Mar 7, 2011

நான் கெட்டவன்! - பாகம் -3

"அப்பொழுது நான் 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என்னுடன் படித்த விஜயன் என்ற நண்பன் ஏதோ ஒரு புத்தகத்தை மறைத்து வைத்து படித்துக்கொண்டிருந்தான். என்ன புத்தகம் என்று எட்டிப்பார்த்தேன். அவன் மேலும் மறைக்கவே, ஆர்வம் அதிகமாக,

'டேய், என்ன புத்தகம் படிக்கிற?' என்றேன்.

'இது எல்லாம் நீ படிக்கக்கூடாது' என்றான்.

விஜயன் மூன்று வருடங்களாக ஒரே வகுப்பில் படித்தவன். வயதில் பெரியவன். நான் வற்புறுத்திக் கேட்கவே என்னிடம் புத்தகத்தை காண்பித்தான். அது ஒரு செக்ஸ் புத்தகம். அவன் காண்பித்த பக்கத்தில் ஒரு பெண்ணின் நிர்வாண போட்டோ இடம் பெற்றிருந்தது. இதுவரை அந்த மாதிரி எதையும் பார்த்திராத நான், அந்த படத்தைப் பார்த்தது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அன்று இரவு முழுவதும் என்னால் தூங்கவே முடியவில்லை. கனவு முழுவதும் அந்த பெண்ணின் படமே வந்தது.

அடுத்து வந்த நாட்களில் அந்த கதைப் புத்தகத்தை நான் படிக்க நேர்ந்தது. வாழ்வின் சில விசயங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அதனால் என் உடலும், மனமும் கெட ஆரம்பித்தது. படிப்பில் என் கவனம் சிதறி அந்த மாதிரி புத்தகம் படிப்பதில் என் கவனம் அதிகமானது. அதுவரை பெண்களை மரியாதையாக பார்த்து வந்த நான், வேறுவிதமாக பார்க்கத் தொடங்கினேன்"

என்று சொல்லி நிறுத்தி, "ஒன்பாதவது படிக்கையிலேயே நான் எத்தனை தவறுகள் செய்திருக்கிறேன் பார்?" என்று சொல்லி அனுவின் அழகிய முகத்தை ஏறிட்டேன்.

அவளோ, "இதுல என்ன சார், தப்பு இருக்கு. எல்லோரும் அந்த வயசுல செய்யற சாதாரணமான விசயங்களைத்தான் நீங்களும் செய்திருக்கின்றீர்கள்" என்றாள்.

'இவளிடம் எப்படி என்னைப் புரிய வைப்பது?' என்று குழம்பிக் கொண்டிருக்கையில்,

"ஏங்க ஆபிஸுக்கு நேரமாகலை?" என்று மனைவி கேட்கவே,

"சரிம்மா, இன்னொரு நாள் பேசலாம்" என்று அவளிடம் சொல்ல, அவள் முகமோ வாடிப்போனது.

"சரி சார், நான் இன்னொரு நாள் உங்களைச் சந்திக்கிறேன்" என்று சொல்லி சென்றாள்.

இது நடந்து ஒரு நான்கு நாட்கள் இருக்கும். அன்று சீக்கிரமே அலுவலகத்தை விட்டு வீட்டுக்குச் சென்றேன். வீட்டை நெருங்குகையில்தான் கவனித்தேன். அங்கே ஒரு ஸ்கூட்டி நின்று கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால், சமையலறையில் என் மனைவியிடன் பேசிக்கொண்டிருந்தாள் அனு.

எனக்கு ஒரே ஆச்சர்யம். பொதுவாக என் மனைவி யாரையும் வீட்டின் உள்ளே அனுமதிப்பதில்லை. அதுவும் சமையல் அறை என்றால் கேட்கவே வேண்டாம். சமையல் அறையை ஒரு புனிதமான இடம் போல் கருதுவாள் என் மனைவி.

"அனு என்ன சொல்லி கவிழ்த்து இருப்பாள் என் மனைவியை" என்று நினைத்துக்கொண்டே ஷோபாவில் அமர்ந்தேன்.

இன்று புடவையில் இருந்தாள். அவள் வயதுக்கு இது கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் ரொம்ப அழகாக இருந்தாள். பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. "சே! நான் ஏன் இப்படி நினைக்கிறேன்" என என் மேலே எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

"வாங்க, எப்போ வந்தீங்க. சத்தம் போடாம வந்து உட்கார்ந்து இருக்கீங்க" என்று என் மனைவி என் அருகில் உட்கார்ந்தாள்.

'காபி சாப்பிடறீங்களா?" என்றவள், "அனு, உன் ஆஸ்தான எழுத்தாளருக்கு காபி கொண்டு வா" என்றாள்.

எனக்கு உடனே அதிர்ச்சியானது. "எப்படி அதற்குள் இவர்கள் இத்தனை நெருக்கமானார்கள்" என்று குழம்பிப்போனேன்.

அன்று என்னவோ சாதாரணமாகத்தான் பேசினாள் அனு. ஆனால், அன்று இருட்டும் வரை இருந்து எங்களுடன் உணவருந்தி விட்டுத்தான் சென்றாள்.

அனு போனதும் என் மனைவியைப்பார்த்து கேட்டேன்,

"எப்படி நீ இவ்வளவு நெருக்கமான? என்னாச்சு உனக்கு? எதுக்கு தேவையில்லாம அவளை எல்லாம் உள்ள விடற? ஏதோ அன்னைக்கு ஒரு நாள் வந்தா, பேசினா, போனா அதோட விட வேண்டியதுதானே? எதுக்காக அவகிட்ட இந்த நெருக்கம்" என்று மெதுவாக சத்தம் போட்டேன்.

ஆனால் மனைவியோ,

"ஏன் என்ன ஆச்சுன்னு சத்தம் போடறீங்க. ஏதோ அம்மா இல்லாத பொண்ணாம். அக்கா அக்கான்னு பாசத்தை பொழியிறா. பார்க்க வேற என் தங்கை போலவே இருக்கா"

"அதெல்லாம் சரிம்மா. இது தேவையில்லாம வேற பிரச்சனைகளை கிளப்பிவிடப்போகுது"

"என்ன பிரச்சனை"

"அவ என்கிட்ட குளோசா பழகறது எனக்கே பிடிக்கலை"

"ஏன் உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கையில்லையா?" என்றாள்.

இவளிடம் என்ன சொல்லி நான் புரிய வைப்பது?

நான் யோக்கியன் தான். தவறு செய்யமாட்டேன் தான். ஆனால் என்னையும் மீறி நான் ஏதாவது தவறு செய்துவிட்டால்?

எப்படி செய்வேன்? நிச்சயம் எந்த தவறும் செய்ய மாட்டேன். என் மேலே இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் மனைவிக்கு நான் ஒரு போதும் துரோகம் மனதால்கூட நினைக்கக் கூடாது. மனம் தெளிவானது.

இனி அனுவுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று நினைத்து தூங்கப் போனேன்.

தேவையில்லாமல், "யார் அது கனவில்?" என் மனம் ஏன் இப்படி தடுமாறுகிறது?

அன்று மாலை நான்கு மணி இருக்கும். ஒரு போன். யார் என்று பார்த்தால் அனு. எடுக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், என்னையறியாமல் போனை எடுத்துவிட்டேன்.

"ஹலோ"

"சார், இன்னைக்கு மாலை மீட் பண்ணலாமா?"

"எதுக்கு?"

"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் சார்"

'என்ன பேசணும்?' என்று கேட்க நினைத்தவன், "எங்க மீட் செய்யலாம்?" என்றேன்.

-தொடரும்No comments: