Apr 25, 2011

குறை ஒன்று உண்டு -4


நான் மெதுவாக ராஜாவைப் பார்த்துக்கொண்டே சொன்னேன்,

"ஏன்னா ராஜா வீணாவை காதலித்தார் சார். வீணா அவள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் மாறாக என்னைக் காதலிக்க ஆரம்பிக்கவே, என் மேல் உள்ள கோபத்தில், என்னை பழிவாங்க இப்படி செய்திருக்கலாம் அல்லவா?''

"என்ன மேன் சொல்ல வர?" என்று MD கேட்டு முடிப்பதற்குள் ராஜா தன் சீட்டை விட்டு எழுந்தான்.

"சார், தேர் இஸ் அ லிமிட். இவர் தேவையில்லாத விசயங்களைப் பேசுகிறார்" என்று சொல்லி கோபமாக என்னை நோக்கி வந்தான். உடனே MD,

"மிஸ்டர் ராஜா, உட்காருங்க. நான் தான் பேசிட்டு இருக்கேன் இல்லை. நீங்க ஏன் அவசரப்படறீங்க" என்று சொல்லி ராஜாவை அமர வைத்தவர், என்னை நோக்கி,

"ஹலோ, என்ன உளறீங்க. உங்க பெர்ஸனல் மேட்டரை கேட்பதற்கு எனக்கு நேரம் இல்லை. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. நன்றாக எல்லாவற்றையும் யோசித்துப்பார்தததில் உங்கள் மூலமாகத்தான் டெண்டர் வேல்யூ லீக்காகி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இதற்கு மேல் உன்னிடம் பேச எனக்கு விருப்பம் இல்லை. உனக்கு நாளை காலை வரை டைம் தருகிறேன். அதற்குள் உண்மையை ஒப்புக்கொண்டுவிடு. இல்லை என்றால் விளைவுகள் ரொம்ப மோசமாக இருக்கும். இப்போ நீ வெளியே போகலாம்" என்றார்.

அதற்கு மேல் அங்கு நிற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்பதால் உடனே ரூமை விட்டு வெளியே வந்தேன். என் டிபார்ட்மெண்ட்டுக்கு வந்து யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தேன். ஆபிஸே காலியாக இருந்தது. எல்லோரும் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். கொஞ்ச நேரம் என் சீட்டிலேயே உட்கார்ந்து யோசித்தேன். எப்படி விசயம் வெளியே போயிருக்கும். எங்கள் மூன்று பேருக்குத்தானே தெரியும். ஒரு வேளை MD சொன்னதுபோல் நான் தான் தேவை இல்லாமல் ராஜா மேல் சந்தேகப்படுகிறேனோ? ஒரு வேளை இப்படி இருக்குமோ?

வீணா வெளியே சொல்லி இருப்பாளோ? சே சே இருக்காது? எதற்கும் அவளை ஒரு வார்த்தை கேட்டுவிடலாமா? வேண்டாம், அவள் சொல்லி இருக்காத பட்சத்தில் என் மேல் அவள் கோபப்படுவாள். கோபபட்டால் என்ன? என்னைப் பார்த்து MD கேட்கவில்லையா? அது போல்தானே. சும்மா சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதில் தப்பு என்ன? உடனே வீணாவின் செல்போனுக்கு தொடர்புகொண்டேன். ஆனால், ரீச் ஆகவில்லை. என்னாச்சு இந்த பெண்ணுக்கு? ஏன் போன் வேலை செய்யவில்லை? அவளிடம் நாளைப் பேசிக்கொள்ளலாம் என நினைத்து வீட்டிற்கு கிளம்பினேன்.

வீட்டை அடைந்தவுடன், யாரிடமும் எதுவும் பேசவில்லை. பொதுவாக அம்மாவிடம் கொஞ்சம் பேசுவேன். அப்பாவிடம் எப்போதாவது பேசுவேன். மற்றவர்கள் யாரும் என்னை மதிப்பதில்லை. ஆரம்பத்தில் அந்த வருத்தம் இருந்தது. இப்போது இல்லை. பழகிப்போய்விட்டது. அவர்கள் என்னை வெறுப்பதற்கு காரணம் என்ன? அவர்கள் அளவிற்கு படிக்கவில்லை என்பதா இல்லை அவர்கள் போல் பெரிய பெரிய வேலை இல்லை என்பதா? என்னக் காரணம்? படிப்பு சரியாக வரவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்வது?

பொதுவாக என் அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள் மற்றவர்கள் சாப்பிடும்போது நான் செல்ல மாட்டேன். அவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பயங்கரமாக பேசிக்கொள்வார்கள். என்னை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். யாரும் என்னிடம் பேசமாட்டார்கள். அப்படியே பேசினாலும் என்னை கேலி செய்துதான் பேசுவார்கள். அம்மா, அவர்களிடம் எத்தனையோ முறை சொல்லிப்பார்த்துவிட்டார். ஆனால், அவர்கள் கேட்பதில்லை. அந்த அவமானங்களை சந்திக்க விருப்பம் இல்லாததால், நான் எப்போதும் தனியாகத்தான் சாப்பிடுவேன். 

சில நாட்கள் அம்மா வந்து சாப்பாடு போடுவார்கள். பல நாட்கள் நானே சாப்பாட்டு போட்டு சாப்பிடுவேன். அன்று காலையிலிருந்தே சரியாக சாப்பிடவில்லை. அதனால் ஒரே பசி. சாப்பிட போகலாம் என்று பார்த்தால், அவர்கள் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு இருப்பது தெரிந்தது. அப்போது போக மனம் இடம் கொடுக்கவில்லை. இன்று இருக்கும் மன நிலையில் இன்னும் அவமானப்பட விரும்பவில்லை. ஆனால், பசியோ தாங்க முடியாத அளவிற்கு இருந்தது.

என் நிலமையை நினைத்து எனக்கே வேதனையாக இருந்தது. யாருக்கு நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நான் செய்யாத தவறுக்கு என்னை இத்தனை கேள்விகள் கேட்கிறார்கள் ஆபிஸில்? இங்கே என்னை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏன்? இப்படியே யோசித்துக்கொண்டே இருந்தவன், பசி மயக்கத்தில் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. என்னையறியாமல் தூங்கி இருக்கிறேன். திடீரேன வயிற்றில் ஏதோ ஒரு உணர்வு தோன்ற எழுந்து மணி பார்த்தேன். இரவு 12. 

ஹாலைப் பார்த்தேன். காலியாக இருந்தது. எல்லோரும் அவரவர்கள் அறையில் தூங்கிக்கொண்டிருப்பார்கள். மெதுவாக கதவைத்திறந்து கொண்டு ஹாலுக்கு சென்று சாப்பிட உட்கார்ந்தேன். தட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பாத்திரங்களாய்ப் பார்த்தேன். எல்லாம் சுத்தமாக இருந்தது. சாப்பாடாவது இருக்கிறதா? என்று பார்த்தேன். இருந்த கொஞ்சம் சாப்பாட்டிலும் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார்கள். யாரும் ஒரு பேச்சுக்கு கூட சாப்பிடக்கூப்பிடவில்லை.

என் அறைக்குச் சென்றேன். இத்தனை வயதில் முதல் முறையாக குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன்.

- தொடரும்No comments: