Apr 21, 2011

குறை ஒன்று உண்டு -2


அடுத்தநாள் காலை. வழக்கம் போல ஆபிஸ் சென்றேன். ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போல் எனக்குத்தோன்றியது. எல்லோரும் ஒருவித பதட்டத்துடன் இருப்பது போல் தெரிந்தது. நான் என் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் வேலையில் திடீரென திரும்பி பார்த்தேன். வீணாவின் இருக்கை காலியாக இருந்தது, எனக்கு ஒரே குழப்பம் ஆனது. உடனே பக்கத்து டேபிளில் இருந்த முருகனை கேட்டேன்,

"வீணா இன்னும் வரலை?"

"என்ன ரகு, என்ன கேட்கறீங்க?" 

முருகன் ஏற்கனவே என் மேல் பொறாமையில் இருப்பவன். அதனால் அவன் என்னைக் கேட்டதை நான் பெரிதாக நினைக்காமல்,

"சொல்லு முருகா. உனக்கு ஏதாவது தெரியுமா"

"ஏதோ அவசர வேலைனு வரலை போன் பண்ணி சொன்னதா இப்போதான் பாஸ் சொல்லிட்டு போனார்"

எனக்கு மீண்டும் குழப்பம் வந்தது. என்னிடம் சொல்லாமல் அவள் லீவு போட மாட்டாளே? ஏன்? என்று யோசித்துக்கொண்டிருந்த வேலையில், என்னை பாஸ் கூப்பிடுவதாக அட்டெண்டர் வந்து சொல்லவே, உடனே பாஸின் ரூமுக்கு சென்றேன்.

"மே ஐ கமின் சார்?" என்று கேட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன். என் வயதை ஒத்தவன் என்று உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பெயர் ராஜா. பார்க்கவும் ராஜா போல் தான் இருப்பான். பெரிய படிப்பு படித்து என் வயதிலேயே எனக்கு பாஸாக இருக்கிறான். ராஜாவின் அறை மிகப் பெரியது. நடுவில் பெரிய டேபிள். எதிரே இரண்டு இருக்கைகள். அதைத் தவிர சுவற்றின் ஓரத்தில் மிகப் பெரிய சோபா செட். ஆறு பேர் அமர்ந்து அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவே ஒரு டீப்பாய். அதன் நடுவில் பூங்கொத்து. அது ஒரு மினி மீட்டிங் ரூம் போல இருந்தது. அவன் அருகில் ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர். டேபிளில் ஒரு லேப்டாப். அதன் அருகே இரண்டு பீரோக்கள். இப்படிப்பட்ட அறையில் அமர்ந்து வேலை பார்க்கும் ஒருவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, என்னை ஏன் வீணா காதலிக்கிறாள் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராக இருந்தது. ராஜாவின் அறையை நான் இவ்வளவு விளக்கமாக சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. 

கம்பனியின் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களும் ராஜாவின் அறையில்தான் இருக்கிறது. அனைத்து சாவிகளும் ராஜாவிடம்தான் இருக்கிறது. ஆனால், ராஜாவின் அறையின் ஒரு சாவி என்னிடம் உள்ளது. ஏதாவது அவசரம் என்றாலோ அல்லது ராஜா வெளியூர் சென்றாலோ என்னிடம் உள்ள சாவியிம் மூலம், ராஜாவின் அறையை திறந்து, தேவையான பேபர்களை எடுப்பதுண்டு.

"உள்ள வாங்க ரகு"

"சொல்லுங்க"

"நேற்று எத்தனை மணிக்கு ஆபிஸிலிருந்து போனீங்க?"

"ஏன் சார்?"

"விசயம் இருக்கு. சொல்லுங்க"

"இரவு 8 மணி இருக்கும் சார்"

"வீணாவும் உங்க கூட வந்தாங்களா?"

"ஆமாம். ஏன் கேட்கறீங்க''

'சும்மா கேட்டேன்"

"எதுக்காக கேட்டீங்க? சொல்லுங்க"

"அதான் சும்மா கேட்டேன்னு சொன்னேன் இல்லை"

"நான் யார் கூட போனா உங்களுக்கு என்ன? நீங்க ஆபிஸ்லதான் எனக்கு பாஸ்" என்று கோபமாக சொன்னேன்.

"எதுக்கு இப்போ கோபப் படறீங்க ரகு"

''எதுக்கா! எதுக்குன்னு உங்களுக்குத் தெரியாது?"

"நான் கேட்டதுல ஒரு தப்பும் இருக்கறதா, எனக்குப்படலை"

"ஆனா, எனக்குப் படுதே?"

"ரகு, இதே கேள்விகளுக்கு நீங்கள் இன்று இரவுக்குள் பல பேர் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டி இருக்கும்"

"எதற்கு? யார் முன்னிலையில்?"

"அதைப்பற்றித்தான் பேசக் கூப்பிட்டேன். ஆனால், நீங்கள் கேட்கும் மூடில் இல்லை. அதனால் நீங்கள் போகலாம்"

எனக்கு கோபம் கோபமாக வந்தது. என்ன நடக்கிறது? என்னிடம் என்ன கேட்க நினைத்தான்? ஏன் இப்படி பூசி மெழுகுகின்றான்? என்னக் காரணம்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் மனதுக்குள் ஏதோ ஒருவித கலவரம் ஏற்பட்டது மட்டும் நன்றாகத் தெரிகிறது. ஏதோ ஒன்று தவறாகத் தெரிகிறதே? இன்று ஏதோ நடக்கப்போகிறது! அது என்ன?

குழப்பத்துடனே வேலையில் முழுக்கவனம் இல்லாமல் நேரத்தைக் கடத்தினேன். மணி மாலை 5.30. வீணாவிற்கு போன் செய்தால் அவள் போனை எடுக்கவே இல்லை. என்னக் காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், ஆபிஸ் பாய் வந்து, என்னை MD கூப்பிடுவதாக கூறினான்.

என்னை எதற்கு MD கூப்பிடுகிறார்? உடம்பில் ஒரு பதட்டம் அப்பிக்கொண்டது. காரணம் இல்லாமல் வேர்க்க ஆரம்பித்தது. வயிற்றை கலக்க ஆரம்பித்தது. சாதாரணமாக MD யாரையும் அவர் அறைக்கு கூப்பிடுவதில்லை. ஒரு வித பயத்துடன் அவர் அறையை அணுகினேன்.

- தொடரும்


2 comments:

Ravisankaranand said...

பொய்யான நிஜங்கள் - 2 எங்கே?

Ravisankaranand said...

நல்லா போட்டிங்ககியா பிரேக்க...