May 5, 2011

குறை ஒன்று உண்டு -11


என்னக்கேட்க போகின்றாள் என நான் ஆவலுடன் அவள் முகத்தையே பார்த்தேன். அவள் மெதுவாக என் அருகே வந்து முகத்தை என் எதிரில் வைத்துக்கொண்டு, அந்த அழகிய வாயினால் கேட்டாள்,

"என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?"

இந்த கேள்வியை எதிர்பார்க்காததால் ஒரு நிமிடம் என் உடல் அதிர்ந்தது. அவளே மீண்டும் தொடர்ந்தாள்,

"என்ன பதிலையே காணோம்?"

"என்ன வீணா, உனக்கும் நான் கேலிப்பொருளாகிவிட்டேனா?"

"ஏன் இப்படி சொல்றீங்க?"

"பின்ன இப்படி ஒரு கேள்வியை கேக்கற?"

"மனசுல உள்ளதை தானே கேட்கறேன்"

"நீ எங்கே, நான் எங்கே"

"புரியலை"

"நான் ஒரு உதவாக்கரைம்மா"

"அப்படினு நீங்களா ஏன் நினைச்சுக்கறீங்க"

"அப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்டேத்தான் வளர்ந்திருக்கேன்"

"அது அவங்க பண்ண தப்பு. என்னைப் பொருத்தவரை நீங்க ஒரு ஜெண்டில்மேன்"

"எதை வைச்சு சொல்லற?"

"என்னை இது வரை பார்த்தவர்கள் எல்லாம் முதலில் என் அழகைப் பார்ப்பார்கள். பின்புதான் பேசவே ஆரம்பிப்பார்கள். என் மார்பை பார்த்து பேசும் ஆண்களைத்தான் நான் இதுவரை சந்தித்திருக்கிறேன். முதன் முதலில் என் கண்களைப் பார்த்து பேசி முதல் ஆண்மகன் நீங்கதான்"

"இது ஒண்ணு போதுமா, நாம கல்யாணம் பண்ணிக்க"

"வேற என்ன வேணும்னு நினைக்கறீங்க"

"தகுதி, அழகு, மற்றும் .... நிறைய விசயங்கள் இருக்குது வீணா?"

"நான் எத்தனை தடவை சொல்லறது. எல்லாமே உங்க கிட்ட இருக்கு. உங்க கிட்ட இருக்க ஒரே குறை உங்களை நீங்களே தாழ்த்திக்கறதுதான். மற்றபடி நீங்க என்னைப் பொருத்தவரை என் மனதுக்கு பிடித்தமானவர். இந்த ஒரு தகுதி போதும்னு நான் நினைக்கிறேன்"

"நான் எப்படி சொல்லி புரியவைக்கிறதுன்னு எனக்குத் தெரியலை வீணா? கல்யாணம் பண்ணிட்டு பின்னாடி வருததப்படறதைவிட முன்னாலே விலகிடுறது நல்லதுதானே?"

"நீங்க சரின்னு சொன்னாலும், சொல்லாட்டியும், நீங்கதான் என் கணவர்" என்று சொன்னவள், திடீரென என் முன்னால் வந்து என் முகத்தை அருகில் இழுத்து என் கன்னங்களில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்து,

"என் செல்ல புஜ்ஜிம்மா" என்றாள்.

திடீர் தாக்குதலில் ஆடிப்போனேன் நான். எந்த பெண்ணின் விரல் நகம் கூட படமால் வளர்ந்த என்னால் அந்த அழகுப்புயலின் முத்தத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்படியே வானத்தில் பறப்பது போல உணர்ந்தேன். என் உடம்பே சிலிர்த்து அடங்கியது. என் சந்தோசம் அதிகமாகி என் உடம்பில் ஏற்பட்ட ஒரு சில மாற்றத்தை ஒரு வேளை கவனித்திருப்பாளோ என நான் அதிர்ந்த போதுதான் நான் சுய நினைவிற்கு வந்தேன்.

காமத்தில் பல வகைகள் உண்டு. அதில் முக்கயமானது முத்தம்தான். அதுவும் நாம் மிகவும் விரும்பும் ஒருவரிடம் அது கிடைக்கும்போது அதன் சந்தோசத்திற்கு அளவே இல்லை. அதற்கு பிறகு நடக்கும் காம விசயங்கள் எல்லாம் முத்தத்தை கம்பேர் செய்யும் போது மிக சாதாரணமானதுதான்.

என்னையறிமால், அதீத உணர்ச்சியினால் என் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன. ஒரு ஆண் பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சி அன்று எனக்கு ஏற்பட்டது. சிறு வயதிலிருந்து எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எல்லாம் கரைந்து கண்ணீரால் ஓடியது போல உணர்ந்தேன். என்னையும் பிடிக்கும் ஒரு பெண் இந்த உலகத்தில் இருக்கிறாள் என்று நினக்கும் போதே கொஞ்சம் பெருமையாகவும், சந்தோசமாகவும், கர்வமாகவும் உணர்ந்தேன்.

"தேங்க்ஸ் வீணா" என்ற வார்த்தையை மட்டுமே என்னால் அன்று சொல்ல முடிந்தது. அவள் சேலை முந்தானையால் என் கண்களை துடைத்து விட்டதோ, பின் எதுவும் நான் பேசாமல் ஹோட்டலை விட்டு வெளியில் வந்ததோ, அவள் தோளில் சாய்ந்து கொண்டே ஆட்டோவில் வந்ததோ அப்போது எனக்குத் தெரியவில்லை. வீட்டிற்கு வந்து ஒவ்வொன்றாக யோசித்த போதுதான் எல்லாமே எனக்கு நினைவு வந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக மிக நிம்மதியாக தூங்கினேன்.

- தொடரும்

1 comment:

a said...

தலைப்பே பல கதைகளை சொல்லுதே...