Mar 10, 2011

நான் கெட்டவன்! - பாகம் -6

குழப்பத்துடன் வீட்டில் நுழைந்த என்னைப்பார்த்து என் மனைவி,

"என்னங்க, ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க?" என்றாள்.

'ஒண்ணுமில்லை"

"என்னன்னு சொல்லுங்க. ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனையா?"

''ஆபிஸ்ல ஒண்ணும் இல்லை"

"பின்னே? ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு"

"இந்த அனு இல்லை"

"ஏன் அவளுக்கு என்ன?"

"ஆபிஸுக்கு போன் பண்ணினா. நாளைக்கு அவளுக்கு பிறந்த நாளாம். அதனால நான் அவ வீட்டுக்கு வரணுமாம். அவ எனக்கு ஏதோ சர்ப்ரைஸா பரிசு குடுக்கப்போறாளாம்"

"போயிட்டு வாங்களேன்"

"ஏண்டி, இதுக்கு எல்லாம் ஏன் போறீங்கன்னு கேட்க மாட்டியா?"

"ஏன் கேட்கணும்?"

"ஒரு வயசுப்பொண்ணு. அடிக்கடி வீட்டுக்கு வர்றா. போன்ல பேசுறா. வீட்டுக்கு கூப்பிடுறா, உனக்கு என் மேல ஒரு சந்தேகமும் வராதா?"

"ஏங்க வரணும்? உங்களால எனக்கு எந்த துரோகமும் செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியும்"

"அது எப்படி சொல்ற?"

"அது அப்படித்தான். விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது"

"என் மேலே அவ்வளவு நம்பிக்கையா?"

"ஆமாம். ஒரு பேச்சுக்கு நான் உங்கள் மீது சந்தேகப்படுவதாக வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் நீங்களும் என் மேல் சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது அல்லவா? என்றாவது என்னை அந்த கோணத்தில் நீங்கள் பார்த்ததுண்டா? இல்லையே? நீங்கள் காலையில் ஆபிஸ் சென்றால் திரும்பி மாலையில் வருகின்றீர்கள். எவ்வளவு நம்பிக்கையுடன் என்னை விட்டுவிட்டு செல்கின்றீர்கள். நான் என்ன செய்கிறேன் என்றோ, யாருடன் பேசுகிறேன் என்றோ, என்றாவது கேட்டதுண்டா? எத்தனை நம்பிக்கை என் மேல். கணவனோ மனைவியோ ஒருவர் மேலெ ஒருவர் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் பட்சத்தில் யாருக்கும் யாரும் துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராதுங்க"

என்றவளை அதற்கு மேல் பேசவிடாமால் அப்படியே சுவர் அருகே தள்ளி இரு கைகளாலும் அவள் தலையை ஏந்தி, அவள் கண்களை நேருக்கு நேராக சந்தித்து, அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டேன். காமம் கலக்காத முத்தம் அது. அன்பும் பாசமும் கலந்த முத்தம் அது. நெகிழ்வான முத்தம் அது. மென்மையான முத்தம் அது.

சில சமயம் இப்படிப்பட்ட முத்தங்களே எனக்கு போதுமானது. உடலும் உடலும் சேரும்போது உச்சக்கட்டத்தில் ஏற்படும் இன்பத்தைவிட, இந்த மாதிரியான முத்தம் என்னை பரவச நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. எல்லா சமயங்களிலும் இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. இருவரின் மனமும் ஒரே நிலையில் இருக்கையில், உண்மையான, கபடமில்லாத, அன்போடு நெருங்குகையில் மட்டுமே இப்படிப்பட்ட நிலை ஏற்படுகிறது. அப்போது உடல்கள் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து அடங்கும் பாருங்கள், அதை அனுபவித்து பார்த்தால் மட்டுமே முடியும்.

இது போல் மனைவி அன்னியொன்யமாக எல்லோருக்கும் அமைந்து விட்டால் நாட்டில் ஒரு கற்பழிப்பு சம்பவமோ, விவாகரத்தோ, வரதட்சணை கொடுமையோ எதுவுமே நடக்காது.

எப்படிப்பட்ட பெண் இவள்! ஆனாலும் அனுவின் அருகாமை ஒருவித கிளர்ச்சியை கொடுக்கிறதே ஏன்? என்ன காரணம்? ஒருவேளை நான் என் மனைவியிடம் உண்மையாக இல்லையோ?

