Apr 22, 2011

குறை ஒன்று உண்டு -3


MDயின் அறையில் நுழைந்தேன். என் பாஸ் ராஜாவின் அறையைவிட மிகப்பெரிய MDயின் அறை. இன்றுதான் முதல் முறையாக MDயின் அறைக்கு செல்கிறேன். பல நாற்காலிகளுடன் கூடிய நீண்ட மேஜை ஒன்று இருந்தது. அவருக்கான மேஜை தனியாக இருந்தது. அவரின் அறையிலேயே இரண்டு பிரிவு. ஒன்று அவரின் மேஜை, எதிரே இரண்டு நாற்காலிகள். அடுத்தப்பக்கத்தில் நான் மேலே சொன்ன நீண்ட மேஜை. அதன் அருகே அவருக்கான தனி பாத்ரூம் எல்லாம் இருந்தது. அவரின் மேஜையின் மேல் உள்ள மூன்று டெலிபோன்களைத் தவிர அந்த நீண்ட மேஜையிலும் ஒரு டெலிபோன் இருந்தது.

அந்த அறையே ஒரு மாதிரி மவுனத்துடன் இருந்தது. உள்ளே நடுநாயகமாக எங்கள் நிறுவனத்தின் MD அமர்ந்திருந்தார். அவர் அருகே என் பாஸ் ராஜா. மற்றும் சில இயக்குநர்கள். ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. ஆனால் என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"உள்ள வாங்க ரகு" என்று அழைத்தார் எங்கள் MD. அருகில் சென்றவன் ஒரு நடுக்கத்துடன், அவரை எதிர்நோக்கினேன். அவர் முகத்தில் கோபம் தாண்டவமாடியது. தன் மூக்கு கண்ணாடியை எடுத்து துடைத்துக்கொண்டே,

"ரகு,  நேற்று எத்தனை மணிக்கு ஆபிஸிலிருந்து போனீங்க?"

"இரவு 8 மணி இருக்கும் சார்"

"வீணாவும் உங்க கூட வந்தாங்களா?"

ராஜா கேட்ட அதே கேள்வியை MDயும் கேட்டார்.

"ஆமாம் சார்"

"அந்த டெண்டர் டாக்குமெண்ட்ட யார் டைப் பண்ணினா?"

"வீணா சார்"

"நீங்க என்ன பண்ணீங்க அப்ப"

"நான் சொல்ல சொல்ல வீணா டைப் பண்ணா சார்"

"நீங்கள் அவங்க கிட்ட ஒவ்வொரு பாயிண்ட்டா சொல்லும் போது, நாம அந்த டெண்டரில் எவ்வளவு கோட் செய்யப் போறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?''

"தெரியும் சார்"

"உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"ராஜா சார் சொன்னார்"

"அது எப்படி ரகு. அந்த தொகையை முடிவு செய்தது நான். சொன்னது ராஜாவிடம் மட்டும்தான். எப்படி உங்களுக்குத் தெரிந்தது?"

"ராஜா சொல்லி என்னை டெண்டர் டாக்குமெண்ட்டில் சேர்க்க சொன்னார் சார்"

"அவர் இல்லைனு சொல்லறார்"

உடனே நான் ராஜாவை திரும்பி பார்த்தேன். 

"ரகு, நான் எப்ப உங்களிடம் சொன்னேன்"

"சார், நீங்க என் கிட்ட சொல்லலை? சீக்கிரம் டைப் அடிக்க சொல்லுல. நாளைக்கு காலை 12 மணியுடன் டெண்டர் சப்மிட் பண்ணுவதற்கான டைம்  முடிகிறது. அதற்குள் நாம் சேர்ப்பிக்க வேண்டும். எனக்கு வேறு வேலை இருக்கிறது. அதனால், என்னால் டைப் பண்ணவோ, சரி பார்க்கவோ முடியாது அப்படின்னு நீங்க சொல்லலை?"

"சார், பொய் சொல்லுறார் பாருங்க சார். நான் போய் அவ்வளவு காண்பிடன்ஷியலான விசயத்தை இவர் கிட்ட போய் சொல்வேனா?"

MD கடுப்புடன், ராஜா பக்கம் திரும்பி, 

"ராஜா, நான் தான் விசாரிச்சிட்டு இருக்கேன்ல. நீங்க ஏன் குறுக்க பேசறீங்க?" என்றவர் என் நோக்கி,

"ரகு, அப்போ அந்த டெண்டர் வேல்யூ வீணாவுக்கும் தெரியும் இல்லை"

"ஆமாம் சார், தெரியும். ஏதாவது பிரச்சனையா சார்"

"பெரிய பிரச்சனை மேன். உன்னால நம்ம கம்பனிக்கு கிடைக்க வேண்டிய மிகப் பெரிய காண்ட்ரெக்ட் வேற ஒரு கம்பனிக்கு போயிடுச்சு. தெரியுமா உங்களுக்கு? அதுவும் எவ்வளவு வித்தியாசத்துல, வெறும் 500 ரூபாய் வித்தியாசத்துல. அதனால நம்ம கம்பனிக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்"

"ஐயைய்யோ"

"சும்மா நடிக்காத மேன். நீதான் அந்த போட்டி கம்பனிக்கு நாம் கோட் செய்யப் போகும் தொகையை சொல்லி இருக்கிறாய். அவர்கள் கூட 500 ரூபாய் சேர்த்து அவர்கள் டெண்டரை அனுப்பி விட்டார்கள். எவ்வளவு விலை போனாய் நீ"

முதல் முறையாக கோபமும், கண்களில் தண்ணீரும் என்னையறியாமல் வந்தது.

"சார், என்ன சந்தேகப்படறீங்களா?"

"ஆமாம். விசயம் தெரிந்தது, நான்கு பேருக்கு மட்டும்தான். எனக்கு, ராஜாவுக்கு, உனக்கு, வீணாவுக்கு. ராஜா யாரிடமும் சொல்ல மாட்டார். வீணாவைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். சோ, உன் மூலமாகத்தான் விசயம் வெளியே போயிருக்க முடியும்"

"எப்படி சார், என்னை மட்டும் சந்தேகப்படறீங்க. ஏன் ராஜா வெளியே சொல்லி இருக்கக்கூடாது"

"வாட் நான்ஸன்ஸ் யு ஆர் டாக்கிங்" என்று கோபத்துடன் ராஜா என்னை நோக்கி கத்தினான்.

"ஆமாம் சார். நான் ராஜாவை சந்தேகப்படறேன்"

"ஏன்?" என்று கோபத்துடன் என்னைப்பார்த்தார் MD.

- தொடரும்


2 comments:

iniyavan said...

kala sundaram to me
show details 8:24 AM (42 minutes ago)


அருமையான எழுத்து நடை .எண்ணங்களின் ஓட்டமும் அருமை .take care .

regards,

kalla

vinthaimanithan said...

மிஸ்டர் பாரத் படக்கதை மாதிரி இருக்கே!