Mar 14, 2011

நான் கெட்டவன்! - பாகம் -8


"சே'' என்ன கனவு இது? ஏன் இப்படி? அவள் ஏன் என் கனவில்? அப்படியானால் என் மனதின் ஆழத்தில் ஒருவிதமான ஆசை இருக்கிறதா? இல்லை, அவளைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்துவிட்டு படுத்ததால், அந்த நினைவுகளே கனவாக மாறியதா? குழப்பம் வந்தது.

எழுந்து அவசர அவசரமாக குளித்தேன். இந்த மாதிரியான தருணங்களில் நான் அதிக நேரம் பூஜை அரையில் இருப்பேன். நேராக பூஜை அரைக்கு சென்று மனம் உருக பிரார்த்தனை செய்துவிட்டு, மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தேன். இருபது நிமிடங்களுக்கு பிறகு மனம் தெளிவானது.

'இன்றோடு சரி. இனி இந்த மாதிரி குழப்பங்கள் வாழ்வில் வரக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் யாருடனும் தேவையில்லாமல் நட்பை வைத்துக்கொள்ளக்கூடாது. 'அவள் வீட்டிற்கு வருகிறேன்' என்று சொல்லிவிட்டதால், இந்த தடவை போய்விட்டு வந்துவிட வேண்டும். இதோடு அவள் பழக்கத்தை விட்டு விட வேண்டும். இனி தொடரக்கூடாது'

என்று மனதிற்குள் தீர்மானம் எடுத்தேன்.

அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்ல கிளம்பினேன்.

"ஏங்க, அவதான் ஒண்ணும் பரிசு வேண்டாம்னு சொல்லிட்டா. அதனால நீங்க வெறும் கையோட போகாதீங்க. ஏதாவது வாங்கிப்போங்க" என்ற மனைவியை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

"என்ன வாங்கித் தரது"

"ஏதாவது வாங்கிக் கொடுங்க"

"சரிம்மா. ஏதாவது வாங்கறேன். அனு வீட்டிற்கு போய்விட்டு சீக்கிரம் வந்துடறேன்" என்று சொல்லி கிளம்பியவன், ஏதோ தோன்றவே, மீண்டும் கதவின் அருகே வந்து அவள் கன்னத்தில் ஒரு மெல்லிய முத்தமிட்டு,

"போய்ட்டு வரேம்பா" என்று சொல்லிவிட்டு விறுவிறு என ஆபிஸ் கிளம்பினேன்.

அலுவலகம் கிளம்புகையில் செல்லமாக முத்தமிட்டு செல்வது என் வழக்கம். அப்போதுதான் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும். சில சமயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு அல்லது சின்ன சண்டையோ வந்தால், அந்த முத்தம் இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் நானே வலியச் சென்று கொடுத்தாலும், அதை ம்றுத்துவிடுவாள். பின்பு சாயந்தரம் எப்போது வரும் என்று காத்திருப்பேன். ஆனால், இன்றைய முத்தம் அப்படி இல்லை. ஆனால், வழக்கம் போலவும் இல்லை. மெல்லிய முத்தமாக இருந்தாலும், கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

அலுவலகம் போனதும் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நினைவுகளிலிருந்து விலகி வேலையில் மூழ்கிப்போனேன். பத்து மணிக்கு காபி குடிப்பது வழக்கம். பத்து மணி காபியை தவறவிட்டால், அவ்வளவுதான். தலை வலிக்க ஆரம்பித்துவிடும். அதனால், காபி குடித்து வரலாம் என நினைத்து கேண்டின் கிளம்பினேன். அப்போது என் கைத்தொலை பேசி அழைத்தது. யாரென்று நம்பரை பார்த்தேன். அனு!

எடுக்கலாமா? வேண்டாமா? என ஒரு கணம் தடுமாறினேன். பிறகு எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். எப்படியும் இன்றைக்கு அப்புறம் அவளுடன் பேசப்போவது இல்லை. அதனால் இன்று பேசினால் தப்பில்லை, என நினைத்து,

"ஹலோ" என்றேன்.

"ஹலோ, குட் மார்னிங் சார்"

"வெரி குமார்னிங் அனு. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனு. நீ வாழ்வில் எல்ல்லா சுகமும் பெற்று நீடுடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்"

"ரொம்ப நன்றி சார். சாயந்தரம் ஒரு ஆறு மணிக்கு வந்துடுங்க சார்"

"வந்துடறேன்"

"சார், உங்களுக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்?"

"ஏம்மா, உனக்குத்தானே பிறந்த நாள். உனக்கு பிடிச்சதை செய்யும்மா?''

"சார், எனக்கு பிடிச்ச எழுத்தாளர் நீங்க. உங்களை சரியா கவனிப்பது என் கடமை இல்லையா?''

"பரவாயில்லை. உனக்கு என்ன பிடிக்குதோ, அதான் எனக்கும் பிடிக்கும்"

"சார், இன்னொரு கேள்வி. தப்பா நினைக்கலைனா, கேட்கலாமா?''

"தப்பா நினைக்க மாட்டேன். கேளு"

"சார், நீங்க டிரிங்க்ஸ் சாப்பிடுவீங்களா?"

"இல்லைம்மா. ஏன்?''

"இல்லை சாப்பிடுவீங்கன்னா, வாங்கி வைக்கலாமேன்னுதான்"

"எனக்கு ஆரஞ்சு ஜீஸ் போதும்"

"சரி சார். உங்களுக்காக காத்திருப்பேன். வந்துடுங்க"

எனக்கு மீண்டும் ஒரு மாதிரி ஆனது. என்னது இது? ஒரு பிறந்த நாள் விழாவுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறாள். அதுவும் எனக்கு? ஏன் எனக்கு பரிசு கொடுப்பதிலும், என்னை சந்திப்பதிலும் அவ்வளவு ஆரவமாய் இருக்கிறாள்?

இன்று ஒரு நாள் தானே? இனி நமக்கு குழப்பங்கள் எதுவும் வராது, என்று நினைக்கையில் அவள் நேற்று சொன்ன வாக்கியங்கள், மீண்டும் என்னைச்சுற்றி வந்தன,

"நீங்க எதுவும் பரிசு தர வேணாம். நான்தான் உங்களுக்கு பரிசு தருவேன். அது உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பரிசாக இருக்கப்போகிறது. அந்த மாதிரியான பரிசு வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு முறைதான் கிடைக்கும். இன்னொரு முறை நினைத்தாலும் கிடைக்காது. அதனால் வந்துவிடுங்கள்"

என்ன பரிசாக இருக்கும்? குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றேன். உடம்பு ஜிவ் என்று ஆனதைப் போல் உணர்ந்தேன்.

ஒரு வழியாக மாலை மணி 5.30 ஆனது. ஒருவித பதட்டம் என்னை தொற்றிக்கொண்டது. வேகவேகமாக ஆபிஸை விட்டு கிளம்பினேன். அருகில் உள்ள நகைக்கடையில் ஒரு ஜோடி வெள்ளிக் குத்து விளக்கு வாங்கினேன். முதலில் புடவையோ அல்லது வெள்ளிக்கொலுசோ வாங்கலாம் என்று இருந்தேன். ஆனால், எனக்கே புடவையோ அல்லது கொலுசோ கொடுப்பதற்கு ஒரு மாதிரி இருக்கவே கடைசியில் குத்துவிளக்கை வாங்கினேன்.

சரியாக ஆறு மணிக்கு அனுவின் வீட்டை அடைந்தேன். நேராக காம்பவுண்ட் கதவை திறந்துவிட்டு, வாசலில் உள்ள காலிங் பெல்லை அழுத்தினேன்.

உடனே கதவு திறந்தது.

அங்கே.....

- தொடரும்.


1 comment:

Anonymous said...

கதை அருமையா போகுது சார்!

- இளங்கோ