May 27, 2011

மிக்ஸர் - 27.05.2011


ஒரு ஆட்சி போய் வேறு புதிய ஆட்சி அமையும்போது சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். அதற்காக முந்தைய ஆட்சி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் மாற்றுவது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டார்கள். அச்சிட்ட அனைத்து  புத்தகங்களும் இப்போது தேவையில்லை என்றாகிவிட்டது. 200 கோடி காலி. யார் வீட்டுப்பணம்?

ஒரு காலத்தில் IAS படிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டதுண்டு. இப்போது அந்த வருத்தம் இல்லை. முன்னால் தலைமைச் செயலாளர் நிலமையைப் பார்த்தீர்களா?

கலைஞர் காப்பீட்டுத்திட்டம் எம்.ஜி ஆர் காப்பீட்டுத்திட்டம் ஆயாச்சு. மேலவை இனி இல்லை. இப்படியே ஒவ்வொன்றாக...

தமிழ் புத்தாண்டு இனி ஏப்ரல் 14தான் என்ற அறிவிப்பு விரைவில் வரும் என்று நினைக்கிறேன்.

பழைய அரசு போட்ட திட்டம் சரியில்லாது போனால் மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. பழைய அரசின் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக மாற்றுவது எப்படி சரியாகும்....?

*****************************************

பிரதமர் மன்மோகன் சிங் எத்தியோப்பியா உட்பட நிறைய ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நிறைய உதவிகள் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். மிக நல்ல விசயம். 

எத்தியோப்பியா போன்ற ஏழை நாடுகளுக்கு உதவுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் உதவி செய்துவிட்டு அமெரிக்கா போல் நடந்துகொள்ளாமல் இருந்தால் சரி.

*****************************************

ஏன் தொடர்கதை மட்டும் எழுதறீங்க? மற்ற விசயங்கள் முன்பு போல் எழுதுவதில்லை? என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். 

ஏதாவது நல்ல அனுபவங்களைப் பற்றி எழுதினால், ஏன் எப்பவும் உங்களைப் பற்றியே எழுதறீங்க? படிக்கறவங்க எல்லாம் உங்க ரசிக கண்மணியான்னு கேட்கறாங்க! கதை எழுதுனா இப்படி...?

தினமும் என் வலைப்பூவை படிக்கறவங்க ஒரு 200 பேர்தான். அவர்களுக்காக மட்டுமே எழுதுகிறேன்.

"எழுதறதை நிறுத்தாம எதையாவது எழுதுறேனே அதைப்பாருங்க" என்று ஏன் முன்பு போல எழுதுவதில்லை என்று என்னிடம் கேட்பவர்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

*****************************************

பேஸ்புக், டிவிட்டர், கூகுள் பஸ் இதுல எல்லாம் எனக்கு அதிகம் பரிச்சயம் கிடையாது. என் பெண் படிக்கும் பள்ளியில் எல்லா மாணவ மாணவிகளுக்கும் பள்ளியிலேயே பேஸ்புக் அக்கவுண்ட் கொடுத்துள்ளார்கள். 

என் பெண், "என்னப்பா, உங்களுக்கு பேஸ் புக் இல்லையா?" என்று கேட்கவே ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்தேன்.

உள்ளே சென்று பார்த்தால், அது மிகப் பெரிய கடல். என்னால் ஒரு வலைப்பூவிலேயே தினமும் எழுத முடியவில்லை. இதில் எங்கே நாம் இந்த பேஸ் புக்கில்...? 

எப்படித்தான் நண்பர்கள் பேஸ்புக், டிவிட்டர், கூகுள் பஸ், ஆர்குட் அனைத்திலும் ஆக்டிவாக செயல்படுகிறார்களோ? தெரியவில்லை. அவர்களை மனமாற பாராட்டுகிறேன்.

நிச்சயம் அவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் என்று நினைக்கிறேன்.

*****************************************

சுஜாதாவின் கதைகள் அனைத்தையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். ஒரே எழுத்தாளரை மட்டும் படித்தால் அவரின் பாதிப்பு நமக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் இப்போது ஜெயகாந்தனையும் படிக்க ஆரம்பித்துள்ளேன். 1958லேயே மனிதன் என்னம்மா எழுதி இருக்கிறார்! ஜெயகாந்தன் முடித்துவிட்டு மற்றவர்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இந்த பிறவியில் முடியுமா என்று தெரியவில்லை.