என்னை தன் செயலால் புரியவைத்துவிட்டாள் என் தர்மபத்தினி. நான் என்னை சரி பண்ணிக்கொள்ள வேண்டிய தருணம் இது. என் மனதில் உள்ள அழுக்கை சுத்தப்படுத்த வேண்டிய தருணம் இது.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் எனத் தெரியவில்லை. போன் மணி ஒலிக்கவே ஓடிச்சென்று எடுத்தேன்.

"ஹலோ"

"சார், நான் அனு பேசறேன்"

கட் செய்துவிடலாமா? என நினைக்கையில் என் மனைவி அருகில் வந்து சைகையால் அருகில் வந்து,'யார்' என்றாள்.

'அனு' என்றேன் மெல்லிய குரலில், அவள் பேசுங்கள் என ஜாடைக்காட்டவே,

"சொல்லு அனு" என்றேன்.

"சார், நாளைக்கு வந்துடுவீங்க இல்ல"

"வந்துடறேன். அதான் அப்பவே சொன்னேனே வறேனு"

"இல்லை சார், எதுக்கும் இன்னொரு தடவை கேட்டுக்கலாமேன்னுதான்"

"நிச்சயம் வறேன்"

"சார், நீங்க எதுவும் பரிசு தர வேணாம். நான்தான் உங்களுக்கு பரிசு தருவேன். அது உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பரிசாக இருக்கப்போகிறது. அந்த மாதிரியான பரிசு வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு முறைதான் கிடைக்கும். இன்னொரு முறை நினைத்தாலும் கிடைக்காது. அதனால் வந்துவிடுங்கள். நான் கொடுக்கப்போகும் பரிசு உங்கள் மனைவிக்கு நிச்சயம் பிடிக்காது. எந்த மனைவியும் அதை விரும்ப மாட்டாள். அதனால், தயவு செய்து நீங்கள் மட்டும் வாருங்கள்" என்று சொன்னவள் என் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டாள்.

மீண்டும் என்னை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டாள்.

"என்னங்க சொல்றா?"

"நாளைக்கு அவசியம் வந்துடணுமா?''

"அதான் ஏற்கனவே சரின்னு சொல்லிட்டீங்களே"

"அதான் ஏதோ மறக்கமுடியாத பரிசுனு ஞாபகப்படுத்தினா"

"இது என்ன புதுசா இருக்கு. நாமதான பிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு பரிசு தரணும். இது என்ன புதுசா இருக்கு. இந்த காலத்து பெண்களே இப்படித்தான். எதையும் புரிஞ்சுக்க முடியாது" என்று சொல்லி அவள் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.

நான் தான் புழுவாய் துடித்தேன். என்ன சொல்கிறாள் இவள்? மறக்க முடியாத பரிசு என்கிறாளே? ஒரு வேளை அதுவாக இருக்குமோ? நினைக்கையிலேயே மனம் ஜிவ்வ் என்று ஆனது, ஆனால் மனைவின் நினைவு வரவே புஸ்ஸ் என்றாகிப்போனது.

மீண்டும் என் மனம் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது. வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை மீண்டும் அசைப்போட்டேன்.

மனதில் மீண்டும் மீண்டும் தோன்றிய ஒரே விசயம்,

"நான் கெட்டவனோ"

நீண்ட நேர சிந்தனைக்குப் பின் மனைவி சாப்பிடக்கூப்பிடவே, சகஜ நிலைக்குத் திரும்பினேன்.

இரவு. பக்கத்தில் பார்த்தேன். மனைவி நன்றாக உறக்கத்தில் இருந்தாள். நான் தான் தூக்கம் வராமல் 'என்ன பரிசாக இருக்கும்?' என்ற சிந்தனையில் புரண்டு புரண்டு படுத்தேன்.

-தொடரும்

4 comments:

J.P Josephine Baba said...

அனுவை போன்ற பெண்களை நினைத்தாலே பயமாகத் தான் உள்ளது! தயவாக அவள் வீட்டு விருந்துக்கு தனியாக செல்லாதீர்கள்!

iniyavan said...

//அனுவை போன்ற பெண்களை நினைத்தாலே பயமாகத் தான் உள்ளது! தயவாக அவள் வீட்டு விருந்துக்கு தனியாக செல்லாதீர்கள்!//

கதையின்படி நான் போய்த்தான் ஆக வேண்டியுள்ளது.

வருகைக்கிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஜோசப்பின் பாபா.

Nadodi said...

Sir ...am a pathivulaga fan ...visiting your site for few weeks this story is really good, interesting and gearing up.....great and keep it up...

iniyavan said...

//Sir ...am a pathivulaga fan ...visiting your site for few weeks this story is really good, interesting and gearing up.....great and keep it up...//

வருகைக்கிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர் நாடோடி.