Mar 8, 2011

நான் கெட்டவன்! - பாகம் -4

நகரின் மிகப்பெரிய ஒரு ஹோட்டலின் பெயரைச் சொல்லி அங்கே வருமாறு கூறினாள். ஆபிஸ் முடிந்தவுடன் அந்த ஹோட்டலை நோக்கி என் காரைச் செலுத்தினேன். குழப்பமான மனநிலையில் இருந்தேன்.

'என்ன செய்கிறேன் நான்? எதற்காக அவள் கூப்பிட்டவுடன் அவளைக்காண செல்கிறேன்? என்ன வேணும் எனக்கு? அவள் கூப்பிட்டவுடன், வர முடியாது என சொல்லாமல் என்னைத் தடுத்தது எது? நான் அவளிடம் எதிர்ப்பார்ப்பது என்ன? ஒரு வேளை என்னைப் போல கதைகளைப் பற்றி அதிகம் பேசுகிறாள், விவாதிக்கிறாள் என்ற காரணமா? அதுதான் காரணம் என்றால் என் மனைவியே ஒரு நல்ல விமர்சகர் ஆயிற்றே? அவளை விட இவள் எந்த விதத்தில் மேல்? ஒரு வேளை நான் அவளை விரும்புகிறேனோ? ஏன்?

இவ்வாறு மனம் சிந்தித்துக்கொண்டு இருக்கும் போதே ஹோட்டல் வந்துவிட்டதை உணர்ந்து காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தேன். நுழைவாயிலில் நின்ற அனு என்னைப்பார்த்ததும் ஓடி வந்து என் கையைப் பிடித்துக்கொண்டாள். அப்பொழுதுதான் கவனித்தேன். ஹோட்டலில் இருந்த அனைவரும் எங்களையே ஒரு மாதிரி பார்ப்பதை. ஆம், நடுத்தர வயதுடைய ஒரு ஆணுடன் ஒரு சின்னப்பெண் இப்படி குழைந்தால் எல்லோருக்கும் தப்பாகத் தானே தெரியும்?

அருகில் உள்ள இடத்தில் அமர்ந்தோம். அனு என் அருகில் அமர்ந்தாள். இன்று கொஞ்சம் அதிக கவர்ச்சியுடன் இருந்தாள். இப்படிப்பட்ட உடை அணிவாள் என்று தெரிந்திருந்தால், நான் வந்திருக்கவே மாட்டேன். ஒரு சின்ன ஸ்கர்ட், மேலே டைட்டான டி ஷர்ட். தலை முடியை வாராமல் அப்படியே விட்டிருந்தாள்.

அதற்குமேல் அவளைப் பார்க்க விரும்பாமல்,

"எதற்காக என்னை இங்கே வரச்சொன்னாய்? என்ன பேச வேண்டும்?" என்றேன்.

"இருங்க சார், முதல்ல ஏதாவது சாப்பிடலாம்" என்றவள், சர்வரைக்கூப்பிட்டு
தனக்கு ஒரு ப்ளேட் இட்லி வடை ஆர்டர் செய்துவிட்டு,

"சார், உங்களுக்கு?" என்றாள்.

"எனக்கு காபி போதும்" என்றேன்.

சர்வர் எங்கள் இடத்தை விட்டு நகர்ந்ததும்,

"சொல்லுங்க சார், அன்னைக்கு பாதியிலெயே விட்டுட்டிங்க. அப்புறம் என்னவெல்லாம் தப்பு செய்தீங்கன்னு சொல்லுங்க. அப்பத்தானே நான் உங்களை கெட்டவன் என்று நம்ப முடியும்" என்றாள்.

"இதற்காகத்தான் என்னை வரச்சொன்னாயா? அவ்வளவு முக்கியமான விசயமா இது? ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்றாயே?"

"நான் எதற்காக வரச்சொன்னென் எனபதை பிறகு சொல்கிறேன். இப்போ நீங்கள் உங்கள் கல்லூரி வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்" என்றாள்.

