Mar 11, 2011

நான் கெட்டவன்! - பாகம் -7

திடீரென விழித்தவள் தூங்காமல் நான் இருப்பதைப் பார்த்து,

"என்னங்க தூக்கம் வரலியா?" என்றாள்.

"ஆம்" என்று தலையசைத்தேன்.

"ஏன்?"

"ஏதோ தப்பா தோணுது"

"என்ன?"

"எல்லாம் இந்த அனுவைப்பத்தி"

"அதான் பேசி முடிச்சுட்டோமே. நீங்கதான் நாளைக்கு அவ பிறந்த நாளுக்கு போறதா சொன்னீங்களே"

"ஆமாம். இருந்தாலும், உங்கிட்ட ஒரு உண்மையை மறைச்சுட்டேன்"

"என்ன உண்மையை?"

"அனு என் கிட்ட போன்ல பேசி அவ வீட்டுக்கு வரச்சொன்னான்னு சொன்னேன் இல்லை. அது பொய்"

"தெரியும்" என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தேன்.

''எப்படி?"

"உங்க ஷர்ட்டை துவைக்கப்போடும்போது பாக்கட்ல ஏதாவது இருக்கான்னு வழக்கப்படி பார்த்தேன். அதுல ஹோட்டல் பில் இருந்துச்சு. அதை வைச்சு தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு வேளை நீங்க அனுவோட போயிருக்கலாம்னு"

"ஏன் என்கிட்ட பொய் சொன்னீங்க. ஏன் ஹோட்டலுக்கு போனதை மறைச்சீங்கன்னு என்கிட்ட கேக்கணும்னு உனக்குத் தோணலியா?''

"இல்லை"

"ஏன்?"

"தோணலை"

"அதான் ஏன்னு கேக்கறேன்"

"என் கிட்ட சொல்லாம இருக்கறதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு நினைச்சேன். சொல்லக்கூடிய விஷயமா இருந்தா சொல்லி இருப்பீங்கன்னு தெரியும்"

"நீ இவ்வளவு நல்லவளா?"

"இதுக்கு பேரு நல்லவள்னு அர்த்தமா?"

"ஏன் இப்படி ரொம்ப நல்லவளா இருந்து என்னை கொல்லுற"

"சும்மா எதையாவது பேசிட்டு இருக்காம தூங்குங்க. காலைல சீக்கிரம் எழுந்து வாக்கிங் போக வேண்டாமா?"

"தூக்கம் வரலைமா"

"அப்படியா! உங்களை எப்படி தூங்க வைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்றவள், அப்படியே அருகே நெருங்கிப் படுத்தாள். இரண்டு கைகளாலும் என் கழுத்தைச் சுற்றி வளைத்தாள். என் முகத்தை அவள் மார்பின் உள்ளே வைத்து அழுத்திக்கொண்டாள். சிறு கோழிக்குஞ்சுகள் தன் தாய் கோழியின் அரவணைப்பில் போய் ஒட்டிக்கொள்வதைப் போல் ஒட்டிக்கொண்டேன்.

நான் எங்கோ பறப்பதைப்போல் உணர்ந்தேன். எனக்கு என்ன வேண்டும்? எப்போது வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவள் என் மனைவி. பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் பேசுவதில்லை. என்னை எப்படிக் கையாள வேண்டும் என்பதை என்னை விட அதிகம் அறிந்தவள் அவள். சண்டை அதிகம் வருவதில்லை. சண்டையோ மனஸ்தாபமோ வரும் நாட்களில், மனம் சஞ்சலப்படும் நேரங்களில் எல்லாம் இப்படித்தான் அரவணைப்பாள். இந்த சுகத்திற்க்காகவாவது சண்டை வராதா? என ஏங்குவேன் நான்.

அந்த கணங்களில் என் கோபம், வீரம், அகங்காரம், ஆண் என்கிற கர்வம், என் திமிர், தலைக்கனம் அனைத்தையும் தரைமட்டமாக்கிவிடுவாள். அவளின் அரவணைப்பில் உருகிப்போவேன் நான்.

அடுத்த ஒரு மணி நேரமும் என்னை ஆட்கொண்டாள். திகட்ட திகட்ட இன்பம் அளிக்கும் கடவுளானாள். அவளிடம் பிச்சைப் பெறும் பக்தனானேன் நான். இன்பம் வாரி வழங்குகையில் மனைவியாகவும், அறிவூட்டலில் கடவுளாகவும், என்னை தூங்க வைப்பதில் தாயாகவும் ஆனாள் என் தர்ம பத்தினி.

மனம் தெளிவானது. கலவி முடிந்தவுடன் மனம் மிக லேசானது. உடம்பும் லேசானது. மீண்டும் மேலே மேலே பறப்பது போல் இருந்தது. லேசான வேர்வையுடன் திரும்பி பார்த்தேன்.

"இவள் என்னவள். எனக்கே எனக்கானவள். இவள் என்னுடன் இருப்பது பல நூறு யானை பலம் எனக்கு. ஒரு அனு என்ன? அவளைப்போல் ஆயிரம் அனு வந்தால் கூட என்னால் இவளுக்கு துரோகம் பண்ண முடியாது" என்று நினைத்து அவளை கட்டிப்பிடித்து உறங்கலானேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாது.

கனவில் நானும் என் மனைவியும் ஒரு பெரிய பல்லக்கில் இருக்கிறோம். யாரோ எங்களை தூக்கி செல்கிறார்கள். ஒரே ஆராவாரம். ஊரே குதுகூலமாக இருக்கிறது. நான் ராஜா போலவும், அவள் ராணி போலவும் இருக்கிறாள். ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.

சிறிது தூரம் சென்றவுடன், ஒரு மிகப்பெரிய படை எங்களை நோக்கி வருகிறது. எங்கள் பல்லக்கை நிறுத்தி என்னை மட்டும் கடத்திச்செல்கிறது. என் மனைவி கதறுவது தெரிகிறது. சிறிது தூரம் சென்று இன்னொரு பல்லக்கில் என்னை ஏற்றுகிறார்கள்.

பக்கத்தில் ஒரு அழகான இளம் பெண். யார் என்று கூர்ந்து பார்க்கிறேன்.

அது "அனு"

-தொடரும்


4 comments:

தனி காட்டு ராஜா said...

//"ஏன் இப்படி ரொம்ப நல்லவளா இருந்து என்னை கொல்லுற" //

:(

:)

Anonymous said...

அய்யா, உங்க சொந்தக்கதை போல தெரியுதே,


சிவபார்க்கவி

iniyavan said...

// தனி காட்டு ராஜா said...
//"ஏன் இப்படி ரொம்ப நல்லவளா இருந்து என்னை கொல்லுற" //

:(

:)//

வருகைக்கு நன்றி தனிக்காட்டு ராஜா.

iniyavan said...

//அய்யா, உங்க சொந்தக்கதை போல தெரியுதே,

சிவபார்க்கவி//

ஹலோ,

இது கதைங்க. சொந்தக்கதை அல்ல. லேபிள்ல அனுபவம் தப்பா வந்துடுச்சு. உடனே எடுத்துடறேன்.