Mar 16, 2011

நான் கெட்டவன்! - பாகம் -10

அங்கே நான் சற்று முன் பார்த்த பெண் மயங்கிய நிலையில் இருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நன்றாக பார்த்தேன். அவளின் மேலாடை விலகி இருந்தது. அவளின் ஜாக்கட் பிரிந்திருந்தது. அவளின் சேலை விலகி இருந்தது. அவளின் பாவாடை மேலே ஏறியிருந்தது. என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன்.

பிறகு நான் கீழே குனிந்து அவளை.........

இதற்கு மேலே சொல்லப் பிடிக்கவில்லை அனு. இப்போ சொல்லு, நான் எப்படிப்பட்ட நண்பர்கள் கூட எல்லாம் பழக்கம் வைத்து இருந்திருக்கிறேன். இப்படிப்பட்ட நான் எப்படி நல்லவனாக இருக்க முடியும். அதனால்,

நான் கெட்டவன்தான்'' என்று சொல்லி நிறுத்தி அவளின் முகத்தைப்பார்த்தேன்.

"ஆமாம். நீங்க கெட்டவர்தான்'

நான் ஆச்சர்யமாக. "என்ன அனு சொல்ற?"

''ஆமாண்டா. நீ கெட்டவன் தான். உனக்கு என்னடா மரியாதை வேண்டிக்கிடக்கு?" என்றவளை ஆச்சர்யத்துடனும், பதட்டத்துடனும் பார்த்தேன்.

எழுந்தவள், தன் இரு கால்களையும் நான் அமர்ந்து இருந்த ஷோபாவில் என் கால்களின் அருகே வைத்து, என் முகத்தின் அருகே வந்து மிக ஆக்ரோஷமாக பேச ஆரம்பித்தாள்.

"ஏண்டா, நீங்க அன்னைக்கு கெடுத்து சீரழிச்சீங்களே அது யார் தெரியுமா? அது வேற யாரும் இல்லைடா. என் அம்மாதான். என் அம்மாவும், அப்பாவும் கைக்குழந்தையா இருந்த என்னை அழைச்சிட்டு முசிறில இருக்க எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு ஊருக்கு வந்துட்டு இருந்தப்போ, எனக்கு திடீருனு வயித்து வலி வர, பாதியில பஸ்லேந்து இறங்கி, அம்மாவை அங்க நிக்க வைச்சுட்டு பக்கத்துல இருந்த கடைக்கு அப்பா என்னைக் கூட்டிப் போய் விளக்கெண்ணெய் வாங்கி என் வயித்துல தடவிட்டு, நான் அப்படியும் அழுகவே தூக்கிட்டு அம்மாவை பார்க்க வந்துருக்காங்க. அங்க பார்த்தா அம்மா இல்லையாம். பிறகு அங்க இருக்க எல்லாத்துட்டயும் அப்பா விசாரிச்சுருக்காங்க. யாருக்கும் ஒண்ணும் தெரியலை. ஒரே ஒருத்தர் மட்டும், அங்கே இருந்து ஒரு காருல யாரோ பொண்ணு போனா மாதிரி இருந்துதுன்னு சொல்லி இருக்காங்க. அப்பா உடனே பக்கத்துல இருந்த போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு, அவங்க கேட்ட அசிங்கமான கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு, காலைல வரை அங்கேயே இருந்திருக்கார். காலைல யாரோ ஒருத்தர் வந்து அங்க இருக்க ஹாஸ்பிட்டல் கிட்ட ஒரு பொண்ணு கிடக்கறதா சொல்லி இருக்காங்க. போய்ப் பார்த்தா எங்க அம்மா மூச்சு பேச்சு இல்லாம கிடந்துருக்காங்க. யாரோ ஒரு புண்ணியவான் அங்கே போட்டுட்டு போயிருக்கான்"

"அனு, ஒரு நிமிசம், நான் சொல்றதக்கேளு"

"நீ ஒரு ம..வும் சொல்ல வேணாம். அப்புறம் டாக்டர் வந்து பார்த்து, உடனே சிகிச்சை கொடுத்துருக்காங்க. அப்போத்தான் அப்பாவுக்கு தெரிஞ்சுருக்கு. வெறி நாய்ங்க என் அம்மாவை சின்னா பின்ன படுத்தி இருக்காங்கன்னு. அப்பா துடிச்சு போயிருக்கார். வாழ்க்கை வெறுத்து அலைஞ்சு இருக்கார். அம்மா ஏறக்குறைய நடை பிணமா வாழ்ந்துருக்காங்க. அதன் பின் ஒரு நாள், அம்மா நாம இப்படி போயிட்டமேனு வருந்தி, ரொம்ப நொந்து போய் தூக்குல தொங்கப் போய், உடனே அப்பா வந்து காப்பாத்தி உயிருக்கு ஆபத்தான நிலைல ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கார். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில இருந்த அம்மா வெளியே வந்தப்போ ஏறக்குறைய ஒரு மன நோயாளி போல ஆயிட்டாங்க. உடல் நலம் மட்டும் அல்லாமல் மனமும் பாதிக்கபட்டுபோய், புத்தி சுவாதீனம் இல்லாம பல வருசம் இருந்து ஒரு ஆறுமாசம் முன்னாடித்தான் செத்துப்போனாங்க. அப்பா என்னை வளர்க்க பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. அப்போ முடிவு பண்ணேண்டா. உங்க எல்லோரையும் அழிக்கணும்னு. அப்புறம்தான் ஒவ்வொண்ணா கண்டுபிடிக்க ஆரம்பிச்சேன். யார் எங்க எங்க இருக்கீங்கன்னு. உன்னைப்பற்றிய விவரம் தெரிஞ்சுது. அதான் உன்னை சுத்தி சுத்தி வந்தேன். இன்னைக்குத்தான் என்னோட ஆசை நிறைவேறப்போகுது" என்று சொல்லி நிறுத்தியவளிடம்,

நான்,

"அனு, நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட. நான் சொல்ல வந்ததை நீ முழுமையா கேட்கல. அன்றைக்கு காரின் உள்ளே நான் போனதும், அந்த பெண்ணின் நிலமையை அறிந்ததும், எனக்கு உடனே தெரிந்துவிட்டது, அந்தப் பெண்ணை என் நண்பர்கள் கெடுத்துவிட்டார்கள் என்று. நானும் என் நண்பர்கள் போல காமுகன் என்று நீ நினைப்பது தவறு. நல்ல வேளை அன்று காரின் சாவி என் வசம் இருந்தது.உடனே விரைவாக செயல்பட்டேன். ஓடிப்போய் முன் சீட்டில் ஏறி, காரை அவர்கள் அருகில் வருவதற்குள் மிக வேகமாக எடுத்து, படு வேகமாக ஓட்டிச்சென்று அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றேன். சென்றவன் முதலில் அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என்றுதான் சென்றேன். ஆனால், பிரச்சனை வரும் என்பதாலும், என் மேல் சந்தேகப்படுவார்கள் என்பதாலும், ஆஸ்பத்திரி அருகே படுக்க வைத்துவிட்டு ஓடிவிட்டேன். மொத்தத்தில் நான் செய்த ஒரே தவறு நான் அவர்களுடன் முக்கம்பு சென்றதும், தவறு செய்தார்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை போலிஸில் மாட்டிவிடாததும்தான். அதற்கு காரணம் அன்று என் குடும்பம் இருந்த நிலமை. அவர்களோ மிகப்பெரிய பணக்காரர்கள். ஆனால் அதை நினைத்து நான் வருந்தாத நாட்கள் இல்லை. இன்று உன்னிடம் கூறும்போதுதான் என் மனப்பாரம் இறங்கி லேசானது. அதனால் என்னை தவறாக நினைக்காதே அனு"

என்று சொல்ல நினைததவன் சொல்ல முடியாமல் மயக்கமானேன்.

அனு கொடுத்த ஜூஸ் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது போல.

முற்றும்.


1 comment:

Anonymous said...

என்ன சார்,

கடைசியில இப்படி முடிச்சிட்டீங்க.

-இளங்கோ