா சமையல் கட்டு பக்கம் என்னைக் கூட்டிச் சென்றாள். அங்கே பிருந்தா வாயெல்லாம் சிரிப்பாக செல்வது தெரிந்தது.

தேம்பி தேம்பி அழுத முனுசாமியை தாயம்மா தேற்ற ஆரம்பித்தாள்,

"நீ ஏன்யா அழற? உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நீ ஒண்ணும் பண்ணி இருக்க மாட்ட. எனக்குத் தெரியும். என்ன பண்ணறது. இந்த பாவி மக வயித்துல இல்லை வந்து பொறந்துட்ட. கவலைப் படாத ராசா. எல்லாத்துக்கும் ஒரு விடிவுகாலம் வரும்" என்று சொல்லி அழும் அம்மாவைப் பார்த்து மேலும் அழ ஆரம்பித்தான் முனுசாமி.

இது போல பல அவமானங்கள். பலமுறை அம்மாவிடம் சொல்லி அழுவான்,

"என்னையை விட்டுடும்மா. நான் வேற எங்கயாவது வேலை செய்யுறேன்"

ஒவ்வொரு முறையும் அம்மா ஏதாவது ஒரு சமாதானம் சொல்லி அவனை அங்கேயே வேலைப் பார்க்க வைத்துவிடுவாள். பிருந்தாவின் சீண்டல்கள் நின்றபாடு இல்லை. சிறு வயதில் ஆரம்பித்த இந்த விளையாட்டு இதோ இன்றுவரை தொடர்கிறது. முனுசாமிக்கு இப்போ 18 வயது. பார்க்க சினிமா ஹீரோ போல் இருந்தான். அவனால் படிப்பை தொடர முடியவில்லை. வீட்டு வேலைகள், மற்ற வேலைகள் செய்து கொண்டு போஸ்டலில் படிக்கிறான்.

ஆனால், பிருந்தா ஒரு மிகப்பெரிய காலேஜில் சேர்ந்தாள். மிக அழகான பெண்ணாக மாறிவிட்டாள். இயற்கை தந்த வரமும், பணமும் சேர்ந்து அவளை ஹீரோயின் போல் ஆக்கிவிட்டது.

ஒரு நாள் மாலை தாயம்மா, முனுசாமியிடம் காபி கொடுத்து பிருந்தாவிடம் கொடுக்கச் சொன்னாள். அவனும் ஒருவித கலக்கத்துடன் அவள் ரூமை திறந்தான்.

அங்கே.....

-தொடரும்

3 comments:

Unknown said...

நல்ல துவக்கம்...

Anonymous said...

டும்டும்..டும்டும்...
முனிசாமி எதற்கு சிரித்தான்?
போக...போகதான் தெரியும்.

iniyavan said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
நல்ல துவக்கம்...//

நன்றி தலைவரே!