May 23, 2011

குறை ஒன்று உண்டு -16


பஸ்ஸில் செல்லும் போது என்னால் சரியான மன நிலையில் இருக்க முடியவில்லை. இப்போது வீட்டிற்கு போய்த்தான் ஆக வேண்டுமா? என்று கூட தோன்றியது. ஏனென்றால், இரண்டு வருடமாக யாருமே என்னை ஜெயிலில் வந்து பார்க்கவில்லையே? அப்படிப்பட்டவர்களை நான் போய் பார்க்கத்தான் வேண்டுமா? இருந்தாலும், எனக்கு என்னவோ போக வேண்டும் போல்தான் இருந்தது. யாருக்காக இல்லை என்றாலும், என் அம்மாவிற்காகவாவது நான் போக வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டிருக்கயிலேயே நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது.

இறங்கி நடக்க ஆரம்பித்தவன் ஒரு வித பதட்டத்துடன் என் வீட்டை நோக்கி சென்றேன். தெருவில் வருவோர் போவோர் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்ப்பது போல் இருந்தது. என்ன செய்ய? நான் ஜெயிலில் இருந்து அல்லவா வந்திருக்கிறேன். அவர்கள் பார்வையில் நான் குற்றவாளிதானே? ஒவ்வொருவரிடமும் போய் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க முடியுமா என்ன?.

வீட்டை அடைந்தேன். காம்பவுண்ட் கேட்டை திறந்து மெயின் கேட்டை தட்டினேன். ரொம்ப நேரம் கழித்து என் அண்ணன் கதவை திறந்தான். 

"எங்க வந்த?" என்றான்.

"அம்மாவை பார்க்க வேண்டும்?"

"அம்மாவை எல்லாம் பார்க்க முடியாது கிளம்பு"

"ஏன்?"

"ஜெயிலில் இருந்து வந்தவனுக்கு எல்லாம் இந்த வீட்டுல இடம் இல்லை. கிளம்பு"

"அதை நீ சொல்லாத. அம்மா சொல்லட்டும்"

"நான் சொன்னதைதான் அம்மா சொல்லுவா. நீ கிளம்பு"

"அம்மாவை பார்க்காம நான் கிளம்ப மாட்டேன்"

"சொன்னா கேட்க மாட்ட" என்றவன் என்னை தள்ளி கதவை சாத்த முயன்றான்.

அப்போது அங்கே ஏதோ நிழலாடவே, யார் என்று நிமிர்ந்து பார்த்தேன். அம்மா!

"அம்மா" என்று வேகமாக அழைத்தவன் என்னையறியாமல் கண்கலங்க ஆர்ம்பித்தேன்.

அம்மா ஏதோ சொல்ல வாயசைப்பது தெரிந்தது. அதற்குள் அண்ணன் அம்மாவை இழுத்துக்கொண்டு கதவை வேகமாக சாத்திவிட்டு சென்றான்.
கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். ஒரே அழுகையும் ஆத்திரமும் வந்தது. என்னையறியாமல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன். எனக்கு மட்டும் ஏன்? என்ற நினைவு வந்தவுடன், ராஜா மேல் இன்னும் கோபம் அதிகரித்தது.

உடனே அங்கே நிற்க பிடிக்காமல் கம்பனியை நோக்கி புறப்பட்டேன். 

செக்யூரிட்டி ஆபிஸர் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. நான் ராஜாவை பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடிப்பார்த்தேன். ஆனால் அவர் கேட்பதாய் இல்லை.

பிறகு என்னைப் பற்றி முழுவதும் அவரிடம் சொன்னேன். புது ஆபிஸர் போல.

"சரிங்க, நான் இண்டர்காமில அவர்கிட்ட கேட்கறேன். அவர் ஒப்புக்கிட்டா நீங்க போய் பார்க்கலாம். இல்லைன்னா தயவு செய்து போயிடுங்க" என்றார்.

"சரி" என்றவுடன் ராஜாவை இண்டர்காமில் தொடர்பு கொண்டார்.

அவர் பேசும்போது அவரின் முகம் மாறுவதை கவனித்தேன். போனை வைத்தவர்,

"சாரி சார். உங்களை அவர் பார்க்க விரும்பலையாம். அதனால நீங்க போகலாம்" என்றார்.

அவரிடம் அதற்கு மேல் விவாதிக்க விரும்பவில்லை. 

"சார், ஒரே ஒரு உதவி மட்டும் செய்ய முடியுமா" என்றேன்.

"என்னுடன் வேலைப்பார்த்த முருகன் என்று ஒருவன்..." என்று நான் சொல்லி முடிப்பதற்குள்,

"சார், நான் தான் சொன்னேன்ல்ல, உங்களுக்கு யாரையும் பார்க்க அனுமதி கிடையாதுன்னு"

"நான் பார்க்க போறேன்னு சொல்லலை சார், முருகன் கிட்ட ஒரே ஒரு போன் மட்டும் பேசிக்கிறேன். கொஞ்சம் இண்டர்காம்ல கனக்க்ஷென் கொடுங்க"

என் நிலமையை புரிந்து கொண்ட அவர் முருகனிடம் பேசும் வாய்ப்பை கொடுத்தார்.

"முருகா, நல்லா இருக்கியா?"

"யாரு..."

"ரகு பேசறேன்"

"ரகுவா, நீ எப்படி இங்க"

"காலைலதான் வெளிய வந்தேன் உன்கூட பேசணும்"

கொஞ்ச நேரம் எந்த பதிலுமில்லை.

-தொடரும்3 comments:

கவி அழகன் said...

அருமையாக செல்கிறது கேளே தொடரும் என்பதை பாத்தவுடன் தாங்கமுடியல

Ravisankaranand said...

இன்னும் கொஞ்சம் எழுதுங்களேன்.. ஏன் சிந்துபாத் மாதிரி மூணு பாரால முடிக்கிறீங்க?

iniyavan said...

//யாதவன் said...
அருமையாக செல்கிறது கேளே தொடரும் என்பதை பாத்தவுடன் தாங்கமுடியல//

வருகைக்கு நன்றி யாதவன்