May 17, 2011

குறை ஒன்று உண்டு -14


என் பதில் இவ்வளவு பெரிய தாக்கத்தை அவளுள் ஏற்படுத்தும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் முகத்தை உற்று நோக்கினேன். கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி வழிய ஆரம்பித்தது.

"சாரி வீணா"

"என்ன சாரி, நீங்க என்னவேணா பேசுவிங்களா?"

"ஒரு கோபத்துல அப்படி சொல்லிட்டேன். இனிமே அப்படி சொல்ல மாட்டேன்"

"கோபமா இருந்தாலும், என்ன பேசறோம், யாரிடம் பேசறோம்னு தெரிஞ்சு பேசுங்க"

"அதான் சாரி கேட்டன்ல"

"சாரி கேட்டா, சொன்னது இல்லனு ஆயிடுமா?"

"சரி, சரி முதல்ல கண்ணை துடைச்சுக்கோ"

முதன் முதலாக அவளின் அனுமதியில்லாமல் அவள் கண்களை அவளின் சேலையால் துடைத்துவிட்டேன். என்னையறியாமல் அவளை அப்படியே என் தோளோடு சாய்த்துக்கொண்டேன். மனம் முழுவதும் சந்தோசம் பொங்கியது. என்ன மாதிரி உறவு இவள்? இவள் கிடைப்பதற்கு நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்? இவளை எக்காரணம் கொண்டும் நான் கைவிடக்கூடாது. இவளை கடைசி வரையில் கண்கலங்காமல் பாதுகாக்க வேண்டும்.

மனம் மகிழ்ச்சியுடன் அவளின் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்தினேன். அவள் கண்களை நேராக சந்தித்தேன்.

"நான் என்னடா புண்ணியம் செய்தேன்? உன்னைப்போல் ஒரு தேவதை எனக்கு கிடைப்பதற்கு?"

பார்வையினாலே அவளை வினவினேன்.

அப்படியே சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தோம். அவள்தான் அங்கே தோன்றிய அசாதாரண அமைதியை கலைத்தாள்.

"நீங்க சொல்றது சரிதான் புஜ்ஜிம்மா"

"என்னடா?"

"நான் நாளைக்கே நம்ம விசயத்தை ராஜாட்ட சொல்லிடறேன்"

"தட்ஸ் குட்"

கோவிலில் மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்தது. அப்போதுதான் மணியை பார்த்தோம். இரவு 7.30. நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். உடனே வீட்டிற்கு கிளம்பினோம்.

அடுத்த இரண்டு நாட்கள் சாதாரணமாக போயின. மூன்றாம் நாள் காலையில், வீணா என்னிடம் வந்து, விசயத்தை ராஜாவிடம் சொல்லிவிட்டதாக கூறினாள். 'அப்பாடா' ஒருவழியாக பிரச்சனை முடிந்து விட்டது என்று சந்தோசப்பட்டேன்.

அந்த சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ராஜாதான் அவன் அறைக்கு வருமாறு கூப்பிட்டான். அவன் வீணா விசயத்தைப் பற்றி பேசக்கூப்பிடுகிறான் என நினைத்து ரொம்ப முன் ஜாக்கிரதையாக என்ன பேசவேண்டும் என மனதில் ஒரு ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் சென்றேன்.

ஆனால் அவன் அலுவலக விசயம்தான் பேசினான். ஆனால் என்னால் ஒரு வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ஒருவித எரிச்சலுடனே என்னிடம் பேசினான். கோபம் கோபமாக என்னிடம் பேச ஆரம்பித்தான்.

நான் நிதானமாகவே பதில்களை சொல்ல ஆரம்பித்தேன். என்னைப்பார்க்கும் போது எல்லாம் என்னைக் கேவலப்படுத்த ஆர்ம்பித்தான். அதிகமாக திட்ட ஆரம்பித்தான். நான் எதற்கும் கோபப்ப்டவே இல்லை.

வீணா அவனுக்கு கிடைக்காத ஆத்திரத்தில்தான் அப்படி நடந்துகொள்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் வீணாவுக்கும் எனக்குமான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. நான் சந்தோசத்தில் திளைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் சமயம் பார்த்து, அந்த டெண்டர் விசயத்தில் என்னை வசமாக மாட்டிவிட்டான் ராஜா.

ஜெயிலில் நான் சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் எனக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல், என் வீணாவைப் பற்றிய நினைவுகள்தான். அவளைப்பற்றி நினைக்கையில் மனம் ஒரு வித போதை நிலைக்குப் போய்விடும். அப்படியே வானத்தில் பறப்பதுபோலவே இருக்கும். நான் ஜெயிலில் இருப்பதே எனக்கு மறந்து போய்விடும். இப்படியே நானும் இரண்டு வருடம் ஜெயில் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்.

இவ்வாறு பலவாறு யோசித்திக்கொண்டிருக்கையில் யாரோ வருவது போல் இருக்க யார்? என்று பார்த்தேன் அருகில் ஜெயிலர் ஐய்யா, நின்று கொண்டிருந்தார்.

"ரகு, நாளைக்கு உனக்கு விடுதலை. காலையில் நீ உன் வீட்டுக்குப்போகலாம்"

மனம் சந்தோசத்தில் துள்ளிக்குதித்தது.

-தொடரும்


No comments: