Apr 28, 2011

குறை ஒன்று உண்டு -7


என்னை அந்த இடத்தில் ராஜா எதிர்பார்க்கவில்லை. சட்டையை கொத்தாக பிடித்த நான் ஆத்திரத்தில், அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டேன். அவன் "அய்யோ" என்று அலறி மூலையில் போய் விழுந்தான். எனக்கு எங்கே இருந்து அப்படி ஒரு ஆத்திரமும் கோபமும் வந்தது என்று தெரியவில்லை. அவன் அலறிய அலறில் ஆபிஸில் இருந்த அனைவரும் ஓடி வந்தார்கள், என்னைப்பார்த்த MD உடனே செக்யூரிட்டியை அழைத்தார். அப்படியும் என் கோபம் தீரவில்லை. என் காலால் ஓங்கி அவனை எட்டி உதைத்தேன்.

உடனே அனைவரும் ஓடி வந்து என்னைப் பிடித்துக்கொண்டார்கள். 5 நிமிடத்தில் செக்யூரிட்டி ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். என்னை அவர்கள் பிடித்துக்கொண்டு நேராக பெர்ஸனல் ஆபிஸர் அறைக்கு அழைத்துச்சென்றார்கள். ஆபிஸே ஒரே பரபரப்பாக இருந்தது. எனக்கு என்ன நடக்கிறதென்பதே சரியாக பிடிபடவில்லை. நான் சரியாக வசமாக மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் தெரிந்தது.

பெர்ஸனல் மேனஜர் ரொம்ப நல்ல டைப். அவருக்கு தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகள் செதிருக்கிறேன். என்னை அந்த கோலத்தில் பார்த்தவர்,

"என்ன ரகு, இப்படி பண்ணீட்டிங்க?"

"என்ன சார் பண்ணேன்"

"நீங்க கொஞ்சம் நிதானமா நடந்து இருக்கலாம்"

"சார், அவங்க அநியாயமா என் மேலே பழி சுமத்துவாங்க, அதை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?"

"சரி, இப்ப கோபபட்டு என்ன சாதிச்சிட்டீங்க. உங்க மேல தப்பு இல்லாத பட்சத்துல, நீங்க பொறுமையா இந்த விசயத்தை ஹேண்டில் செய்ய வேண்டாமோ?"

"சாரி சார். உங்க கிட்ட ஒரு வார்த்தை நான் பேசியிருக்கலாம்"

"இப்போ சொல்லுங்க. இனி நான் என்ன செய்ய? சும்மா இல்லாம ராஜா மேல கையை வேற வைச்சுட்டீங்க"

"ஆமாம் சார், அவர் பண்ணினது எல்லாம் துரோகம். அவருக்கும் டெண்டர் வேல்யூ தெரியும். ஆனால், என்னை சந்தேகப்படறாங்க. அவர்கிட்ட முருகன் கேஷ் சரியாக சரிபார்க்காத விசயத்தையும், அதன் பிறகு நடந்ததையும் நான் 
சொல்லியிருக்கிறேன். ஆனால், MDயிடம் நான் ரிப்போர்ட் பண்ணவில்லை என்கிறான். அதுமட்டுமில்லாமல், அவனுக்கு வீணா கிடைக்கவில்லை என்ற ஆத்திரம் சார். அதான்"

"இங்க பாரு ரகு. நீ சொல்றதெல்லாம் உண்மையா இருக்கலாம். ஆனால், என்னால எந்த உதவியும் உனக்கு செய்ய முடியாத நிலையில் இருக்கேன். நான் கம்பனி ரூல் படிதான் ஆக்க்ஷன் எடுத்தாக வேண்டும்" என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே போலிஸ் கார் ஒன்று உள்ளே நுழைந்தது.

உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் விசாரணை என்ற பெயரில் என்னைப் போட்டு வதைத்து எடுத்தார். சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் அன்று மாலை வரை விசாரித்தார்கள். இடையில் இரண்டு முறை மயக்கம் போட்டு விழுந்ததாக பின்னால் தெரிந்து கொண்டேன். பின்பு மாலையில் ஸ்டேஷனில் கொண்டு போய் வைத்து விசாரித்தார்கள். இரவு வீட்டிற்கு விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் விடவில்லை.

உடனே ஒரு நீதிபதியின் முன்னால் நிறுத்தினார்கள். என்னென்னவோ பேசினார்கள். கேள்வி மேல் கேள்விகள் கேட்டார்கள். முடிவில் என்னை 15 நாட்களில் காவலில் வைப்பதாக சொன்னார்கள். உடனே என்னையில் சிறையில் அடைத்தார்கள். எல்லாம் ஒரு கனவு போல் இருந்தது. அடுத்த நாள் அப்பாவும், அம்மாவும் மட்டும் வந்து பார்த்தார்கள். அப்பா எதுவும் பேசவில்லை. அம்மா மட்டும் அழுதார்கள்.

யாராவது ஜாமினீல் எடுப்பார்கள் என்று நினைத்தேன். யாரும் வரவில்லை. அடுத்து இரண்டு நாட்கள் முருகன் வந்து என்னைப் பார்த்தான். அவன் தான் தெளிவாக கூறினான். என் மேல் மூன்று விதமான கேஸ்கள் போட்டு இருப்பதாக. ஒன்று கம்பனியின் ரகசியங்களை அடுத்த கம்பனிக்கு விற்றது, இரண்டு ஆபிஸ் பணத்தை களவாடியது, மூன்றாவது ராஜாவை கொலை செய்ய முயன்றது.

மேலும், MD என் மேல் கடும் கோபத்தில் இருப்பதாகவும், எப்படியும் ஒரு இரண்டு வருடம் என்னை உள்ளே தள்ளாமல் விடமாட்டார் என்றும் கூறினான்.

அவன் கூறிய அனைத்தையும் கேட்டுவிட்டு நான் கேட்ட ஒரு கேள்வியில் அவன் கடுப்பானது தெரிந்தது.

"ஏன் வீணா வந்து என்னைப் பார்க்கலை?"

- தொடரும்


No comments: