May 18, 2011

குறை ஒன்று உண்டு -15


ஜெயிலர் சொல்லி சென்றவுடன், எனக்கு தூக்கமே வரவில்லை. முன்பே இந்த வாரத்தில் வெளியாவோம் என்று தெரிந்திருந்தாலும், நாளை விடுதலை என்றவுடன், ஒருவிதமான சந்தோசமும் பதட்டமும் வந்து அப்பிக்கொண்டது. இரவு முழுவதும் தூங்கவே இல்லை. எப்போது காலை வரும் என்று விழித்தே இருந்தேன்.

அப்படியே சிந்தனையில் இருந்தவன் எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை. நான் எழுந்த போது காலை 5 மணி. அதன் பிறகு எல்லாமே மிகவும் துரிதமாக நடந்தன. எல்லா பார்மாலிட்டிகளும் முடிந்து நான் வெளியே வரும்போது காலை மணி 10. நான் இரண்டு வருடங்களில் ஜெயிலில் பார்த்த வேலைக்கு கையில் கொஞ்சம் பணம் கொடுத்திருந்தார்கள். 

ஜெயிலை விட்டு வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசித்தபோது ஏற்பட்ட சந்தோசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அங்கேயே நின்று ஒரு முறை ஜெயிலை உற்று நோக்கினேன்.

அங்கே நின்று கொண்டிருந்த போலிஸ்காரர், "ஏம்பா, வீட்டுக்கு போக மனம் வரலையா?" என்று கேட்டவுடன்தான் எனக்கு சுயநினைவே வந்தது. முதலில் எங்கே செல்வது என்பதில் ஒரு குழப்பம் வந்தது. இனி, என் வாழ்க்கை என்னாகும்? என்பதை நினைக்கையில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. இனி எங்கே வேலைக்குப்போவது? நமக்கு யார் வேலை கொடுப்பார்கள்? 

என் வாழ்க்கையே இப்படி சூன்யமாகிப்போய்விட்டதே? ஏன்? காரணம் யார்? யோசித்துப்பார்த்ததில் எல்லாவற்றிற்கும் காரணம் ராஜாதான் என்று தெரிய வர அவன் மேல் என் கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது. 

'முதலில் அவனைப் போய் பார்க்கவேண்டும். சட்டையைப் பிடித்து அவனை கேள்விகள் கேட்க வேண்டும்'

அபோதுதான் வீணாவின் நினைவும் வந்தது. அவள் ஏன் என்னை வந்து ஜெயிலில் பார்க்கவில்லை. நான் இல்லாமல் அவள் இல்லை என்றாளே? என்னைக் கல்யாணம் செய்து கொள்ள அவசரம் காண்பித்தாளே? அவள்தானே என்னை துரத்தி துரத்தி காதலித்தாள். அப்படிப்பட்ட அன்பை செலுத்தியவள், ஏன் என்னை பார்க்காமல் புறக்கணித்தாள்? ஒரு வேளை நான்தான் தப்பு செய்திருப்பேன், கம்பனிக்கு துரோகம் செய்திருப்பேன் என்று நினைத்திருப்பாளோ? அப்படி அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால், என்னை வந்து பார்த்து என்னிடம் கேட்டிருக்கலாமே? 

இப்படி பலவாறு குழம்பிய நான், முதலில் ராஜாவை பார்க்க முடிவு செய்தேன். அதன் பிறகு வீணாவை சென்று பார்க்கலாம். என எண்ணினேன். ஆனால் மனதில் ஒரு குரூர எண்ணம் தோன்றி தோன்றி மறைந்தது. நம்மை இந்த நிலமைக்கு ஆளாக்கிய ராஜா எப்படி நன்றாக இருக்கலாம்? அவனும் என்னைப்போல அனுபவிக்க வேண்டும். நான் பட்ட வேதனைகளை எல்லாம் அவனும் பட வேண்டும். செய்யாத குற்றத்திற்கு என்னை இப்படி பழிவாங்கிவிட்டானே? 

அவனை கொலை செய்தால் என்ன? பொறுமை. 'முதலில் அவனை சென்று பார்ப்போம். பிறகு வீணாவை சென்று பார்ப்போம். பின் வீட்டிற்கு சென்று அம்மாவைப் பார்ப்போம்' என்று நினைத்தவன் திடீரென முடிவை மாற்றிக்கொண்டேன்.

ராஜாவைப் பார்த்து ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால், பின் வீட்டிற்கே செல்ல முடியாமல் போய்விடும். அதனால் முதலில் வீட்டிற்கு செல்வோம், அப்புறம் ராஜா, வீணா.....

வீட்டீற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாண்டை நோக்கி புறப்பட்டேன்.


-தொடரும்
4 comments:

பனித்துளி சங்கர் said...

இந்தக் கதையை இன்றுதான் முதல் முறை வாசிக்கிறேன் மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறீர்கள் . தங்களின் இதற்கு முந்தைய பகுதிகளை வாசித்து விட்டு மீண்டும் வருகிறேன் .

iniyavan said...

// ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
இந்தக் கதையை இன்றுதான் முதல் முறை வாசிக்கிறேன் மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறீர்கள் . தங்களின் இதற்கு முந்தைய பகுதிகளை வாசித்து விட்டு மீண்டும் வருகிறேன் //வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றி சங்கர்.

Anonymous said...

ரொமப நல்லாருக்கு சார்

iniyavan said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ரொமப நல்லாருக்கு சார்// நன்றி சதீஷ்குமார்.