ஆனால் சில எழுத்தாளர்கள் ஆங்கில நாவல்கள் கூட படித்து முடித்ததாக சொல்கிறார்கள். எப்படி அவர்களால் மட்டும் முடிகிறது? என்னால் முடியவில்லை?

*****************************************

சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் கவலையூட்டும்படியாக உள்ளது. எதையும் பொதுவில் சொல்ல முடியாது. தற்போதைய செய்தியின்படி மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாலும் போவார் என்று நினைக்கிறேன். 

படங்களில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. உடல் நிலை தேறி வீட்டிற்கு வந்தால் நல்லது. தொடர்ந்து 20 நாட்களாக ஆஸ்பத்திரியில் உள்ளார்.

"அவருக்கு ஒன்றுமில்லை, சாதாரண நிமோனியாதான், விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவார்" என்கிறார்கள்.

வந்துவிட்டால் நல்லதுதான். பார்ப்போம். பிரார்த்திப்போம்.

*****************************************

+2 வைப்போலவே 10வதிலும் மாணவ மாணவியர்கள் நன்றாக மதிபெண்கள் எடுத்துள்ளார்கள். முதல் மூன்று ரேங்கில் எத்தனை மாணவர்கள் பாருங்கள்? எத்தனை பேர் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கி இருக்கிறார்கள் பாருங்கள். நான் படிக்கும் போது 400க்கு மேல் மார்க் வாங்குவது என்பதே பெரியவிசயம். இப்போது? எல்லோரும் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்களா? இல்லை நாம் வழங்கும் கல்வி அவ்வளவு ஈசி ஆகிவிட்டதா?

வருங்கத்தில் நம் பிள்ளைகளுக்கு கடுமையான போட்டி காத்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அதற்காக 24 மணி நேரமும் படி படி என்று குழந்தைகளை துன்புறுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் தினமும் படித்ததில்லை. பள்ளியில் கவனிப்பதுதான். டியூஷன் படித்தது இல்லை. ஆனால் இப்போ....?

*****************************************

கடைசியாக ஒரு ஜோக்:

முதல் நண்பர்: நேற்று கனவுல நீயும் நானும் உலகம் பூரா சுத்தி வந்தோம்

அடுத்தவர்: அப்படியா? எங்கேயெல்லாம் போனோம்?

முதலாமவர்: ங்கொய்யால, நீயும்தானே வந்தே, உனக்குத் தெரியாதா?

*****************************************


4 comments:

Anonymous said...

//எத்தியோப்பியா போன்ற ஏழை நாடுகளுக்கு உதவுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் உதவி செய்துவிட்டு அமெரிக்கா போல் நடந்துகொள்ளாமல் இருந்தால் சரி.//

உணர்வார்களா?

iniyavan said...

// அனாமிகா துவாரகன் said...
//எத்தியோப்பியா போன்ற ஏழை நாடுகளுக்கு உதவுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் உதவி செய்துவிட்டு அமெரிக்கா போல் நடந்துகொள்ளாமல் இருந்தால் சரி.//

உணர்வார்களா?//

வருகைக்கு நன்றி அனாமிகா.

BalajiS said...

http://www.writerpara.com/paper/?p=2280

Ravisankaranand said...

// 200 கோடி காலி. யார் வீட்டுப்பணம்?//

தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திகொள்ளலாமா? புதிய பாட புத்தகங்களை ஒருமுறையாவது நீங்க படித்து பார்த்தல் தான் அதன் தரம் அறிவீர்கள்.. அதுமட்டுமல்லாது புதிய சட்டசபை போல அவசர கதியில் implement செய்துள்ளனர் சமச்சீர் கல்வி திட்டத்தை...

ஜீ..பூம் பா என்று சொல்லி ஒரே இரவில் அணைத்து வகுப்பினருக்கும் பாடத்திட்டத்தை மாற்றுவது சரியான செயலா? உதாரணமாக , கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு (பழைய திட்டத்தில்) படித்த ஒரு மாணவன் இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பின் சிலபசில் ஒரு integration இல்லாது குழம்புவது நிச்சயம்.. ஆகவே இந்த பாட திட்டம் , இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பிலிருந்து மட்டும் துவங்கி படி படியாக பத்தாம் வகுப்புவரை அமல்படுத்த வேண்டும்..