"நீ அலுவலக பணத்தில் கையாடல் செய்திருக்கிறாய். அதை எங்களிடமிருந்து மறைத்துவிட்டாய்"
எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. இவருக்கு எப்படி அந்த விசயம் தெரியும் என்று குழம்பிப்போனேன். ஆனால், பணம் கையாடல் என்பதெல்லாம் பொய். என்ன நடந்தது என்றால்.....
இந்த சம்பவம் நடக்கும் முன் முருகன் தான் கேஷியர் ஆக இருந்தான். முருகனுக்கு நான் மிகப்பெரிய உதவி ஒன்று செய்திருக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா! அதைத் தான் இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளப்ப்போகின்றீர்கள். வாரத்துக்கு ஒரு முறை ராஜா கேஷ் பாக்ஸை சரி பார்ப்பதுண்டு. ராஜா இல்லாத சமயங்களில் நான் சரி பார்ப்பேன். அப்படி ஒரு வாரம் பார்க்கையில் கொஞ்சம் பணம் குறைந்ததை கண்டுபிடித்தேன். என்ன காரணம் என கேட்டபோது ஒரு சில சஸ்பென்ஸ் வவுச்சரை காண்பித்து, அவர்கள் இன்னும் கணக்கை சப்மிட் செய்யவில்லை என்று சில காரணங்கள் சொன்னான்.
எனக்கு மேலும் சந்தேகங்கள் வரவே நன்றாக ஒவ்வொரு வவுச்சராக செக் செய்யவே நிறைய வவுச்சர்களில் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அப்போது அவனிடன் கணக்கு கேட்க, ஒவ்வொரு பைலாக செக் செய்து அக்கவுண்ட் பண்ணாத சில வவுச்சர்களை காண்பித்தான். எப்படி கணக்கில் சேர்க்காமல் விட்டேன் எனத்தெரியவில்லை எனக்கூறினான். நானும் அந்த வவுச்சர்களை பார்க்கையில், எந்த சந்தேகமும் ஏற்படாததால், அவைகளை உடனடியே கணக்கில் ஏற்ற ஒப்புக்கொண்டேன். அப்படி கணக்கில் சேர்த்த பிறகும் ஒரு ஆயிரம் ரூபாய் குறைந்தது. உடனே தன் பையிலிருந்து எடுத்து ஆயிரம் ரூபாயை எடுத்து கேஷ் பாக்ஸில் போட்டு சரி செய்தான்.
முருகன் நல்லவன், அவன் கவனக்குறைவினால் அப்படி செய்துவிட்டான். அவன் கேஷ் பாக்ஸில் கைவைக்கும் அளவிற்கு கெட்டவன் இல்லை என்று நான் கருதியதால், ஒப்புக்கொண்டு கேஷ் சரியாக உள்ளது என்று கையெழுத்து போட்டுவிட்டேன்.
அடுத்த நாள் எதற்கும் இருக்கட்டும் என்று ராஜாவிடம் சென்று நடந்தவைகளை அப்படியே ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டேன். ராஜாவும் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னை யாரிடமும் இதைப்பற்றி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டான். காரணம், வெளியே தெரிந்தால், இத்தனை நாட்கள் அவன் சரியாக கேஷை செக் செய்யவில்லை என்ற உண்மை தெரிந்து போகும். ஆனால், அவன் நினைத்திருந்தால், முருகனை வேலைவிட்டு தூக்கியிருக்க முடியும். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. அந்த விசயத்தைத்தான் இப்போது MD கையில் எடுத்திருக்கிறார்.
"நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை சார்"
"நீ ராஜா இல்லாத ஒரு நாள் கேஷை செக் செய்தாயா, இல்லையா?''
"ஆமாம் சார்"
"அப்போது பணம் குறைந்ததா இல்லையா?"
"அதான் எல்லாம் சரியாகிவிட்டதே சார். அக்கவுண்ட் செய்யாமல் வைத்திருந்த வவுச்சர் எல்லாம் அக்கவுண்ட் செய்தாகிவிட்டதே"
"மேலும் பணம் குறைந்த போது, முருகன் தன் பாக்கட்டிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்து கேஷ் பாக்ஸில் போட்டதை ஒத்துக்கொண்டாய் அல்லவா?"
"ஆமாம் சார்"
"எப்படி அது போல செய்யலாம் நீ"
எனக்கு நன்றாக தெரிந்துவிட்டது. என்னை ராஜா வசமாக மாட்டிவிட்டுவிட்டான். இப்போது என்ன செய்ய?
"சாரி சார். முருகன் தப்பு செய்யக்கூடிய ஆள் இல்லை. ஏதோ கவனக்குறைவு அதான்"
"இதை மேலே உள்ள யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று உனக்குத்தெரியாதா?"
"சொன்னேன் சார்"
"யாரிடம்"
"ராஜாவிடம்"
உடனே MD ராஜாவை நோக்கி,
"ராஜா உங்களிடம் சொன்னாறா?"
"இல்லை சார்"
"இப்போ இதுக்கு என்ன சொல்றீங்க ரகு"
"சார், பொய் சொல்லறார் சார்"
'யார் பொய் சொல்றாங்கன்னு எனக்குத்தெரியும். அப்படி நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், எழுத்துப்பூர்வமாக நீங்கள் ரிப்போர்ட் சப்மிட் செய்திருக்க வேண்டாமா?"
"நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், அப்படி செய்திருந்தால் முருகனின் வேலை பாதிக்கப்படுமே என்று கொடுக்கவில்லை சார்"
"இப்போ உங்க வேலை போகப்போகிறதே? அதுக்கு என்ன செய்யப் போறீங்க"
"சார்"
'நீங்க போகலாம்"
என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தேன். பின் ரூமை விட்டு வெளியே வந்தேன். ஒரு பத்து நிமிஷம் வெளியே காத்திருந்தேன். ராஜா வெளியே வந்தான்.
"ஏண்டா நாயே" என்று அவன் சட்டையை கொத்தாகப் பிடித்தேன்.
- தொடரும்
No comments:
Post a Comment