Apr 5, 2011

தோனியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது! - பாகம் 1


எனக்கு சிறு வயதில் அதிக கோபம் வரும். தேவையில்லாமல் கோபப்படுவேன். அதனால் நண்பர்களுடன் நிறைய சண்டை வந்திருக்கிறது. சில சமயம் அடிதடி வரை சென்றிருக்கிறது. அதனால் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன். ஆனால் அதற்கு எல்லாம் என்ன காரணம் என்று அந்த வயதில் என்னால் உணரமுடியாமல் போய்விட்டது. யோசித்துப்பார்த்தால், எதிலும் ஒரு அவசரம், நிதானமின்மை, நான் பெரிய ஆள் என்ற அகம்பாவம், தலைக்கனம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

என் நிலமை எனக்குப் புரிய பல வருடங்கள் ஆனது. நான் கம்பனியில் சேர்ந்த புதிது. எங்கள் கம்பனி இயக்குனர்களில் ஒருவரின் மகன் எங்கள் கம்பனியில் வேலைக்கு சேர்ந்தார். ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். மிகப்பெரிய புத்திசாலி. நல்ல படிப்பாளி. ஆனால் அவரும் கோபக்காரர். அவருக்கும் எனக்கும் வேலை விசயமாக எந்த தொடர்பும் இல்லை. ஆனால் என்னுடைய தினசரி அலுவலக வேலையில் குறுக்கிட ஆரம்பித்தார்.

அவருடைய தொல்லைகள் அதிகமாக ஒரு நாள் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் பெரிதாகி சண்டையில் போய் முடிந்தது. உடனே நான், "என் ரூமை விட்டு வெளியே செல்லுங்கள்" என்று கூறிவிட்டேன். அவரும் உடனே சென்றுவிட்டார். வெளியில் இருந்த அனைத்து அலுவலக நண்பர்களும், "உலக்ஸ், நீ அவ்வளவுதான். அவரை பகைச்சுக்கிட்ட இல்லை. உன் வேலை போகப்போகிறது" என்று சொல்லி பலவாறு பயமுறுத்திவிட்டார்கள்.

சூழ்நிலையின் ஆழம் புரிய எனக்கு பல மணி நேரங்கள் ஆனது. புதிதாக சேர்ந்திருந்த சிலர், அவரைப் பிடிக்காதவர்கள், என்னிடம், "நீ பண்ணது சரிதான். அவனை இன்னும் நீ திட்டி இருக்க வேண்டும். டைரக்டர் பையன் என்றால், மனதில் பெரிய இவன் என்று நினைப்பா?" என்று சொல்லி என்னைப் பலவாறு உசுப்பேத்திவிட்டார்கள். பலவிதமான குழப்ப நிலையில் நான் தங்கி இருந்த அறைக்குச் சென்றேன். பல மணிநேரம் சிந்தித்தேன்.

'நான் செய்தது தவறா? நான் அவ்வாறு பேசியிருக்கக்கூடாதோ? என்ன இருந்தாலும் அவன் ஒரு இயக்குனரின் மகன் அல்லவா? அப்படி என்ன நமக்கு கோபம்? பல வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு வேலை கிடைத்திருக்கிறது. அதிலிருந்து நம்மை அனுப்பிவிட்டால் என்ன செய்வது? வேலை கிடைக்க பல மாதங்கள் ஆகுமே? அப்பாவிடம் என்ன பதில் சொல்வது?' என்று குழம்பி தவித்தேன்.

ஆனாலும் மனதின் ஓரத்தில், 'அவர் நம் வேலையில் குறுக்கிடுவது சரியா? தேவையில்லாமல் என்னை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? அவரிடம் சண்டை போட்டது சரிதான்'

இப்படி மாறி மாறி குழம்பினேன். நான் பொதுவாக எந்த சண்டையையும் வளரவிடமாட்டேன். உடனே பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன். பல மணி நேர சிந்தனைக்கு பிறகு ஒரு முடிவு எடுத்தேன். ரூமை விட்டு வெளியே வந்தேன். யாரிடமும் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை. ஹீரோ ஹோண்டாவை எடுத்துக் கொண்டு நேராக இயக்குனரின் மகனின் வீட்டிற்கு சென்றேன். வண்டியை நிறுத்தினேன்.

இந்த சமயத்தில் ஒரு விசயத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எந்த சண்டையுமே ஏதோ ஒரு கண நொடியில் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில்தான் ஆரம்பிக்கிறது. சரியாக யோசித்துப் பார்த்தோமானால், பல நேரங்களில் அந்த சண்டையோ அல்லது வாக்குவாதமோ தேவையற்றது என்பது நமக்குப் புரியும். அதே போல் சண்டையிட்டவர்களை அடுத்த நாள் ஒன்றுமே நடக்காதது போல் நேரில் சந்தித்துப்பாருங்கள், உங்களுக்கு பல உண்மைகள் புரிய வரும்.

அவரின் வீட்டின் கதவைத் தட்டினேன்.

கொஞ்ச நேரம் கழித்து கதவு திறந்தது. வெளியே வந்த அவர் என்னைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டார். அந்த நேரத்தில் அவர் என்னை எதிர்பார்க்கவில்லை. "என்னடா இது? சாயங்காலம் நம்மிடம் சண்டையிட்டவன் இரவு வீட்டில் வந்து நிற்கிறானே" என்ற குழப்பம் அவரின் முகத்தில் தெரிந்தது.

ஒருவிதமான ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் என்னைப்பார்த்து,

"உள்ளே வா உலக்ஸ்" என்றார்.

-தொடரும்

 

2 comments:

Anonymous said...

இது ஏற்கனவே நீங்க போட்ட மொக்க தானே? மீள்பதிவா?

அன்புடன்
மயில் ராஜபாண்டியன்

iniyavan said...

//இது ஏற்கனவே நீங்க போட்ட மொக்க தானே? மீள்பதிவா?

அன்புடன்
மயில் ராஜபாண்டியன்//

நண்பா,

சத்தியமா நினைவில்லை. இன்று காலைதான் எழுதினேன். ஏற்கனவே எழுதியிருக்கேனா? எந்த இடுகையில் என்று தேடிப் பார்க்கிறேன்.

அப்படி எழுதியிருந்தால், இதை நீக்குவதைப் பற்றி யோசிக்கிறேன்.

வருகைக்கு நன்றி.