Apr 18, 2011

பொய்யான நிஜங்கள் - 1


வேகமாக மிக வேகமாக வந்து நின்றது அந்த பஸ். காலை மணி 8. ஒரே கூட்டம். ஒரு 3 நிமிடங்கள் நின்று மக்களை அடைத்துக்கொண்டு கிளம்ப ஆரம்பிக்கையில் ஓடி வந்து ஏறப்போனவனைப் பார்த்து,

"யோய் ஏன்யா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?" என்று கடுப்புடன் திட்டி முறைத்துப் பார்த்து அவனுக்கு ஒரு கையை கொடுத்து உள்ளே இழுத்துவிட்டார் அந்த பஸ்ஸின் கண்டெக்டர். 

இந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறது இந்தக்கதை. இது ஒரு பக்கக் கதையா? சிறுகதையா? குறுநாவலா? தொடர்கதையா அல்லது நாவலா? எனக்குத் தெரியாது. இது எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். அது போக போகத்தான் தெரியும். அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று நமக்கு இன்று தெரியுமா என்ன? அது போலத்தான் இந்தக் கதையும். போகப் போகத்தான் என்ன ஆகும்? என்று தெரியும். எப்படிப்பட்ட கதை இது என்று இந்த நொடி வரை எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு நல்ல கதையாக வரும் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இப்போது தெரிகிறது. 

இந்தக்கதை அதன் போக்கில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும். கதாசிரியனாக விலகி நின்று நான் வேடிக்கைப் பார்க்க போகிறேன். எப்போதாவது தேவைப்பட்டால், நான் குறுக்கிடுவேன். அதற்கு என்னை மன்னிக்க வேண்டுமாய் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நாமும் பஸ்ஸுக்குள்ளும், ஏன் கதைக்குள்ளும் சென்று விடலாம்.

கண்டக்டரிடம் திட்டு வாங்கி ஏறியவன் பெயர் குரு. அவன்தான் கதையின் நாயகன். பார்க்க ஒரு 26 வயது சொல்லலாம். நல்ல உயரம். மாநிறம். குண்டும் இல்லாத ஒல்லியும் இல்லாத ஒரு உடம்பு. அவன் அணிந்திருந்த உடைகள் அவன் ஒண்ணும் அவ்வளவு பணக்காரன் இல்லை என்று சொல்கிறது. நிறைய தெய்வ பக்தி உள்ளவன் போல் தெரிகிறது. நெற்றியில் திருநீரும், குங்குமமும் இருக்கிறது. கோயில் போய்விட்டு வந்தவன் போல் தெரிகிறது. கையில் ஒரு சின்ன ஜோல்னா பை. அதில் என்னவென்று பார்த்துவிடலாமா? ஒரு பழைய சுஜாதா நாவல், ஒரு சின்ன டிபன்பாக்ஸ், அதன் வாடையை வைத்து சொல்லிவிடலாம், அதில் இருப்பது தயிர்சாதமும், ஊறுகாயும் என்று. அப்புறம் சில புத்தகங்கள். மீதி எல்லாம் கதைக்கு தேவையில்லாத சமாச்சாரங்கள்.

பஸ்ஸில் ஏறிய குரு இடம் கிடைக்காததால் அருகில் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். சுற்றிலும் பார்த்தான். ஒரே கூட்டம். எல்லோரும் நெருக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அருகில் கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை செய்து கொண்டிருந்த சில செயல்களை குரு அருவெறுப்புடன் நின்று பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டான். 

இந்தக் கதையில் 'அப்படிப்பட்ட' எந்த வர்ணனைகளோ அல்லது நிகழ்வுகளோ இருக்காது என்பதை என் கோடிக்கணக்கான ரசிக கண்மணிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் கதைக்கு தேவையான சில சம்பவங்கள் அவ்வப்போது என்னையறியாமல் நிகழ்ந்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்பதையும் இந்த நேரத்தில் நான் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. முதலில் அத்தியாயத்திலேயே (முதல் அத்தியாயமா? அப்படின்னா இது ஒரு பக்கக் கதை இல்லையா?) இரண்டு முறை நான் குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். என்ன செய்வது? சில விசயங்களை விளக்குவது என் கடமையாகிறது. 

ஒரு வயதான பெரியவர் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். அதை இரண்டு கல்லூரி மாணவர்கள் ஏதோ சொல்லி கிண்டல் அடித்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு பெண்கள் நேற்று டிவியில் ஒளிப்பரப்பான ஒரு நாடகத்தின் நாயகிக்காக ரொம்ப வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் அருகே இரண்டு அழகான இளம் யுவதிகள் ஏதோ புரியாத ஒரு ஆங்கில நாவலை இருவரும் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்காமல் தன் கடமையில் கண்ணாக, 'டிக்கெட், டிக்கெட்' என்று கேட்டுக்கொண்டே கும்பலை பிளந்து கொண்டு குரு அருகில் வந்தார் கண்டெக்டர்.

"சார், எங்க போகணும்?"

"அண்ணா நகர்"

"சார், அப்படியே எனக்கும் ஒரு டிக்கட் எடுத்துடுங்களேன்" என்று சொல்லி பணத்துடன் நீட்டிய கையிலிருந்து பணத்தை வாங்கினான் குரு.

நன்றாக உற்றுப் பார்த்ததில் அது ஒரு பெண்ணின் கை என்பது தெரிந்தது. அவள் யார்? ஒரு நாள் பொறுங்களேன்!

அவள் இந்தக் கதையின் நாயகியாகவும் வாய்ப்பு உள்ளதுபோல் தெரிகிறது.

பார்ப்போம்!
1 comment:

Ravisankaranand said...

வழக்கம் போல எடுத்த உடனே டாப் கியிர போட காணுமே