Mar 9, 2011

நான் கெட்டவன்! - பாகம் -5

அங்கே ஒரு அழகான பெண் உட்கார்ந்து இருந்தாள். பார்க்க ஒரு பதினெட்டு வயது இருக்கலாம். நல்ல சிகப்பு. பாவாடை தாவணியில் இருந்தாள். என்னைப் பார்த்ததும் என் கைகளைப் பிடித்து,

"வாங்க, உட்காருங்க" என கட்டிலில் அமர வைத்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவள் உடைகளை களையத் தொடங்கினாள். உடனே சுதாரிக்கலானேன்.

"ஐயைய்யோ, வேண்டாம்" என்றேன்.

"ஏன்?" என்று என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

"நான் அதற்கு வரவில்லை"

"பின் எதற்கு?"

என்னால் பதில் சொல்ல முடியவில்லை. உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. உடனே டாய்லெட் செல்ல வேண்டும் போல் இருந்தது. என் தொடைகள் நடுங்க ஆரம்பித்தன. நான் புத்தகங்களில் படித்ததும், பார்த்ததும், ஏங்கியதும் நினைவுக்கு வந்தாலும், ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது. தலை சுற்றுவது போல் இருந்தது.

என் நிலமையை பார்த்த அவள், "ஏன், இதுக்கு புதுசா?" என்றாள்.

"ஆம்" என்று தலையை ஆட்டினேன். பதில் வரவில்லை.

"முதலில் அப்படித்தான் இருக்கும். போகப் போக பழகிவிடும்" என்று என்னை நெருங்கினாள்.

ஓரளவு சுதாரித்துக்கொண்ட நான், "எனக்கு வேண்டாம்" என்றேன்.

"வேண்டாம் என்றால் எதற்கு வந்தீர்கள்?"

"தெரியாமல் வந்துவிட்டேன். என் நண்பன் என்னிடம் ஒன்றும் சொல்லாமல் என்னை ரூம் உள்ளே தள்ளிவிட்டான்"

"வந்துட்டு ஒண்ணும் இல்லாமல் போனால் எப்படி"

"சாரி, என்னை மன்னிச்சுடு"

"நீங்க உடனே போனா அந்தம்மா என்னை உண்டு இல்லைனு பண்ணிடும்" என்றாள்.

நான் ஏறக்குறைய அழும் நிலையில் இருந்தேன். என் நிலையை பார்த்த அவள் மனம் இறங்கி,

"சரி, பரவாயில்லை" என்றாள்.

"என்னை மன்னித்துவிடு" என்று மீண்டும் சொல்லிவிட்டு அவள் கையில் ஒரு சின்ன முத்தம் கொடுத்துவிட்டு உடனே ரூமை விட்டு வெளியேறினேன். அந்த முத்தம் காமத்தினால் கொடுத்தது அல்ல.

ரூமை விட்டு வெளியே வந்த என்னை ஆச்சர்யமாக பார்த்த சரவணன்,

"ஏண்டா, என்ன ஆச்சு?"

"எனக்கு பிடிக்கலை"

"உனக்கு பிடிக்கும்னுதான்"

"நான் எப்படா உன்னிடம் இந்த இடத்துக்கு கூட்டி வரச்சொன்னேன்?"

என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினேன். வீட்டின் உள்ளே அந்த அம்மா சரவணனிடம் சண்டை போடுவது என் காதுகளில் ஒலித்தது. விடுவிடுவென்று பஸ் ஸ்டாண்டு போய் சரவணனுக்காக காத்திராமல் நான் மட்டும் பஸ்ஸில் ஏறி ஊருக்குச் சென்றேன்.

வீட்டின் உள்ளே சென்றதும், பாத்ரூம் சென்றேன். அழுகை அழுகையாக வந்தது. ஒரு அரைமணி நேரம் அழுதேன். மனம் தெளிவானவுடன், குளிர்ந்த நீரில் குளித்தேன்.பின்பு சாதாரண மனநிலைக்கு மாறினேன். ஆனால், அன்று இரவு பலவிதமான சிந்தனைகள் தோன்றின. அழகான வாய்ப்பை வீணாக்கிவிட்டோமே, முயற்சித்து பார்த்திருக்கலாமே? என வேதாளம் முருங்கை மரம் ஏறியது. பிறகு ஒருவாரு தூங்கிப்போனேன்"

என்று சொல்லி முடித்துவிட்டு, அனுவை நோக்கினேன். அவள் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"இப்போ சொல் அனு. அந்த வயதிலேயே விபச்சாரியின் வீட்டிற்கு சென்ற நான் எப்படி நல்லவனாக இருக்க முடியும்?"

"நீங்க ஒண்ணும் தப்பு பண்ணலையே சார்"

"அங்க போனது தப்புத்தானே?"

"சார், மகாத்மா காந்தியே அவரும் அந்த மாதிரி இடத்திற்குப் போனதாக

அவர் சுயசரிதையில் எழுதியுள்ளார்"

"இருந்தாலும் அக்கா தங்கைகளுடன் பிறந்த ஒருவன் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் அனு"

"அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார். நீங்கள் தப்பு செய்யாதவரை நீங்கள் நல்லவர்தான்"

"இதுக்கூட பரவாயில்லை அனு. ஒரு முறை காலேஜ் படிக்கையில் நண்பர்கள் அனைவரும், வகுப்பை கட் அடித்துவிட்டு முக்கொம்பு போனோம். அங்கே மாலை வரை இருந்தோம். என்னுடன் வந்த அனைவரும் பணக்கார நண்பர்கள். ஒருவனின் காரில் போயிருந்தோம். கிளம்பலாம் என்று நினைத்திருந்த வேளையில் அங்கே ஒரு அழகான இளம்பெண்ணைத் தனியாக பார்த்தோம். அப்போது..."

"சார், இதை பிறகு கேட்கிறேன். அதற்குள் உங்களை அழைத்த காரணத்தை சொல்லிவிடுகிறேன்"

"என்ன?" என்பதுபோல் அவளைப்பார்த்தேன்.

"நாளை எனக்கு பிறந்த நாள். நீங்கள் என் வீட்டிற்கு வந்து வாழ்த்தினால் சந்தோசப்படுவேன். தயவு செய்து வாருங்கள். உங்களுக்கு நான் ஒரு பரிசு தர ஆசைப்படுகிறேன்"

"நிச்சயம் வருகிறேன். பிறந்த நாளுக்கு நான் அல்லவா பரிசு தர வேண்டும். நீ தருகிறென் என்கிறாயே"

"அது அப்படித்தான்" என்று சொன்னவள், என் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக ஹோட்டலைவிட்டு வெளியேறினாள்.

சாப்பிட்டதற்கு பணம் கொடுத்துவிட்டு, "என்ன மாதிரி பெண் இவள்? இவள் எதற்கு எனக்கு பரிசு தரவேண்டும்? நான் ஏன் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன். இதை மனைவி எப்படி எடுத்துக்கொள்வாள்?' என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு காரை செலுத்தினேன்.

-தொடரும்

5 comments:

Unknown said...

இந்த ஸ்டைலில் பின்றீங்க...

தனி காட்டு ராஜா said...

:)

iniyavan said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
இந்த ஸ்டைலில் பின்றீங்க...//

நன்றி தலைவரே.

iniyavan said...

//தனி காட்டு ராஜா said...
:)//

வருகைக்கு நன்றி தனிக்காட்டு ராஜா.

2009kr said...

நண்பா, கதை நன்றாக இருக்கிறது... தொடர்ந்து படிக்க ஆவலோடு உள்ளேன்.. நன்றி..