May 9, 2011

குறை ஒன்று உண்டு -12


அடுத்த நாளில் இருந்து என் வாழ்க்கையே மாறிப்போனது. எப்போதும் நல்ல உடைகளாக தேடித்தேடி அணிய ஆரம்பித்தேன். நிறைய நேரம் அலுவலகத்தில் இருக்க ஆரம்பித்தேன். வீணாவின் அருகாமை என்னை ரொம்ப சந்தோசமாக்கியது. அவளை ஒரு நாள் கூட பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. வாழ்க்கையே ஒரு வித புது அர்த்தத்துடன் எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.

என் வீடே என்னை ஆச்சர்யமாகப் பார்த்தது. எப்போதும் போல் அம்மாவிடம் மட்டும் அவ்வவ்ப்போது பேசினேன். அப்பாவும் என்னை இப்போது எல்லாம் பார்த்து பேச ஆரம்பித்தார். என் சகோதர உறவுகளை நான் புறக்கணிக்க ஆரம்பித்தேன். அவர்களை ஒரு பொருட்டாகவே நான் பார்ப்பதில்லை. எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க ஆரம்பித்தேன்.

யோசித்துப்பார்த்தேன், இந்த மாற்றங்கள் என் வாழ்வில் நிகழ்ந்தது எப்படி? எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? யார்? அந்தக் காரணம் வீணா என்ற அழகியப் புயல் என்று நினைக்கையில் மனம் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது.

நானும் வீணாவும் நல்ல நெருக்கமானோம், சினிமாவுக்கு சென்றோம். பீச்சுக்கு சென்றோம். ஹோட்டல்களுக்கு சென்றோம். என்னை அவள் மிகவும் நேசிப்பது எனக்கு சந்தோசமாக் இருந்தது. அவளுக்காகவே வாழ ஆரம்பித்தேன். கூடுமானவரை எங்கள் காதல் எங்கள் ஆபிஸில் உள்ளவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டோம்.

வீணா ஆபிஸில் என்னை எப்போதும்போல் "ரகு சார்" என்றே கூப்பிடலானாள். ஆனால் தனியான சமயங்களில் என்னை "புஜ்ஜிம்மா" என்றே அழைத்தாள். "ஏன் என்னை இப்படிக் கூப்பிடுகிறாய்? என்னவோ போல் இருக்கிறதே?" என்று கேட்டதற்கு,

"எனக்குப் பிடிக்கிறது, நான் கூப்பிடுகிறேன். உங்களுக்கென்ன?" என்று செல்லமாக என்னை கடிந்து கொண்டாள். நானும் அவள் சந்தோசத்தை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டேன்.

ஆனால் 'அந்த முத்த சமாச்சாரம்' அதன் பிறகு நடக்கவே இல்லை. நான் எவ்வளவோ முயன்றும் என்னை அனுமதிக்கவே இல்லை. ஒரு நாள் கடுப்பில் கேட்டேன்,

"ஏம்பா, தொடவே அனுமதிக்க மாட்டேங்கற?"

"ஹீம், அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்"

"அதான் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்ல"

"அதுக்காக எல்லாமே இப்பவே பண்ணமுடியுமா என்ன?"

"நான் முத்தம் மட்டும்தான் கேட்டேன், நீதான் ஏதேதோ கற்பனை பண்ணிக்கிற?"

"முதல்ல முத்தத்துல ஆரம்பிக்கும் பழக்கம் அப்புறம் மெதுவா படுக்கை அறையை நோக்கிப் போகும். அதற்கு அப்புறம் அதுவும் பழகிப் போய் சலிச்சு போயிடும். அப்புறம் கல்யாணத்தன்னிக்கு ராத்திரி ஒரு திரில்லே இருக்காது. பரவாயில்லையா?"

''அம்மா தாயே, எனக்கு ஒண்ணும் வேண்டாம். ஆளை விடு" என்றேன்.

சிறிது நேரம் கழித்து, "என்ன கோபமா? " என்றவள் என் கைகளை எடுத்து கன்னத்தில் வைத்துக்கொண்டு, மெல்ல தன் உதட்டால் முத்தமிட ஆரம்பித்தாள்.

என்னால் அவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அதன் பின் எல்லா நாட்களும் சந்தோசமாகவே போயின. யாருக்கும் ஆபிசில் தெரியாது என்றுதான் நினைத்திருந்தோம். எப்படியோ முருகன் மோப்பம் பிடித்துவிட்டான்.

"என்ன சார், இப்ப எல்லாம் ஒரே சந்தோசமா இருக்கீங்க?" என்றான்.

'அதெல்லாம், ஒண்ணும் இல்லை முருகா" 

"சும்மா சொல்லுங்க சார், நீங்க வீணாவை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?"

"உனக்கு எப்படித்தெரியும் முருகா?"

"எப்படியோ தெரியும்"

"ஆமாம் முருகா, ஆனா, தயவு செய்து யாரிடமும் சொல்லாதே"

"நான் ஏன் சார் சொல்லப்போறேன்?" 

சொன்னபடி முருகன் யாரிடமும் சொல்லவில்லை என்ற சந்தோசத்தில் இருந்த போதுதான், வீணா அந்த அதிர்ச்சியான செய்தியை சொன்னாள்.

என் உடல் தேவையில்லாமல் நடுங்க ஆரம்பித்தது.

- தொடரும்

No comments: