Apr 26, 2011

குறை ஒன்று உண்டு -5


அடுத்த நாள் காலை.

எழுந்தவுடனே ஏதோ மனம் சஞ்சலமாக இருந்தது. என்னவோ செய்தது. யாரிடமும் எதுவும் பேசவில்லை. விறு விறு குளித்து முடித்து, அவசர அவசரமாக் ஆபிஸ் சென்றேன். எல்லோரும் என்னை வித்தியாசமாகப் பார்ப்பதை உணர்ந்தேன். வீணாவின் சீட் காலியாக இருந்தது வேறு மனதை என்னவோ செய்தது. மனதை திடப்படுத்திகொண்டு உட்கார்ந்து இருந்தேன். முருகனுக்கு ஏதோ தோன்றி இருக்க வேண்டும். அருகில் வந்தான்,

"என்ன ரகு. ஒரு மாதிரி இருக்க?"

முதலில் விசயத்தை சொல்லலாமா இல்லை வேண்டாமா? என யோசித்தேன். எப்படி இருந்தாலும் அவனுக்குத் தெரியப்போகிறது. அதனால் நாமே சொல்லிவிட்டால் ஒன்றும் தப்பு இல்லை என நினைத்து,

"முருகா, நேற்று ஒரே பிரச்சனையாயிடுச்சு என்றேன்"

"என்ன பிரச்சனை ரகு. ஆபிஸ்ல ஏதோ அரசபுரசலா பேசிக்கிறாங்க. ஆனா, எனக்கு ஒண்ணும் புரியலை"

"நாம கோட் பண்ணியிருந்த டெண்டரை விட வேற கம்பனி வெறும் 500 ரூபாய் அதிகமாக கோட் செய்திருக்கிறார்கள். அதனால், அந்த காண்ட்ட்ரெக்ட் அந்த கமப்னிக்கு போய்விட்டது. அதனால், நம் கம்பனிக்கு ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டமாம்"

"அதற்கு நீ என்ன செய்வாய்"

"முருகா, புரியாமப் பேசாத. நாம கோட் பண்ண இருந்த அமவுண்ட்ட நான் தான் அந்த கம்பனிக்கு பணம் வாங்கிக்கொண்டு சொல்லிவிட்டேன் என்று என்னை சந்தேக்கிக்கிறார்கள்"

"அட கொடுமையே. என்ன ரகு இது. உன்னை போய் இப்படி. எல்லாம் இந்த ராஜாவின் வேலையாகத்தான் இருக்கும்"

முருகனுக்கு என் மேல் பொறாமை உண்டேத் தவிர ஓரளவு நல்லவன். அவனுக்கு நான் இந்த கம்பனியில் ஒருமுறை மிகப்பெரிய உதவி செய்திருக்கிறேன். அதனால் என்மேல் ஒரு மதிப்பு வைத்திருக்கிறான் என்று எனக்குத்தெரியும்.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன் முருகா"

"ஆமாம், இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறாய்?"

"தெரியலை முருகா. இன்னைக்கு காலைல வரச் சொல்லி இருக்காங்க. நான் எந்த தவறும் செய்யலை. அதனால பயம் இல்லாம போறேன். பார்ப்போம்"

"கவலைப்படாமா போ ரகு. உன் நல்ல மனசுக்கு உனக்கு ஒண்ணும் நடக்காது"

"ஆமாம், வீணா இன்னைக்கும் வரலையா?''

"சொல்ல மறந்துட்டேன் ரகு. போன் பண்ணா இப்போ. அவங்க அம்மா ரொம்ப சீரியஸாம். அதான் உடனே கிளம்பிட்டாளாம். அவங்க அம்மா இருக்குற கிராமத்துல போன் எடுக்கலையாம். காலைல பக்கத்து டவுணுக்கு வந்து, அங்கே இருந்து போன் பண்ணா. உனக்கும் பண்ணாளாம். நீ எடுக்கலையாம். அதான் நீ வந்தவுடனே சொல்லச்சொன்னா"

அப்போதுதான் கவனித்தேன். மூன்று மிஸ்கால்கள் இருந்தது. எடுக்காமல் இருந்திருக்கிறேன். நான் குளிக்கும்போது வந்திருக்கலாம். வரும் அவசரத்தில் போனை கவனிக்கவில்லை. அப்படியே கவனித்திருந்தாலும், போனை அட்டெண்ட் செய்திருக்கமாட்டேன். ஏனென்றால், அது ஏதோ தெரியாத நம்பர் என்று கட் செய்திருப்பேன்.

அப்போது என் டேபிளில் உள்ளே இண்டெர்காம் அழைக்கவே, எடுத்து "ஹலோ" என்றேன்.

"ரகு, உன்னை MD உடனே வரச்சொன்னார்" என்றாள் அவரின் பிஏ.

உடனே உடல் நடுங்க எழுந்து MD ரூமை நோக்கி ஓடினேன்.

உள்ளே நுழைந்தேன். ஏறக்குறைய நேற்று இருந்த எல்லோரும் இருந்தார்கள். MD அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. உடனே பேச ஆரம்பித்தார்,

"என்ன ரகு, நீங்கதான் டெண்டர் வேல்யூவை வெளியே சொன்னதை ஒப்புக்கொள்கின்றீர்களா?"

"இல்லை சார். நான் இல்லை"

"நாங்கள் நீ தான் என்று முடிவு செய்துவிட்டோம்"

"நீங்கள் முடிவு செய்ததற்கு என்ன ஆதாரம் சார்"

"அதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை"

''நீங்கள் என்னிடம் சொல்லாத பட்சத்தில் அது உண்மை இல்லை என்பது நிரூபணமாகிறது"

"உன்னிடம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. போலிஸ் வரும். நீ அவர்களிடம் எது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்"

"சார், இது அநியாயம்"

"எது நியாயம், எது அநியாயம் என்று எனக்குத்தெரியும்"

"சார், வேறு வழியே இல்லையா" என கண்கள் அழங்க ஏறக்குறை அழ ஆரம்பித்தேன்.

"என்ன மேன். பொம்பளை மாதிரி அழற. உன் மேல் கேஸ் கொடுக்க இது மட்டும் காரணம் இல்லை. வேறு ஒரு காரணமும் இருக்கிறது"

"வேறு என்ன காரணம் சார்?"

"சொல்கிறேன்" என்றவர், அருகில் இருந்த டம்ளரில் இருந்து தண்ணீரை எடுத்து ஒரு மடக்கு குடிக்க ஆரம்பித்துவிட்டு, சொல்ல ஆரம்பித்தார்.

-தொடரும்


No comments: