May 2, 2011

குறை ஒன்று உண்டு -8நான் கேட்டக் கேள்வி அவனை வெறுப்பேற்றி இருக்க வேண்டும்.

'ரகு, இவ்வளவு பிரச்சனைக்கு நடுவுல வீணா வந்து உன்னை பார்ப்பதா முக்கியம்"

"இல்லை, முருகா கேட்டேன்"

"நேற்றுத்தான் வீணா ஆபிஸ் வந்தா. நடந்தது எல்லாம் தெரிஞ்சோன ஓன்னு அழுதா. உடனே உன்னைப் பார்க்கணும்னு என்கிட்ட சொன்னா. கொஞ்ச நேரம் கழித்து, ராஜா அவளைக்கூப்பிட்டு அனுப்பினான். உடனே அவன் ரூமுக்கு சென்றாள். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னுடன் உன்னை பார்க்க வருகிறேன் என்று சொன்னவள், ஏனோ அதன் பிறகு அதைப்பற்றி பேசவே இல்லை. ராஜா என்ன அவளிடம் சொன்னான் என்று தெரியவில்லை"

"சொன்னேன்ல. பார்த்தியா முருகா. ஏதாவது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இருப்பான். நிச்சயம் என் பெயரை அவளிடம் கெடுத்து இருப்பான். அவனை அப்படி நான் விட்டிருக்கக்கூடாது. அந்த இடத்திலேயே கொன்று இருக்க வேண்டும்"

''பார்த்தியா, இன்னும் உன் கோபம் அடங்கலை. முதல்ல கோபத்தை கட்டுப்படுத்து ரகு"

என்றவனை போலிஸ் வந்து அவனை சீக்கிரம் போகச்சொல்லி விரட்டவே, பின்பு வந்து பார்ப்பதாக சொல்லி சென்றுவிட்டான்.

அதன் பிறகு நடந்தவைகள் எல்லாம் மிகவும் கொடுமையானவை. யாருக்கும் நடக்கக்ககூடாதவை. முதலில் காவலில் இருந்த 15 நாட்களும் நரக வேதனை. விசாரணை என்ற பெயரில் மிகுந்த டார்ச்சர் கொடுத்தார்கள். சில சமயங்களில், 'ஒரு வேளை நாம்தான் அந்த டெண்டர் அமவுண்ட்டை அந்த கம்பனிக்கு விற்று விட்டோமோ' என்று எனக்கேத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

யாரும் வந்து என்னை ஜாமினில் வெளியே எடுக்கவில்லை. அம்மா அப்பா அன்று வந்து பார்த்ததோடு சரி. பின்பு வரவே இல்லை. என் உடன்பிறந்தவர்கள் யாரும் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. கம்பனியிலும் முருகனைத்தவிர யாரும் என்னை வந்து பார்க்கவில்லை. திடீரேன யாருமற்ற அநாதையாகிப்போனேன். 

என் தரப்பு வாதத்தை யாருமே செவிமடுக்கவே இல்லை. 15 நாட்கள் காவலுக்குப் பிறகு என்னை கோர்ட்டில் நிறுத்தினார்கள்.

என்னைப்பார்த்த நீதிபதி,

"என்னப்பா செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறாயா?" என்று கேட்டார்.

"இல்லை" என்று தலையாட்டினேன்.

"உனக்காக யாராவது வாதாட இருக்கிறார்களா?" என்றார்

"இல்லை" என்று கண்ணீர் மல்க தலையாட்டினேன்.

அதன்பிறகு என்னென்னவோ பேசினார்கள். நாட்கள் நகர்ந்தன. ஒன்றும் எனக்கு சாதகமாக நடக்கவில்லை. அதனால் அதைப் பற்றி விரிவாக உங்களுக்கு சொல்வதில் எந்த பயனும் இல்லை. பணம் மட்டுமே நன்றாக விளையாடியது. 

முடிவில் என் மேல் பலவிதமான கேஸ்கள் போடப்பட்டு, நிறைய சாட்சிகள் உருவாக்கப்பட்டு, கம்பனியின் பணத்தை தண்ணீராக வாரி இறைத்து, முடிவில் எனக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை வாங்கி கொடுத்துவிட்டார்கள்.

ஜெயில் வாழ்க்கை மிகக் கொடுமையானது. அங்கே எல்லாம் இருக்கும். ஆனால் இருக்காது. நம் நாட்டிலே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும், அதை மீறி நாம் எங்கேயும் வெளியே செல்லக்கூடாது'  என்பது எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள். ஏதேனும் தவறு செய்தவனுக்கு அந்த தண்டனை என்றால் பரவாயில்லை. தவறே செய்யாதவன் அந்த கொடுமையை அனுபவிக்க வேண்டும் என்றால்?

ஆனால் எனக்கு ஜெயில் வாழ்க்கை நிறைய அனுபவங்களை தந்தது. அங்கே பலதரப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள். நிறைய நல்லவர்களும் ஜெயிலில்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு பாடம். ஒரு மனிதன் ஜெயிலில் இருந்து வந்தவுடன் மீண்டும் அவன் செய்த தவறைப்போல் இன்னொரு தவறை செய்யவே மாட்டான். அவன் இருக்கும் அந்த தனிமை அவனை அந்த நிலைக்கு அவனை அழைத்துச்சென்றுவிடும்.

ஆனால் எனக்கு ஏன் இந்த நிலமை?

காதல்?

ஆம், நான் வீணாவை எப்போது முதல்முறையாக சந்தித்தேன்?

மெல்ல பின் நோக்கிப்போனேன். மனம் சந்தோசம் அடைய ஆரம்பித்தது.

- தொடரும்1 comment:

Ravisankaranand said...

கதையின் டைமன்ஷனே மாறுகிறது போல? உங்களின் வழக்கமான கதைகளிலிருந்து இது மிகவும் வித்தியாசபடுகிறது.. சப்பென்று முடிதுவிடாதீர்கள், முடிவு மனதை தைக்கும்படி இருக்குமென எதிர்பார்கிறேன் :)