எதற்காக இப்படி என்னுடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளத் துடிக்கிறாள்? என்ன காரணம்? நான் இவளுக்கு எதற்கு சொல்ல வேண்டும்? ஏதோ தெரியாத்தனமாக அன்றைய கலந்துரையாடலில் நான் கெட்டவன் என்று சொல்லப்போக அதையே விடாப்பிடியாக பிடித்துக்கொண்டாளே? அவள் கேட்டால் நான் சொல்ல வேண்டுமா என்ன? முடியாது. மாட்டேன். எழுந்து செல்லலாம் என நினைக்கையில் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் ஒரு துண்டு இட்லியை எடுத்து வாயில் வைக்கும் போது அவள் உதடுகளை பார்க்க நேர்ந்தது.

மனதில் நினைத்திருந்த அனைத்தும் தவிடு பொடியாகி ஓடிவிட நான் மெல்ல பேச ஆரம்பித்தேன்.

"அனு! நான் சின்ன சின்ன தவறுகளாக நிறைய செய்திருக்கிறேன். இதுவரை என் மனைவியிடம் கூட நான் சொன்னதில்லை. ஒரு வேளை அவள் என்னிடம் கேட்டிருந்தால், நான் சொல்லி இருப்பேனா? எனத்தெரியவில்லை. இருந்தும் உன்னிடம் சொல்கிறேன். கேள்"

"சொல்லுங்க சார்" என்று ஆர்வமாக என்னைப்பார்த்தாள். அவளின் கால்கள் டேபிளின் அடியில் தெரியாமல் என் கால்களின் மீது பட்டனவா? இல்லை வேண்டுமென்று பட்டதா? எனத்தெரியாத நிலையில் நான் சொல்ல ஆரம்பித்தேன்.

நிறைய செக்ஸ் புத்தகங்களும், நிறைய நீலப்படங்களும் பார்த்து மனம் பேதலித்து போயிருந்த ஒரு நாள், என் நண்பன் சரவணன் என் அலுவலகத்திற்கு வந்தான். வந்தவன் என்னை ஒரு முக்கியமான இடத்திற்கு கூட்டிப்போவதாகச் சொல்லி என்னை அழைத்தான். நானும் அவன் கூட சென்றேன்.

அவன் அழைத்துச்சென்ற இடம் ஒரு நகர். ஊரிலிருந்து சற்றே உள்ளே விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு நகர். எல்லா வீடுகளும் புதுமையாக இருந்தன. ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் நிறைய நபர்களைப் பார்க்க முடிந்தது. புதிதாக வந்த நகர் என்றாலும், எல்லா வீடுகளிலும் மக்கள் குடி வந்து இருந்தார்கள். பார்க்க பணக்காரர்கள் வசிக்கும் காலணி போல் இருந்தது.

ஒரு தெருவின் முன்னால் வண்டியை நிறுத்திய சரவணன் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். கதவை திறந்த அந்த அம்மாவிற்கு 50 வயது இருக்கலாம். பார்க்க லட்சுமிகரமாக இருந்தாள். இன்னும் நினைவிருக்கிறது, மஞ்சள் கலர் புடவை அணிந்திருந்தாள். தலை நிறைய மல்லிகைப்பூ. பெரிய குங்குமப்பொட்டு நெற்றியில் இருந்தது.

உள்ளே நுழைந்த சரவணனைப் பார்த்து, 'என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்" என்றாள்.

"ரொம்ப வேலை" என்றவன், "இருக்கா?" என்றான்.

'சாந்தி இல்லை. அம்சா இருக்கா? பரவாயில்லையா?" என்றாள்.

எனக்கு உடனே புரிந்து போனது, நாம் வந்திருக்கும் இடம் என்ன என்று. உடனே அந்த இடத்தை விட்டு கிளம்ப மனம் சொன்னது. ஆனால் உடல் கேட்கவில்லை. பேயரைந்தது போல் உட்கார்ந்து இருந்த என்னைப்பார்த்து,

"நீ முதல்ல போறியா?" என்றான்.

"எங்கே?" என்றவனை முறைத்துப்பார்த்தவன்,

'உள்ளே" என்று சொல்லி என்னை ரூமின் உள்ளே தள்ளினான்.

அங்கே.........


-தொடரும்1 comment:

Anonymous said...

கதை நல்லா விறுவிறுப்பா போகுது சார்! அடுத்த பாகம் நாளைக்கே போஸ்ட் பண்ணுங்க சார்.

-இளங்கோ